திரை இசைப்பாடல்களில்
பொதிந்திருக்கும் குறள்
இன்பத்தை வெளிக்கொணர்வதே
இத்தொடரின் நோக்கம்.
இந்த பகுதியில் பெரும்பாலும்
காதல் பாடல்களே இடம்
பெற்று வந்தன.
இந்த முறை அதில்
சிறு மாற்றம்.
இரண்டு முக்கியக்
காரணங்கள் இருக்கின்றன.
கோடை விடுமுறைக்குப்
பின்னர் பள்ளிகள்
திறக்கப்பட்டுள்ள நேரம் இது.
மாணவர்களுக்கு இந்தத்
தொடரின் மூலம் சில
செய்திகளைச் சொல்லலாம்.
இரண்டாவது காரணம்,
ஜூன் 24ம் தேதி இளங்கம்பன்
கண்ணதாசன் பிறந்த தினம்.
நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.
”பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்ற பொய்யாமொழியன், செல்வத்தை ஒருபோதும் உடைமையாகச் சொன்னதில்லை. அது வரும்; போகும். நிலையற்றது. அவன், ஊக்கம் உடைமையைத்தான் உண்மையான உடைமை என்கிறான். அதனால்தானோ என்னவோ அய்யன் வள்ளுவன், ஊக்கமுடைமையை பொருட்பாலில் வைத்துப் பாடியிருக்கிறான். ஒருவனுடைய ஊக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வள்ளுவன் சொன்ன குறளை, நம்மில் பெரும்பாலானோர் நினைவில் வைத்திருப்போம். அந்தக்குறள்…
”வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு” (60:594)
அதாவது, தண்ணீரின் அளவு என்னவோ அதைப்பொருத்துதான் அதில் மலர்ந்துள்ள நீர்ப்பூக்களின் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல, மனிதரின் வாழ்க்கையின் உயர்வு என்பதும் அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவைப் பொருத்தே இருக்கும் என்கிறான் வள்ளுவன்.
இந்தக் கருத்துக்கு இன்னும் ஒருபடி மேலே சென்று வலு சேர்க்கிறான், வள்ளுவன். எப்படித் தெரியுமா?
”உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து” (60:596)
என்கிறான் வள்ளுவன். அய்யன் சொல்ல விழைவது இதுதான்:
எப்போதும் உயர்வான
எண்ணங்களைக் கைக்கொள்ள
வேண்டும். ஒருவேளை,
எடுத்துக்கொண்ட காரியத்தில்
வெற்றி கிட்டாவிட்டாலும்,
உயர்ந்த எண்ணங்களைக்
கைவிடக்கூடாது.
https://youtu.be/CSKM9f7kmQ8
இதற்கு நிஜத்தில் நிறைய
உதாரண புருஷர்கள் உள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு,
ஜார்க்கண்ட் மாநிலத்தில்
திடீரென்று பா.ஜ. அரசு
பெரும்பான்மையின்றி கவிழ்ந்துவிட,
அப்போது அக்கட்சிக்கு ஆதரவு
அளித்த சுயேட்சை எம்.எல்.ஏ.
மதுகோடா, முதல்வர் ஆகிவிட்டார்.
ஆட்சியில் இருந்த இரண்டே
ஆண்டுகளில் அவர் மீது
4000 கோடி ரூபாய்
நிலக்கரி ஊழல் புகார்
எழுந்தது வேறு கதை.
‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’
என்பதை மதுகோடா தவறாக
புரிந்து கொண்டாரோ என்னவோ…!
சிதறு தேங்காய் பொறுக்கிய
‘அமைதிப்படை’ அமாவாசை
அரண்மனையைக் கைப்பற்றியதும்,
உயர்வுள்ளல்தானே.
உயர்வைப் பற்றிய சிந்தனைகள்
இருந்ததனால்தான் பெட்ரோல்
பங்க்கில் வேலை செய்த
திருபாய் அம்பானியால்
இந்தியாவின் அடையாளமாக
மாற முடிந்தது. மதுகோடாவைத்
தெரிந்து இருக்காவிட்டாலும்,
உங்களுக்கு ‘கஜினி’
சஞ்சய் ராமசாமியை நிச்சயம்
தெரிந்திருக்கும். அவர் சொல்வாரே,
”எதையும் பெருசா
ஆசைப்பட்டாதான் சிறுசாவாவது
‘அச்சீவ்’ பண்ண முடியும்” என்பார்.
