Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு தரப்பு சாட்சிக்கு பகிரங்க மிரட்டல்! யுவராஜ் தரப்பு வக்கீலுக்கு நீதிபதி கண்டனம்!! #Day8 #Gokulraj

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில், குறுக்கு விசாரணையின்போது, அரசுத்தரப்பு சாட்சியை யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் மிரட்டும் தொனியில் பேசியதற்கு, நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார்.

 

தண்டவாளத்தில் சடலமாக…

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23), கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தலை வேறு, உடல் வேறாக சடலம் கோகுல்ராஜின் சடலம் கிடந்தது.

 

திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார். தன்னுடன் ஒரே வகுப்பில் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியுடன் நெருக்கமான நட்பில் இருந்த கோகுல்ராஜ், அவரைச் சந்திக்க 23.6.2015ம் தேதி நாமக்கல் சென்றிருந்தார்.

 

ஆணவக்கொலை:

அவர்கள் இருவரும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் கோகுல்ராஜை மிரட்டி கடத்திச்சென்றது. அதன்பிறகு, மறுநாள் மாலையில் அவருடைய சடலம்தான் கிடைத்தது.

 

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும் காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல், கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருக்கலாம் என தகவல்கள் பரவின.

 

தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவை:

 

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கோகுல்ராஜை கடத்திச்சென்று கொலை செய்ததாக, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை கடந்த 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணை காலத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஜோதிமணி என்ற பெண், கணவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பிணையில் இருந்தபோது அமுதரசு தலைமறைவாகிவிட்டார். மற்ற 15 பேரும் சாட்சிகள் விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.

 

சாட்சிகள் விசாரணை

 

கடைசியாக அக்டோபர் 1, 2018ம் தேதி சாட்சிகள் விசாரணை நடந்தது. அதன்பிறகு தசரா பண்டிகையை முன்னிட்டு அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 22.10.2018ம் தேதியன்று சாட்சிகள் விசாரணை தொடங்கியது.

 

யுவராஜை ஆஜர்படுத்தவில்லை

 

அன்றைய தினம், திருச்சி மத்திய சிறையிச்சாலையில் இருந்து முதல் குற்றவாளியான யுவராஜ் அழைத்து வரப்படவில்லை. அன்று, திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் இருந்ததால், போலீசார் பாதுகாப்புப்பணிக்குச் சென்றிருந்தனர்.

இதனால் யுவராஜை, எஸ்கார்ட் கொண்டு செல்ல போதிய போலீசார் இல்லாததால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

 

யுவராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாததால், வழக்கமாக வரும் அவருடைய ஆதரவாளர்கள் கூட்டமும் குறைந்து இருந்தது.

 

2 பேர் பிறழ் சாட்சியம்

 

அன்றைய தினம் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, 2.25 மணிக்குதான் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. லாரி ஓட்டுநர் தாசன் என்கிற முருகேசன், கேஎஸ்ஆர் கல்லூரி பேராசிரியர் பெரியசாமி, அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் டிக்கெட் விற்பனையாளராக பணியாற்றி வரும் தங்கவேல், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் டோக்கன் போடும் ஊழியர் ஜெகநாதன் ஆகிய நான்கு சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.

 

இவர்களில் தாசன் என்கிற முருகேசன், ஜெகநாதன் ஆகியோர் பிறழ் சாட்சியம் அளித்தனர். தங்கவேல், பரபரப்பு சாட்சியம் அளித்தார். அவரிடம் அரசுத்தரப்பு மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் நடத்திய விசாரணைகளின் விவரம்:

அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி: அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் என்ன பணியில் இருக்கிறீர்கள்?

 

தங்கவேல்: டிக்கெட் விற்பனையாளராக பணிபுரிகிறேன்.

 

வழக்கறிஞர் கருணாநிதி: (குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருந்தவர்களைக் காட்டி) இங்கே ஆஜர்படுத்தப்பட்டுள்ள எதிரிகளை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா?

 

தங்கவேல்: இல்லை

 

வழக்கறிஞர்: இந்த வழக்கில் 1வது எதிரியான யுவராஜை பார்த்திருக்கிறீர்களா?

 

தங்கவேல்: யுவராஜ் யாரென்று தெரியாது

 

வழக்கறிஞர்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிசிடிவி கேமரா எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளனவா?

