Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

என் பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்ட வேண்டாம்; கால்வாய் வெட்டுங்கள்!; கமல்ஹாஸன்

”என் பிறந்த நாளையொட்டி யாரும் கேக் வெட்ட வேண்டாம். அதற்கு பதிலாக கால்வாய் வெட்டுங்கள்” என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாஸன் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறியிருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கடலில் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கலப்பதாக ட்விட்டரில் புகார் கூறியிருந்தார். மேலும், அவர் அதிகாலையில் திடீரென்று எண்ணூர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வும் மேற்கொண்டார்.

வழக்கமான ட்விட்டர் அரசியலில் இருந்து கமல் நேரடியாக களம் இறங்கியது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்ப டுத்தியது. அத்துடன் அவர், அங்குள்ள மீனவ மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி அன்றுதான் ரசிகர்களை சென்னைக்கு நேரில் வரவழைத்து சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தாண்டு இரண்டு நாள்கள் முன்னதாகவே (நவம்பர் 5, 2017) ரசிகர்களை சென்னைக்கு அழைத்து இருந்தார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சென்னை கேளம்பாக்கத்தில் இன்று ரசிகர்களை சந்தித்த கமல்ஹாஸன், தனது அரசியல் நிலைப்பாடு குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். இன்றைய கூட்டத்தில் அறப்போர் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கமல் தனது ரசிகர்களிடம் பேசியதில் இருந்து…

கடந்த 39 ஆண்டுகளாக ரசிகர்கள் கூட்டம் நடத்தி வருகிறேன். எம்ஜிஆர், கலைஞர் ஆகியோரும் இதுபோன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். இப்போது அரசியல் சூழ்நிலை சரியில்லாததால், கட்சி தொடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.

அரசியல் கட்சி தொடங்க பணம் தேவைப்படும் என்கிறார்கள். ரசிகர்கள் நினைத்தால் அதை தந்து விடுவார்கள். அதற்காகத்தான் வரும் 7ம் தேதி செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறேன். அதை செயல்படுத்தும் விதம் குறித்தும் அன்று விளக்கப்படும்.

கட்சி தொடங்க ஒரு முப்பது கோடி வேண்டும் என்றால் ரசிகர்கள் தர மாட்டார்களா என்ன? பணம் குறித்த பயம் எனக்கு இல்லை. அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு காசுக்கும் நான் கணக்கு வைத்திருக்க வேண்டும். அதற்கும் அந்த செல்போன் செயலி பயன்படும். கட்சி தொடங்குவதன் முதல் பணிதான் இந்த செல்போன் செயலி.

நான் சினிமா ஷூட்டிங்கிற்காக பலமுறை சுவிட்சர்லாந்து சென்றிருக்கிறேன். ஆனால், சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்தது கிடையாது. பணக்காரர்கள் முறையாக வரி செலுத்தினாலே நாடு வளர்ச்சி அடைந்து விடும். சுவிஸ் வங்கியில் நான் பணம் போட மாட்டேன். அங்கிருந்து பணத்தைக் கொண்டு வருவேன்.

இது ஆரம்பக் கூட்டம்தான். இதுபோல் இன்னும் 50 கூட்டங்கள் நடத்தப்படும். குழந்தை பிறக்க பத்து மாதங்கள் தேவைப்படும். கட்சிக்கு பெயர் வைப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அரசியல் கட்சி அறிமுகம், அமைதியாகத்தான் செய்ய முடியும்.

என் பிறந்தநாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம். இது கேக் வெட்டி கொண்டாடும் நேரம் அல்ல. கால்வாய் வெட்ட வேண்டிய நேரம். இவ்வாறு கமல்ஹாஸன் பேசினார்.