Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜீவி: சினிமா விமர்சனம்!; ‘சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்?’

தமிழ் சினிமா உலகில்,
இந்த ஆண்டின் அண்மைய வரவுகளில்
‘சூப்பர் டீலக்ஸ்’, ‘தடம்’ ஆகிய
படங்களுக்குப் பிறகு, ஆகச்சிறந்த படைப்பாக
ஜீவி படத்தைச் சொல்லலாம்.
புதுமுக இயக்குநர் வி.ஜே.கோபிநாத்,
கதை – திரைக்கதை – வசனகர்த்தா
பாபு தமிழ் ஆகியோர் நம்பிக்கைக்குரிய
வரவாக, அறிவார்த்தமாக ஜீவியில்
பதிவு செய்திருக்கின்றனர்.

மிக வலுவான திரைக்கதை கட்டுமானத்துடன் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘8 தோட்டாக்கள்’ குழுவின், இரண்டாவது படைப்புதான் ஜீவி.

 

திரைக்கலைஞர்கள்:

 

நடிகர்கள்:

வெற்றி
கருணாகரன்
மோனிகா சின்னகோட்ளா
ரோகிணி, ரமா, ‘மைம்’ கோபி

 

இசை: சுந்தரமூர்த்தி

ஒளிப்பதிவு: பிரவீன்குமார்

எடிட்டிங்: பிரவீன் கே.எல்.

கதை, வசனம்: பாபு தமிழ்

திரைக்கதை: பாபு தமி-ழ், வி.ஜே.கோபிநாத்

இயக்கம்: வி.ஜே.கோபிநாத்

 

கதை என்ன?:

 

கண் பார்வையற்ற மகள், நோயாளி கணவன் என அல்லாடும் நடுத்தர வயது பெண் ஒருவர், மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை, அவருடைய வீட்டிலேயே வாடகைக்குக் குடியிருக்கும் நாயகன் திருடி விடுகிறான். அதன்பின் அந்த குடும்பம் என்ன ஆனது? நாயகன் நகைகளைத் திருப்பிக் கொடுத்தானா? காவல்துறை அவனைக் கைது செய்ததா? என்பதை, பக்காவான திரைக்கதை, நேர்த்தியான வசனங்கள் உதவியுடன் ‘சஸ்பென்ஸ் திரில்லர்’ தன்மையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

 

காட்சி மொழி:

 

கதையின் நாயகன் (வெற்றி), மதுரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்காத, எந்த வேலைக்கும் செல்லாமல் ஊரைச்சுற்றிக் கொண்டு இருக்கிறார். பள்ளிப்படிப்புதான் மண்டையில் ஏறவில்லையே தவிர, புலனாய்வு, அறிவியல், உளவியல் சார்ந்த நூல்களைத் தேடித்தேடி படிப்பதில் அலாதி ஆர்வம் நாயகனுக்கு உண்டு. தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவரின் அதீத ஆர்வமே அவரை நெருக்கடிக்குள் தள்ளவும் செய்கிறது.

 

குடும்ப சூழ்நிலை காரணமாக, வேலை தேடி சென்னைக்கு வரும் வெற்றிக்கு, எங்கு சென்றாலும் காவலாளி வேலைகளே கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் அவர், ஒரு கடையில் பழரசம் விற்பனையாளர் வேலையில் தன்னை இருத்திக் கொள்கிறார். அதே கடையில் டீ மாஸ்டராக வேலை செய்யும் மணியும் (கருணாகரன்), அந்தக் கடைக்கு எதிரில் செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை செய்யும் நாயகியின் மீது ஏற்பட்ட காதலும்தான் அந்த கடையிலேயே நாயகன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள காரணமாக அமைகிறது.

 

வெற்றி ஒரு கூலி என்பதாலும், தனக்குப் பெற்றோர் பார்த்த வரன் அரசு ஊழியர் என்பதாலும், நாயகனுடான காதலை முறித்துக்கொள்கிறார் நாயகி. இதனால் விரக்தி அடையும் நாயகன், பணத்தின் தேவையை உணர்கிறார். அதற்காக அவர், தான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிலேயே நகைகளைத் திருடுகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை பரபரப்பூட்டும் திரைக்கதையாக நகர்கிறது ஜீவி.

