Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெரியார் பல்கலை பேராசிரியர் பதவி இறக்கம்!; சிண்டிகேட் ஒப்புதல்

 

பெரியார் பல்கலையில் பேராசிரியர் மற்றும் நூலகராக பணியாற்றி வந்த சுப்ரமணியனிடம் இருந்து பேராசிரியர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டு (Re-Designation) உள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட மிகை ஊதியத்தை திரும்பப் பெறவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

 

சேலம் பெரியார் பல்கலையில் பேராசிரியர் மற்றும் நூலகராக பணியாற்றி வருபவர் சுப்ரமணியன். 1.12.2004ம் தேதி நூலகர் பணியில் சேர்ந்தார். நூலகர் பதவிக்கு ரூ.8000-275-13500 என்ற விகிதப்படி ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு ரூ.16500-450-22400 என்ற விகிதப்படி அதாவது பேராசிரியர் பதவிக்குரிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

 

 

அந்த வகையில் மட்டும் அவருக்கு இதுவரை ரூ.18.72 லட்சம் மிகை ஊதியமாக வழங்கப்பட்டு இருப்பது, 2015-2016ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பெரியார் பல்கலை சட்டவிதிகளில், நூலகர் கல்வித்தகுதியின் அடிப்படையில் மட்டுமே அவரை பணி நியமனம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பேராசிரியர் பணிக்குரிய ஊதியத்தை எப்படி வழங்கலாம் என்றும் தணிக்கையில் சு(கு)ட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

 

சுப்ரமணியன்

இதுஒருபுறம் இருக்க, மதுரை காமராஜர் பல்கலை, பாரதிதாசன் பல்கலைகளில் துணை நூலகர் பணியிடங்களை இணை பேராசிரியர் அந்தஸ்தில் நியமித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய சுப்ரமணியன், நூலகராக பணியாற்றி வரும் தனக்கு பேராசிரியர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரினார். அதன் அடிப்படையில், 23.4.2013ல் நடந்த 77வது சிண்டிகேட் குழு கூட்டத்தில் சுப்ரமணியனுக்கு பேராசிரியர் அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேநேரம் அவருக்கு பேராசிரியருக்கு உண்டான பணப்பயன்கள் வழங்கக்கூடாது என்றும் சிண்டிகேட் குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

 

 

ஆனால் திட்டமிட்டோ திட்டமிடாமலோ சாதாரண நூலகரான சுப்ரமணியனுக்கு, அவர் நியமிக்கப்பட்ட காலம் முதல் பேராசிரியர் பதவிக்கு நிகரான ஊதியமே வழங்கப்பட்டு வந்ததால், பணப்பயன்கள் வழங்கப்படாது என்ற சிண்டிகேட் குழுவின் முடிவு அவருக்கு எவ்வித ஏமாற்றத்தையும் அளிக்கவில்லை.

 

 

இந்த முடிவின் பின்னணியில் அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனின் தலையீடு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து ஆகியோரின் துணையுடன் சுப்ரமணியன் நினைத்ததை சாதித்துக் கொண்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

 

 

இந்நிலையில், கடந்த 22.3.2018ம் தேதி, உயர்கல்வித்துறை சார்பில் நடந்த ஆய்வுக்குழுக் கூட்டத்தில், பல்கலை நூலகராக இருப்பவரை பேராசிரியராக கருதக் கூடாது என்றும், அது பல்கலை மானியக்குழு விதிகளுக்கு முரணானது என்றும் அறிவிக்கப்பட்டது. எதிர்காலத்தில் வேறு எவருக்கும் இதுபோன்ற அந்தஸ்தோ ஊதிய உயர்வோ வழங்கக்கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

 

இதையடுத்து, கடந்த 27.6.2018ம் தேதி பெரியார் பல்கலையில் நடந்த 100வது சிண்டிகேட் குழு கூட்டத்தில், இதுவரை நூலகர் மற்றும் பேராசிரியராக வலம் வந்த சுப்ரமணியனை இனி நூலகர் என்று மட்டுமே அறிவிக்கவும், பேராசிரியர் பணியில் இருந்து பதவி இறக்கம் (Re-Designation) செய்யவும் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டாலே அது உடனடியாக அமலுக்கு வந்துவிடும். ஆனாலும், பல்கலை இணையதளத்தில் சுப்ரமணியன், இன்னும் பேராசிரியர் மற்றும் நூலகர் பணியில் இருப்பதாகவே உள்ளீடு செய்யப்பட்டு உள்ளது.

