Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் ‘நேர்மையான’ திருட்டு!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் களம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று (பிப். 25, 2023) மாலையுடன் பரப்புரை ஓய்கிறது. பிப். 27ம் தேதி, வாக்குப்பதிவு நடக்கிறது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், திமுக, அதிமுக இடையேதான் வழக்கம்போல் நேரடி போட்டி நிலவுகிறது.

 

மாற்று அரசியலை முன்னெடுக்கும்
பாமக தலைவர் ராமதாஸ், நாம் தமிழர் சீமான்
போன்றோர், இடைத்தேர்தலே
அவசியமற்றது எனத் தொடர்ந்து
சொல்லி வருகின்றனர்.

 

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ்
போட்டியிட்டாலும் களத்தில் முண்டா தட்டுவது
என்னவோ திமுகதான்.
கடந்த 21 மாத திமுக ஆட்சிக்கு
உரைகல்லாக இந்த இடைத்தேர்தலை
ஆளும்தரப்பு கருதுகிறது.
அதனால் முதன்மை எதிரியான
அதிமுகவை கட்டுத்தொகையை
இழக்கச் செய்ய வேண்டும் என்ற
இலக்கோடு கங்கணம் கட்டிக்கொண்டு
தீயாய் வேலை செய்கின்றனர்,
ஆளுந்தரப்பினர்.

 

திமுகவின் இடைத்தேர்தல் விற்பன்னர்களான
அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு,
செந்தில்பாலாஜி ஆகியோர் தங்கள்
சகாக்களுடன் கடந்த ஒரு மாதமாக
ஈரோடு கிழக்கையே தகிக்க
வைத்திருக்கின்றனர்.

 

கடந்த 25 நாள்களாக
ஆளும் திமுக அரங்கேற்றி வரும்
கட்டற்ற விதிமீறல்கள்
தேர்தல் ஜனநாயகத்தில் முன்னெப்போதும்
கண்டிராத நடைமுறை. வாக்குச்சாவடிகளை
சூறையாடுவது, எதிரெதிர் கட்சிகள் மோதிக்கொள்வது,
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது எல்லாம்
கடந்த காலங்களில் நடந்திருந்தாலும்
இப்போது எல்லாவற்றையும் விஞ்சிய
கேடுகெட்ட செயல்களில்
திமுக ஈடுபட்டு இருக்கிறது.

 

சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களை,
கிட்டத்தட்ட குத்தகைக்கு ஒப்பந்தம்
செய்தவர்கள் போல அவர்களை
அழைத்து வந்து 120க்கும் மேற்பட்ட
இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பட்டிகளில்
ஆடு, மாடுகளைப்போல அடைத்து
வைத்திருக்கிறது ஆளும்தரப்பு.
கடந்த 25 நாள்களாக இந்த
கேலிக்கூத்துதான் நடந்து
கொண்டிருக்கிறது.

 

பட்டிகளில் அடைக்கப்பட்டு இருக்கும் வாக்காளர்களுக்கு காலை டிபன், மதியம் பிரியாணி, குடிநீர், தேநீர், பிஸ்கட் வழங்கி விடுகின்றனர். பொழுதுபோக்க உதயநிதி நடித்த படங்களை திரையிடுகின்றனர். கட்சியினர் தாங்கள் அழைத்து வந்த வாக்காளர்களை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் சரிபார்க்கின்றனர். ‘அவசரத்துக்கு’ வெளியே சென்றவர்கள் மீளவும் பட்டிக்குள் வந்து சேர்ந்தார்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.

 

இவ்வாறு அழைத்து வரப்படும்
வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் வீதம்
திமுகவினர் பட்டுவாடா செய்கின்றனர்.
சில பட்டிகளில், 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.
பின்னர் அவர்களை வழக்கம்போல் பேருந்து,
லாரிகளில் அழைத்துச்சென்று வீடுகளில்
இறக்கி விட்டுவிடுகின்றனர்.
மறுநாள் காலையில் மீண்டும் வாக்காளர்கள்
அதே கூடாரங்களுக்கு
திரும்பி விட வேண்டும்.

 

பீஹார், உத்தரபிரதேசம் மாநிலங்களில் கூட
இதுபோன்ற அராஜகங்கள்
அரங்கேறியதில்லை.