 

தங்கவேல்: பொருத்தப்பட்டு உள்ளன.

 

வழக்கறிஞர்: எத்தனை கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன?

 

தங்கவேல்: மொத்தம் 8 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன

 

வழக்கறிஞர்: அந்த கேமராக்கள் எந்தெந்த இடத்தில் பொருத்தப்பட்டு உள்ளன உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் அதைப்பற்றி சொல்ல முடியுமா?

 

தங்கவேல்: சிசிடிவி கேமராக்கள் எந்தெந்த இடத்தில் பொருத்தப்பட்டு உள்ளன என்பது எனக்குத் தெரியும். ஒரு கேமரா, கோயிலின் மேற்கு நுழைவாசல் பகுதியிலும், இரண்டாவது கேமரா செங்கோட்டுவேலர் சன்னதி முன் மண்டபத்திலும், மூன்றாவது கேமரா செங்கோட்டுவேலர் சன்னதிக்குள்ளும், நான்காவது கேமரா டிக்கெட் விற்பனை செய்யப்படும் இடத்திலும் பொருத்தப்பட்டு உள்ளன.

சிறப்பு தரிசன பாதையில் ஒரு கேமராவும், இலவச தரிசன பாதையில் ஒரு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளன. உண்டியல் எண்ணப்படும் இடத்தில் மட்டும் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

 

வழக்கறிஞர்: 24.6.2015ம் தேதியன்று, திருச்செங்கோடு டிஎஸ்பி மற்றும் போலீசார் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு வந்து விசாரித்தார்களா?

 

தங்கவேல்: ஆமாம்.

 

வழக்கறிஞர்: அப்போது அவர்கள் ஏதாவது கோயிலைப் பற்றி வரைபடம் வரைந்தார்களா?

 

தங்கவேல்: ஆமாம். கோயிலை பார்வையிட்டு மாதிரி வரைபடம் வரைந்தனர். பார்வை மகஜரும் தயார் செய்தனர்.

 

வழக்கறிஞர்: அந்த பார்வை மகஜரில் நீங்கள் கையெழுத்து போட்டீர்களா?

 

தங்கவேல்: நானும், சக்திவேல் என்பவரும் பார்வை மகஜரில் கையெழுத்துப் போட்டோம்

 

(அப்போது பார்வை மகஜர் குறித்த புகைப்பட நகலை அரசுத்தரப்பு வழக்கறிஞர் சாட்சி தங்கவேலிடம் காட்டி உறுதிப்படுத்தினார். புகைப்பட நகலைக் காட்டியதற்கு யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜிகே எனப்படும் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ ஆட்சேபனை தெரிவித்தார். அவருடைய ஆட்சேபனையை நீதிபதி ஏற்றுக்கொண்டு பதிவு செய்தார்)

 

வழக்கறிஞர்: போலீசார் உங்களிடம் சிசிடிவி கேமராவின் புட்டேஜை கேட்டார்களா?

 

தங்கவேல்: கேட்டார்கள்

 

வழக்கறிஞர்: போலீசார் அந்த கேமரா புட்டேஜை என்றைக்கு கேட்டார்கள்? நீங்கள் கொடுத்தீர்களா?

 

தங்கவேல்: கேமரா புட்டேஜ் பதிவு செய்யும் கப்போர்டின் சாவி என்னிடம் இருந்தது. என் உயரதிகாரிகள் முன்னிலையில், 26.6.2015ம் தேதியன்று கப்போர்டை திறந்து காண்பித்தேன். அங்கிருந்து போலீசார் கேமரா புட்டேஜை எடுத்துச் சென்றனர்.

 

வழக்கறிஞர்: போலீசாரிடம் கேமராவைத் தவிர வேறு ஏதாவது கொடுத்தீர்களா?

 

தங்கவேல்: ஆமாம். டிவிஆர் ரெக்கார்டர்… அப்புறம் அது தொடர்பான உபகரணங்கள். என்னுடைய உயரதிகாரிகள்தான் கொடுத்தனர்.

 

வழக்கறிஞர்: டிவிஆர் ரெக்கார்டை போலீசார் எப்போது வாங்கிச் சென்றனர்?

 

தங்கவேல்: 15.10.2015ம் தேதி.

