Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் கொலை வழக்கு: குறைந்தபட்ச பலப்பிரயோகம் என்றால் தெரியுமா? தெரியாதா?; சாட்சியிடம் ‘கிடுக்கிப்பிடி! #Gokulraj #Day19

கோகுல்ராஜ் கொலை வழக்கில்
எதிரி பிரபுவை காவல்துறையினர்
கைது செய்தபோது குறைந்தபட்ச
பலத்தை பிரயோகித்தார்களா இல்லையா?
உங்களுக்கு அந்தச் சொல்லுக்கு
அர்த்தம் தெரியுமா? தெரியாதா?
என்று அரசுத்தரப்பு சாட்சியிடம்,
யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்
கிடுக்கிப்பிடியாக கேள்விகள் கேட்டதால்,
சாட்சி குழப்பம் அடைந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23). கடந்த 23.6.2015ம் தேதி கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். அவருடைய சடலம், மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் கைப்பற்றினர்.

 

கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்ததால், அவர் சாதி ஆணவ ரீதியில் கொல்லப்பட்டதாக அப்போது பல்வேறு தலித் அமைப்புகள் போராடின. இந்த கொலை வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருண் 17 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். சிபிசிஐடி தரப்பில் மொத்தம் 110 பேர் அரசுத்தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

 

கடந்த 30.8.2018ம் தேதி முதல் அரசுத்தரப்பு சாட்சிகளிடம், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் பிணையில் வெளியே சென்ற அமுதரசு தலைமறைவாகிவிட்டார். மற்றொரு எதிரியான ஜோதிமணி என்ற பெண் சுட்டுக்கொல்லப்பட்டார். எஞ்சியுள்ள யுவராஜ் உள்பட 15 பேரும், தொடர்ந்து விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 1, 2019) நாமக்கல் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பிரகாஷ், சென்னை எழும்பூரில் பணியாற்றி வரும் துணை வட்டாட்சியர் அருண், நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் சந்திரமாதவன் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.

 

சாட்சி பிரகாஷ், குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருந்த பிரபு, கிரிதர், சுரேஷ் ஆகியோரை அடையாளம் காட்டினார். வழக்கமாக விசாரணைக்காக நீதிமன்றம் வரும்போது பிரபு மூக்குக் கண்ணாடி அணியாமல்தான் வருவார். இன்று வித்தியாசமாக பிரபு, மூக்குக் கண்ணாடி அணிந்தவாறே குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருந்தார். அரசுத்தரப்பு சாட்சி அடையாளம் காட்டும்போது அவரை குழப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

 

விஏஓ பிரகாஷ் நீதிமன்றத்தில் கூறுகையில், ”கடந்த 8.10.2015ம் தேதி இரவு 10.30 மணியளவில் கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி, கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக என்னுடைய அலுவலகம் அருகே காத்திருப்பதாக செல்போன் மூலம் தகவல் அளித்தார். நல்லிபாளையம் பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும் வழியில் சாவடி பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கே மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர்.

 

காவல்துறையினர் அவர்களிடம் விசாரிப்பதற்காக வாகனத்தில் இருந்து இறங்கினர். அதைப்பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். பிரபு என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் விசாரித்தபோது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜின் கூட்டாளி என்றும், அவருக்கு உதவி செய்தவர்களில் நானும் ஒருவன் என்றும் கூறினார்.

அப்போது யுவராஜ் தரப்பு வழக்கஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ குறுக்கிட்டு, ‘தலைமறைவாக இருந்த யுவராஜ்’ என்று குறிப்பிட்டதற்கு ஆட்சேபணை தெரிவித்தார். அதற்கு நீதிபதி இளவழகன், ‘எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தில் இருந்துதானே சொல்கிறார். இதையெல்லாம் ஆட்சேபித்தால் எப்படி?’ என்று கூறினார். அதற்கு மீண்டும் ஜி.கே. ஏதோ சொல்ல முயன்றபோது, நீதிபதி தடாலடியாக, ‘ஆட்சேபணை நிராகரிக்கப்படுகிறது’ என்று கூறினார்.

 

விஏஓ பிரகாஷ் தொடர்ந்து கூறுகையில், ”தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை சார்பில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கொங்கு வெள்ளாள கவுண்டர் பெண்களை காதலிக்கக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு விதித்து இருக்கிறோம். அந்த நிலையில், 23.6.2015ம் தேதியன்று சுவாதியும், ஓமலூர் வட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தனர்,” என்றார்.

