Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜிப்ஸி – சினிமா விமர்சனம்! ”மனிதனாக வாழ மதம் அவசியமா?”

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின்
வாயிலாக கவனம் ஈர்த்த
ராஜூ முருகன் இயக்கத்தில்,
மார்ச் 6ம் தேதி வெளியாகி
இருக்கிறது, ‘ஜிப்ஸி’.
தாய், தந்தையை இழந்த,
நாடு முழுவதும் சுற்றி வரும்
ஒரு நாடோடிக்கும், இஸ்லாமிய
பழமைவாதங்களில் ஊறிப்போயிருக்கும்
குடும்பத்தைச் சேர்ந்த ஒரு
பெண்ணுக்குமான காதலையும்,
எதிர்பாராத மதக்கலவரத்தில்
அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட
விளைவுகளையும் பேசுகிறது,
ஜிப்ஸி.

சபாஷ் ராஜூ முருகன்!

 

கடந்த 2002ல் நடந்த
குஜராத் கலவரத்தில்,
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள
போராடும் ஏதுமற்ற ஒரு
சாமானியனின் பீதியடைந்த
முகமும், அருகே
கொலைவெறியுடன் கையில்
வாளேந்தி நிற்கும்
ஓர் இந்து பயங்கரவாதியின்
படமும் அன்றைய காலக்கட்டத்தில்
பத்திரிகைகளில் வெளியாகி
பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோன்ற காட்சியை,
சமகால பிரச்னைகளுடன் கோத்து,
கதை சொன்ன விதத்தில்
ராஜூமுருகனின் சமூகப்
பொறுப்புணர்வை பாராட்டாமல்
இருக்க முடியாது.

 

திரைமொழி:

 

காஷ்மீரில் நடந்த தாக்குதலில்
தாய், தந்தையை பச்சிளம்
குழந்தையாக இருந்தபோதே
இழந்து விடுகிறான் ஜிப்ஸி (ஜீவா).
குதிரைக்காரர் ஒருவரால்
வளர்க்கப்படுகிறான். சிறு வயது முதல்
தன்னுடன் சேர்ந்து வளர்ந்த
‘சே’ என்னும் நடனக்குதிரையை
வைத்து, ஊர் ஊராக சென்று
பிழைப்பு நடத்துவதுதான்
ஜிப்ஸியின் ஒரே வாழ்வாதாரம்.
அவன், யாதும் ஊரே யாவரும்
கேளிர் ரகத்தினன்.
தன் நடனக்குதிரையுடன்
நாகூர் சந்தனக்கூடு
திருவிழாவுக்கு வருகிறான்.

 

பெண்கள், பற்களெல்லாம்
தெரியும்படி சிரித்துப் பேசுவதுகூட
ஹராம் என்று கருதும் பழமைவாத
இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த
வஹீதாவை (நடாஷா சிங்), பார்த்த
கணத்திலேயே அவர் மீது
ஈர்ப்பு கொள்கிறான் நாயகன்.
வஹீதாவுக்கும் அதே உணர்வு.
ஆனால் இருவருமே அவர்களுக்குள்
இருக்கும் ஈர்ப்பு, காதல்தானா
என்பதை எங்கேயும் தெளிவுபடுத்திக்
கொள்ளவில்லை. இந்நிலையில்,
வஹீதாவுக்கு திருமண ஏற்பாடுகள்
நடக்கிறது. விடிந்தால் திருமணம்
என்ற நிலையில், வஹீதாவும்
நாயகனும் நாகூரை விட்டு
ஓடிப்போகின்றனர். வாரணாசிக்குச்
செல்லும் அவர்கள் இஸ்லாமிய
முறைப்படி திருமணம்
செய்து கொள்கின்றனர்.

2002ல் குஜராத் கலவரத்தின்போது உயிர்ப்பிச்சை கேட்கும் அப்பாவியின் படமும், அவனருகில் கொலைவெறியுடன் நிற்கும் இந்து பயங்கரவாதியின் படமும்.