 

இவை போதாதென்று பிப். 21ம் தேதி
வாக்காளர்களுக்கு திமுக தரப்பில்
தலா 3000 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
தவிர, சேலை, வெள்ளி கொலுசு,
வெள்ளி காமாட்சி விளக்கு, ஸ்மார்ட் வாட்ச்
ஆகிய பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன.

 

தேர்தல் பொறுப்பாளர்களுள்
ஒருவரான மூத்த அமைச்சர் ஒருவர்,
தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில்
மட்டும் தினமும் 40 லகரங்களை
அள்ளி தெளிக்கிறாராம்.

 

தேர்தல் பொறுப்பாளர்களில்
ஒருவரான அணில் அமைச்சர்,
தனி ஆவர்த்தனமாக செயல்படுவதாகவும்
சொல்கிறார்கள். அவருக்கு ஒதுக்கப்பட்ட
இடங்களில் வாக்கிற்காக மட்டும் 5000 ரூபாயும்,
வழக்கம்போல் மற்ற பரிசுப்பொருள்களும்
வழங்கப்பட்டு உள்ளன.

 

முதன்முதலில் திருமங்கலம்
இடைத்தேர்தலில்தான் திமுகவினர்
வாக்காளர்களுக்கு
1000 முதல் 2000 ரூபாய் வரை வழங்கினார்கள்.
அப்போது தென்மண்டல அமைப்புச்
செயலாளராக இருந்த மு.க.அழகிரி
கண்டுபிடித்த சூத்திரம் இது.
அதற்கான பரிசாக அவர், எம்பி ஆகி,
அமைச்சரானது வேறு கதை.

 

இப்போது ஈரோடு கிழக்கில்
பட்டியில் அடைக்கும் சூத்திரத்தையும்
திமுகவினரே கண்டுபிடித்துள்ளனர்.
இனிமேல் இடைத்தேர்தல்களில்
பட்டி கலாச்சாரம் நிரந்தரமாகி விடலாம்.

 

திமுகவின் தேர்தல் நடைமுறைகளை
உற்று நோக்கினால் வரலாற்றின்
வழிநெடுகிலும் அவர்கள் எத்தகைய
கீழ்த்தரமான செயல்களையும்
செய்வார்கள் என்பது புலப்படும்.

 

திமுக அரசை கலைத்த
அதே இந்திராவுடன் கூட்டு வைத்தார் கருணாநிதி.
‘நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சியைத் தருக’ என்றார்.
பண்டாரம், பரதேசிகள் என்று பாஜகவை
விமர்சித்துவிட்டு, அக்கட்சியுடன்
1999ல் கூட்டு வைத்தனர். ஈழத்தில் கொத்து கொத்தாக
தமிழர்கள் அழித்தொழிக்கப்படும்போதும் கூட,
பேரனின் அமைச்சர் பதவிக்காக
டெல்லிக்கு பறந்தார் கருணாநிதி.

 

இவர்கள் போட்டுக்கொடுத்த
தேர்தல் ஜனநாயகப் பாதையைத்தான்
அதிமுகவும் பின்பற்றுகிறது.
திமுக அளவுக்கு இல்லாவிட்டாலும்
அவர்களும் வாக்காளர்களுக்கு
பணம் பட்டுவாடா செய்வதில்
சளைக்கவில்லை.

 

வேடிக்கை என்னவென்றால், வாக்காளர்களை திமுக தரப்பு குத்தகைக்கு எடுத்துக் கொண்டதால் அதிமுக உள்ளிட்ட இதர கட்சியினர் பரப்புரைக்குச் செல்லும் நேரத்தில் தெருக்களும், வீடுகளும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன.

 

ஈரோடு கிழக்கில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 600க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள்கள் பட்டுவாடா செய்யப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறுவதுதான் ஆகப்பெரிய நகைச்சுவை.