 

(இதையடுத்து, தங்கவேலுவுக்கு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்து சிபிசிஐடி போலீசார் கைப்பற்றிய சிசிடிவி கேமரா புட்டேஜ் காட்சிகள் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. 23.6.2015ம் தேதியன்று கேமரா&1ல் பதிவான ஒரு காட்சியைக் காட்டி, அந்த இடம் கோயிலின் மேற்கு நுழைவாசல் பகுதி என்றும், அதே நாளில் கேமரா&5ல் பதிவான ஒரு காட்சியைக் காண்பித்து, அது அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்குள் உள்ள சிறப்பு வழி என்றும் தங்கவேல் சாட்சியம் அளித்தார்)

 

வழக்கறிஞர்: போலீசார் கேமரா தொடர்பாக வேறு ஏதாவது உங்களிடம் பெற்றுச்சென்றார்களா?

 

தங்கவேல்: திருச்செங்கு டிஎஸ்பி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்னிலையில் டிவிஆர் ரெக்கார்டரில் இருந்து ஹார்டு டிஸ்கை எடுத்துச்சென்றனர்.

 

வழக்கறிஞர்: அப்படி எடுத்துச் சென்றார்கள் என்பதற்கான ஆதாரம் ஏதாவது உண்டா?

 

தங்கவேல்: ஹார்டு டிஸ்கை எடுத்துச்சென்றபோது அதுகுறித்த விவரங்களை எழுதிய ஓர் ஆவணத்தில் என்னிடமும் கையெழுத்துப் பெற்றுக்கொண்டனர்.

 

(அப்போது அந்த ஆவணத்தைக் காண்பித்து, அதிலிருப்பது அவருடைய கையெழுத்துதானா? என்பதை அரசுத்தரப்பு வழக்கறிஞர் உறுதிப்படுத்திக் கொண்டார். அவரும் ஒப்புக்கொண்டார்).

 

வழக்கறிஞர்: ஹார்டு டிஸ்க் எதற்குப் பயன்படும் என்று தெரியுமா?

 

தங்கவேல்: தெரியும். சிசிடிவி புட்டேஜில் உள்ள காட்சிsளை ஹார்டு டிஸ்க் பதிவு செய்திருக்கும்

 

வழக்கறிஞர்: அர்த்தநாரீஸ்வர் கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதி இருக்கிறதா?

 

தங்கவேல்: இருக்கிறது

 

வழக்கறிஞர்: எங்கிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன?

 

தங்கவேல்: கோயிலின் அடிவாரத்தில் இருந்து மேலே செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது.

 

வழக்கறிஞர்: பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுமா?

 

தங்கவேல்: வழங்கப்படும்

 

வழக்கறிஞர்: பயணச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துகள் எவ்வளவு நாள்கள் வரை இருக்கும்?

 

தங்கவேல்: ஒரு மாதம் வரைதான் அந்த எழுத்துகள் தெரியும். அதன்பிறகு அந்த எழுத்துகள் அழிந்து விடும்.

 

(அப்போது அவரிடம், அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பேருந்து ஒன்றின் பயணச்சீட்டின் புகைப்பட நகல் காண்பித்து உறுதிப்படுத்தப்பட்டது. எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே, ஆவணம் புகைப்பட நகலாக இருப்பதால் அதைப்பற்றி கேட்கக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தார். அவருடைய ஆட்சேபனையை நீதிபதி கே.ஹெச்.இளவழகன் நிராகரித்தார்).

 

(தங்கவேல் தொடர்ந்து கூறுகையில், ”புகைப்பட நகலில் காட்டப்பட்டது எங்கள் கோயிலின் பேருந்து பயணச்சீட்டுதான்,” என்றார்)

 

வழக்கறிஞர்: டிவிஆர் பாக்ஸ், அடாப்டர், மவுஸ் ஆகியவற்றை உங்கள் முன்னிலையில்தான் போலீசார் கைப்பற்றினார்களா?

 

தங்கவேல்: ஆமாம்.

 

(அப்போது அவரிடம் அந்தப் பொருள்கள் அனைத்தும் காண்பித்து, அவை சரிதானா என்று கேட்டு உறுதிப்படுத்தினர்)

 

(அவரிடம் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட்டின் புகைப்பட நகல் காண்பித்து, அதன் அளவு கேட்கப்பட்டது. அதற்கு தங்கவேல், புகைப்படத்தில் காட்டப்பட்ட அளவைப்போல் இருக்கும் என்று பதில் அளித்தார்).

