Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அதிகார வெறி கும்பலின் பலிகடா சிரியா!; செத்து மடியும் குழந்தைகள்!!

அதிகார வெறி கொண்டு அலையும் நாடுகளின் கையில் சிக்கிய பூமாலையாக கந்தல் கந்தலாகி வருகிறது சிரியா. தொடரும் உள்நாட்டு யுத்தத்தால் கடந்த நான்கு நாள்களில் மட்டும் 150 குழந்தைகள் உள்பட 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் உள்நாட்டுப் போர் உக்கிரம் அடைந்திருக்கிறது. நீண்ட காலமாக அந்நாட்டு அரசுக்கும், குர்து இன மக்களுக்கும் இடையே சண்டை இருந்து வருக்கிறது. தவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குடைச்சலும் உண்டு.

கொத்துக் கொத்தாக செத்து விழும் அப்பாவி மக்கள், பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை தூக்கி வரும் காட்சிகள், குண்டு துளைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள், ஒதுங்க இடமின்றி தவிக்கும் ஏதுமறியா மக்கள் என தொடர்ந்து இணையங்களில் உலா வரும் துயரமான படங்கள், மனித மனங்களை உலுக்கி எடுத்த வண்ணம் இருக்கின்றன.

கிட்டத்தட்ட இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போர் போல சிரியாவிலும் நடந்து வருகிறது. சிரியாவிலும்கூட, உலக நாடுகள் தடை செய்த ரசாயன ஆயுதங்களை போரில் பயன்படுத்தப்பட்டு இருப்பது பெரும் கவலை அளிக்கிறது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் வற்புறுத்தலால் சிரியாவில் நேற்று (பிப்ரவரி 27, 2018) முதல் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சண்டை இருக்காது. அதற்குள், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிவிட வேண்டும் என்பதற்கே இந்த ‘மனிதநேய போர் நிறுத்தம்’ என்று சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் அப்படி என்னதான் பிரச்னை? வெறும் உள்நாட்டுப் போரில் இத்தனை உயிர்ச்சேதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? என்று சர்வதேச சமூகங்களின் முன்பு உள்ள மாபெரும் அய்யம்.

அரிய இயற்கை வளம் பெற்ற ஒரு நாடு, சரியான நிர்வாகத் தலைமை இல்லாமல் இருந்தால் என்னென்ன சிக்கல்களைச் சந்திக்க நேரிடுமோ அதைத்தான் கடந்த பல ஆண்டுகளாக சிரியாவும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

நிர்வாகத் திறன் இல்லாத தலைவர்களை, அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் ஆட்டி வைப்பார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருப்பார்கள் என எண்ணுகிறேன்.

சிரியாவின் பிரச்னைகளை எளிமையாகச் சொல்வதெனில், அந்த நாட்டில் மொத்தம் இரண்டு அணிகள். ஒன்று, ஆளும் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசாங்கம். மற்றொன்று, அரசை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் குழு.

‘ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்ற பழமொழி சிரியாவுக்கு ரொம்பவே பொருந்தும். அதனால்தான் ரஷ்யா, ஈரான், அமெரிக்கா, துருக்கி நாடுகளின் தலையீடு அங்கு அளவுக்கு அதிகமாகவே இருக்கின்றன.

இந்த நாடுகள் மட்டுமின்றி ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் சிரியா விவகாரத்தில் மூக்கை நுழைத்திருக்கின்றன.

இந்த நாடுகளின் தலையீட்டிற்கு தனித்தனி காரணம் உண்டு. சிரியாவில் நடக்கும் உள்நாட்டு கலவரங்களுக்கு கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஈரான் தனது நாட்டு ராணுவ ஆலோசகர்களை அனுப்பி வழிகாட்டுகிறது.

ஈரானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம். அதனால் சிரியாவில் உள்ள ஷியா பிரிவு முஸ்லீம்களின் ஆதரவுக்காக இந்த வேலைகளைச் செய்கிறது.

ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆதரிக்க, மத்திய கிழக்குப் பகுதிகளில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற பேராசைதான் காரணங்கள். சிரியாவின் வடக்குப் பகுதியில் சிரியா கிளர்ச்சியாளர்களான குர்தூஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் பெற்றுவிடுவதை தடுக்க வேண்டும் என்ற கவலை துருக்கி நாட்டிற்கு.