இந்தக் காட்சி வரை ஒரு நாடோடியின் வாழ்வும், அவனுடைய காதலுமாக சென்ற கதை, இடைவேளையை நெருங்கும்போது, இந்து பயங்கரவாதிகளின் கோரத்தாண்டவத்தை அம்பலத்தும்போது திரைக்கதையிலும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. மனித வாழ்வில் அரசியலின்றி எதுவும் இல்லை. மக்கள் அரசியல்மயப்பட வேண்டும். அவர்கள் அரசியலுக்குள் வராவிட்டால், அரசியலே தன் போக்கிற்கு அவர்களை எடுத்துக்கொள்ளும். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக திட்டமிட்டே முஸ்லிம்கள் மீது தாக்குதலுக்கு வித்திடுகிறார்கள் இந்து பயங்கரவாதிகள். நகரமே பற்றி எரிகிறது.

 

நிறைமாத கர்ப்பிணியான வஹீதா, திசையறியாத பறவையாக ஓடுகிறாள். ஒளிகிறாள். ஒருகட்டத்தில் அவளைச் சூழ்ந்து கொள்ளும் இந்து பயங்கரவாதிகளிடம், மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டு கையெடுத்து கும்பிடுகிறாள். அப்போது அங்கு சேவுடன் வரும் நாயகன், மனைவியைக் காப்பாற்றி, முகமறியாத ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறான். அதற்குள் அவன் ஆசையாக வளர்த்து வந்த சே குதிரையை கலவரக்காரர்கள் தீவைத்து எரித்து விடுகின்றனர்.

 

பதற்றம் சற்றே ஓய்ந்த நிலையில் காவல்துறையினர், விசாரணை என்ற பெயரில் ஜிப்ஸி உள்ளிட்ட அப்பாவிகளை எல்லாம் இழுத்துச்சென்று அடித்து உதைக்கிறார்கள். காவல்துறையினர் பொய் வழக்கு போட்டதாக நிரூபிக்கப்பட, சிறையில் இருந்து விடுதலை ஆகிறான் நாயகன். மனைவியைத் தேடிச்சென்றபோது அவள் காணாமல் போனதை அறிந்து மனம் பதறுகிறான். தன்னையும், குடும்பத்தையும் பிரித்த கலவரக்காரர்கள் மீது சினம் கொள்கிறான். இறுதியில் அவன் தன் காதல் மனைவியைக் கண்டடைந்தானா? குடும்பத்தை நாசமாக்கிய பயங்கரவாதிகளை என்ன செய்தான்? என்பதுதான் ஜிப்ஸியின் மீதிக்கதை.

 

வசனங்கள் ‘நச்!’:

 

ஒரு காட்சியில் நாயகியின் தந்தை ஜிப்ஸியிடம், உன் பேரு என்ன? நீ என்ன ஆளுக? என்ன மதம்? என்று கேட்பார். அதற்கு ஜிப்ஸி, நான் மதம் பிடிக்காத மனுஷ ஜாதி என்பான். மற்றொரு காட்சியில், ‘பைபிள், குர்ரான், பகவத் கீதை எல்லாமே ஒரே விஷயத்தைதான் சொல்லுது. அதோட அட்டைங்கதான் வேற வேற,’ என நாயகியிடம் கூறுவான். ‘காஷ்மீருக்கும் கன்னியாகுமரிக்குமான தூரத்தைக் கண்டுபிடிச்சிடலாம். ஆனால் ரெண்டு இதயத்துக்கு இடையிலான தூரத்தைக் கண்டுபிடிக்க முடியல,’ ‘அல்லாவும் குண்டு வைக்க சொல்லல… ராமனும் குண்டு வைக்க சொல்லல…’ என சில இடங்களில் வசனங்கள் ஈர்க்கின்றன.

