Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மெர்சல் படத்தின் டைட்டில் மாறுகிறதா?

‘சண்டையில கிழியாத சட்டை எங்கிட்டு இருக்கு?’ என்ற ‘கைப்புள்ள’ வடிவேலு காமெடி போல, ‘சர்ச்சையில் சிக்காமல் விஜய் படம் எப்போது ரிலீஸ் ஆகியிருக்கு?’ என்று சொல்லும் காலம் வந்தாலும் ஆச்சர்யமில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் நடித்த படங்கள் ரிலீசுக்கு முன்னரோ அல்லது வெளியான பின்னரோ ஏதோ ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கி வருகிறது. ‘தலைவா’ படம் ரிலீசுக்கு முன்பே பிரச்னைகளை சந்தித்தது. அந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழ், ‘பார்ன் டு லீட்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவினர், அந்த வார்த்தைகளுக்கு அதிருப்தி தெரிவித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின.

கத்தி, துப்பாக்கி போன்ற படங்களும் நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்த பின்னரே திரைக்கு வந்தன. இந்நிலையில், சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள மெர்சல் படமும் தற்போது நீதிமன்ற வழக்கில் சிக்கி இருக்கிறது.

மெர்சல் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் கடந்த 21ம் தேதி மாலை வெளியானது. அப்போதுமுதல் ரசிகர்களிடம் அதிரிபுதிரியாக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த நான்கு நாள்களில், யூ டியூபில் மெர்சல் டீசர் 1.86 கோடிக்கும் மேல் லைக்ஸ்களை குவித்துள்ளது.

சமகால அரசியல் நிகழ்வுகள், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் குறித்தும் இந்தப்படத்தில் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விஜயின் அரசியல் ஆசையை வெளிப்படுத்தும் படமாகவும் மெர்சல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதனால் விஜயின் முந்தைய படங்களைவிட மெர்சல் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மெர்சல் டீசரில் ‘நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உன்னை கேட்கும். நீ வினைத்த வினையெல்லாம் உன்னை அருக்கக் காத்திருக்கும்’ என்று விஜய் ‘பேஸ் வாய்ஸ்’-ல் பேசும் ஒரு கவிதையும் இடம் பெறுகிறது. அந்தக் கவிதை வரிகளை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், ‘மெர்சலாயிட்டேன்’ என்ற பெயரில் தயாரிப்பாளர் கவுன்சிலில் ஒரு தலைப்பை பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அதனால் அதே பெயரைக் குறிக்கும் வகையில் உள்ள மெர்சல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அக். 3ம் தேதி வரை விளம்பரங்களில் மெர்சல் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்து உள்ளது. துப்பாக்கி பட வெளியீட்டுக்கு முன்பாக, ஒருவர் கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் படம் தயாரித்துள்ளதாகவும், இரண்டும் ஒரே பெயரில் இருப்பதாகக்கூறி துப்பாக்கி படத்திற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தார். துப்பாக்கி என்பதும் கள்ளத்துப்பாக்கி என்பது வேறு வேறு பொருள் கொண்ட பெயர்கள் என்றுகூறி, துப்பாக்கி படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

அதேபோல் மெர்சல் படத்திற்கு எதிரான வழக்கும் ஏதோ ஒரு வகையில் சுமூகமாக முடிந்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை மெர்சல் படத்தலைப்பிற்கு தடை வந்தால், படத்தலைப்பை மாற்றி திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரலீஸ் செய்யவும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மெர்சல் படத்தில் மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ளார். அதில் ஒரு வேடத்திற்கு ‘மாறன்’ என்ற பெயர் உள்ளது. அந்தப் பாத்திரத்தின் பெயரையே படத்திற்கு சூட்டவும் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் ஏற்கனவே பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. அதனால் அந்தப் பாடலின் முதல் வரியான ஆளப்போறான் தமிழன் என்றும் படத்திற்கு பெயர் சூட்டவும் ஒரு திட்டம் வைத்திருக்கின்றனர்.

மூன்றாவதாக, ‘ஆளப்பிறந்தவன்’ என்ற படத்தலைப்பையும் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தீபாவளி ரேஸில் கலந்து கொண்டால் மட்டுமே படத்தின் பட்ஜெட்டை தாண்டி லாபம் சம்பாதிக்க முடியும் என்பதால், எக்காரணம் கொண்டும் தலைப்பு பிரச்னை காரணமாக படம் வெளியீடு பாதிக்கப்படக்கூடாது என்பதில் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மும்முரமாக பணியாற்றி வருகிறது.