Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உயர்மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம்

மருத்துவப்படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு ஒன்றே வழி

சமூகத்தில் உயர் அந்தஸ்தில் வைத்துப் பார்க்கப்படும் மருத்துவர்களை சாலையில் இறக்கி தவிக்க விட்டுள்ளது, ஒரு தீர்ப்பு. கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பில் சேர, இதுவரை வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை ஒரே தீர்ப்பில் ரத்து செய்துள்ளது, சென்னை உயர்நீதிமன்றம்.

மருத்துவப்படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு ஒன்றே வழி, என்ற நடுவண் அரசின் தாக்குதலில் இருந்தே மீளாத தமிழகத்திற்கு, மற்றொரு சம்மட்டி அடிதான் இந்த தீர்ப்பு.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும், நீட் தேர்வு உத்தரவும் மருத்துவர்களை இனி கார்ப்பரேட் மருத்துவமனைகளை நோக்கியே உந்தித்தள்ளும் என்ற கவலையையும் அச்சத்தையும் அரசு மருத்துவர்களிடம் ஒருசேர ஏற்படுத்தி உள்ளது.
பிரச்னையின் அடிநாதம் இதுதான்.
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் ஒவ்வொருவரும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றும் மருத்துவர்கள் டி.எம்., எம்.சி.ஹெச்., போன்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் சேரும்போது, அவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண்ணும், உயர் பட்டமேற்படிப்பு நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களுடன் சேர்த்துக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆனால், கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவால் இனி இந்த இட ஒதுக்கீடு சலுகையை கிராமப்புற அரசு மருத்துவர்கள் பெற முடியாது.
இந்த இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்துவிட்டால் பிறகு கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்கிறார்கள் மூத்த மருத்துவர்கள்.
“யு.எஸ்., யு.கே., போன்ற நாடுகளில் எம்பிபிஎஸ் படித்த ஒரு மருத்துவரை பார்க்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் ரூ.5000 கட்டணத்துடன், 5 மணி நேரம் காத்திருக்க வேண்டும். எம்.டி. படித்த மருத்துவரை சந்திக்க ரூ.10 ஆயிரம் கட்டணத்துடன் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும். டி.எம். படித்த மருத்துவரை ரூ.50 ஆயிரம் கட்டணத்துடன் மூன்று வாரங்களாவது காத்திருந்தால்தான் சந்திக்க முடியும். மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளிலும் இதே நிலைதான்.
இந்தியாவில்கூட டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் நகரங்களைச் சுற்றியுள்ள சுமார் 500 கிராமங்களைத் தவிர மற்ற இடங் களில் எம்.டி., டி.எம்., எம்.சி.ஹெச்., படித்த மருத்துவர்களை அவ்வளவு எளிதாக பார்த்துவிட முடியாது. இதுதான் இந்தியாவின் இன்றைய நிலை.
ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சாதாரண குடிமகன்கூட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உயர்சிறப்பு மருத்துவர்களை கட்டணமே இல்லாமல் சுலபமாக சந்தித்து விட முடியும். உலகத்திலேயே, எம்ஆர்ஐ ஸ்கேன் கூட எவ்வித கட்டணமுமின்றி இன்சூரன்ஸ் மூலம் இலவசமாக பெறும் வசதி தமிழகத்தில் மட்டும்தான் உண்டு.
உயர்சிறப்புமருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு மருத்து வர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டாலும், மருத்துவர்களின் முழு ஈடுபாட்டாலும்தான் இதெல்லாம் சாத்தியமானது.
இட ஒதுக்கீட்டை ரத்து செய்தால் மருத்துவத்துறை மீண்டும் பணக்காரர்களின் கையிலும், கார்ப்பரேட்டுகளின் கையிலும் சென்று விடும். சீனா, ரஷ்யாவில் இருந்து படித்துவரும் மருத்துவர்கள் கைகளிலும் மருத்துவச் சேவை சென்று விடும்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் உயர்மருத்துவப் பட்டமேற்படிப்பில் 50% இடங்கள் வடமாநிலத்தவருக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. அதாவது, தமிழ்நாட்டில் டி.எம்., எம்.சிஹெச்., படிப்புகளில் மொத்தமுள்ள 198 இடங்களில் நீட் தேர்வு மூலம் 100 இடங்கள் வட மாநிலத்தவருக்கு ஒதுக்கப்பட்டது.
