மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வலைத்தளவாசிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பலர் கேலி செய்து, ‘மீம்’களை பதிவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதற்குமுன் திரைத்துறையில் இருந்து எத்தனையோ நடிகர்கள், கலைஞர்கள் அரசியலுக்கு வந்திருந்த போதும் ரஜினி அளவுக்கு யாரும் கடும் எதிர்ப்பை சம்பாதித்ததில்லை. ஆனால், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ம் தேதி சொன்னாலும் சொன்னார், அவருக்கு பல்வேறு முனைகளில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அரசியல் வருகை குறித்து பேசிய அடுத்த நாளே ரஜினிகாந்த், ரசிகர் மன்றங்களை புதுப்பிக்க வசதியாக ‘ரஜினி மன்றம்’ என்ற பெயரில் புதிய இணையதளம் தொடங்கியது, ராமகிருஷ்ண மடாதிபதியிடம் ஆசி, திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்திப்பு, ‘ரஜினி மன்றம்’ என்பதை மாற்றி ‘ரஜினி மக்கள் மன்றம்’ என பெயர் சூட்டியது என தொடர்ந்து அரசியலை நோக்கிய நகர்வை தீவிரப்படுத்தி உள்ளார்.
இதற்கிடையே, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்காக புதிய கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நோக்கில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் மலேசியா சென்றுள்ளனர்.
இன்று (ஜனவரி 6, 2018) நடந்த விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், ”என்னை நன்கு வாழ வைத்த தமிழக மக்களை நான் நன்கு வாழ வைப்பேன்,” என்று குறிப்பிட்டார். அவர் பேசிய முடிப்பதற்குள், தமிழக மக்களை வாழ வைப்பேன் என்ற பேச்சுக்கு உடனுக்குடன் ட்விட்டரில் பலர் எதிர்க்கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும் என்று ஏற்கனவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரமாக ரஜினிக்கு எதிராக களமாடி வரும் நிலையில், ட்விட்டரில் பலருடைய பதிவும் சீமானின் கருத்துக்கு வலு சேர்ப்பது போலவே இருந்தது.
பலர், ரஜினியின் மகள், மனைவி என குடும்ப உறுப்பினர்களை குறி வைத்தும் கிண்டல், கேலி செய்து கருத்துகளை ‘மீம்’களாக பதிவிட்டிருந்தனர்.
குறிப்பாக, பாஜகவுடன் ரஜினியை தொடர்புபடுத்தி பலரும் எதிர்வினையாற்றி இருந்தனர். ஒரு பதிவர், ”அடுத்த மூணு வருஷத்துக்கு நம்ம கம்பெனிக்குதான் படம் பன்றீங்க. படத்தோட பேரு ஆன்மிக அரசியல்,” என்று பிரதமர் நரேந்திர மோடியை சினிமா தயாரிப்பாளராக சித்தரித்து, அவர் ரஜினியுடன் பேசுவது போல மீம் பதிவிட்டு இருந்தார்.
இன்னொரு பதிவர், ஆசை நூறு வகை என்று தலைவர் அப்போதே பாடிவிட்டார். அதில் ஒரு வகைதான் இதுவும் என்று கிண்டலடித்துள்ளார்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரஜினி பத்து லட்ச ரூபாய் கொடுத்து இருந்தார். நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய், விஜய் 5 கோடி ரூபாய் வழங்கியிருந்தார். அதையும் கிண்டலாக பதிவிட்டு இருந்தார் ஒரு பதிவர்.
ரஜினி தனது ஆன்மிக அரசியல் குறித்தும், பாஜகவோடு அவரை இணைத்துப் பேசப்படுவது குறித்தும் அவரே தன்னிலை விளக்கம் அளிக்கும் வரை அவருக்கு கடும் எதிர்ப்புகள் நிலவும் என்றே தெரிகிறது.