Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மக்கள் முட்டாள்களா?: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறியதில் இருந்து அந்த நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யங்கள் குறைந்து விட்டது. மீண்டும் டிஆர்பி-ஐ எகிற வைக்கும் விதமாக காஜல், சுஜா, ஹரீஷ் போன்றவர்களை அழைத்து வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி என்னவோ களைகட்டவில்லை.

தினமும் காலையில் ஒலிபரப்பப்படும் ‘வேக்-அப்’ பாடலுக்கு ஆடும் ஓவியாவின் நடனத்தை ரசிகர்கள ரொம்பவே இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது இருப்பவர்களில் பிந்து மாதவி, ‘வேக்-அப் பாடலுக்கு ஆடினாலும், ஓவியாவின் எனர்ஜி அவரிடம் மிஸ்ஸிங்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக மீண்டும் ஹாரத்தி, ஜூலியானாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. நேற்று (27/8/17), நிகழ்ச்சியின் இடையே ஜூலியானா, ஹாரத்தி, காயத்ரி, பரணி ‘டிரிக்கர்’ சக்தி ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர். பரணியைத் தவிர, மற்றவர்கள் மேடைக்கு வந்தபோது அரங்கில் இருந்த பார்வையாளர்கள் ஒருவர்கூட கைதட்டி உற்சாகப்படுத்தவில்லை.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலியானா, அவருக்கு முன்பே வெளியேறிய ஓவியாவிடம் அடிக்கடி அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்றார். அதற்கு பார்வையாளர்கள் சிலர், அவர் இப்போதும் பொய்தான் சொல்கிறார் என்று முகத்திற்கு நேராகவே சொல்ல, ஜூலியானா ரொம்பவே அப்செட்.

அந்த அதிர்ச்சியில் இருந்து ஜூலியை சகஜ நிலைக்குக் கொண்டுவர கமல்ஹாஸன், ”இவர் சின்னப்பெண். இவரிடம் உங்கள் கோபத்தை ஏன் காட்டுகிறீர்கள்? ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தவர்கள் பொய் சொல்லும்போது உங்கள் கோபம் எங்கே போனது?. கோபம் இருக்க வேண்டும். அது இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்,” என்று தன் பாணியில் அரசியல் நெடி பறக்க பேசினார்.

ஜூலி, காயத்ரி போன்றவர்களை பார்வையாளர்கள் மூலம் கழுவி ஊற்றவும் வாய்ப்பு அளித்துவிட்டு, பின்பு அவரே அதை சுத்தம் செய்வதுபோன்ற மேஜிக்கில் கமல் கைதேர்ந்தவர்தான்.

இப்போது, பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல மீண்டும் ஜூலியானா, ஹாரத்தி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதை பிக்பாஸ் ரசிகர்கள் கொஞ்சமும் ரசிக்கவில்லை. ”ஏன்டா நாங்க ஓட்டு போட்டு இந்த மூதேவிகள வெளிய அனுப்புனா, கொஞ்சம்கூட மக்கள மதிக்காம இந்த சனியனுங்கள உள்ள கூட்டிட்டு வர,’‘ என வடிவேலு பாணியில் நெட்டிஸன்கள் சூடான கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

”மக்கள் வேண்டாம் என்று ஓட்டளித்தவர்களில் இருவரை மீண்டும் வீட்டுக்குள் அனுப்புகிறார்களாம். மக்கள் முட்டாள்களா?,” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். ”இந்த ஹாரத்தி மொட்ட போட்டுட்டு உள்ளே போகுது. ஜூலி, உள்ளே போய் எல்லாருக்கும் மொட்ட போடும்,” என்றும் ஜூலியானாவை கலாய்த்துள்ளனர்.

ஹாரத்தி, கேன்சர் நோயாளிகளுக்கு ‘விக்’ தயாரிப்பதற்காக தன் கூந்தலை தியாகம் செய்ததாக கூறினார். இதற்கும் சில நெட்டிஸன்கள், ”ஓவியா ஆண்களைப்போல் ‘கிராப்’ வெட்டிக்கொண்டார். அவரும் கேன்சர் நோயாளிகளுக்காகத்தான் கூந்தலை தியாகம் செய்தார். அவரின் அம்மா, ஒரு கேன்சர் நோயாளி. அதனால் ஓவியாவுக்கு அதன் வலி தெரியும். ஆனால் ஹாரத்தி செய்ததெல்லாம் ”ச்சும்மா கவன ஈர்ப்புக்குத்தான்” என்றும் ‘ட்வீட்’டியுள்ளனர்.

ஆக, பிக்பாஸ் வீட்டில் ஓவியாவைத் தவிர எல்லோருமே பொய்யர்கள்தான் என்ற முரட்டுத்தனமான முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர் என்றே தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டில் குறும்படம் மூலம் சாயம் வெளுத்த ஆரவ்வையும் கலாய்த்துள்ளனர். ”ஆமா…இந்த ஆரவ் ஆர்மி எங்கடா போனீங்க? ‘அவர் ஒரு ஆம்பள ஜூலி’. அவர் யார் என்பது தெரிந்துவிட்டது,” என்று கேலியாக நெட்டிஸன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

நேற்றைய நிகழ்ச்சியின்போது, ஓவியா பேசிய வீடியோ ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. அதற்கு ஓவியா, தனது டிவிட்டர் பக்கத்தில், ‘என் வீடியோ ஒளிபரப்பியதற்கு நன்றி பிக்பாஸ். ஒருநாள் நானும் அங்கு இருப்பேன் என்று நம்புகிறேன். ரசிகர்களுக்கு நன்றி,’ என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ”நீங்கள் ஒவ்வொருவரும் என் மீது காட்டும் அன்பும், அக்கறையும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். மேற்கொண்டு சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்களின் அன்பு, என்னை மேலும் பொறுப்புள்ளவளாக மாற்றி இருக்கிறது,” என்று ஓவியா கூறியுள்ளார்.

நெட்டிஸன்கள், பங்கேற்பாளர்களை மட்டுமின்றி, பிக்பாஸ் நிகழ்ச்சியையும்கூட சகட்டுமேனிக்கு கிண்டலடித்துள்ளனர். ”பெட்ரோல் விலை ஏறிடுச்சுனு கிருஷ்ணாயில் ஊத்துனான். அதுவும் விலை ஏறிடுச்சுனு குரூடாயில் ஊத்துனேன். இப்ப எதுல ஓடுதுன்னு அவனுக்கே தெரியல,” என்று கவுண்டமணி பாணியிலும் கேலியாக டிவீட் செய்துள்ளனர்.

ஹாரத்தி, ஜூலியானா ஆகியோரின் குணநலன்களில் மாற்றம் வந்துள்ளதா? இல்லையா? என்பது அடுத்து வரும் எபிசோடுகளில் தெரிய வரும்.