 

இஸ்லாமிய தாய்க்கும், இந்து தந்தைக்கும் பிறக்கும் ஜிப்ஸி, இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். காஷ்மீரில் இஸ்லாம் பயங்கரவாதிகளால் நாயகனின் பெற்றோர் கொல்லப்படுகின்றனர். குஜராத்தில், இந்து பயங்கரவாதிகளால் காதல் மனைவியைப் பிரிய நேரிடுவதுடன், அப்பாவிகள் பலர் கொல்லப்ப டுகின்றனர். பல பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர். அதே ஆச்சாரமான இந்து மத ஆட்டோ ஓட்டுநர்தான் நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவிக்கு பிரசவம் பார்த்து, பெற்றோரிடமும் ஒப்படைக்கிறார்.

 

ஆக,
வெகுமக்களிடம் மத ரீதியிலான
எந்த பிரிவினையும் இங்கு இல்லை;
யார் தங்களை நம்புகிறார்களோ
அவர்களை தன் கோரப்பசிக்கு
இரையாக்கிக் கொள்ளும் சுயநலமிகள்
மதத்தின் பெயரால் கட்டவிழ்த்து
விடுவதுதான் நாடெங்கும் இன்று
நடக்கும் அனேக கலவரங்களின்
பின்னால் உள்ள சதி என்பதை
காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்.
தணிக்கைக்குழுவும் அத்தகைய
காட்சிகளை அனுமதித்திருப்பது
வியப்புக்குரியது.

 

விளிம்புநிலை மக்களை
கூலிப்படையாக பயன்படுத்திக்
கொள்வதும், காரியம் முடிந்ததும்
அவர்களையே நீ தீட்டுப்பட்ட
ஜாதிக்காரன் என்று சொல்லி
தண்டிப்பதும் எல்லா காலத்திலும்
ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள்
செய்து வருவதுதான். ஆனால்,
ஒடுக்கப்பட்ட மக்கள்தான்
அதை இன்னும் முழுமையாக
விளங்கிக்கொள்ளவில்லை.
கலவரத்தை முன்னின்று நடத்திய
ஒருவர், யாரால் ஏவப்பட்டோமோ
அவர்களாலேயே வஞ்சிக்கப்பட்டதைச்
சொல்லும் காட்சியும்
கவனத்திற்கொள்ள வேண்டியவை.

 

ஜிப்ஸி தன்னை வளர்த்த
சீனியர் பெரியவரின் சடலத்தை
நீரில் விடுகிறார். அடுத்தக் காட்சியில்,
வைகறைப் பொழுதில் நாயகி,
தண்ணீர் தொட்டிக்குள் முங்கிய
முகத்தை வெளியே காட்டுவதுபோல்
காட்சிப்படுத்தி இருப்பதும்;
ஆமா… உன் சீனியருக்கு என்னாச்சு
என்று கேட்கும் காட்சியில்,
அதற்கு ஜிப்ஸி ஒரு மரக்கன்றை
நட்டு தண்ணீர் ஊற்றுவதன் மூலம்
அவருடைய மறைவை உணர்த்தும்
காட்சியிலும் ரசிக்கச் செய்கிறார்.

 

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் இடத்தில், காவல்துறை அதிகாரி ஒருவரும் ஜிப்ஸியிடம், உன் பேரு என்ன? என்ன சாதி? எந்த மதம்? எந்த அமைப்பைச் சேர்ந்தவன்? என்று அடுக்கடுக்காக வினவுகிறார். இதேபோலதான் நாயகியின் தந்தையும் ஒருமுறை நாயகியிடம் கேட்பார். ஒரு மனிதன், மனிதனாக வாழ அவன் ஏதோ ஒரு சாதியைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும்; ஏதோ ஒரு மதத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் போலிருக்கிறது. சாதியும், மதமும் அற்ற மனிதனாக வாழ நேர்ந்தால் அவர்கள் போலி மோதலில் கொல்லப்படும் பலியாடாக வேண்டியதிருக்கிறது.

