Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீங்கள் யாரையாவது பழிவாங்கணுமா? சாஹோ படத்திற்கு டிக்கெட் வாங்கி கொடுங்க!

சர்வதேச நிழல் உலக தாதா
ஒருவர் திடீரென்று எதிரிகளால்
கொல்லப்படுகிறார். அவருக்குப்
பிறகு நிழல் உலகை
ஆளப்போவது யார்? என்பதுதான்
சாஹோ படத்தின்
ஒரு வரி கதை.
ஒரு கமர்ஷியல்
படத்திற்கு இந்தக்
கதையே போதுமானதுதான்.

பாகுபலி, பாகுபலி-2 படங்கள்
பெற்ற பெரு வெற்றி காரணமாக
பிரபாஸ் மீது ரொம்பவே
எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பது
என்னவோ உண்மைதான்.
ஆனால், அதற்காக வலுவான
கதையோ, திரைக்கதையோ
இல்லாமல் வெறும்
பிரம்மாண்டத்தை மட்டுமே
கட்டி எழுப்பி படத்தைக்
கட்டமைக்க முடியுமா?
பிரபாஸ் இருந்தாலே போதும்,
போட்ட பணத்தை கல்லா
கட்டிவிட முடியும் என நம்பி
படத்தை எடுத்திருக்கிறார்
இயக்குநர் சுஜீத்.

 

கதைப்படி (கதை என்று ஒன்று இல்லை. ஆனாலும் ‘ஒரு ஊர்ல…’ என்று சொன்னால்தானே கதை வரும்? அதுபோலதான் ‘கதைப்படி’ என்பதும்), பிரபாஸ் அண்டர் கவர் ஆபரேஷனில் இருக்கும் போலீஸ் அதிகாரி. நமக்கு தெரிந்து, ‘அண்டர் கவர் ஆபரேஷன்’ என்றால், அது நம்ம ஊர் சிவராஜ் சித்த வைத்திய சாலைதான் என்பது வேறு கதை. சரி… கதைக்கு வருகிறேன். பிரபாஸ், ஒரு அண்டர் கவர் போலீஸ் அதிகாரியாக அறிமுகம் ஆகிறார்.

 

நிழல் உலக தாதா ராய் (ஜாக்கி ஷெராப்), உலகம் முழுவதும் உள்ள தாதாக்கள் சட்ட விரோதமாக கல்லா கட்டிய 2 லட்சம் கோடி ரூபாயை ஒரு வங்கியின் வாலட்டில் வைத்திருக்கிறார். அந்த வாலட்டில் யார் யாருடைய பணம் இருக்கிறது? எங்கெல்லாம் சொத்துகள் இருக்கின்றன? என்பதற்கான விவரங்கள் எல்லாம் ஒரு பிளாக் பாக்ஸில் இருக்கிறது. ராய் கொல்லப்பட்டதால் அந்த பிளாக் பாக்ஸ் இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரியாமல் போகிறது. நிழல் உலக தாதா கும்பலுக்குள்ளேயே ஒரு தாதா, பிளாக் பாக்ஸ் இருக்கும் இடத்தை எப்படியாவது கண்டறிந்து, கைப்பற்றத் துடிக்கிறார்.

மேலும், ராய் இறந்ததற்குப் பிறகு அவருடைய நாற்காலியை கைப்பற்றவும் தாதா கும்பலில் ஒருவர் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்குள் ராயின் மகன் என்று சொல்லிக்கொண்டு நம்ம அருண்விஜய் (அருண்குமாரேதான்…) வந்து சேர்கிறார்.

