கல்லீரல் பாதிப்பால் பிரபல நகைச்சுவை நடிகர் ‘அல்வா’ வாசு நேற்று (17/08/17) காலமானார்.
தமிழின் முன்னணி நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான அல்வா வாசு, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கல்லீரல் அழற்சி நோய் ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரிய வந்தது.
கடந்த சில மாதங்களாக அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நலம் மிகவும் மோசமடைந்ததை அடுத்து, கடந்த இரு நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் நேற்று காலமானார். நடிகர் சங்கm சார்பில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்வா வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.
மறைந்த இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் முத்திரை பதித்தவர் அல்வா வாசு. அமைதிப்படை, சிவாஜி, கருப்பசாமி குத்தகைதாரர், எல்லாம் அவன் செயல் உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக, நடிகர் வடிவேலுவின் காமெடி கூட்டணியில் இணைந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களிடம் பெரிய அளவில் அல்வா வாசுவை கொண்டுபோய் சேர்த்தன.
‘அல்வா’ ஏன்?: ‘அமைதிப்படை’ படத்தில், தாயம்மா பாத்திரத்தில் நடித்த கஸ்தூரிக்கு, சத்யராஜ் அல்வாவில் கஞ்சா கலந்து கொடுத்து, மயக்கி, பாலியல் வன்புணர்வு செய்வது போன்ற ஒரு காட்சி இடம்பெறும். அந்த காட்சியில் சத்யராஜூக்கு அல்வா வாங்கி வந்து கொடுக்கும் பாத்திரத்தில் வாசு நடித்திருப்பார். இதன்பிறகே, சாதாரண வாசுவாக இருந்த அவர், ‘அல்வா’ வாசு என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.