இதுவரை படத்தில் பெரிய அளவில் திருப்பங்கள் ஏதுமில்லை. ஆனால், இடைவேளைக்கு முன்பு, நகைகளைப் பறிகொடுத்த ரோகிணி, தன் வாழ்க்கையில் நேர்ந்த சோகங்களை நாயகனிடம் பகிர்ந்து கொள்கிறார். ரோகிணியின் வாழ்க்கையில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் வரிசை மாறாமல் அப்படியே தன் வாழ்விலும் நிகழ்வதை உணர்கிறார், நாயகன். இது ஒரு தொடர்பியல் முக்கோண விதி என்ற அறிவியல் கோட்பாடு அடிப்படையிலானது என யூகிக்கிறார். இந்த யூகத்திற்குள் நாயகன் வந்ததும், அடுத்தடுத்து மர்ம முடிச்சுகளும், அதை அவிழ்ப்பதுமாக படம் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்து விடுகிறது.

 

முந்தைய தலைமுறையில் நிகழ்ந்துவிட்ட ஒரு குற்றத்திற்கான தண்டனை, அடுத்த தலைமுறையினர் வரை கடத்தப்படுவதுதான் தொடர்பியல் முக்கோண விதி. இது குற்றமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அறம் சார்ந்த நிகழ்வாகக்கூட இருக்கலாம். முக்கோண விதிப்படி மூன்று மையப் பாத்திரங்களில் ஒருவர் செய்யும் குற்றம், அதன் தண்டனையை சம்பந்தமே இல்லாத வேறு ஒருவருக்கும் வழங்குகிறது. அது கர்ம வினையா? அல்லது பிரபஞ்ச ஆற்றலா? என்பதை படம் வரையறுக்கவில்லை. ஆனால், அலுப்பூட்டாத, அடுத்தது என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டும் காட்சிகளின் ஊடாக பார்வையாளர்களை கட்டிப்போட்டு விடுகிறது, ஜீவி.

 

முக்கோண விதிப்படியே எல்லாம் நடந்தால், சென்னையில் தனக்கு ஒரே நம்பிக்கையாக இருக்கும் தன் நண்பன் கருணாகரன் இறந்து விடுவார் என்று நாயகன் யூகிக்கும்போதே ரசிகர்களுக்கும் அதன் அச்சத்தை இயல்பாக கடத்தி விடுகிறார் இயக்குநர்.

 

திருட்டு என்பது எதன் பொருட்டு நடந்தாலும் அறமற்ற செயல்தான். ஆனால், பார்வையற்ற மகளின் திருமணத்திற்காக ரோகிணி சிறுகச்சிறுக சேர்த்து வைத்திருந்த நகைகளை நாயகன் திருடும் காட்சியின்போது, எங்கே நோய்வாய்ப்பட்டு வீட்டில் கட்டிலிலேயே முடங்கிக்கிடக்கும் ரோகிணியின் கணவர் பார்த்து விடுவாரோ அல்லது கோயிலுக்குச் சென்ற ரோகிணி வீடு திரும்பி விடுவாரோ என்ற பதைபதைப்பையும், நாயகன் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பதற்றத்தையும் இயக்குநரும், கதையாசிரியரும் தங்களின் புத்திசாலித்தனத்தால் பார்வையாளர்களின் மனங்களில் எழச் செய்து விடுகின்றனர்.

 

தொடர்பியல் முக்கோண விதி என்றால் என்ன?, யாரோ ஒருவர் செய்யும் குற்றத்தால் சம்பந்தமே இல்லாத இன்னொருவர் பாதிக்கப்படுவது ஏன்? என்ற வினாக்களை பார்வையாளர்களின் கோணத்தில் இருந்து நாயகனின் நண்பனாக வரும் கருணாகரன் கேட்கிறார். மணி பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போகிறார் கருணாகரன். வெற்றி, ரோகிணி, ரமா, ‘மைம்’ கோபி என முக்கிய பாத்திரங்களில் வரும் அனைவருமே அந்தந்த பாத்திரங்களை நிறைவாக செய்திருக்கின்றனர். பார்வையற்ற மகள், நோய்வாய்ப்பட்ட கணவன் என்ற உளச்சிக்கலை ரோகிணி, தன் முக பாவனைகளாலேயே வெளிப்படுத்தி விடுகிற அளவுக்கு அவருடைய நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.

 

பிரிந்து சென்ற காதலி, ஏதேச்சையாக பேருந்து நிறுத்தத்தில் சந்தித்தபோது இப்போதும் அவர் நாயகனை விரும்புவதாகச் சொல்வார். அதற்கு கொஞ்சமும் இசைவு தெரிவிக்காமல், அலட்சியம் செய்துவிட்டு நகர்ந்து செல்லும் காட்சியில் வெற்றியின் உடல்மொழி இயல்பாய் பொருந்திப் போகிறது. தனக்கு எந்த மாதிரியான கதைகள் ஒத்துவரும் என்பதை நன்றாக அடையாளம் கண்டுகொண்டு விட்டார் என்பதற்கு 8 தோட்டாக்களும், ஜீவியும் சான்றுகள்.

