Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஒழுகும் பேருந்துகள்; கிழிக்கும் தகடுகள்!

தமிழக அரசுப்பேருந்துகள், மழைக்காலங்களில் கிட்டத்தட்ட நடமாடும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளாக மாறி விடுகின்றன. மழையில் நனைந்தும், கிழிக்கும் தகடுகளுடனும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் அவல நிலை தொடர்கிறது.

தமிழகத்தில் தனியார் வசமிருந்த போக்குவரத்து சேவை, 1972ம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்டது. இப்போது 8 கோட்டங்கள், 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2016-17 கணக்கெடுப்பின்படி, 23078 பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. நாளொன்றுக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் நம்பி இருக்கும் ஒரே பொதுப் போக்குவரத்து சாதனம், அரசுப் பேருந்துகள்தான். எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூல், சராசரி வேகத்திற்கு மேல் செல்லாதது, தனியார் பேருந்துகளில் உள்ளதுபோல் டிவி, ரேடியோ மற்றும் சுத்தமான இருக்கை வசதிகள் இல்லாதது என பல வழிகளில் பயணிகள் சுரண்டப்படுகின்றனர். எனினும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளைக்கூட செய்து தராத அவல நிலையில்தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது.

எந்த ஒரு அரசுப் பேருந்தின் இருக்கையும் சுத்தம் செய்வதே கிடையாது. தூசி படிந்து காணப்படும். ஒவ்வொரு டிக்கெட்டிலும் சில்லரைகளை சுருட்டும் ஓட்டுநர், நடத்துநர் கூட, இருக்கைகளை சுத்தம் செய்ய முன்வருவதில்லை. அரசுப் பேருந்துகள் வழங்கும் ஒரே அடிப்படை வசதி, வெயிலில் காயாமல் நிழலில் செல்ல முடியும் என்ற ஓர் உத்தரவாதம் மட்டுமே. மழை பெய்தால், நனையாமல் ஊர் போய்ச் சேர்வது என்பது இயலாத காரியம்.

திருப்பத்தூரில் இருந்து சேலம் சென்ற அரசுப்பேருந்தில் (ரூ.72 கட்டணம். ரூ.70 டிக்கெட் எண்: EB -19, 28687 மற்றும் ரூ.2 டிக்கெட்டின் எண்: ED – 59, 83424) பயணம் செய்த ஒரு பயணி, ஒழுகும் பேருந்தில் நனைந்து கொண்டே ஊர் வந்து சேர்ந்துள்ள துயரத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

”கடந்த 15.8.17ம் தேதி திருப்பத்தூரில் இருந்து ஊத்தங்கரையை கடந்தபோது திடீரென்று மழை பெய்தது. கன மழை. பேருந்தில் 10 பெண்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கன மழையால் ஜன்னலோர பீடிங் விரிசல் வழியாக மழைநீர் உட்புகுந்தது. ஓரத்தில் இருந்த அனைத்து இருக்கைகளிலும் மழைநீர் கொட்டியது. பேருந்தின் நடுப்பகுதியில் மேற்கூரையில் இருந்த துளைகள் வழியாக தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்தது. கடைசி இருக்கையின் இடப்புற மேல்பகுதியில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள மூலையில் இருந்தும் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது.

       

பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தும், மழையின் காரணமாக எல்லோரும் பேருந்தின் நடுப்பகுதிக்கு வந்து விட்டோம். சிலர் மட்டும், நனைந்தாலும் பரவாயில்லை என்று இருக்கையிலேயே இருந்தனர். மேலும், எலக்ட்ரானிக் வயர்களும் அறுந்து தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கடைசி இருக்கைக்கு முந்தைய இருக்கை பாதி உடைந்த நிலையில் அதை கயிறு கொண்டு கட்டி இருந்தனர். மழையில் நனைந்த உடையுடன் அன்று பயணம் செய்தோம்,” என்றார் அந்தப் பயணி.

இந்நிலையில், ஆத்தூரைச் சேர்ந்த ராஜலிங்கம் என்ற பயணி நேற்று (30/8/17) நள்ளிரவு நேரத்தில் பேருந்துக்குள் நனைந்து கொண்டே சென்ற அனுபவத்தையும் நம்மிடம் சொன்னார்.

”சொந்த வேலையாக வாழப்பாடி சென்றிருந்தேன். பிறகு அங்கிருந்து ஆத்தூர் செல்வதற்காக சேலத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினேன். (என்னுடைய டிக்கெட் வரிசை எண்: AD-52, 053534). நள்ளிரவு 12.30 மணி இருக்கும். அப்போது கன மழை பெய்து கொண்டிருந்தது. பேருந்துக்குள் ஏறிய பிறகுதான் பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவது தெரிய வந்தது. பேருந்தின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்ணாடிகள் வழியாகவும் மழைநீர் ஒழுகியது. 60க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்குள்ளும் நனைந்து கொண்டேதான் பயணம் செய்தனர்.

ராஜலிங்கம்

இது தொடர்பாக பேருந்தின் ஓட்டுநரிடம் கேட்டதற்கு, ”யோவ்… போய்யா பாத்துக்கலாம்” என்று மரியாதைக் குறைவாக பேசினார். பிறகு ஆத்தூரில் அந்த பேருந்தை சக பயணிகளுடன் சிறை பிடித்தோம். காவல்துறைக்கும் தகவல் அளித்தோம். ரோந்து காவலர்கள் நேரில் வந்து அந்த பேருந்தை பார்வையிட்டனர். மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யும்படி பயணிகள் கூறினர். அதற்கு மூன்று மணி நேரம் ஆகும் என்று நடத்துநர் சொன்னதால், வேறு வழியின்றி நெடுந்தூரம் வெளியூர் செல்லும் பயணிகள் அந்தப் பேருந்திலேயே சென்றனர்,” என்றார் ராஜலிங்கம்.

பயணிகளின் புகார் குறித்து நாம் சேலம் அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மேற்கூரைகளில் உள்ள விரிசல்களை சரி செய்வதற்காக உதவி பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,” என்றார்.

இதுபற்றி, சேலம் அரசுப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் பாண்டியின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். அவர், புகார் கூறப்பட்ட பேருந்துகளின் எண் மற்றும் டிக்கெட் வரிசை எண்களை கேட்டுப் பெற்றுக்கொண்டார். மேலும், மேற்கூரைகளில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக மழைநீர் ஒழுகுகிறது. பழுதடைந்த பேருந்து மேற்கூரைகளை பிரித்து மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த புகார்கள் தொடர்பாக உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

//ஏன் செய்யக்கூடாது?//

ரயில் பயணிகளுக்கு 92 காசுகள் பிரீமியத்தில் ரூ.10 லட்சம் வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. அதேபோன்ற வசதியை அரசுப் பேருந்தில் பயணிக்குள் பயணிகளுக்கும் வழங்க வேண்டும். ஒரு சேவையில் தரம் குறையும்போது அதற்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பேருந்து பயணிகளுக்கான வசதியை செய்து தருவது ஓட்டுநர், நடத்துநரின் கடமை வரம்பிற்குள் வராது என்று தப்பித்தல்வாதம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.

– இளையராஜா.எஸ்

தொடர்புக்கு: 9840961947
மின்னஞ்சல்: selaya80@gmail.com