 

வழக்கறிஞர்: நீங்கள் போலீசாரிடம் ஹார்டு டிஸ்கை எடுத்துக் கொடுத்த தேதி என்று கூற முடியுமா?

 

தங்கவேல்: எனக்கு ஞாபகம் இல்லை.

 

வழக்கறிஞர்: இந்த வழக்கு தொடர்பாக உங்களிடம் காவல்துறையினர் விசாரித்தார்களா?

 

தங்கவேல்: விசாரித்தார்கள்.

 

இவ்வாறு, அர்த்தநாரீஸ்வரர் கோயில் டிக்கெட் விற்பனை ஊழியர் தங்கவேல் சாட்சியம் அளித்தார்.

 

இதையடுத்து அவரிடம் எதிர்தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜிகே குறுக்கு விசாரணை செய்தார்.

அதன் விவரம் வருமாறு:

 

ஜிகே: அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட கோயில்தானா?

 

தங்கவேல்: அமாம்.

 

ஜிகே: ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட கோயில்களை ஸ்தபதிகள்தான் அமைப்பார்கள்?

 

தங்கவேல்: ஆமாம்.

 

ஜிகே: அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிவன் கோயில் ஆகும்?

 

(அதற்கு தங்கவேல், அது சிவன் கோயில் என்று சொல்ல முடியாது. சிவனும், பார்வதியும்….. என்று ஏதோ சொல்ல முனைந்தார். குறுக்கிட்டு வழக்கறிஞர் ஜிகே, அர்த்தநாரீஸ்வர் கோயிலை சிவன் கோயில் என்றும் சொல்லலாம்தானே? என்று அழுத்தம் கொடுத்துக் கேட்டார்)

 

தங்கவேல்: ஆமாம்.

 

ஜிகே: அந்த சிவன் கோயில் அருகில் முருகன் கோயிலும் உள்ளதா?

 

தங்கவேல்: ஆமாங்க (தலையை ஆட்டியும் கூறினார்)

 

ஜிகே: கோயிலுக்குள் நாகர் சிலையும் உள்ளது?

 

தங்கவேல்: ஆமாம்

 

ஜிகே: நாகர் கோயிலைத் தாண்டித்தான் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல முடியும்?

 

தங்கவேல்: ஆமாம்.

 

ஜிகே: ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட கோயில்களில் நான்கு வாசல்கள் இருக்கும் என்பது சரிதானா?

 

தங்கவேல்: சரிதான்

 

ஜிகே: அதில் ஒரு வாசல்தான் மேற்கு வாசல்.

 

தங்கவேல்: ஆமாம்

 

ஜிகே: ஆகம விதிகள்படி நீங்கள் சிசிடிவி புட்டேஜில் காட்டியபடி அதில் உள்ள கதவுகளைப் போன்றே எல்லா கோயில்களிலும் இருக்கும்?

 

தங்கவேல்: அது…. அது… வந்துங்க…. எங்கள் கோயில் கதவு எப்படி இருக்கும்னு……

 

ஜிகே: இங்கே பாருங்கள். நான் கேட்கும் கேள்வியை நன்றாக உள்வாங்கிக் கொண்டு பதில் கூறுங்கள். சிசிடிவி புட்டேஜில் நீங்கள் காட்டிய பகுதியில் உள்ள கதவு, நுழைவாயில் போலதான் ஆகம விதிப்படி உள்ள எல்லா கோயில்களிலும் அமைக்கப்பட்டு இருக்கும். சரிதானா?

 

தங்கவேல்: அது… எப்படிங்க எனக்குத் தெரியும்? எனக்கு ஆகம விதிகள் முழுமையாக தெரியாது.

 

(இதனால் கொதிப்படைந்த எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே, இதெல்லாம் தெரியாம அப்புறம் எதுக்குய்யா சாட்சி சொல்ல வந்த? என்று கடுமையாக, ஒருமையில் சாட்சியின் முகத்திற்கு அருகே சென்று மிரட்டலாகக் கூறினார். அவருடைய உடல்மொழியைக் கண்ட சாட்சி தங்கவேல், ஒரு கணம் திடுக்கிட்டுப் போனார்.

