Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”அக்காவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது” – சசிகலா சாபம்

ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய கணவர் நடராஜன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கடந்த வாரம் கல்லீரல், சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

பரோலில் வந்தபோது…

இந்த நிலையில்தான், கணவரைக் காண்பதற்காக 15 நாள்கள் அவசரகால பரோல் விடுப்பு கேட்டு சசிகலா, கர்நாடகா மாநில சிறைத்துறைக்கு விண்ணப்பித்தார். சிறைத்துறை நிர்வாகம், அவருக்கு 5 நாள்கள் மட்டும் பரோல் விடுப்பு அனுமதி வழங்கியது. கடந்த 6ம் தேதி மாலை 3 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அன்று இரவு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

சிறைக்கு வெளியே கர்நாடகா அதிமுகவினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். சென்னையிலும் அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தக் காட்சிகள் எல்லாம் அவருடைய இறுக்கமான சூழ்நிலையை சற்று மாற்றியதாகச் சொல்லப்படுகிறது. மறுநாள் (அக். 7) காலை, சிகிச்சையில் இருக்கும் நடராஜனை நேரில் சந்தித்தார்.

கடந்த 7ம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து ஐந்து நாள்களும் கணவரை நேரில் சந்தித்தார் சசிகலா. நடராஜனுக்கு டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு இருந்ததால், அவரால் பேச இயலவில்லை. அதனால் இருவருக்குள்ளும் மவுன மொழியிலேயே சம்பாஷனைகள் இருந்துள்ளன. கணவரின் உடல்நிலையைப் பார்த்து அவர் சில நேரம் கண்ணீர் விட்டும் அழுதாராம்.

நடராஜனைக் காண குளோபல் மருத்துவமனைக்கு வந்தபோது…

சசிகலா வருகையால் தமிழக அரசியல் களத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதாலேயே எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பு சசிகலாவின் பரோல் விடுப்புக்குச் சில நிபந்தனைகளை கடுமையாக விதிக்கச் சொன்னதாம். அதனால்தான், அரசியல் ரீதியான சந்திப்புகளோ, பேச்சுகளோ இருக்கக்கூடாது என்பது போன்ற விதிகளை காவல்துறை விதித்தாகக் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவைப் போல் சசிகலாவுக்கும் ஜோதிடத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. கடந்த 8ம் தேதி இரவு 11 மணியளவில் அவர் தங்கியிருக்கும் தி.நகர் கிருஷ்ணப்ரியா (இளவரசியின் மகள்) வீட்டில் சத்ரு சம்ஹார ஹோமம் நடந்துள்ளது. இது, எதிரிகளை ஒ-ழித்துக் கட்டுவதற்காக நடத்தப்படும் ஹோமம் என்கிறார்கள்.

நேற்று முன்தினம்தான் (அக். 9) முதன்முதலாக தினகரன், திவாகரன் மகன் ஜெயானந்த் ஆகியோரிடம் கொஞ்சம் அரசியல் பற்றியும் பேச்சுக்கொடுத்தாராம் சசிகலா.

டிடிவி தினகரன், ”உங்கள் காலில் விழுந்து கிடந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு நம்மைப் பற்றி கேவலமாக விமர்ச்சிக்கிறார்கள்,” என்று யார் பெயரையும் குறிப்பிடாமல்தான் சொன்னாராம். அதற்கு நமட்டுச் சிரிப்புடன், ”அக்காவின் ஆன்மா அவர்களை சும்மா விடாது,” என்று சசிகலா சொன்னதாகச் சொல்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.

இன்னொன்றையும் சொல்கிறார்கள். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் மொபைல் பேச்சுகள் உளவுத்துறையினரால் டேப் செய்யப்படலாம் என்பதால், உறவினர்களின் மொபைல் போன் மூலமாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு வட்டத்தில் உள்ள 10 அமைச்சர்களிடம் சசிகலாவே பேசியதாகவும் கூறுகின்றனர்.

ஒருவேளை, சசிகலாவின் பரோல் முடியும் நாளில் அமைச்சர்கள் அவரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக உளவுப்பிரிவு காவல்துறையினர் முன்கூட்டியே குறிப்பு அனுப்பியதால்தான், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தியதாகவும் கூறுகின்றனர்.

திவாகரன் மகன் ஜெயானந்த்

சசிகலா பரோலில் வெளியே வந்த நாளில் ஒட்டுமொத்த ஊடகமும் அதைப்பற்றியே செய்திகள் வெளியிட்டன. அதேபோன்று இன்றும் அவர் மீது ஒட்டுமொத்த கவனமும் குவிந்து விடக்கூடாது என்பதற்காகவும் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டதன் பின்னணி குறித்து கூறினர். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பின் மூலம் சசிகலா மீது குவியும் கவனத்தை திசை திருப்பும் தந்திரம் இது என்கிறார்கள்.

இந்நிலையில், இன்று காலை நடராஜனை சந்தித்துவிட்டு குளோபல் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது அதிமுகவைச் சேர்ந்த இரண்டு தம்பதியினரின் குழந்தைகளுக்கு சசிகலா பெயர் சூட்டிய வைபவமும் நடந்துள்ளது. ஆண் குழந்தைக்கு ‘ஜெயக்குமார்’ என்றும், பெண் குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என்றும் சசிகலா பெயர் சூட்டினார்.

டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கூறுகையில், ”பரப்பன அக்ரஹாரா சிறை வாழ்க்கை, சின்னம்மாவை (சசிகலா) ரொம்பவே மாற்றியிருக்கிறது. நடையில், பேச்சினில் நிதானம் தெரிகிறது. எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளையும், அம்மாவையும் வேண்டிக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார்,” என்றார்.

பரப்பன அக்ரஹாரா சிறை

எம்எல்ஏக்கள தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரம் முடிவுக்கு வந்த பின்னர், அதிமுக பொதுக்குழுவை கூட்டுமாறு டிடிவி தினகரனுக்கு ஒரு முக்கிய அஸைன்மென்ட் மட்டும் சசிகலா கொடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். நடராஜனை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

இன்று நள்ளிரவுடன் சசிகலாவின் பரோல் விடுப்பு முடிகிறது. நாளை மாலை 5 மணிக்குள் அவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் இருக்க வேண்டும் என்பதால், நாளை காலை அவர் சென்னையில் இருந்து பெங்களூர் கிளம்புவார் எனத் தெரிகிறது.

– அகராதிக்காரன்.