வட மாநிலத்தவர் உயர்மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, ஒருநாளும் கிராமப்புறங்களில் சென்று பணியாற்றப்போவதில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்து தமிழக அரசு உருவாக்கிய கட்டமைப்பில், பிற மாநில மாணவர்கள் வந்து, நம் அறிவுச் செல்வத்தை கொள்ளை அடித்துச்செல்லும் அபாயம் உள்ளது.
சிசு மரண விகிதம் (ஐஎம்ஆர்) ஆயிரத்துக்கு 21 ஆக குறைத்த நான்கு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. வடகிழக்கு மாநிலங்களில் இன்றைக்கும் மாவட்டத்திற்கு இரண்டு டி.எம்., எம்.சி.ஹெச்., மருத்துவர்கள் இருந்தாலே பெரிய விஷயம். ஆனால், தமிழகத்தில் இன்றைய நிலையில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில்கூட உயர்சிறப்பு மருத்துவர்களை அரசு நியமித்துள்ளது.
உயர்மருத்துவ பட்டமேற் படிப்பில் அரசு மருத்து வர்களுக்கு இனி இட ஒதுக்கீடு இல்லையென்றால் ஒட்டுமொத்த சுகாதாரமே முடங்கி விடும்,” என்கிறார் சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர் திருவருட்செல்வன்.
சமீப காலங்களில், நடுவண் அரசின் கொள்கை முடிவுகளை அப்பட்டமாக நீதிமன்றங்களும் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டன. உதாரணமாக, தலாக் விவகாரம், நீட் தேர்வு போன்றவற்றைச் சொல்லலாம். தேர்வர்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்படாத நிலையில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நடுவண் அரசு இன்னும் விலக்கு அளிக்க மறுக்கிறது.
இது ஒருபுறமிருக்க, ஏற்கனவே நடுவண் அரசின் கொள்கை முடிவுகள், கார்ப்பரேட்டுகளின் நலன் சார்ந்தே வகுக்கப்படுகின்றன. அதன் நீட்சியாகவே, அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டு ரத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
கார்ப்பரேட் மருத்துவமனைகளின் சேவை குறித்து, அங்கு பணியாற்றி வந்த மருத்துவர்கள் அருண் கேத்ரே, அபய் சுக்லா ஆகியோர், ‘டிசன்ட்டிங் டயக்னசிஸ்’ (Dessenting Diagnosys) என்ற நூலை எழுதியுள்ளனர். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 78 மருத்துவர்களை நேரில் சந்தித்து எழுதப்பட்டது, இந்த நூல்.
தனியார்மயம், போட்டியை உருவாக்கிக் குறைந்த செலவில் தரமான சேவை வழங்கும் என்பதே, தனியார்மய ஆதரவாளர்களின் கருத்து. ஆனால், நடைமுறையில் இந்த வாதம் பொய் என்பதை டிசென்டிங் டயக்னசிஸ் நூல் சொல்கிறது. 1990களுக்குப் பிறகு, மருத்துவத்துறையில் எந்த அறமுமே இல்லை என்கிறார்கள் அவர்கள்.
புறநோயாளிகளாக உள்ளவர்களில் குறைந்தபட்சம் 40% பேரையாவது தொடர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்று தனியார் கார்ப்பரேட் மருத்துவமனை நிர்வாகங்கள் நிர்ப்பந்தப்படுத்துகின்றனவாம். இதர தொழில்களில் உள்ள வணிக இலக்கு, மருத்துவத்துறையையும் தொற்றிக்கொண்டதன் விளைவு இது.