அதுதான் வள்ளுவன் சொன்ன,
‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’.
அதனால்தான்,
வள்ளுவன் ஊக்கம் உடைமையை
மட்டுமே உடைமை என்கிறான்.
பொருள் உடைமை எல்லாம்
நம்மை விட்டு நில்லாது
நீங்கி விடும். இதை,
”உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்” (60:592)
என்ற பாடல் வழியே சொல்கிறான்.
எண்ணங்கள் எத்தகைய வலிமையானது என்பதைப் பற்றி, தமிழ்நாட்டு உளவியல் அறிஞரான எம்.எஸ்.உதயமூர்த்தியும் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். எண்ணங்களை மேம்படுத்தினால் செல்வந்தர் ஆகலாம் என்று புத்தகம் எழுதியே செல்வந்தர் ஆனவர் எழுத்தாளர் காப்மேயர்.
இந்தக் குறட்பாக்களை அடிப்படையாகக் கொண்டு, கவியரசர் கண்ணதாசன், ‘சாந்தி நிலையம்’ படத்தில் பாடலொன்றை புனைந்திருக்கிறார். 1969ம் ஆண்டில் வெளியான இந்தப்படத்தை, ஜி.எஸ்.மணி இயக்கி இருந்தார். இசை, எம்.எஸ்.விஸ்வநாதன். ஜெமினி கணேசன், காஞ்சனா, நாகேஷ், மஞ்சுளா உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள்.
குழந்தை பட்டாளங்களுடன் சுற்றுலா செல்லும் நாகேஷ், குழந்தைகளுடன் பறக்கும் பலூனில் அமர்ந்தவாறு, பாடுவதுபோல் இந்தப்பாடல் இடம் பெற்றிருக்கும். டி.எம்.சவுந்தர்ராஜன் பாடியிருப்பார்.
‘பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே’ என்ற பாடல் முழுவதும், வள்ளுவன் சொல்லிச்சென்ற ஊக்கம் உடைமையின் பெருமையைப் பேசும்.
பறக்கும் பலூன் என்றதும் இன்னொரு தகவலும் நினைவுக்கு வருகிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோசப் மைக்கேல் மான்ட்கோஃபியர்-ஜேக்கப் எமீன் மான்ட்கோஃபியர் சகோதரர்கள்தான் முதன்முதலில் பறக்கும் பலூனைக் கண்டுபிடித்தனர். இது நடந்தது, 1783, செப். 19. பட்டுத்துணியால் பலூனைச் செய்தனர்.
தரையில் சில பொருட்களை எரித்து, அதன் புகையை பலூனுக்குள் நிரப்பி பறக்க விட்டனர். 2 கி.மீ. உயரம் பறந்தது. அதே ஆண்டு, நவ. 21ம் தேதி முதன்முதலில் மனிதன் அமர்ந்து செல்லும் பறக்கும் பலூனும் பறக்க விடப்பட்டது.
சரி. ‘சாந்தி நிலையம்‘ படத்தில் இடம் பெற்ற ‘ஊக்கம் உடைமை’ கருத்துக்களை வலியுறுத்தும் அந்தப்பாடலின் வரிகள்…
பூமியில் இருப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ
நினைக்கும் இடம் பெரிது
போய்வரும் உயரமும்
புதுப்புது உலகமும்
அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய் வரலாம்
(பூமியில் இருப்பதும்…)
உலகம் போகின்ற வேகம்
உருவமும் இனிமேல் மாறும்
நடக்கும் கதைகளைப் பார்த்தால்
நமக்கே சிறகுகள் முளைக்கும்
ரஷ்யர்கள் அனுப்பிய கூடு
ராக்கெட் என்பது பேரு
சிஷ்யர்கள் அனுப்பிய கூடு
தெரியுது வானத்தில் பாரு
(பூமியில் இருப்பதும்…)
-இளையராஜா சுப்ரமணியம்
தொடர்புக்கு: selaya80@gmail.com
அழைக்க: 9840961947
(ஜூன்-2017 புதிய அகராதி திங்கள் இதழில் இருந்து)