 

தேர்தல் பறக்கும் படையினரோ, இதர தேர்தல் அலுவலர்களோ நினைத்து இருந்தால் மக்களோடு மக்களாக திமுகவினரின் பட்டிகளுக்குள் உட்கார்ந்து கொண்டு, பணம் பட்டுவாடா செய்வோரை கையும் களவுமாகப் பிடித்திருக்கலாம். அதை செய்யாமல், ஆதாரத்திற்காக காத்திருப்பது என்பதெல்லாம் தேர்தல் ஆணையமும் திருடர்களுடன் கூட்டு வைத்திருப்பது என்றே பொருளாகும்.

 

ஈரோடு கிழக்கில் மொத்தம் 2.26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். திமுகவினரால் அன்றாடம் பட்டிகளுக்கு கொண்டு வரப்படும் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு காலை டிபன், மதியம் பிரியாணி, குடிநீர், இரண்டு வேளை தேநீர், பிஸ்கட் ஆகியவற்றுக்கென ஒரு நாள் செலவு 3 கோடி வீதம், 25 நாள்களுக்கு 75 கோடி ரூபாய்;

 

ஆளுந்தரப்பு, மொத்த வாக்காளர்களில் 80 சதவீதம் பேருக்கு வாக்கிற்கு பணம் பட்டுவாடா செய்துள்ளனர். அதன்படி, 1.60 லட்சம் வாக்காளர்களுக்கு தலா 3000 ரூபாய் வீதம் 48 கோடி ரூபாய்; சேலை, குக்கர், கொலுசு, காமாட்சி விளக்கு, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பரிசுப்பொருள்களுக்கென 3000 ரூபாய் வீதம் 48 கோடி ரூபாய்; தினமும் 30 ஆயிரம் பேருக்கு மது புட்டிகள் (குவார்ட்டர்) வாங்க தலா 200 வீதம் 60 லட்சம் வீதம் 25 நாள்களுக்கு 15 கோடி ரூபாய்;

 

இவற்றின் மூலம் ஆளும் திமுக தரப்பு, வாக்காளர்களுக்கு 186 கோடி ரூபாய்களை வாரி இறைத்துள்ளது. இவற்றில் பட்டிகளுக்கு ஆள்களை ஏற்றி வருவதற்கான போக்குவரத்துச்செலவு, அமைச்சர்கள், பரப்புரையாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், கலைக்குழுவினருக்கான செலவுகள், மது உள்ளிட்ட இத்யாதிகள் செலவுகளை சேர்க்கப்படவில்லை. ஆனால் ஈரோடு கிழக்கில் திமுக தரப்பில் 250 முதல் 300 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

அதிமுகவினரும் சளைத்தவர்கள் இல்லை. அவர்கள் தரப்பிலும் பிப். 20ம் தேதி, 80 சதவீத வாக்காளர்களுக்கு தலா 2000 ரூபாய் வீதம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. தவிர, சேலை, வெள்ளி கொலுசு உள்ளிட்ட பரிசுப்பொருள்களையும் சேர்த்து அதிமுக தரப்பில் ஒவ்வொரு வாக்காளருக்கும் 5000 ரூபாய் வரை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

 

அதிமுக தரப்பில் 100 கோடி ரூபாய், இந்த இடைத்தேர்தலில் இறக்கி விடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தை மீறி சாதித்து விட முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் தெரியும். என்றாலும், கவுரவமான தோல்வி என்ற நிலையை எட்டிப்பிடிப்பதற்காகவே இவ்வளவு மெனக்கெடுகின்றனர் எதிர்க்கட்சியினர்.

 

கைப்புண்ணுக்கு கண்ணாடி

தேவையில்லை என்பதுபோல்,

வாக்காளர்களை பட்டிகளில் அடைத்து

வாக்குகளை விலைபேசும்

ஆளுங்கட்சியினரின் அராஜகங்களை

இடதுசாரிகளும், விசிக உள்ளிட்ட

கட்சிகளும் கூட கண்டிக்காமல்

கள்ள மவுனம் சாதிக்கின்றன.