 

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நீதிபதி கே.ஹெச். இளவழகன், ‘சார்… நீங்கள் வேண்டுமென்றால் கோயிலை ஒருமுறை நேரில் சென்று படம் எடுத்து வந்து காட்டி, அதை ஒப்பிட்டுக் கேளுங்கள். இப்படியெல்லாம் சாட்சியிடம் பேச வேண்டாம்,’ என்று கடுமையாக ஆட்சேபித்தார்)

ஜிகே: அர்த்தநாரீஸ்வரர் கோயில் கட்டுப்பாட்டில் வேறு சில கோயில்களும் உண்டா?

 

தங்கவேல்: உண்டு

 

ஜிகே: அந்தக் கோயில்களின் கருவறைகள், வாசல், சன்னிதானம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ளதுபோல்தான் இருக்குமா?

 

தங்கவேல்: ஆமாம்

 

ஜிகே: நீங்கள் சிசிடிவி புட்டேஜில் பார்த்தது கோயிலின் எந்த பகுதி?

 

தங்கவேல்: அது, அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் மேற்கு புற நுழைவாயில் ஆகும்.

 

ஜிகே: போலீசார் முதன்முதலில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு எப்போது வந்து பார்த்தார்கள்?

 

தங்கவேல்: 24.6.2015ம் தேதியன்று வந்தார்கள்.

 

ஜிகே: அன்றைய தினமே காவல்துறையினர் வரைபடமும், பார்வை மகஜரும் தயார் செய்தார்களா?

 

தங்கவேல்: ஆமாம்

 

ஜிகே: கோயிலில் எங்கெங்கு சிசிடிவி கேமராக்கள் உள்ளன? என்று வரைபடத்தில் வரைந்தார்களா?

 

தங்கவேல்: வரைந்தார்கள். பார்வை மகஜரிலும் எழுதினார்கள்

 

ஜிகே: 24.6.2015ம் தேதியன்று காவல்துறையினர் சிசிடிவி கேமராக்கள் சம்பந்தப்பட்ட எந்த பாகத்தையும் கைப்பற்றவில்லை என்று நான் சொல்கிறேன்

 

தங்கவேல்: தவறு

ஜிகே: கோயிலுக்குள்ளேயே இந்துசமய அறநிலையத்துறை அலுவலகமும் உள்ளது?

 

தங்கவேல்: ஆமாம்

 

ஜிகே: உதவி கமிஷனர்தான் கோயிலின் அதிகாரி?

 

தங்கவேல்: ஆமாம்

 

ஜிகே: கோயிலுக்கென கண்காணிப்பாளர் ஒவரும் இருப்பார். அவர்தன் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கிறதா என்று கண்காணிப்பார். சரிதானா?

 

தங்கவேல்: ஆமாம்

 

ஜிகே: போலீசார் கோயிலை பார்வையிட்டபோது யார் யார் உடன் இருந்தார்கள்?

 

தங்கவேல்: உதவி ஆணையர், கண்காணிப்பாளர், கோயில் பூசாரிகள் ஆகியோர் இருந்தார்கள்.

 

ஜிகே: நீங்கள் உங்கள் உயரதிகாரி சொல்லும் பேச்சை தட்டமாட்டீர்கள்?

 

தங்கவேல்: ஆமாம். அவர் சொல்லும் உத்தரவுப்படிதான் நடப்பேன்.

 

ஜிகே: கோயிலின் உதவி கமிஷனர் உங்களிடம் ஏதாவது சொன்னாரா?

 

தங்கவேல்: காவல்துறையிடம் இருந்து கடிதம் வந்திருக்கிறது என்றும், கபோர்டை திறந்து கொடுக்கும்படியும் என்னிடம் கூறினார்.

 

ஜிகே: நீங்கள் குறிப்பிடும் கபோர்டில் என்னென்ன பொருங்கள் வைக்கப்பட்டு இருந்தன?

 

தங்கவேல்: சிசிடிவி புட்டேஜ் உள்ள ரெக்கார்டு செய்யும் டிவிஆர், அதன் உபகரணங்கள் டிக்கெட் கவுண்டரின் உள்ளே உள்ள கபோர்டில் இருக்கின்றன.

 

ஜிகே: சிசிடிவி மெக்கானிசம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

 

தங்கவேல்: எனக்குத் தெரியாது.