 

நேர்த்தியான வசனங்கள்:

 

தமிழ்ப்படங்களில் சுஜாதா, பாலகுமாரன் போன்ற முத்திரை பதித்த வசனகர்த்தாக்களுக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றிடம் நீடிக்கிறது. அந்தக்குறையை, ‘சதுரங்க வேட்டை’ புகழ் இயக்குநர் வினோத், அவருக்குப் பிறகு ஜீவி படத்தின் கதையாசிரியர் பாபு தமிழ் போக்குவார்கள் என நம்பலாம்.

 

சென்னைக்கு வரும் நாயகனுக்கு எங்கு சென்றாலும் செக்யூரிட்டி கார்டு போன்ற பணிகள்தான் கிடைக்கிறது. சொல்லி வைத்தாற்போல் நீல நிற சீருடை வழங்கப்படுவதை நாயகன் சலிப்பாக, ‘எங்க போனாலும் மேகம் இல்லாத வானம் மாதிரி நீல நிறத்தில் சட்டை’ என்பார். ‘பொண்ணுங்களோட லைப் பொருத்தவரைக்கும் அவங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடுத்தடுத்த கட்டத்திற்கு போய்க்கிட்டே இருக்கும்’; ‘இந்த உலகத்துல நாம எல்லாமே பொம்மைங்கதான். உருவபொம்மையாக ஆகணும்னா நம்மக்கிட்ட பணம் இருக்கணும்’; ‘ஒருத்தன் பெரிய ஆளா வந்துட்டான்னா அவன் எப்படி கஷ்டப்பட்டான்னு யாரும் பார்க்க மாட்டாங்க. அவன் என்ன ஜாதி, என்ன மதம்னுதான் இந்த உலகம் பார்க்கும்,’, ‘மனுஷனுக்கு வரக்கூடாத வியாதி, விரக்தி’; ‘இங்கே ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் ஒரு ரகசியம் இருக்கு’, ‘கோவப்படறதுனா ஒரு மயிறும் புடுங்க முடியாது,’ என போகிற போக்கில் கவனம் ஈர்க்கும் வசனங்களை வார்த்துக் கொடுத்திருக்கிறார் பாபு தமிழ்.

மற்றொரு காட்சியில், நகைகளைத் திருடுவது குறித்து கருணாகரனிடம் வெற்றி தனது திட்டத்தைக் கூறுவார். அப்போது கருணாகரன், ‘திருடறது தப்பு. நாம திருடறதலாம் கடவுள் பார்த்துக்கிட்டுதான் இருப்பார்’ எனக்கூறுவார். அதற்கு வெற்றி, ‘நாம சோத்துக்காக கஷ்டப்பட்டுட்டு இருந்தோமே அப்பவும் கடவுள் பார்த்துட்டுதானே இருந்தான். இப்போ திருடறதையும் பார்க்கட்டும்,’ என பதிலடி கொடுப்பார். வெற்றி, கதிராக வரும் மைம் கோபியின் ஊடாக அவ்வப்போது கடவுள் மறுப்பு வசனங்களும் எட்டிப்பார்க்கின்றன.

 

இயக்குநரின் ‘டச்’:

 

நாயகனின் அப்பா ஒரு கம்யூனிஸ்ட்.
பட்டியல் சாதி பெண்ணை காதலித்துத்
திருமணம் செய்ததால் அவருடைய
தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிறார்.
அவர் தனது சித்தாந்தத்தின் வெளிப்பாடாக
நாயகனுக்கு சரவண லெனின் என்று
பெயர் சூட்டுகிறார். ஆனால் நாயகன்,
கம்யூனிஸ்ட் அன்று. அதேநேரம்,
வெகுசனங்கள் புறக்கணிக்கின்ற அல்லது
அவ்வளவாக கண்டுகொள்ளாத அம்சங்களில்
தனித்த ஆர்வம் உடையவராக
சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

 

அதை குறிப்பால் உணர்த்தும் வகையில், சொந்த ஊரில் இருக்கும்போது வீட்டில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு தொலைக்காட்சியில் ‘உலகம் சிரிக்கிறது’ படத்தில் வரும் எம்.ஆர்.ராதாவின் நகைச்சுவை காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியில் கம்யூனிஸத்தையும், கேப்பிடலிஸத்தையும் ஒருசேர பகடி செய்திருப்பார் எம்.ஆர்.ராதா. சென்னையில் மணியிடம் தனது நகை திருட்டு திட்டத்தை விளக்கும்போதும், தொலைக்காட்சியில் எம்.ஆர்.ராதாவின் அதே நகைச்சுவை காட்சிதான் ஓடிக்கொண்டிருக்கும்.