தேவையின்றி உடல்நலப் பரிசோதனை செய்யப்படுவதும் உண்மை எனக்கூறும் மருத்துவர்கள், வெற்றுப் பரிசோதனைகளுக்கு நிர்வாகம் சொல்லும் பெயர், ‘சின்க் டெஸ்ட்’ (Sink Test) என்கிறார்கள்.
எக்ஸ்-ரே எடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து 25%, ஸ்கேன் எடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து 33% கமிஷன் பெறும் மருத்துவமனை நிர்வாகம், அதற்காகவே ‘சின்க் டெஸ்ட்’களுக்கு நோயாளிகளை நிர்ப்பந்திப்பதாகவும் அந்த நூலில் கூறியுள்ளனர்.
“இட ஒதுக்கீடு இல்லாவிட்டால், பொதுப்போட்டியில் உள்ளே நுழைந்து உயர்சிறப்பு மருத்துவப்படிப்பு படிக்கும் மருத்துவர்கள், அதை வைத்துக்கொண்டு சம்பாதிக்கவே விரும்புவார்கள். பிறகெப்படி கிராமப்புறத்தில் சென்று பணியாற்றுவார்கள்?,” எனக்கேள்வி எழுப்புகிறார் இந்திய பொதுசுகாதாரச்சங்கத் தலைவர் மருத்துவர் இளங்கோ.
“அரசு மருத்துவமனைகளை விட, தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் அதிக சம்பளம் கிடைக்கிறது. இரண்டாவது, அரசுத்துறைகளில் பணி யாற்றினால் பென்ஷன் கிடையாது. அடுத்து, அரசியலமைப்புச் சட்டத்தில் அந்தந்த மாநில அரசுகள் தான் மக்கள் நல்வாழ்வைக் கவனித்து வருகின்றன.
மருத்துவக்கல்வி, நடுவண் அரசின் கட்டு ப்பாட்டில் உள்ளது. இட ஒதுக்கீடு ரத்து என்பது பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இந்த தடை உத்தரவு மூலம், கார்ப்பரேட்டுகளை நோக்கி மருத்துவர்களை அரசு உந்தித்தள்ளுகிறது. இதனால் கிராமப்புற ஏழை மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்காது.
பலநூறு கோடி ரூபாய் முதலீடு போட்டு தொடங்கியிருக்கும் மருத்துவமனைகளுக்கு, திறமையான மருத்துவர்கள் இல்லாததை நடுவண் அரசின் கவனத்துக்கு கார்ப்பரேட் முதலாளிகள் கொண்டு சென்றுள்ளனர். அதன் விளைவாகத்தான் இப்படி ஒரு தடை உத்தரவு நீதிமன்றம் மூலம் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கருதுகிறேன்,” என உத்தரவின் உள்ளரசியல் பற்றியும் சொன்னார் மருத்துவர் இளங்கோ.
நீட் தேர்வு மற்றும் உயர்நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து தீவிரமாக குரல் கொடுத்து வரும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத்திடம் பேசினோம்.
“50% இட ஒதுக்கீடு பாதிக்கப்பட்டால், கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை குறையும். விருப்பப்பட்டு அரசுப்பணிக்கு யாரும் போக மாட்டார்கள். அதேபோல் பட்டமேற்படிப்பு படித்த மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறையும். அதனால் ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்காமல் போய்விடும். அதனால்தான் இந்த இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு உடனடியாக ஓர் அவசர சட்டம் பிறப்பிப்பதன் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரையும் சந்தித்து இதுபற்றி வலியுறுத்தி இருக்கிறோம்.
அதேபோல் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தமிழக அரசு கொண்டு வந்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரியிருக்கிறோம். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரைக்கும் போராட்டம் தொடரும்,” என்றார் மருத்துவர் ரவீந்திரநாத்.
மருத்துவத்துறையில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நீட் தேர்வில் கோட்டை விட்டதுபோல், தமிழக அரசு இப்பிரச்னையிலும் அசட்டையாக இருந்துவிடக்கூடாது.