அதனால் துருக்கியும், அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாதிற்கு பக்கபலமாக இருக்கிறது. இஸ்ரேலின் கவலை எல்லாம், சிரியாவுக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஈரானை விரட்டி அடிப்பது மட்டும்தான். சிரியாவில் உள்ள ஷன்னி பிரிவு முஸ்லீம்களுக்காக சவுதி அரேபியா கண்ணீர் வடிக்கிறது. தனது ஆதரவு நிலைப்பாட்டுக்கு அதுதான் காரணம் என்கிறது.

இந்தக் காரணங்கள் எல்லாமே வெளிப்படையாக சொல்லப்படுவது. ஆனால், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் இலக்கே, சிரியா மண்ணில் பொதிந்து கிடக்கும் பெட்ரோலிய வளம்தான். அந்த எண்ணெய் வளம்தான் ரஷ்யாவின் விளாடிமிர் புடினையும், அமெரிக்காவின் ட்ரம்ப்பையும் தூங்க விடாமல் செய்கிறது.

இந்த உலக அரசியல்தான், சிரியாவின் உள்நாட்டு குழப்பங்களுக்குக் காரணம். இந்த அடிப்படை உண்மை சர்வதேச சமூகத்திற்கு எப்போதும் புரிய வைக்கப்படுவதில்லை. அதை மக்கள் புரிந்து கொள்ளாமல், கவனத்தை திசை திருப்புவதற்கான எல்லா வேலைகளையும் உலக நாடுகள் கனகச்சிதமாக ஊடகங்கள், இலவச அறிவிப்புகள் மூலம் செய்து விடும்.

மானிய விலையில் ஸ்கூட்டியோ, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியோ கிடைத்தவுடன் நாம் வசதியாக ஆட்சியாளர்களின் ஊழலை மறந்து விடுகிறோமே அதே உத்தியைத்தான் உலக நாடுகளும் பின்பற்றுகின்றன.

மக்களை தெளிவான அரசியல் புரிந்து கொள்ளுதல் இல்லாமல் வெற்றிகரமாக மடை மாற்றம் செய்ய, கைதேர்ந்த கார்ப்பரேட் ஊடகங்கள் இப்போது நிறையவே வந்துவிட்டன.

சிரியா கலவரங்களின் ஊற்றுக்கண் எங்கிருந்து ஆரம்பித்தது என்கிறீர்களா? அதையும் சொல்கிறோம்.

முதலாவது, மத்திய கிழக்கு பகுதிகளில் மதச்சார்பற்ற நாடுகளாக ஈராக், லிபியா, கொஞ்ச காலத்திற்கு ஆஃப்கானிஸ்தான், சிரியா ஆகியவை இருந்தன. மதச்சார்பின்மை என்பது அமெரிக்க ஏகாதிபத்திய அரசுக்கு எப்போதுமே எட்டிக்காய்தான்.

அதன் விளைவு, மேற்குறிப்பிட்ட நாடுகளின் இப்போதைய நிலவரம் என்ன என்று நமக்குக் கண்கூடாகத் தெரியும்.

இரண்டாவது, சிரியாவில் ஒரு காலத்தில் ஜவுளித்தொழில் கொடிகட்டிப் பறந்தது. அந்த நாட்டின் உள்ளாடைகளுக்கு பெரிய சந்தையே உண்டு. இந்த சந்தையைக் கைப்பற்றுவதில் துருக்கி நாட்டிற்கு ஒரு கண் இருந்தது.

மூன்றாவது, ஐரோப்பா நாட்டிற்கு பெட்ரோலியத்தை ஈரானிலிருந்து கொண்டு செல்ல ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இதனால் ஐரோப்பாவுக்கு குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும்.

ஈரானும் எண்ணெய் விற்பனை சந்தையை விரிவுபடுத்த முடியும். பெட்ரோலியத்தைக் கொண்டு செல்லும் குழாய் வழித்தடமானது சிரியா வழியாகத்தான் செல்லும் என்பதுதான் திட்டம். இங்குதான் சிக்கலே உச்சம் பெற்றது.

