Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரஜினியின் ‘2.ஓ’ படத்துக்காக சேலத்தில் மக்கள் மன்ற கூட்டமா?; ரசிகர்கள் சொல்வது என்ன?

 

ரஜினி, தன் படங்களை ஓட வைப்பதற்காகத்தான் அவ்வப்போது அரசியல் வருகை குறித்த செய்திகளைச் சொல்லி பரபரப்பை கூட்டுகிறார் என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்க, விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் ‘2.ஓ’ படத்துக்கான டிக்கெட் விற்பனையை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்படும் என்று சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ரஜினி மக்கள் மன்றம்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அவரின் ரசிகர் மன்றங்களுக்கு, ஒரே நாளில் ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற புதிய நாமகரணம் சூட்டப்பட்டது. ரஜினி மக்கள் மன்றத்தின் சேலம் மாவட்ட செயலாளராக செந்தில்குமாரை கடந்த அக். 23ம் தேதி நியமித்து ரஜினிகாந்த் அறிவித்தார்.

 

அதிமுக முன்னாள் எம்எல்ஏ அர்ஜூனன் மகன் என்ற அடையாளம் மட்டுமின்றி, இடையில் சில ஆண்டுகள் தேமுதிக கட்சியிலும் களமாடியவர் என்பதால் அரசியல் செயல்பாடுகளுக்கு செந்தில்குமார் ஒன்றும் புதிதில்லை. அதனால் அவரும் பொறுப்புக்கு வந்த நாள் முதலே அனைத்து ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணிகள், மாவட்ட நிர்வாகிகளை நேரில் தேடிச்சென்று சந்தித்து வந்தார்.

 

நிர்வாகிகள் கூட்டம்

 

ஆனாலும் அவர் பொறுப்புக்கு வந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையிலும், மாவட்ட அளவில் நிர்வாகிகள் கூட்டம் எதுவும் நடத்தப்படாததால், விரைவில் கூட்டம் நடத்தி முடிக்கும்படி ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை வலியுறுத்தியது. அதன்பிறகே, சேலத்தில் அவசர அவசரமாக மக்கள் மன்ற கூட்டத்தை வியாழக்கிழமையன்று (நவ. 22, 2018) நடத்தி முடித்திருக்கிறார் செந்தில்குமார்.

ரசிகர்களால் நிரம்பி வழிந்தது

ரஜினியின் பிறந்த நாளையொட்டி, இரண்டு ஒன்றியங்களில் வரும் 25ம் தேதி ரத்ததான முகாம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். அதனால்தான் நிர்வாகிகள் கூட்டத்தை வாரத்தின் மையப்பகுதியில் நடத்த வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

 

ஆனாலும், கூட்டம் நடந்த கல்யாண மண்டம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. மன்றத்தின் வெளி அரங்கிலும் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

 

கஜா புயலில் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி, பக்கா புரஃபஷனலாக கூட்டம் தொடங்கியது. மேடையில், ஒன்றியம், நகரம், மாநகரம், மாவட்டம், சார்பு அணி நிர்வாகிகள் என அனைவருக்கும் இடம் அளிக்கப்பட்டு இருந்தது.

 

மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி மட்டும்தான் மேடையில் இடம் பிடித்திருந்த ஒரே ஒரு பெண். பெண் ரசிகர்கள், சார்பு அணி நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

மவுனப்புரட்சி

மாவட்ட இணை செயலாளர் பழனிவேலு பேசுகையில், ”பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும்படியாகும் என அரசாங்கம் சொல்கிறது. ஆனால், மக்கள் அதை செல்லாது என முடிவு செய்து, புழக்கத்திலேயே இல்லாமல் ஆக்கிவிட்டனர்.

 

அதேபோல், இப்போதுள்ள ஆட்சியாளர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லி வருகின்றனர். ஆனால், அடுத்தது ரஜினிதான் முதல்வர் என்று மக்கள் மனதளவில் முடிவெடுத்து மவுனப்புரட்சிக்கு தயாராகி விட்டனர்,” என்று புதிய கோணத்தில் கருத்தை பதிவு செய்தார்.

 

மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கடைசியாக மைக் பிடித்தார்.

 

அனைத்து தரப்பு நிர்வாகிகளையும் அரவணைத்துச் செல்லும் வகையில், அனைவரின் பெயர்களையுமே குறிப்பிட்டுப் பேசினார். மறைந்த முன்னாள் ரசிகர் மன்றத் தலைவர் சக்திவேல், இப்போதைய இணை செயலாளர் பழனிவேலு ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டதோடு, தான் கிளை மன்றத் தலைவராக இருந்தபோது அவர்கள் தன்னிடம் காட்டிய அன்பையும் மறக்காமல் குறிப்பிட்டார்.