 

இப்போது மீண்டும் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. ஆட்சேபணை தெரிவித்தார். அதற்கு நீதிபதி, ‘என்ன வகையான ஆட்சேபணை? எதற்காக இதற்கெல்லாம் ஆட்சேபிக்கிறீர்கள்?’ என்றார். அதற்கு ஜி.கே., ‘சார்… இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திற்குச் சென்றால், எதிர்தரப்பு வழக்கறிஞர் இந்த சாட்சியத்தின் கருத்துக்கு ஆட்சேபிக்கவில்லையா? என்று கேட்பார்கள். அரசுத்தரப்பு சாட்சி, அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சுவாதி என்ற பெண்ணும், கோகுல்ராஜூம் இருந்தார்கள் என்று எதை வைத்து சொல்கிறார்? அதனால் அந்த கருத்து, இந்திய சாட்சிகள் சட்டம், பிரிவு 27ன்படி ஏற்கத்தக்கது அல்ல. சாட்சி சொல்வதை உரிய சாட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது,’ என்று ஆட்சேபித்தார். அதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

 

மீண்டும் விஏஓ பிரகாஷ் தொடர்ந்து, ”தலைமறைவாக உள்ள யுவராஜூக்கு உதவி செய்ததாக பிரபு கூறினார். பின்னர் அன்றைய தினம் (8.10.2015) இரவு 11.30 மணியளவில் சுரேஷ் என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கையொப்பம் செய்தார். நானும், என்னுடன் வந்த கிராம உதவியாளரும் அதில் கையொப்பம் செய்தோம்,” என்றார்.

 

கைதான நபர்களிடம் இருந்து 14 ஆயிரம் ரூபாய் (அனைத்தும் 1000 ரூபாய் தாள்கள்) ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. அதையும் அரசுத்தரப்பு ஆவணமாக சேர்த்து இரு ந்தனர். அதன் புகைப்படத்தையும், ஒப்புதல் வாக்குமூலத்தில் இடப்பட்டிருந்த கையெழுத்தையும் சாட்சியிடம் காண்பித்து அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி உறுதிப்ப டுத்திக் கொண்டார்.

 

இதைத் தொடர்ந்து, யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே., விஏஓ பிரகாஷிடம் குறுக்கு விசாரணை செய்தார். அதன் விவரம்:

 

ஜிகே: நீங்கள் நாமக்கல்லில் எங்கு குடியிருக்கிறீர்கள்?

பிரகாஷ்: கணேசபுரத்தில் குடியிருக்கிறேன்.

ஜிகே: நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கும், உங்கள் வீட்டிற்கும் எவ்வளவு தொலைவு இருக்கும்?

பிரகாஷ்: சுமார் 4 கிமீ இருக்கும்.

ஜிகே: கோகுல்ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி காவல்துறையினர் உங்களிடம் விசாரித்தார்களா?

பிரகாஷ்: ஆமாம்.

ஜிகே: அப்படியானால் எந்த தேதியில், எந்த நேரத்தில் விசாரணை நடத்தினார்கள்?

பிரகாஷ்: 8.10.2015ம் தேதியன்று காலை 11 மணியளவில் நான் சிபிசிஐடி அலுவலத்திற்கு விசாரணைக்காக சென்றேன்.

ஜிகே: அப்போதுதான் முதன்முதலாக உங்களிடம் விசாரித்தார்களா?

பிரகாஷ்: ஆமாம்.

ஜிகே: சிபிசிஐடி ஏடிஎஸ்பி உங்களிடம் விசாரிக்கும்போது வேறு யாரேனும் இருந்தார்களா? அங்கு காவல்துறையினர் எத்தனை பேர் இருந்தார்கள்?

பிரகாஷ்: இல்லை.

ஜிகே: நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திற்கும் உங்கள் வீட்டுக்கும் எவ்வளவு தொலைவு?

பிரகாஷ்: சுமார் 3 கிமீ இருக்கும்.

ஜிகே: உங்களுடைய பணி நேரம் என்ன?

பிரகாஷ்: 24 மணி நேரமும் எனக்கு பணி நேரம்தான்.

ஜிகே: (லேசாக புன்முறுவல் செய்தபடி) அரசு ஊழியர்களுக்கு பொதுவாக 24 மணி நேரமும் பணி நேரம்தான். நான் அதைக்கேட்கவில்லை. பொதுவாக ஒரு வரையறுக்கப்பட்ட பணி நேரம் இருக்கும்தானே? அதைக் கேட்கிறேன்…

பிரகாஷ்: காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை.

ஜிகே: சிபிசிஐடி ஏடிஎஸ்பி உங்களை விசாரணைக்கு நேரடியாக அழைத்தாரா? அல்லது போன் செய்து அழைத்தாரா?