 

இது வரைக்கும் சொன்னதை அப்படியே மனசுல வெச்சுக்குங்க. இதற்கிடையே, நகரில் பல இடங்களில் பெரிய அளவிலான திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கெல்லாம் காரணம், நீல் நித்தின் முகேஷ்தான் என புத்திக்கூர்மையால் (?!) கண்டுபிடிக்கிறார் அண்டர்கவர் போலீஸ் அதிகாரியான பிரபாஸ். தாதா கும்பல் தேடுவதுபோல் நீல்நித்தின் முகேஷூம் அந்த பிளாக் பாக்ஸை தேடி அலைகிறார். அவர் பிளாக் பாக்ஸை கண்டுபிடித்து எடுத்துச் செல்லும்போது, ஒட்டுமொத்த போலீசாரையும் நீல்நித்தின் முகேஷை துரத்த வைக்கிறார் பிரபாஸ்.

 

நீல் நித்தின் முகேஷிடம்
இருந்து பிளாக் பாக்ஸை
கைப்பற்றும் பிரபாஸ், அதை
எடுத்துக்கொண்டு காரில் மின்னல்
வேகத்தில் தப்பிச்செல்கிறார்.
அதற்குள் ஓர் ஐந்நூறு
போலீசார் நீல் நித்தின் முகேஷை
சேஸிங் செய்து, கைது செய்ய
முயல்கின்றனர். அங்கேதான்
ட்விஸ்ட் வைக்கிறார் இயக்குநர்.
காவல்துறை உயரதிகாரியிடம்
(தேவன்) இருந்து ஷிண்டே என்ற
போலீஸ் அதிகாரிக்கு தகவல்
வருகிறது. ‘நீங்கள் திருடன் என
நினைத்துக்கொண்டு ஒரு அண்டர்கவர்
போலீஸ் அதிகாரியை துரத்திச்
செல்கிறீர்கள்,’ என்கிறார்.
அப்போதுதான், இத்தனை நாளும்
அண்டர் கவர் அதிகாரியாக
இருந்தவர்தான் திருடன் என்று
ஒட்டுமொத்த காவல்துறைக்கும்
தெரிய வருகிறது. அந்த
திருடன்தான் சாஹோ.

 

இப்படி எழுதும்போதே நமக்கே கிறுகிறு என்று தலை சுற்றுகிறது.

 

பாகுபலி என்பவன் ஒரு அசகாய சூரன். எதையும் வெல்லும் ஆற்றல் உடையவன். அதேபோன்ற சூரத்தனத்தை இந்தப் படத்திலும் சித்தரிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். அதனால்தான் பாராசூட் பையை, ஒரு மலையின் உச்சியில் இருந்து முதலில் வீசியெறிகிறார் நாயகன். அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து மலை மீது இருந்து தலைகீழாக குதிக்கிறார். அந்த பாராசூட் பை கீழே விழுவதற்குள், அதைப்பிடித்து முதுகில் கட்டிக்கொண்டு, பாராசூட்டை விரித்து, பறந்து கீழே இறங்குகிறார்.

அவர் மாவீரனாக இருக்கலாம். அதற்காக ஒரே ஆள், எப்போது பார்த்தாலும் ஒரு ஐந்நூறு, அறுநூறு பேரை அடித்து துவைத்துக் கொண்டே இருக்க முடியுமா என்ன? விட்டால், படம் பார்க்கும் ரசிகர்களை எல்லாம்கூட இழுத்துப்போட்டு கும்மி எடுத்துடுவாரு போலருக்கு. அப்புறம் இன்னொரு காட்சியில், கூலிப்படையைச் சேர்ந்த முந்நூறு ரவுடிகள் நவீன ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத்தள்ளுகின்றனர். சொல்லி வைத்தாற்போல், ஒரு தோட்டா கூட நம்ம சாஹோ மீது படாமல் தப்பி விடுகிறார். அதேநேரம், 6 குண்டுகள் மட்டுமே கொண்ட ஒரு பிஸ்டலால் ஒட்டுமொத்த கும்பலையும் சுட்டு வீழ்த்தி விடுகிறார்.

