இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) நடந்த 11400 கோடி ரூபாய் மோசடி நிகழ்வு, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாலய ஊழல்களின் தேசமாக இந்தியா மாறி வருகிறதோ என்ற பிம்பம் உலகளவில் எழாமல் இல்லை.
பிஎன்பி-ல் உள்ள சில அதிகாரிகளை வளைத்துப்போட்டுக் கொண்டு வைர வியாபாரி நீரவ் மோடி இப்படியொரு இமாலய திருட்டில் ஈடுபட ஓர் அசுரத்தனமான மூளையும் வேண்டும்தான்.
பிஎன்பி வங்கியின் சந்தை மதிப்பில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கும், 2017ம் ஆண்டு கடைசி காலாண்டில் இந்த வங்கிக்கு கிடைத்த லாபத்தில் 50 மடங்குமாக நீரவ் மோடியின் மோசடி மதிப்பிடப்படுகிறது.
நீரவ் மோடி மட்டுமல்ல. அவரைப்போல மேலும் சில வாடிக்கையாளர்களும் நீரவ் மோடியின் உத்தியில் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. ஆனால் அதெல்லாமே சொற்ப அளவுக்குதான்.
இத்தகைய மோசடியான பணப்பரிமாற்றம், பிற வங்கிகளையும் பாதிக்கக்கூடும் என்ற கவலைகள் வங்கியாளர்களிடம் எ-ழாமல் இல்லை. வங்கிகளின் நம்பகத்தன்மைக்கும் பெரிய பங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஎன்பியில் நடந்த 11400 கோடி ரூபாய் மோசடியை கண்டுபிடித்த விதம் ரொம்பவே சுவாரஸ்யமானது. அதை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை பற்றிய விவரங்களை அதிகாரிகள் தரப்பில் இப்படி கூறப்படுகிறது…
மோசடி மன்னன் நீரவ் மோடி, ‘ஃபயர் ஸ்டார் டயமன்ட்’ என்ற பெயரில் வைர ஆபரண வியாபாரம் செய்து வருகிறார். இந்த தொழிலில் உலகளவில் அவரும் ஒரு பெரிய புள்ளி. கச்சா வைரங்களை கொள்முதல் செய்து, அதை மதிப்புக்கூட்டப்பட்ட ஆபரணங்களாக்கி விற்பதுதான் பிரதான தொழில்.
இதற்காக வெளிநாடுகலில் இருந்து கச்சா வைரங்களை இறக்குமதி செய்வதற்கு கடன் பெறுவதற்காக கடந்த 2011ம் ஆண்டு நீரவ் மோடியும், அவருடைய கூட்டாளிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையை அணுகியுள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு உரிய விலையை உடனுக்குடன் ரொக்கமாக வங்கி பரிவர்த்தனை மூலம் செலுத்தி விடலாம். அல்லது, அதற்கு அந்த தொகைக்கு வங்கி பொறுப்பேற்கும் கடிதம் (Letter of Undertaking) வழங்குவதும் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையைத்தான் நீரவ் மோடி பயன்படுத்திக் கொண்டார்.
வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு நீரவ் மோடி வழங்க வேண்டிய பணத்தை 90 நாள்கள் கடனாக செலுத்திவிட பஞ்சாப் நேஷனல் வங்கி ஒப்புக்கொள்கிறது. பின்னர், நீரவ் மோடியிடம் இருந்து அந்தப் பணத்தை வங்கி உரிய வட்டியுடன் வசூலித்துக் கொள்ளும்.
இங்குதான் சிக்கலே ஆரம்பமானது. வங்கி நிர்வாகத்திற்கு தெரியாமல், பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள சில அதிகாரிகள், நீரவ் மோடியின் நிறுவனத்திற்கு பணத்தை செலுத்துவதற்கு பொறுப்பேற்கும் போலியான கடிதத்தை வழங்கியுள்ளனர்.
போலி கடிதம் என்றால், உரிய அதிகாரிக்கு பதிலாக அவருடைய கையெழுத்தை வேறு ஒருவர் போட்டு அனுமதி வழங்குவது என புரிந்து கொள்ளலாம்.