பிரகாஷ்: போன் மூலம் தகவல் சொன்னார்.

ஜிகே: அப்போது எத்தனை மணி இருக்கும்?

பிரகாஷ்: இரவு 10.30 மணி.

ஜிகே: அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

பிரகாஷ்: நான் என் வீட்டில் இருந்தேன்.

ஜிகே: அப்போது சிபிசிஐடி ஏடிஎஸ்பி நீங்கள் பணியாற்றும் அலுவலகத்தில் இருந்தாரா?

பிரகாஷ்: ஆமாம்.

ஜிகே: நீங்கள் அங்கே செல்லும்போது எத்தனை மணி?

பிரகாஷ்: இரவு 10.45 மணி இருக்கும்.

ஜிகே: அப்போது உங்கள் அலுவலகம் திறந்தே இருந்ததா?

பிரகாஷ்: இல்லை.

ஜிகே: நீங்கள் சாட்சியம் அளித்தபோது கூறியபடி பிரபு, சுரேஷ், கிரிதர் ஆகிய மூன்று பேரும் நல்லிபாளையம் அருகே சாவடி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிரு ந்தார்களா?

பிரகாஷ்: ஆமாம்.

ஜிகே: உங்கள் தாலுகா அலுவலகம் செல்லும் வழியில்தான் நீங்கள் குறிப்பிட்ட சாவடி பேருந்து நிறுத்தம் இருக்கிறதா?

பிரகாஷ்: இல்லை. அதற்கு முன்பாகவே ஓரிடத்தில் பிரிந்து செல்கிறது.

ஜிகே: சாவடி பேருந்து நிறுத்தம் மெயின் ரோட்டில்தான் இருக்கிறதா?

பிரகாஷ்: ஆமாம்.

ஜிகே: தாசில்தார் அலுவலகத்திற்கு சாவடி பேருந்து நிறுத்தம் வழியாகத்தான் செல்ல வேண்டும். அப்படித்தானே?

பிரகாஷ்: நாங்கள் எல்லாம் அப்படி செல்வதில்லை.

ஜிகே: (சற்றே காட்டமாக) நீங்கள் எல்லாம் போகாதது பற்றி கேட்கவில்லை. தாசில்தார் அலுவலகத்திற்கு சாவடி பேருந்து நிறுத்தம் வழியாக செல்ல முடியுமா முடியாதா?

பிரகாஷ்: போகலாம்.

ஜிகே: நீங்கள் சிபிசிஐடி காவல்துறையினருடன் சாவடி பேருந்து நிறுத்தம் செல்லும்போது எத்தனை மணி இருக்கும்?

பிரகாஷ்: இரவு 11 மணி.

ஜிகே: நீங்கள் காவல்துறையினரின் வாகனத்தில்தான் சென்றீர்களா?

பிரகாஷ்: ஆமாம்.

ஜிகே: அப்போது காவல்துறையினரின் வாகனத்தில் லைட் எல்லாம் எரிந்து கொண்டிருந்ததா?

பிரகாஷ்: ஆமாம்.

ஜிகே: அப்போது சிபிசிஐடி காவல்துறையினர் சீருடையில் இருந்தார்களா?

பிரகாஷ்: இல்லை.

ஜிகே: வாகனத்தை நிறுத்திவிட்டுத்தான் காவல்துறையினர் நீங்கள் குறிப்பிட்ட மூன்று பேரையும் பிடிக்கச் சென்றனரா?

பிரகாஷ்: ஆமாம்.

ஜிகே: அப்போது பிரபு என்பவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓட முயன்றாரா? அப்போது அவருக்கு கீழே விழுந்ததில் ஏதேனும் காயம் ஆச்சோ?

பிரகாஷ்: தப்பி ஓடினார். ஆனால் காயங்கள் ஏதும் இல்லை.

ஜிகே: அப்போது காவல்துறையினர் குறைந்தபட்ச பலப்பிரயோகம் செய்தனரா?

பிரகாஷ்: குறைந்தபட்ச பலப்பிரயோகம் என்றால் எனக்கு அர்த்தம் தெரியவில்லை.

ஜிகே: (முகத்தை கடுகடுப்புடன் வைத்தபடி) அர்த்தம் தெரியாதுனு சொல்கிறீர்கள். உங்கள் வாக்குமூலத்தில் குறைந்தபட்ச பலப்பிரயோகம் என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறீர்களே?

