Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

மக்களவை தேர்தல்: சேலம் தொகுதியில் 22 பேர் போட்டி! இறுதி பட்டியல் வெளியானது!!

மக்களவை தேர்தலில் போட்டியிடும்
இறுதி வேட்பாளர் பட்டியல்
இன்று மாலை வெளியிடப்பட்டது.
இதில், சேலம் தொகுதியில் 22 பேர்
போட்டியிடுவதாக மாவட்ட தேர்தல்
அதிகாரி ரோகிணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதி ஆகியவற்றுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இத்தேர்தலையொட்டி மார்ச் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. 27ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.

சேலம் மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டபோது, முழுமையாக பூர்த்தி செய்யப்படாதது, கையெழுத்து இல்லாதது, சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்படும் படிவம் 26 இணைக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால், 12 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று (மார்ச் 28), அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வத்தின் மனைவி ராதா வேட்புமனுவை திரும்பப்பெற்றார். இன்று மேலும் 2 பேர், வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.

இதையடுத்து, சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 29, 2019) மாலை, மாவட்ட ஆட்சியரும், சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணி வெளியிட்டார். அதன்படி, இத்தொகுதியில் 22 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில், திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன், அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் ஆகியோரிடையேதான் இம்முறை கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர பரப்புரையை தொடங்கிவிட்ட நிலையில், அமமுக தரப்பில் இன்னும் வேகம் எடுக்கவில்லை.

இவர்கள் தவிர, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசா, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சடையன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

 

மேலும், சுயேச்சை வேட்பாளர்களான
சிலம்பரசன், மோகன், அகமது ஷாஜகான்,
கலைமன்னன், சிவராமன், சுருளிவேல்,
தமிழரசன், நடராஜன், பிரவீணா, மணிமாறன்,
மாதேஸ்வரன், மூர்த்தி காமராஜர், ரவி,
ராமச்சந்திரன், ராஜா, ஹரிஹரன்
ஆகியோரும் தேர்தல் களத்தை
ஆர்வத்துடன் சந்திக்க உள்ளனர்.
சுயேச்சைகளில் ஒரு சிலரைத் தவிர
மற்றவர்கள் தேர்தல் களத்திற்கு
புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிடிவி.தினகரனின் அமமுக, தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியாக பதிவு செய்யப்படாததால், அக்கட்சி வேட்பாளர் சுயேச்சை என்றே அறிவிக்கப்பட்டு உள்ளார். இறுதி வேட்பாளர்கள் கொண்ட பட்டியல், அகர வரிசைப்படி தயாரிக்கப்பட்டு உள்ளது. இதே வரிசையில்தான் வாக்குப்பதிவு இயந்திரத்திலும் பொருத்தப்படும். அதன்படி, வேட்ப £ளர் பெயர் பட்டியலில் முதல் இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சடையன் முதல் இடம் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் கேஆர்எஸ்.சரவணன், மூன்றாவது இடத்தில் திமுகவின் எஸ்.ஆர்.பார்த்திபன் பெயர்கள் இடம் பிடித்துள்ளன.

 

சுயேச்சைக்கு பிரஷர் குக்கர்!

 

அமமுகவுக்கு ஆர்.கே.நகர் செண்டிமென்ட்படி,
பிரஷர் குக்கர் சின்னம் கிடைக்கும் என்று
பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.
தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும்
போட்டியிடுவதால் தங்களுக்கு
குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும்
என்று உச்சநீதிமன்றம் வரை
சட்டப்போராட்டம் நடத்தினர். எனினும்,
அக்கட்சிக்கு இம்முறை பிரஷர் குக்கர்
சின்னம் ஒதுக்கப்பட முடியாது என
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அக்கட்சிக்கு
பொது சின்னமாக பரிசு பெட்டி சின்னம்
ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பரவலாக சுயேச்சைகளுக்கு
பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
சேலம் மக்கள் தொகுதியில் அழகாபுரம் புதூர்
பாரதி தெருவைச் சேர்ந்த சுருளிவேல்
என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அவருக்கு பிரஷர் குக்கர் சின்னம்
ஒதுக்கப்பட்டு உள்ளது.

 

39 தொகுதிகளில் எத்தனை பேர்?

 

தமி-ழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுவோரின் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 39 தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 1576 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் நிராகரிப்பு, திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்குப் பிறகு, இறுதி தேர்தல் களத்தில் 845 பேர் போட்டியிடுவதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

 

– பேனாக்காரன்.

Leave a Reply