Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சாரணர் தேர்தல்: ஹெச்.ராஜாவை வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்!

சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை, நெட்டிஸன்கள் டுவிட்டர் பக்கத்தில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

மணி

தமிழக சாரண, சாரணியர் இயக்கத்திற்கு கடந்த 12 ஆண்டுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், சாரணர் அமைப்பை முழு வீச்சில் கட்டமைக்கும் நோக்குடன், இந்தாண்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தேசிய தலைமையகம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, தேர்தல் நடத்துவதற்கான பணிகள் சமீப காலமாக நடந்து வந்தது.

வழக்கமாக சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்தவர்களே போட்டியிடுவர். இந்தமுறை பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அப்பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் இயக்குநர் மணி, போட்டியிட்டார். ஹெச்.ராஜா, போட்டியிடுகிறார் என்றதுமே, இந்த தேர்தல் மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியது. சில நாள்களுக்கு முன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சாரணர் இயக்கத்தின் மூலமாக பாஜக காவி சிந்தனைகளை புகுத்தப் பார்ப்பதாக குற்றச்சாட்டைக் கிளப்பினார்.

இதற்கிடையே, ‘ஹெச்.ராஜாவை தோற்கடியுங்கள்’ என்று கூறி, கடந்த இரு நாள்களாக வாட்ஸ்&அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சாரங்களும் வலம் வந்தன. இந்நிலையில், தலைவர், துணைத்தலைவர், மாவட்ட ஸ்கவுட் ஆணையர் உள்ளிட்ட 12 பதவிகளுக்கு இன்று (செப். 16) சென்னையில் தேர்தல் நடந்தது. இதில் 8 பதவிகளுக்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தலைவர், துணைத்தலைவர் உள்பட 4 பதவிகளுக்கு மட்டுமே வாக்கெடுப்பு நடந்தது.

இந்த தேர்தலில் பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநர் மணி 232 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, வெறும் 52 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.

தோல்வி குறித்து ஹெச்.ராஜா கூறுகையில், ”சாரணர் இயக்கத் தேர்தல் செப். 23ம் தேதிதான் நடத்த வேண்டும் என்று தேசிய தலைமையகம் சொல்லி இருக்கிறது. அந்த உத்தரவை மீறி இன்று தேர்தல் நடத்தியிருப்பது செல்லாது. தேர்தல் அலுவலராக பணியாற்றிய கலாவதியை விட, உயரதிகாரிகள் பலர் இருந்தும் அவரை தேர்தல் அலுவலராக நியமித்திருப்பதும் விதிகளுக்கு முரணாகும். ஆகவே இந்த தேர்தல் செல்லாது,” என்றார்.

இது தொடர்பாக தேர்தல் அலுவலர் கலாவதி கூறுகையில், ”இந்த தேர்தலில் எந்தவித விதி மீறலும் இல்லை. தேர்தலை வேறு தேதிக்கு மாற்றும்படி எங்களுக்கு எந்த ஒரு கடிதமும் வரவில்லை,” என்றார்.

தலைவராக வெற்றிபெற்ற மணிக்கு, சாரண, சாரணியர் இயக்க நிர்வாகிகள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், சாரணர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி, இரண்டாவது பெரிய கட்சி என்றெல்லாம் பாஜக தலைவர் தமிழிசை முழங்கி வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜாவின் படுதோல்வி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ‘காவி கும்பலுக்கு தமிழகத்தில் இவ்வளவுதான் செல்வாக்கு’ என்றும் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஹெச்.ராஜாவின் தோல்வியை, கோவையில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

”மாணவ சமுதாயத்தின் மனநிலையே, மக்களின் மனநிலையாகும். அதை பாஜக உணர்ந்து கொள்ள வேண்டும்,” என்று ஓர் இணையவாசி டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், பலரும் ஹெச்.ராஜாவை கழுவி கழுவி ஊற்றி இருக்கிறார்கள். ஒரு பதிவர், ”தம்மாத்தூண்டு தேர்தல்லயே ஜெயிக்க முடியல. இதுல தமிழ்நாட்டில் தாமரை மலருதாக்கும்,” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். ‘ஹரிராம் ராஜா ஷர்மா என்ற ஹெச்.ராஜா தோல்வி அடைந்ததற்கு வாழ்த்துகள். திராவிட மண்ணுக்கும், மதவாதத்திற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்’ என்றும் பதிவிட்டுள்ளனர்.

இன்னும் சிலர், ”இப்போ பாரேன், ஏதாவது ஒரு சேனல்ல வந்து ஆன்டி இண்டியன்ஸ்னு ஹெச்.ராஜா திட்டுவாரு,” என்றும் கேலி செய்துள்ளனர். சிலர், ”பாம்யா, அவரு ஏதாவது தப்பான முடிவு எடுத்துற போறாப்ல. ரொம்ப ரோசக்காரரு…” என்றும் கிண்டலடித்து பதிவிட்டுள்ளனர். இன்னொரு பதிவர், நரேந்திரமோடி பாணியில், ”ஹமாரா தமிழ்நாடுஹே தாமரை நஹிஹே எல்லோரும் தேச துரோகிஹிஹே!” என்று பதிவிட்டுள்ளார்.