நீதிபதி: (வழக்கறிஞர் ஜி.கே.யைப் பார்த்து) அந்த வார்த்தையில் ஏதும் பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை. காவல்துறையினர் கைது செய்யும்போது குறைந்தபட்ச பலப்பிரயோகம் பயன்படுத்துவது சாதாரணமானதுதான். பின்னர் நீதிபதி, சாட்சியைப் பார்த்து, இப்போதாவது குறைந்தபட்ச பலப்பிரயோகம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு சாட்சி பிரகாஷ், தெரியும் என்று பதில் அளித்தார்.

ஜிகே: நீங்கள் இங்கே கூறியபடி எதிரிகள் யாரும் வாக்குமூலம் தரப்படவில்லை என்று சொல்கிறேன்…

பிரகாஷ்: தவறு.

ஜிகே: சிபிசிஐடி காவல்துறையினர் அலுவலகத்தில் வைத்து தயாரித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் நீங்கள் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள்…

பிரகாஷ்: தவறு.

ஜிகே: நீங்கள் உங்களின் உயரதிகாரிகளின் நிர்ப்பந்தத்தினாலும், போலீசாரின் வேண்டுகோளின்படியும் இங்கே பொய் சாட்சியம் சொல்லி இருக்கிறீர்கள்…

பிரகாஷ்: தவறு.

 

இவ்வாறு வழக்கறிஞர் ஜி.கே. குறுக்கு விசாரணை நடத்தினார்.

 

இதன்பின்னர் சென்னை எழும்பூரில் இப்போது துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் அருண் சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில், ”கடந்த 25.11.2015ம் தேதியன்று, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு காவல்துறை அழைப்பின்பேரில் விசாரணைக்குச் சென்றேன். அங்கே சிபிசிஐடி ஏடிஎஸ்பி, சுவாதி என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது சிபிசிஐடி காவல்துறையினர் சுவாதியிடம், 20 பக்கங்கள் கொண்ட வெள்ளைத்தாளில் மூன்று பக்கங்களில் அவருடைய வீட்டு முகவரியை எழுதி வாங்கினர். எஞ்சிய 17 பக்கங்களில் சுவாதியிடம் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்டனர். அந்த ஆவணத்தில் நானும் சாட்சி கையொப்பம் செய்தேன். என்னுடன் வருவாய் ஆய்வாளர் வைரமூர்த்தி என்பவரும் கையொப்பம் செய்தார்.

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி: சுவாதியிடம் எத்தனை மணி நேரம் விசாரணை நடந்தது?

அருண்: சுமார் ஒரு மணி நேரம் இருக்கும்.

கருணாநிதி: சிசிடிவி வீடியோ காட்சிகளைப் பார்த்து சுவாதியை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?

அருண்: முடியும்.

 

(இதையடுத்து, 23.6.2015ம் தேதியன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கொலையுண்ட கோகுல்ராஜூம், அவருடைய தோழி சுவாதியும் சாமி கும்பிடச் சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமரா எண்&1ல் பதிவாகி இருந்தது. அதிலிருந்து 14 நிமிடங்கள் ஓடக்கூடிய காட்சிகளை மட்டும் சிபிசிஐடி காவல்துறையிர் அரசுத்தரப்பு ஆவணமாக குறியீடு செய்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் நீதிமன்ற விசாரணை அரங்கத்திற்குள் சாட்சி அருணுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. 7.54வது நிமிடத்தில், கோயிலுக்குள் ஓர் இளைஞனும், இளம்பெண்ணும் ஒன்றாக நுழைந்தனர். அதைப் பார்த்த அருண், அந்த இளைஞனுடன் வருபவர்தான் சுவாதி என்று அடையாளம் காட்டினார்).

 

அதைத் தொடர்ந்து, அருணிடம் எதிரிகள் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. குறுக்கு விசாரணை நடத்தினார். அவரைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் சந்திரமாதவன் சாட்சியம் அளித்தனர். அவர் சுமார் இரண்டு மணி நேரம் சாட்சியம் அளித்தார். முன்னதாக, குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருந்த முதலாவது எதிரியான யுவராஜ், இரண்டாம் எதிரியான அருண் ஆகியோரை சந்திரமாதவன் அடையாளம் காட்டினார்.

 

யுவராஜை அடையாளம் காட்டும்போது யுவராஜ் தன் இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு, நெஞ்சை நிமிர்த்தியபடி, லேசான புன்முறுவலுடன் நின்றார். சந்திரமாதவன் தொடர்ந்து இரண்டு மணி நேரம் சாட்சியம் அளித்தார். நேரமின்மையால் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படவில்லை.

 

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மறுநாள் ஒத்திவைக்கப்படுவதாக (அதாவது பிப்ரவரி 2, 2019ம் தேதிக்கு) நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். வரும் மார்ச் மாதத்திற்குள் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதால், சாட்சிகள் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

 

– பேனாக்காரன்