 

கதை மாந்தர்கள்:

 

ஜிப்ஸி பாத்திரம் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த பாத்திரத்தின் தன்மையை முழுமையாக உள்வாங்கி வாழ்ந்திருக்கிறார் ஜீவா. உடல்மொழிகள் படு கச்சிதம். நாயகி நடாஷா சிங், வசீகரிக்கிறார். மரண பீதியை சரியாகவே அவர் வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஆனால் அவருக்கு அரைப்பக்க வசனம்கூட இல்லை. அவருடைய தந்தையாக வரும் லால் ஜோஸ், கேரளாவில் வரும் கம்யூனிஸ்ட் தோழர்கள், வன்முறையை தலைமையேற்று நடத்துபவர் எல்லோருமே கச்சிதமான நடிப்பை வழங்கியிரு க்கிறார்கள்.

 

தொழில்நுட்பம்:

 

படத்தின் தலைப்பே, நாடோடியைப் பற்றிய வாழ்க்கை என்று கட்டியம் கூறிவிடுகிறது. அதற்கேற்ப இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் செல்வக்குமார். காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிரம்மாண்டத்தையும், சில காட்சிகளில் ஏரியல் ஷாட்டுகளும் மனதை அள்ளுகின்றன. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை வலு சேர்க்கிறது. என்றாலும், அடிக்கடி வரும் பாடல்கள் ரசிகர்களை சோர்வடையச் செய்கிறது. சுசீலா ராமனின் மேற்கத்திய இசை சுத்தமாக எடுபடவில்லை.

 

தர்க்கப்பிழைகள்:

 

நாயகன், நாயகி இருவருமே
தங்கள் தரப்பு காதலை
தெளிவுபடுத்திக் கொள்ளாதபோதும்,
என்ன துணிச்சலில் ஒரு பெண்
ஒரு நாடோடியுடன் ஓடிப்போகும்
முடிவுக்கு வருவாள்?
இஸ்லாம் பழமைவாதியான தந்தை,
ஓடிப்போன தன் மகளை காவல்துறை,
செல்போன் தொழில்நுட்பம்,
ஊடகம் என எதன் உதவியுடனும்
தேடிக்கண்டுபிடிக்க பெரிய அளவில்
முயற்சிக்காதது முரணாக
இருக்கிறது.

 

நாடோடி ஜிப்ஸி,
கட்சி பிரச்சாரங்களில் பாடல்கள்
மூலமாக புரட்சியை ஏற்படுத்தினார்
என்று சொல்லப்படுகிறது. ஆனால்
கடைசி வரை அவர் என்ன
புரட்சி செய்தார் என்பதை
சொல்லவே இல்லை.
மேலும், எந்தக் கட்சியாக
இருந்தாலென்ன… இது தேர்தல் நேரம்.
பணம் கொடுத்தால் பாட
வேண்டியதுதான் என்கிறார் நாயகன்.
அப்படிப்பட்டவர் என்ன புரட்சி
செய்திருக்க முடியும்?

 

மதக்கலவரத்தை முன்னின்று நடத்தியவர் மனம் திருந்தி வாழ்கிறார். அவரையும், அப்போது உயிரபாயத்தில் கையெடுத்து கும்பிடும் தன் மனைவியையும் நேருக்கு நேராக சந்தித்துப் பேச வைக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள், அந்த மனம் திருந்தி வாழும் ரவுடிக்கு ஆபத்து நிகழக்கூடும் என்பதை கொஞ்சமும் உணராதது என எதெல்லாம் முக்கிய காட்சிகளோ அவற்றில் எல்லாம் தர்க்கப்பிழைகள் மலிந்து கிடக்கின்றன.

 

என்றாலும், எடுத்துக்கொண்ட கருப்பொருளுக்காகவும், படைப்பாளியின் சமூகப்பொறுப்புணர்வுக்காகவும் இயக்குநர் ராஜூ முருகனை மீண்டும் ஒருமுறை பாராட்டலாமே தவிர, அவருடைய ஜிப்ஸியை அப்படிச் சொல்லிவிட இயலாது.

 

– வெண்திரையான்