Wednesday, May 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மாப்பிள்ளை அவருதான்… ஆனா அவர் போட்டிருக்கிற டிரஸ் என்னுது! இது நாமக்கல் திமுக பாலிடிக்ஸ்!

சுற்றுலாத்துறை அமைச்சராக மதிவேந்தன் செயல்பட்டு வந்தாலும், நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை சகலமும் நான்தான் என காலரை தூக்கிவிட்டு பவர் பாலிடிக்ஸ் நடத்தி வருகிறார் மாவட்ட பொறுப்பாளரான கேஆர்என். ராஜேஷ்குமார்.

 

நாமக்கல்லைச் சேர்ந்தவர்
மருத்துவர் மாயவன். திமுகவின்
மூத்த நிர்வாகிகளுள் ஒருவர்.
இவருடைய மகன் மதிவேந்தன் (36).
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக
இளைஞரணி துணை அமைப்பாளராக
இருக்கிறார். எம்பிபிஎஸ்., எம்.டி.,
படித்துள்ள மதிவேந்தன்,
2021 சட்டமன்ற தேர்தலில்
ராசிபுரம் தனித்தொகுதியில்
முன்னாள் அமைச்சர் சரோஜாவை
எதிர்த்துப் போட்டியிட்டு 2000க்கும்
குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்
போராடி வெற்றி பெற்றார்.

 

யாருமே எதிர்பாராத வகையில்
மதிவேந்தனை சுற்றுலாத்துறை
அமைச்சராக்கி அழகு பார்த்தார்
முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக அமைச்சரவையில் இவர்தான்
மிகவும் ஜூனியர். அருந்ததியர்
சமூகத்திற்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதும்,
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக
பொறுப்பாளரான கே.என்.ராஜேஷ்குமாருக்கு
முதல்வரின் கிச்சன் கேபினட் வரை
நீளும் செல்வாக்கும்தான் மதிவேந்தனுக்கு
அமைச்சர் பதவி கிடைக்கக் காரணம்
என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.

 

அமைச்சர் பதவிக்கு வந்து
ஆறு மாதங்கள் ஆகியும் கூட இன்னும்
தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல
வரவில்லை என்பதோடு,
பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை
மனுக்களைப் பெறக்கூட
தொகுதிப்பக்கம் எட்டிப்பார்க்க
மாட்டேங்கிறார் என்று உள்ளுக்குள்
ரொம்பவே குமைகின்றனர்
தொகுதி மக்களும், சொந்தக் கட்சியினரும்.

 

இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசினர்.

 

”நாமக்கல் கிழக்கு மா.செ.வான
கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மறைந்த
பேராசிரியர் அன்பழகன் மூலமாக
முதல்வரின் குடும்பத்துடன் நெருக்கத்தை
ஏற்படுத்திக் கொண்டார். அப்படியே
உதயநிதியுடனும் ஒட்டிக்கொண்டார்.
ராஜேஷ்குமாரின் தாத்தா காலத்தில்
இருந்தே அவருடைய குடும்பம்
திமுகவில்தான் இருக்கிறது.

 

மேலும், முதல்வர் ஸ்டாலினின் மனைவி
துர்காவை அண்ணி என்று அழைக்கும்
அளவுக்கு அவருடைய வீட்டில் செல்லப்பிள்ளை
போலவே வளைய வரக்கூடியவர்தான்
ராஜேஷ்குமார் என்கிறார்கள்.
முதல்வரின் கிச்சன் கேபினட்டின் ஆசியும்,
இளைய வாரிசின் நட்பும் இருப்பதால்
நாமக்கல் திமுகவில் கொட்டை போட்ட
பலர் இருக்க, ராஜேஷ்குமாருக்கு
மா.செ. பதவி தேடி வந்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது,
நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி)
ஆகிய மூன்று தொகுதிகளுக்கும்
பொறுப்பாளராக ராஜேஷ்குமார்
நியமிக்கப்பட்டார். மூன்று தொகுதிகளிலும்
திமுகவை வெற்றி பெறச் செய்து,
மேலிடத்தின் ‘குட்புக்’கில்
இடம் பிடித்தார்.