நாமெல்லோருமே ‘ஆர்’ குரூப்

”எல்லோரின் உடம்பிலும் ஓடும் ரத்தம் வேண்டுமானால் வேறு வேறு குரூப் ஆக இருக்கலாம். ஆனால் நாமெல்லோருமே ‘ஆர்’ என்ற ஒரே குரூப் மட்டும்தான்,” என்றார். ரஜினி என்பதைக் குறிக்கும் வகையில் அவர் ‘ஆர்’ குருப் என்றார். அப்படிச் சொல்லும்போது அரங்கத்தில் பலத்த கரவொலி எழுப்பி ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். நமக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லாமல் ரஜினியை முதல்வராக்க பாடுபட வேண்டும்.

 

”ரஜினிக்கு வரும் டிசம்பர் 12ம் தேதி பிறந்த நாள் வருகிறது. அவர் அரசியலுக்கு வருவதாகச் சொன்னபிறகு வரக்கூடிய முதல் பிறந்த நாள். அதனால் டிசம்பர் மாதம் முழுவதும் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

 

போஸ்டர், பிளக்ஸ் பேனர்கள் எப்படி அச்சிட வேண்டும் என்பதற்கு தலைமை நிர்வாகம் சில அறிவுரைகள் வழங்கி இருக்கிறது. அதை எல்லோரும் பின்பற்ற வேண்டும்.

 

சிறப்புக்குழு

 

வரும் 29ம் தேதி, ‘2.ஓ’ படம் ரிலீஸ் ஆக உள்ளது. அந்தப்படம் மாபெரும் வெற்றிபெற அனைவரும் உழைக்க வேண்டும். தியேட்டர் நிர்ணயித்த விலைக்கு மேல் கூடுதல் விலைக்கு யாரும் டிக்கெட் விற்கக்கூடாது. அதைக் கண்காணிக்க சிறப்புக்குழு அமைக்கப்படும். அதேபோல், 2.ஓ படத்தை இணையதளத்தில் வெளியிடுவதை தடுக்கவும், திருட்டு டிவிடிக்கள் வெளியாவதைத் தடுக்கவும் சிறப்புக்குழு அமைக்கப்படும்,” என்றார் செந்தில்குமார்.

 

ரசிகர்களும் ‘2.ஓ’ படத்தை, குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்கும்படி கேட்டுக்கொண்ட செந்தில்குமார், யாராவது வீடுகளில் இணையத்திலோ, டிவிடியிலோ படத்தைப் பார்த்தால் அதுபற்றி உடனடியாக மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

 

ஓமலூர் ஒன்றியத்தில் இருந்து தேமுதிகவைச் சேர்ந்த 30 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, ரஜினி மக்கள் மன்றத்தில் இணையும் நிகழ்ச்சியும் நடந்தது, இக்கூட்டத்தின் மற்றுமொரு ஹைலைட்.

மூத்த நிர்வாகிகள்

 

ரஜினி மக்கள் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம், ”2.ஓ’ பட புரமோஷனுக்காகத்தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதுபோல் தெரிகிறதே?’ என்று கேட்டோம்.

 

”ரஜினி அரசியல் பற்றி பேசும்போதெல்லாம் அவரின் படத்தை ஓட வைப்பதற்காகத்தான் அப்படி பேசுகிறார் என்றெல்லாம் ஊடகங்கள்தான் சொல்லி வருகின்றன.

 

அவருக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்தபோதெல்லாம் யாருமே அவரை அரசியலுடன் முடிச்சுப் போட்டு பேசியதில்லை. அதனால் தன் படத்தை ஓட வைப்பதற்காகத்தான் அரசியல் பேச்சு பேசுகிறார் என்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

 

மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரான ‘2.ஓ’ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைவர் (ரஜினி) படங்கள் வெளியாகும்போதும் ‘பிளாக்’கில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக கடந்த காலங்களில் புகார்கள் எழுந்தன.

 

கெட்ட பெயர் ஏற்பட்டு விடக்கூடாது

 

இந்த முறை அதுபோன்ற புகார்கள் எழாத வண்ணம், குறிப்பிட்ட விலைக்கு மேல் யாராவது டிக்கெட் விற்கிறார்களா என்பதை கண்காணிக்க களத்தில் இறங்குகிறோம். எந்த ரூபத்திலும் தலைவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

 

அரசியல் ஆர்வம் இல்லாத அவரை நாங்கள்தான் வாங்க… வாங்க… என்று வற்புறுத்தி அழைத்தோம். அவரும் வருவதாகச் சொல்லி விட்டார். அவரை முதல்வராக்குவதுதான் எங்களுடைய வேலை.

 

உள்நோக்கம் ஏதுமில்லை

 

மற்றபடி, தலைவரின் பிறந்த நாளையொட்டி காலங்காலமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறோம். அதேபோல்தான் இன்றும் நிர்வாகிகள் கூட்டம் நடத்தியிருக்கிறோம். இதில் உள்நோக்கம் ஏதுமில்லை. அதேநேரம், புதிய மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் எல்லா நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசியதற்கான வாய்ப்பாகவும் இக்கூட்டம் அமைந்துள்ளது,” என்றனர்.

 

– பேனாக்காரன்.