 

ஐந்து பேர் கொண்ட
ஒரு குடும்பத்திற்கு திமுக தரப்பில்
இருந்து 36 ஆயிரம் ரூபாயில் இருந்து
48 ஆயிரம் ரூபாய் வரையிலும்
கிடைத்திருப்பதாகச் சொல்கின்றனர்.
இதில் பட்டியில் அடைக்கப்பட்டவர்களுக்கு
மட்டும் கடந்த 25 நாள்களில் 7500 ரூபாயில்
இருந்து 25000 ரூபாய் வரை கூலியாக
கிடைத்திருக்கிறது என எங்கெங்கும்
பணமழை கொட்டுவதாய் பூரிக்கின்றனர்
வாக்காளர்கள். அவர்கள் இல்லாதவர்கள்;

 

மாதம் லட்டுபோல லட்சம் ரூபாய் சம்பளம் பெறக்கூடிய அரசு ஊழியர்களே ரேஷன் கடைகளில் அரசு கொடுக்கும் 1000 ரூபாய்க்கும், மானிய விலை சர்க்கரைக்கும் ஆலாய் பறக்கும்போது ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களின் இயலாமையை நாம் கொச்சைப்படுத்த முடியாது.

 

இந்தளவுக்கு தேர்தல் ஜனநாயகம் விலை பேசப்படுவது தெரிந்து இருந்தும் ஒரே ஒரு ஆதாரம் கூட கிடைக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.

 

சட்டப்பேரவை தேர்தலில்
ஒரு வேட்பாளரின் செலவு உச்சவரம்பு
30.80 லட்சம் ரூபாய்தான்.
ஆனால் கள யதார்த்தம் இப்படியா இருக்கிறது?
இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக
ஆகிய இரண்டு கட்சிகளும் 350 – 400 கோடி ரூபாய்களை
அள்ளித்தெளித்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தங்களின் கவுரவத்தை நிலைநாட்டுவதற்கு பதிலாக,
அத்தொகையை அந்தத் தொகுதியின்
வளர்ச்சிக்காக செலவிட்டிருக்கலாம்.

 

இந்த தேர்தலில் ஆளுங்கட்சி சார்பிலான காங்கிரஸ் வெற்றி பெறுவதாலோ அல்லது அதிமுக வெற்றி பெறுவதாலோ ஆட்சி மாற்றம் ஏதும் நடந்து விடப்போவதில்லை. இதுபோன்ற சூழல்களில் பெரும்பான்மையுடன் இருக்கும் ஆளுங்கட்சிக்கே வெற்றியை ஒதுக்கி விடும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

 

இடைத்தேர்தலையொட்டி அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒரே தொகுதியில் குவிக்கப்படுவதால் ஒரு மாதத்திற்கு மேலாக அரசு அலுவல்கள் அடியோடு முடங்கிப் போகின்றன. அந்தத் தொகுதியில் சிறு, குறு தொழில்கள் மட்டுமின்றி விவசாயத்திற்கும் ஆள்கள் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கின்றன. தவிர, தேர்தல் ஆணையத்திற்கும் வெட்டிச்செலவு. எல்லாமே நம்முடைய பணம்.

 

நாம் தமிழர் கட்சியினர் மீது
கற்களை விட்டெறியும் அளவுக்கு
ஆளுந்தரப்பு அராஜகத்தில்
ஈடுபடுவதுதான் திராவிட மாடலா?
போதாக்குறைக்கு காவல்துறை
கூலிப்படையினர், திமுகவினர் மீது
நாம் தமிழர் கட்சியினர் கற்களை வீசி
தாக்கியதாக வழக்கு பதிவு
செய்துள்ளனர்.

 

வாக்காளர்களை குத்தகைக்கு
பிடித்துச் செல்வது எந்த வகையிலும்
ஜனநாயகம் ஆகாது. வாக்காளனை விலைக்கு
வாங்குவதும், குத்தகைக்கு எடுப்பதும்தான்
மு.க.ஸ்டாலின் சொல்லும் திராவிட மாடலா?
அது, அப்பட்டமான கொள்ளை ஆகாதா?

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதன் மூலமாகவாவது ஆணையம், தன்நிலையை கொஞ்சமாவது நியாயப்படுத்திக் கொள்ள முயல வேண்டும்.

 

தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்யாவிடில், ஈரோட்டுப் பெரியார் மண்ணின் மானமுள்ள தமிழர்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பணப்பட்டுவாடாவுக்கு மயங்காமல் புதிய வரலாறை தங்கள் வாக்குகள் மூலம் எழுத வேண்டும்.

 

– பேனாக்காரன்