 

மற்றொரு காட்சியில் நாயகியே, பிரபாஸை சுட்டுக்கொல்ல முயலும்போது, ‘அதற்குமேல் உன்னால் சுட முடியாது. ஏன்னா அதுல தோட்டா தீர்ந்து போச்சு’ என்று, உயிர் போகும் அபாயத்தில் இருந்தாலும்கூட துப்பாக்கியில் இருந்து வெளியேறும் குண்டுகளை கணக்குப் போட்டு வைத்திருக்கிறார் பிரபாஸ். இதுபோன்ற காட்சிகள் வைக்கப்பட்டதால், காமெடி காட்சிகள் என்று தனியாக எதற்கும் இயக்குநர் மெனக்கெடவில்லை.

 

சரி… இயக்குநர் ஒரு முடிவு பண்ணிட்டதுக்கு அப்புறம் இந்த லாஜிக்லாம் நாம பார்க்க முடியாதுதான். ஒருபக்கம், காட்சிக்கு காட்சி ஆயிரம் பேரை போட்டு புரட்டி எடுத்துக்கிட்டு இருக்காரு ஹீரோ. இன்னொரு பக்கம் டானுக்கெல்லாம் டான்னு சொல்லிட்டு இருக்கற அருண்விஜய், எப்போது பார்த்தாலும் போர்டு மீட்டிங் என்று, அந்த பிளாக் பாக்ஸை நாம கண்டுபிடிக்கணும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அவர் டானா இல்ல, கார்ப்பரேட் வங்கியின் சிஇஓவா என்றே தெரியவில்லை.

 

ஹீரோ முதல் நம்ம ஊர்களில் கட்சி மாநாட்டிற்கு குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் வரும் நபர்கள் வரை எல்லோருமே கோட்சூட்டோடு திரிகிறார்கள். அவர்கள் ரவுடிகளா இல்லை அம்பானிகளா என்ற சந்தேகம் நமக்கு மட்டுமின்றி படம் பார்த்த எல்லோருக்கும் இருந்ததாகச் சொன்னார்கள்.

 

ஹீரோயின் என்று
ஒருவர் இருக்கிறார்.
அம்ரிதா நாயர் பாத்திரத்தில்
வந்து போகிறார் ஸ்ரத்தா கபூர்.
அவர் தடயவியல்
போலீஸ் அதிகாரி.
அவர் அண்டர் கவர் போலீஸ்
அதிகாரியாக இருக்கும்போதும்
பிரபாஸை காதலிக்கிறார்.
திருடன் எனத் தெரிந்த
பின்னரும் காதலிக்கிறார்.
அப்புறம், எல்லாம் நாடகம்
என நிஜமான அண்டர்கவர்
போலீஸ் அதிகாரிக்கு
எஸ்எம்எஸ் அனுப்புகிறார்.
பிறகு, நிஜ போலீசாருடன்
சேர்ந்து கொண்டு
சாஹோவை பிடிக்க
முயல்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் மதி மட்டும் புதிய புதிய இடங்களைக் காட்டி புத்துணர்ச்சி ஊட்டியிருக்கிறார். ஜிப்ரானின் பின்னணி இசையும் பரவாயில்லை. ஒரு பாதி மெய் ஒரு பாதி பொய் என்ற ஒரு பாடல் தேறுகிறது.

 

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி டி.ராஜேந்தர் இயக்கி நடித்த வீராசாமி படம், விஜய் நடித்த புதிய கீதை, அப்புறம் சில ஆண்டுக்கு முன்பு கார்த்தி நடிப்பில் வெளியான சகுதி ஆகிய படங்கள்தான், பார்க்கிற ரசிகர்களின் கழுத்திலேயே ஐந்நூறு முறையாச்சும் கத்தியால் குத்தி கொத்து பரோட்டா போட்டு வெளியே தூக்கிப்போடற உணர்வை ஏற்படுத்தியது. அந்த பட்டியலில் இப்போது, சாஹோவையும் சேர்த்துக்கலாம்.

 

நீங்கள் யாரையாவது கருணையே இல்லாமல் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால், தாராளமாக சாஹோ படத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பி வையுங்க. அது போதும்.

 

– வெண்திரையான்