 

ஜிகே: சிசிடிவி கேமராவில் உள்ள பாகங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

 

தங்கவேல்: தெரியாது. டெக்னீஷியன் சொல்லித்தான் சிசிடிவி கேமரா பற்றி எனக்குத் தெரியும்.

 

ஜிகே: அந்த டெக்னீஷியன் கோயில் நிர்வாகத்தைச் சார்ந்தரா?

 

தங்கவேல்: இல்லை

 

ஜிகே: டெக்னீஷியர் பெயர் என்ன என்று தெரியுமா?

 

தங்கவேல்: மதன் என்று நினைக்கிறேன்.

 

ஜிகே: டெக்னீஷியன் பற்றி காவல்துறையினர் உங்களிடம் விசாரித்தார்களா?

 

தங்கவேல்: இல்லை

 

ஜிகே: இந்த நீதிமன்றத்தில் காட்டப்பட்ட சான்று பொருள்கள் உங்கள் முன்னிலையில்தான் போலீசார் கைப்பற்றினார்களா?

 

தங்கவேல்: ஆமாம்

 

ஜிகே: இங்கே நீங்கள் பார்த்த சிசிடிவி புட்டேஜை இதற்கு முன்பாக எங்கேயாவது பார்த்தீர்களா?

 

தங்கவேல்: இல்லை. இன்றுதான் அந்த புட்டேஜை பார்க்கிறேன்

 

ஜிகே: சிபிசிஐடி போலீசார் எப்போதாவது உங்களை விசாரித்திருக்கிறார்களா?

 

தங்கவேல்: ஒருமுறை என்னிடம் விசாரித்தார்கள். என்னுடைய மேலதிகாரி என்னை சிபிசிஐடி அலுவலகத்திற்குச் செல்லும்படி கூறியதால் நான் சிபிசிஐடி அலுவலகத்திற்கு சென்றேன்.

 

ஜிகே: சம்பவ காலத்திலும், புலன் விசாரணை செய்த காலத்திலும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்று நான் சொல்கிறேன்.

 

(அப்போது தங்கவேல், ஏதோ நீண்ட விளக்கம் சொல்ல முற்பட்டார். அதற்கு வழக்கறிஞர் ஜிகே, ‘நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் ஆமாம் என்றோ இல்லை என்றோ பதில் சொல்லலாம். கேள்வியை புரிந்து கொள்ளுங்கள்,’ என்று கடுகடுப்புடன் கூறினார். பிறகு, மேற்கண்ட கேள்விக்கு தங்கவேல், தவறு என்று பதில் அளித்தார்).

 

(இதையடுத்து, உங்கள் மீது ஏற்கனவே கோயிலில் பலமுறை புகார்கள் கூறப்பட்டுள்ளன? என்று தங்கவேலிடம் ஒரு கேள்வியை ஜிகே கேட்டார். நீதிபதி இளவழகன் குறுக்கிட்டு, அந்தக் கேள்விக்கு உடனடியாக ஆட்சேபனை தெரிவித்தார்)

 

ஜிகே: உண்டியல் எண்ணும்போது நீங்களும் அங்கே இருப்பீர்களா?

 

தங்கவேல்: இருப்பேன்

 

ஜிகே: அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில் பெயர் போட்டுதான் அர்ச்சனை சீட்டு, பார்க்கிங் சீட்டு ஆகியவை வழங்கப்படும்?

 

தங்கவேல்: சரிதான்

 

ஜிகே: பத்ரகாளியப்பன் கோயில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கீழ் வருகிறதா?

 

தங்கவேல்: ஆமாம்.

 

ஜிகே: பத்ரகாளியப்பன் கோயில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு எவ்வளவு தூரம்?

 

தங்கவேல்: பத்ரகாளியப்பன் கோயிலானது அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலை அடிவாரத்தில் இருந்து ஒரு கிமீ தூரம் இருக்கும்.

 

ஜிகே: அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு ஒரு பாதையும், பக்தர்கள் நடந்து செல்வதற்கு ஒரு நடைபாதையும் உள்ளது. அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் நடைபாதை ஊருக்குள் உள்ளது. அங்கேயே வாகனங்களை நிறுத்திவிட்டு நடைபாதையில் பக்தர்கள் நடந்து செல்வார்கள்.