இந்த திட்டம், சவுதி அரேபியாவின் எண்ணெய் விற்பனைக்கு போட்டியாக இருக்கும் என்ற கருத்து எழுந்தது. அதனால் சிரியா வழியாக குழாய் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை தடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தது.

அடுத்து, இஸ்ரேல்.

மத்திய கிழக்கில் தனக்கான இருப்பை பதிவு செய்வதில் சவால் எழக்கூடும் என்ற சிந்தனை அந்த நாட்டுக்கு எழுந்தது. அதனால் சிரியா வழியாக பெட்ரோலிய குழாய்களை கொண்டு செல்வதைவிட இஸ்ரேல் வழியாக கொண்டு செல்ல, அமெரிக்கா மூலமாக நெருக்கடி கொடுத்தது. ஆனால், இந்த விவகாரத்தில் ஈரானோ, சிரியாவோ பெரிதாக கவனத்தில் செலுத்தவில்லை.

நான்காவது, இஸ்ரேலின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஏற்கனவே ஈரான் நாடு, சிரியாவில் ஆதிக்கம் செலுத்துவதை சகித்துக் கொள்ள முடியாமல் முறைத்துக் கொண்டிருந்த நாடுதானே இஸ்ரேல்? போதாக்குறைக்கு சிரியாவின் கோலன் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டுள்ளது.

கோலன் பகுதி எப்போது வேண்டுமானாலும் கையைவிட்டுப் போகலாம் என்ற அச்சமும் இஸ்ரேலுக்கு இருக்கவே செய்தது. அதற்கு ஒரே வழி, சிரியாவை எப்படியாவது வீழ்த்தி, மண்டியிடச் செய்திட வேண்டும் என்று உள்ளுக்குள் கருவிக்கொண்டு இருந்தது.

ஐந்தாவது, ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா பல துண்டுகளாக சிதறிப் போனதில் இருந்து, கடல் பரப்பில் ரஷ்யாவின் ஆதிக்கமும் பெரிய அளவில் வீழ்ச்சி கண்டிருந்தது.

தன் நாட்டு கப்பலுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டுமானால்கூட அமெரிக்காவிடம் அனுமதி பெற வேண்டிய நிலை. அதேநேரம், சிரியாவில் உள்ள ரஷ்யாவுக்கு ராணுவத் தளவாடத்தை காலி செய்வதில் அமெரிக்காவும் முனைப்பு காட்டியது.

இதற்கு அமெரிக்காவுக்கு உள்ளூர ஓர் அச்ச உணர்வும் இல்லாமல் இல்லை. அதாவது பாலஸ்தீனத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொள்ள ஏதேனும் ஆபரேஷன்களை மேற்கொண்டால், சிரியாவில் இருக்கும் ரஷ்ய தளவாடம் மூலமாக தாக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உண்டு.

ஆறாவது, சிரியாவிலும், அதன் எல்லைப் பகுதிகளிலும் இருக்கும் பெட்ரோல் கிணறுகளின் மீதும் எல்லா ஏகாதிபத்திய நாடுகளுக்கும் தீரா ஆசையும் வெறியும் இருந்து வருகிறது.

ஏழாவது, பல இனக்குழுக்கள் சிரியா அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வருகின்றன. ஈழத்தில், எல்டிடிஇ போராளிகள் சிங்கள அரசுக்கு எதிராக போராடினார்களே அப்படி.

மேற்கண்ட காரணங்களால்தான் சிரியாவில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. அமெரிக்காவைப் பொருத்தவரையில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் சண்டை நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்பும். அப்போதுதான் ஆயுத விற்பனை தடையின்றி நடைபெறும்.

அதற்காக அவர்களே ஐ.எஸ். பயங்கரவாதிகளையும் உருவாக்குவார்கள். ஓசாமாக்களையும் ஆட்டி வைப்பார்கள். ஒரு திரைக்கதையை எப்போது, எந்த விதத்தில் முடிவுக்குக் கொண்டு வருவது என்பது அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும்.

உள்நாட்டுக் கிளர்ச்சி என்ற பெயரில் உலக நாடுகள் சிரியாவில் நடந்து வரும் போரை மவுனமாக வேடிக்கைப் பார்ப்பதுதான் ஆகப்பெரிய ஆச்சர்யம்.

 

– பேனாக்காரன்.