 

சட்டமன்றத் தேர்தலின்போது
நாமக்கல் அல்லது திருச்செங்கோட்டில்
போட்டியிட ராஜேஷ்குமார் சீட் கேட்டிருந்தார்.
அவர் நாட்டு கவுண்டர் சமூகத்தைச்
சேர்ந்தவர் என்பதால் சிறுபான்மையாக
உள்ள நாமக்கல்லில் சீட் மறுக்கப்பட்டது.
அது மட்டுமல்ல… ஒருவேளை
நாமக்கல்லில் ராஜேஷ்குமார்
போட்டியிட்டிருந்தாலும் கூட
முன்னாள் மா.செ.க்களான பார் இளங்கோவன்,
காந்தி செல்வன் ஆகியோரின் உள்ளடிகளை
மீறி ஜெயிப்பதும் கடினம்.
ஒருகட்டத்தில் இதைப் புரிந்து
கொண்ட ராஜேஷ்குமார், கடைசியாக
திருச்செங்கோடு தொகுதியில் சீட்
பெற்றே தீருவது என்ற முடிவில்
மேலிடத்திலும் எவ்வளவோ முட்டி
மோதிப்பார்த்தார். ஆனால் அந்த தொகுதி,
திமுக கூட்டணியில் இருந்த
கொமதேகவுக்கு ஒதுக்கப்பட்டது.
இதில் ராஜேஷ்குமார் ரொம்பவே
அப்செட் ஆனார்.

 

அதற்குக் கைம்மாறாக கட்சி மேலிடம்,
அவர் கை காட்டிய மதிவேந்தனுக்கு
சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கியது.
மேலும், ராஜேஷ்குமாருக்கும்
ராஜ்யசபா எம்பி பதவி வழங்கியது.

 

அமைச்சர் என்னவோ மதிவேந்தன்தான்.
ஆனால் அவருடைய மொத்த
கடிவாளத்தையும் ராஜேஷ்குமாரே
தன் கைக்குள் வைத்துக் கொண்டார்.
மா.செ. சொல்லாமல் அவர் எந்த
ஒரு கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும்
கலந்து கொள்ளக்கூடாது.

 

நிர்வாகிகள் ஏதேனும்
கோரிக்கைகள் வைத்தாலும்கூட
எல்லாமே மா.செ.தான் என ராஜேஷ்குமாரை
பார்க்கச் சொல்லி விடுவார்.
அவராக கட்சிக்காரர்களிடம் எதுவும்
பேச மாட்டார். மா.செ. ஆட்டி வைக்கும்
பொம்மைதான் அமைச்சர். அந்தளவுக்கு
அவருக்கு வாய்ப்பூட்டு
போட்டிருக்கிறார் மா.செ.,

 

தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும்போது ராசிபுரம் தொகுதிக்குள் வீடு எடுத்து தங்கியிருந்தார் மதிவேந்தன். பெயரளவுக்கு கிளினிக்கும் நடத்தி வந்தார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பழையபடி நாமக்கல்லுக்கே சென்று விட்டார்.

நாமக்கல்லில் சேந்தமங்கலம் சாலையில் அவர்கள் நடத்தி வரும் சாந்தி மருத்துவமனையுடன் கூடிய சொந்த வீட்டில்தான் குடும்பத்துடன் வசிக்கிறார் மதிவேந்தன். கட்சியினரோ, பொதுமக்களோ அவரிடம் கோரிக்கை மனுக்களோ அல்லது வேறு ஏதேனும் உதவிகள் கேட்கவோ விரும்பினால் கூட வீட்டுக்கு வரக்கூடாது என்பார். ராசிபுரம் பயணியர் மாளிகைக்கு வருமாறு சொல்லிவிடுவார். ஆனால் எப்போது வருவார் என்று கேட்டால், வரும்போது வருவேன். அவசரம் என்றால் மா.செ.வை பார்த்துக் கொள்ளுங்கள் என்று வெளிப்படையாக சொல்லி விடுகிறார்.

 

ராசிபுரம் பாலப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 35 வருஷமாக கிளைச் செயலாளராக இருந்தவர் சுந்தரராஜன். அவர்தான் அந்த நாளில் அப்பகுதியில் கட்சியை வளர்த்தவர். 25 உறுப்பினர்கள் சேர்த்து 12.50 ரூபாய் உறுப்பினர் கட்டணம் செலுத்தியவர்.

 

ஒரு விபத்தில், அவருடைய வலது கால் செயல் இழந்து விட்டது. அவர் தனக்கு அரசு சார்பில் ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என்று கோரி, சமீபத்தில் குறுக்கபுரம் கிராமத்தில் கட்சி சார்பில் நடந்த மரக்கன்று நடும் விழாவின்போது அமைச்சரிடம் மனு கொடுத்தார்.

 

அமைச்சர் நினைத்து இருந்தால் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி விழாவிற்கு வந்திருந்த கலெக்டரிடம் பரிந்துரை செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, அவரிடம் வாங்கிய மனுவை கட்சிக்காரர்களிடமே கடாசிவிட்டுச் சென்று விட்டார். கடைசியில் அந்த கோரிக்கை மனு, எங்கெங்கோ முட்டி மோதி சுந்தரராஜனிடமே திரும்பி வந்துவிட்டது. கோரிக்கை மனுவைக்கூட வாங்க முடியாவிட்டால் மக்கள் எதற்காக மதிவேந்தனை தேர்ந்தெடுக்க வேண்டும்? உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழும் இன்னும் ராசிபுரத்தில் அமைச்சர் கோரிக்கை மனுக்களைப் பெறவில்லை.