 

 

இதுபற்றி பல்கலை வட்டாரத்தில் சில பேராசிரியர்களிடம் விசாரித்தோம். அவர்கள் பல்கலையில் மலிந்து கிடக்கும் நிர்வாக சீர்கேடுகளை கழுவி கழுவி ஊற்றினார்கள்.

 

 

”கற்பித்தல் அனுபவம் இல்லாத நூலகரை, பேராசிரியர் என்பதே தவறான நடைமுறை. காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் சுப்ரமணியன் இனி நூலகர் மட்டுமே என தெளிவு படுத்தியிருப்பது நல்லதொரு ஆரம்பம். நூலகர் என்பது ஆசிரியர் அல்லாத பணிப்பிரிவைச் சேர்ந்தது. அவர்கள் 58 வயது வரைதான் பணியாற்ற முடியும் என்பதால் 58 வயதை கடந்துவிட்ட சுப்ரமணியனுக்கு உடனடியாக ஓய்வு கொடுக்க வேண்டும். 58வயதுக்கு பிறகும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஊதியத்தையும் திரும்பப் பெற வேண்டும்.

 

முருகன்

அதேபோல் இப்போது நூலகப் பிரிவில் துறைத்தலைவராக உள்ள பேராசிரியர் முருகன், 4.1.2016ல் பெரியார் பல்கலையில் பணியில் சேர்ந்தார். அவருக்கு நூலக அறிவியல் துறையில் பாடம் நடத்திய முன்அனுபவம் இல்லை. இங்கு பணியில் சேர்வதற்கு முன்பு தனியார் பொறியியல் கல்லூரியில் நூலகராக அதாவது மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்துக் கொடுக்கும் வேலையைத்தான் செய்து வந்தார். அந்த கல்லூரியில் நூலக அறிவியல்துறையும் கிடையாது என்பதால் அங்கு அவர் பாடம் நடத்தியிருக்க வாய்ப்பே இல்லை.

 

 

எந்தவித கற்பித்தல் அனுபவமும் இல்லாத ஒருவரை எப்படி நூலக அறிவியல் துறைத்தலைவராக நியமிக்க முடியும்? அவருடைய பணி நியமனமே தவறு என்று தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அவரை நியமனம் செய்ததற்கான கோப்புகளும் தணிக்கைக்கு உட்படுத்தவில்லை. முருகன் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர் பேராசிரியர்கள்.

 

 

ஏதோ ஒரு கல்லூரியில் நூலகத்தில் புத்தகம் எடுத்துக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தவர்களை எல்லாம் பேராசிரியர் என்றால், ஏதாவது உப்புமா நிதி நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்திருந்தால்போதும் பல்கலையில் துணை வேந்தராகககூட ஆகிவிடலாம் போலிக்கிறது என்று பேராசிரியர்கள் கேலி பேசும் அளவுக்கு பெரியார் பல்கலையில் விதிமீறல்கள் உள்ளன.

 

 

பெரியார் பல்கலை இணையத்தின் முகப்பில், ‘அறிவால் விளையும் உலகு’ என்ற ‘டேக் லைன்’ போடப்பட்டு உள்ளது. முறைகேடுகளின் கூடாரமாக இருக்கும் பெரியார் பல்கலை, ‘ஊழலால் விளையும் அழிவு’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடாமல் காப்பதே இப்போதைய துணைவேந்தரின் கடமையாக இருக்க வேண்டும்.

 

 

 

– ஞானவெட்டியான்.