சேலம் அருகே, விஜிலன்ஸ் போலீசில் சிக்கி விடாமல் இருப்பதற்காக லஞ்சப் பணத்தை ஜெராக்ஸ் கடைகள் மூலம் நூதனமுறையில் வசூலித்த ஆர்டிஓ அதிகாரி, பிரேக் இன்ஸ்பெக்டர்கள் வசமாக சிக்கினர்.
சேலத்தை அடுத்த உடையாப்பட்டியில் சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வாகனங்களை பதிவு செய்தல், உரிமம் வழங்குதல், உரிமம் புதுப்பித்தல், பர்மிட் வழங்குதல், தகுதிசான்று வழங்குதல் ஆகிய சேவைகளுக்காக அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதுகுறித்து சேலம் மண்டல லஞ்ச ஒழிப்புப் போலீசார் நேற்று காலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நேற்று மாலை 5 மணியளவில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஎஸ்பி சந்திரமவுலி தலைமையிலான போலீசார் கிழக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் மேஜை டிராயர்கள், கோப்புகளின் உள்பக்கங்கள்¢ ஆகிய இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கணக்கில் வராத ரூ.2 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். முன்பெல்லாம் லஞ்சப் பணத்தை வசூலிப்பதற்காகவே ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்களை புரோக்கர்களாக பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் சேலம் கிழக்கு ஆர்டிஓ கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் நூதன முறையில் லஞ்சப் பணத்தை வசூலித்து வந்திருப்பது தெரிய வந்தது.
ஆர்டிஓ அலுவலகத்துக்கு எதிரில் மூன்று ஜெராக்ஸ் கடைகள் உள்ளன. வாகனங்களுக்கு பர்மிட், லைசென்ஸ் உள்ளிட்ட சேவைகளுக்காக வருவோரிடம் லஞ்சத்தை சம்பந்தப்பட்ட ஜெராக்ஸ் கடைகளில் கொடுத்து விடுமாறு சொல்லியுள்ளனர். தினமும் அலுவலகப் பணிகளை முடித்த பின்னர், அந்தக் கடைகளில் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்கச் செல்வதுபோல் சென்று லஞ்சப் பணத்தை வசூலித்துக்கொண்டு வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
நேற்று விடிய விடிய போலீசார் சோதனை நடத்தினர். இன்று (ஆகஸ்ட் 3, 2018) காலை 10 மணி வரையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடந்தது. சந்தேகத்திற்குரிய மூன்று ஜெராக்ஸ் கடைகளில் இருந்தும் இன்று கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை மூலம் மொத்தம் 3 லட்சம் ரூபாய் கணக்கில் வராத தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச புகார் தொடர்பாக சேலம் கிழக்கு ஆர்டிஓ கதிரவன், பிரேக் இன்ஸ்பெக்டர்கள் பதுமைநாதன், லோகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
– நாடோடி.