 

தங்கவேல்: ஆமாம்

 

(இதையடுத்து வழக்கறிஞர் ஜிகே, திடீரென்று நீதிபதியின் மேஜை மீது உள்ள கம்ப்யூட்டரில் சாட்சி அளித்திருந்த பதில்களைப் படித்துப்பார்த்து, அதற்கேற்ப கேள்விகளைக் கேட்டார். அரசுத்தரப்பு வழக்கறிஞர் விசாரித்துக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட வக்கீல் ஜிகே, தான் பார்க்கிங் (வாகன நிறுத்தம்) பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் தங்கவேலிடம் வாகன நிறுத்தம் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காததால், அதற்கு அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உதவியாக ஆஜரான வக்கீல் நாராயணன், நீதிபதியிடம் ஆட்சேபனை தெரிவித்தார்.

 

அதற்கு, வழக்கறிஞர் ஜிகே, தான் அப்படி சொல்லவில்லை என்றார். அதற்க நீதிபதி, நீங்கள் பார்க்கிங் பற்றி சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது. பரவாயில்லை. நீங்கள் அது தொடர்பாக கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்றார். அதன்பின்னர் வக்கீல் ஜிகே, வாகன நிறுத்தம் தொடர்பான கேள்விகளை தங்கவேலிடம் கேட்டார்)

 

ஜிகே: அடிவாரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தனியார் மூலம் சீட்டு வழங்கப்படுகிறது. அடிவாரத்தில் இருந்து மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு கோயில் நிர்வாகத்தால் சீட்டு வழங்கப்படும். தகராறு ஏற்பட்டதால் கோயிலுக்குள் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கோயில் நிர்வாகம் சீட்டு வழங்கி வருகிறது என்று சொல்கிறேன்.

 

தங்கவேல்: தவறு. எப்போதும் கோயில் நிர்வாகத்தால்தான் சீட்டு வழங்கப்படும்.

 

ஜிகே: சிசிடிவி கேமராக்கள் குறித்து போலீசார் விசாரணையில் கூறியுள்ளீர்களா?

 

தங்கவேல்: எட்டு கேமராக்கள் கோயிலின் எந்தெந்த இடத்தில் உள்ளது என்தைப் பற்றி என்னிடம் காவல்துறையினர் விசாரித்தபோது கூறியுள்ளேன்.

 

ஜிகே: காவல்துறை உங்களிடம் விசாரித்தபோது டிவிஆர், அடாப்டர், மவுஸ், சிசிடிவி ஆகியவற்றை உங்கள் துறையின் மேலதிகாரி கூறியதன் பேரில் உங்கள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டதாக நீங்கள் கூறியுள்ளீர்களா?

 

தங்கவேல்: கூறியுள்ளேன்.

 

ஜிகே: டிவிஆர், அடாப்டர், மவுஸ், சிசிடிவி ஆகியவற்றை உங்கள் முன்னிலையில் காவல்துறையினர் கைப்பற்றவில்லை. உங்கள் உயர் அதிகாரி மற்றும் காவல்துறையினரும் சொல்லிக்கொடுத்து நீங்கள் சாட்சியம் அளிக்கின்றீர்கள் என்று சொல்கிறேன்.

 

தங்கவேல்: தவறு.

 

ஜிகே: டிவிஆர் வைத்திருக்கும் கபோர்ட் சாவியை நீங்கள் வைத்திருந்ததாகவும், உங்கள் முன்னிலையில் காவல்துறையினர் டெக்னீஷியன் மூலமாக மேற்படி சான்று பொருள்களை கைப்பற்றிச் சென்றதாக நீங்கள் காவல்துறையினர் விசாரித்தபோது கூறவில்லை என்று சொல்கிறேன்.

 

தங்கவேல்: தவறு.

 

ஜிகே: காவல்துறையினர் சொல்லிக்கொடுத்து, சிசிடிவி புட்டேஜில் உள்ள விவரங்களை தற்போது நீங்கள் கூறுகின்றீர்கள்.

 

தங்கவேல்: தவறு.

 

மேற்கண்டவாறு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஊழியர் தங்கவேலிடம் குறுக்கு விசாரணை நடந்தது.

 

அரசுத்தரப்பு விசாரணை, எதிர்தரப்பு குறுக்கு விசாரணைகள் மாலை 4.45 மணிக்கு முடிந்தது. இதையடுத்து, அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணையை அக்டோபர் 30, 2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார்.

 

– பேனாக்காரன்.