 

காவல்துறைக்கு தன் மீது சந்தேகம் வராத வகையில் அவர்களுக்கு போக்குக்காட்டும் காட்சிகளையும் மிக கவனமாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.

 

தொழில்நுட்பம்:

 

படத்தின் நீளம், இரண்டு மணி
நேரத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.
அந்த அளவுக்கு படு கறாராக கத்திரி
போட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர்
பிரவீன் கே.எல். பிளாஷ்பேக் காட்சிகளை
எந்த ஒரு இடத்திலும் நீட்டி முழக்காமலும்,
அலுப்பூட்டாத வகையிலும் தொகுத்து இருப்பது,
இந்தப் படத்திற்கு பரபரப்பை கூட்டியிருக்கிறது.

 

ஒரு காட்சியில் நாயகன், மேலே சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறி இப்போது கீழே வி-ழுந்தால் என்ன ஆகும்? என்ற வினாவை மணியிடம் முன்வைப்பார். அதன்பிறகு பலமுறை மின்விசிறியின் மீதிருந்து கேமரா கோணங்கள் சுழலும்போதெல்லாம், எங்கே அந்த மின்விசிறி கழந்து விழுந்து விடுமோ என்ற யூகத்தை எகிற வைத்து விடுகிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார். ஒரு சிறு அறைக்குள், அளவான ஒளியில் கண்களை உறுத்தாமல் மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

 

படத்திற்கு பெரும் பலமாக பின்னணி இசையைச் சொல்லலாம். சுந்தரமூர்த்தியின் இசையில் இடம் பெற்றுள்ள ஒரே பாடலான ‘அஞ்சாரியே…’ பாடல் ரசிக்க வைக்கிறது.

 

படத்தில் இரு நாயகிகள்.
சில காட்சிகளே வந்தாலும்
நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
அந்த காவல்துறை ஆய்வாளர்
பாத்திரத்தில் வருபவரும் ரொம்பவே
கவனம் ஈர்க்கிறார்.
உள்ளூர் தொலைக்காட்சி நிருபராக
வரும் பழைய ஜோக் தங்கதுரை,
சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
‘என்னது அவரு மறுபடியும்
பீச்ல தியானம் இருக்கிறாரா…?
சரி உடனே வர்றேன்’,
என சமகாலத்தில் நடந்த, தர்ம யுத்த
அரசியல் பற்றியும் வசனம் வருகிறது.
நிருபரை தாக்கிய ஆய்வாளரை வஞ்சம்
தீர்க்கும் வகையில், அவருக்கு எதிராக
திட்டமிட்டு புனையப்பட்ட ஒரு செய்தி
எப்படி வெளியாகிறது என்பதை காட்சிப்படுத்தி,
ஊடகங்களுக்கும் குட்டு வைத்திருக்கிறார்
இயக்குநர்.

 

லாஜிக் மீறல்கள்:

 

பல சிறப்புகள் இருந்தாலும், திருட்டு நடந்த இடத்திற்கு காவல்துறை மோப்ப நாய் வரவழைக்கப்படாது ஏன்? ரோகிணி கோயிலுக்குக் கிளம்பும்போதே நாயகனும் பையை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குக் கிளம்புகிறான். சம்பவம் நடந்த அன்று நாயகன், எத்தனை மணிக்கு ஊருக்குக் கிளம்பினான்? அதற்கான சிசிடிவி பதிவுகள் குறித்தெல்லாம் காவல்துறை சிந்திக்கவே இல்லையே ஏன்? என்ற வினாக்களும் எழாமல் இல்லை.

 

இதுபோன்ற சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை, யாரும் யூகிக்க முடியாத வகையில் சிறுகதைகளில் வருவதுபோல் நெகிழ்ச்சியாக முடித்திருப்பது பார்வையாளர்களை கைத்தட்ட வைத்திருக்கிறது.

 

ஜீவி… நாயகன் மட்டுமன்று; ஜீவியின் படைப்பாளிகளும்.

 

– வெண்திரையான்