 

சாலைப்பணிகளைக் கூட
அவரால் விரைந்து நிறைவேற்ற முடியாத,
எதற்கெடுத்தாலும் மா.செ.வின்
சிக்னலுக்காக காத்துக் கொண்டிருக்கும்
நிலையில் இருக்கிறார் மதிவேந்தன்.
அதேநேரம், தமிழகத்தின் பிற பகுதிகளில்
அமைச்சர் மதிவேந்தன் சுதந்திரமாகத்தான்
செயல்படுகிறார். சொந்த தொகுதியில்
அவரால் சுதந்திரமாக செயல்பட
முடியாத நிலை இருக்கிறது.

 

படையப்பா படத்தில் செந்திலுக்கு பெண் பார்க்கப் போகும் காட்சியில், ரஜினி, செந்தில் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் எல்லோரும் கூட்டமாக செல்வார்கள். அப்போது எதிரில் வரும் ஒருவர், ஆமா… இந்த கூட்டத்தில் மாப்பிள்ளை யார் என்று கேட்பார். அதற்கு ரஜினி, செந்திலைக் காட்டி மாப்பிள்ளை அவருதான். ஆனா அவரு போட்டிருக்கிற டிரஸ் என்னுது என்பார். அதே கதைதான்…. நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர் என்னவே மதிவேந்தன்தான். ஆனால், மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார்தான் அமைச்சருக்குரிய அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறார்” என குமுறுகின்றனர் உடன்பிறப்புகள்.

 

நாமக்கல் திமுகவில்
மற்றொரு தரப்பினர் கூறுகையில்,
”திமுக அரசின் 100 நாள் நிறைவு
விழாவின்போது ராசிபுரம் நகரில்
பட்டப்பகலில் மாவட்ட
சிறுபான்மையினர் அணி நிர்வாகி
ஜாபர் அலி மீது, ராசிபுரம்
நகரச்செயலாளர் சங்கர்
தாக்குதல் நடத்தினார்.

 

ராசிபுரத்தில் உள்ள டாஸ்மாக் பார்,
கேபிள் வசூல் எல்லாமே சங்கர் வசமே
ராஜேஷ்குமார் ஒப்படைத்துவிட்டார்.
இதை விமர்சனம் செய்ததால்தான்
சங்கருக்கு கோபம் வந்து,
ஜாபர் அலியை தாக்கினார்.
இதுகுறித்து அவர் மா.செ.
மட்டுமின்றி கட்சி மேலிடத்தில்
புகார் அளித்தும் யாருமே
கண்டுகொள்ளவில்லை.

 

சட்டமன்றத் தேர்தலுக்கு
ஓராண்டுக்கு முன்பு மா.செ.,
கட்சிக்காரர்கள் வீட்டில் கல்யாணம்
என்றால் 2 கிராம் தங்கம் கொடுப்பார்.
தொண்டர்கள் வீட்டில் யாரேனும்
இறந்துவிட்டால் இறுதிச்சடங்கு
செலவுக்காக 5 ஆயிரம் ரூபாய் தருவார்.
ஆனால் தேர்தலுக்குப் பிறகு அந்த
செயல்பாடுகளை அடியோடு
நிறுத்தி விட்டார். ஏன், தேர்தலுக்குப் பிறகு
கட்சிக்காரர்கள் வீட்டில் திருமணமோ,
ஈமச்சடங்குகளோ நடக்கவில்லையா?

 

மா.செ., கட்சி மேலிடத்துடன்
தனக்கு இருக்கும் செல்வாக்கை
பயன்படுத்திக் கொண்டு,
அமைச்சர் மதிவேந்தனை சுதந்திரமாக
செயல்பட விடவே மாட்டேன்கிறார்.
அவரும் யார் ஃபோன் போட்டாலும்
எடுத்துப் பேசுவதில்லை. கீழ் நிலையில்
இருந்து உழைத்து வந்திருந்தால்தான்
தொண்டர்களின் உள்ளக்குமுறல்
அமைச்சருக்குத் தெரியும். இந்த நிலை
நீடித்தால் அடுத்து வரும்
நாடாளுமன்றத் தேர்தலில்
திமுக கடும் பின்னடைவைச்
சந்திக்கும்,” என்றும்
எச்சரிக்கின்றனர்.

 

அதிகாரமும், பதவியும் ரங்கராட்டினம் போலதான் என்ற யதார்த்தத்தை மா.செ. ராஜேஷ்குமாரும், அமைச்சர் மதிவேந்தனும் மறந்து போனார்களோ என்னவோ!

 

– பேனாக்காரன்