இது போலியாக தயாரிக்கப்பட்ட உத்தரவாதக் கடித ஆவணம் என்பது நீரவ் மோடிக்கும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் உள்ள மோசடி அதிகாரிகள் சிலருக்குமே தெரியும்.
ஆனால், வெளிநாட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளைகளுக்கோ, அல்லது அதனுடன் வர்த்தக தொடர்பில் இணைந்திருக்கும் வங்கிகளுக்கு அந்த கடிதம் ஓர் அதிகாரப்பூர்வ ஆவணம்தான்.
அதனால்தான், அந்த போலி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, வெளிநாட்டில் உள்ள இந்திய வங்கிகள் கடன் வழங்க தாராளமாக முன்வந்தன.
நீரவ் மோடி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சில மோசடி ஆசாமிகள் இத்துடன் நின்றுவிடாமல், மோசடியின் உச்சத்திற்கும் சென்றனர். அதாவது, உலக அளவிலான உள்ளக வங்கி நிதி தொலைத்தொடர்பு சொசைட்டியையே (இதை ஆங்கிலத்தில் சுருக்கமாக ஸ்விஃப்ட் என்கிறார்கள்) ஏமாற்ற முடிவு செய்துள்ளனர்.
கடன் தொகையை வழங்குவதற்கு முன்பாக, ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வதற்கு வெளிநாட்டு வங்கிகள் பயன்படுத்தும் உள்ளக வங்கி செய்தி அனுப்பும் அமைப்புதான் இந்த ஸ்விஃப்ட் (SWIFT).
இந்த ஸ்விஃப்ட் அமைப்பு, ஒருவர் மீது சந்தேகம் இருக்கிறது என்று கூறிவிட்டால் அவ்வளவுதான். எந்த ஒரு வங்கியும் சந்தேகத்திற்குரிய நபருக்கு நயா பைசா கூட கடன் வழங்காது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் ஸ்விஃப்ட் அமைப்பை கையாளும் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, உயரதிகாரிகளின் அனுமதி பெறாமல் நீரவ் மோடியின் கடிதத்திற்கு உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.
இதனால்தான், வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளின் கிளைகள் நீரவ் மோடி மீது எவ்வித அய்யமும் கொள்ளாமல் கடன் வழங்க முன்வந்துள்ளன.
இந்த நிலையில்தான், ‘நோஸ்ட்ரோ அக்கவுண்ட்’ (Nostro Account) எனப்படும் ஒரு வெளிநாட்டு வங்கியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கிக் கணக்கிற்கு கணிசமான தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கணக்கில் இருந்து நீரவ் மோடியின் வெளிநாட்டு வைரக்கற்கள் விநியோகஸ்தர்களுக்கு பணம் சென்றுள்ளது.
இந்த போலி உத்தரவாதக் கடிதங்கள் மூலம் வழங்கப்பட்ட கடன் முதிர்வடைந்தபோது, பிற வங்கிகளில் இருந்து கடன் பெற்று அதை சரிக்கட்டியுள்ளனர். அதனால்தான் நீரவ் மோடி மீது உடனடியாக யாரும் சந்தேகம் கொள்ள முடியவில்லை. இதே உத்தியை கடந்த 7 ஆண்டுகளாக பின்பற்றியுள்ளனர்.
நீரவ் மோடிக்கு பக்கபலமாக இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் அந்த குறிப்பிட்ட அதிகாரி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அந்த இடத்திற்கு புதியவர் ஒருவர் பொறுப்புக்கு வந்தார்.
இந்த நிலையில்தான், நீரவ் மோடியின் நிறுவன ஊழியர்கள் வெளிநாட்டு வங்கிக் கடன் ஏற்பாட்டை புதுப்பித்துக்கொள்ள இந்த வங்கியை அணுகியபோதுதான், அவர்களுக்கு வரம்புக்கு மீறி கடன் உத்தரவாதம் வழங்கியதன் மூலம் இந்த இமாலய ஊழல் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
அது சரி… (நீரவ்) மோடி என்றாலே மோசடி என்ற பொருளும் உண்டோ?