Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

செஞ்சூரியன் டி-20: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி

செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர்களின் ரன் குவிப்பும், பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டி செஞ்சூரியனில் நேற்று (பிப்ரவரி 21, 2018) நடந்தது.

‘டாஸ்’ வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டுமினி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். இந்திய அணியில், தசை பிடிப்பால் அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரை வீசிய கிறிஸ் மோரீஸ் அந்த ஓவரில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் மெய்டன் ஓவராக வீசினார். இரண்டாவது ஓவரில் ரோஹித் ஷர்மா ரன் ஏதுமின்றி ‘டக்’ அவுட் ஆனார். டாலாவின் வேகத்தில் அவர் எல்பிடபுள்யூ ஆனார்.

அதன்பிறகு, சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். 5வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் டுமினியின் சுழலில் வீழ்ந்தார். அவர் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 24 ரன்கள் எடுத்தார். பின்னர் இணைந்த கேப்டன் விராட் கோலியும் 1 ரன்னுடன் பெவிலியன் திரும்பினார்.

மனீஷ் பாண்டே அரை சதம்:

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டேவும், விக்கெட் கீப்பர் தோனியும் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவருமே அரை சதம் அடித்தனர். கடைசி ஓவரின் 5வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த தோனி அரை சதம் கடந்தார்.

கடைசி ஓவரில் மட்டும் தோனி 2 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசினார். மனீஷ் பாண்டே 79 ரன்களும், தோனி 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுரேஷ் ரெய்னா தன் பங்குக்கு 30 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் டாலா 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 189 ரன்கள் இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. ஹென்ரிக்ஸ், ஸ்மட்ஸ் பேட்டிங்கை தொடங்கினர். உனத்கட்டின் வேகத்தில் ஸ்மட்ஸ் 2 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூரின் வேகத்தில் ஹென்ரிக்ஸ் 26 ரன்களில் வெளியேறினார். அதன்பின் கேப்டன் டுமினியும், விக்கெட் கீப்பர் கிளாஸனும் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர்.

விளாசினார் கிளாஸன்:

அரை சதம் அடித்ததும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கிளாஸன்.

குறிப்பாக கிளாஸன், யுஸ்வேந்திர சாஹலின் அடித்து நொறுக்கித் தள்ளினார். அபாரமாக விளையாடிய அவர் 22 பந்துகளில் அரை சதம் கடந்தார். அவர் 69 ரன்கள் எடுத்திருந்தபோது உனத்கட் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் விளாசினார்.

அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர் 5 ரன்களில் வெளியேறினாலும், விக்கெட் வீழ்த்தும் அளவுக்கு இந்திய பந்துவீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 18.4 ஓவர்களில் அந்த அணி 189 ரன்கள் குவித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் டுமினி 64 ரன்களுடனும், பெஹார்டீன் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் 1 – 1 கணக்கில் சமநிலையில் உள்ளன. மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி வரும் 24ம் தேதி கேப்டவுனில் நடக்கிறது.

 

எடுபடாத சுழல்:

இந்திய சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சு இந்த போட்டியில் கொஞ்சம்கூட எடுபடவில்லை. அவருடைய பந்து வீச்சு வரும்போதெல்லாம் தென்னாப்பிரிக்கா வீரர் கிளாஸன் அடித்து நொறுக்கினார். சாஹல், 4 ஓவர்கள் பந்து வீசியும் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. 64 ரன்களை வாரி வழங்கினார். டி-20 போட்டியில் இந்திய சுழல் பந்து வீச்சாளரின் மோசமான பந்து வீச்சாக சாஹலின் இன்றைய பந்து வீச்சு அமைந்தது.

அவருக்கு முன்னதாக இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் ஜோகீந்தர் ஷர்மா 57 ரன்களும் (இங்கிலாந்துக்கு எதிராக, 2007), யூசுப் பதான் 54 ரன்களும் (ஸ்ரீலங்காவுக்கு எதிராக, 2009), முஹமது சிராஜ் 53 ரன்களும் (நியூஸீலாந்துக்கு எதிராக, 2017) விட்டுக்கொடுத்துள்ளனர்.

 

ரோஹித் ஷர்மா சொதப்பல்:

 

இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே பெரிய அளவில் சோபிக்கவில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் முடிவடையும் நிலையில், டெஸ்ட், ஒருநாள், டி-20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா பெரிய அளவில் சோபிக்கவில்லை. இன்றைய போட்டியிலும் கூட அவர் ‘டக்’ அவுட் ஆனார். ஒரு நாள் போட்டியில் மட்டும் ஒரே ஒரு சதம் அடித்தது மட்டும்தான் தென்னாப்பிரிக்கா தொடரில் அவருடைய பெரிய பங்களிப்பு.

கிரிக்கெட்டில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதுமின்றி அவுட் ஆவதை ‘கோல்டன் டக்’ என்பார்கள். அத்தகைய மோசமான சாதனைக்கு ரோஹித் ஷர்மா இன்று சொந்தக்காரரானார். இதற்கு முன்பாக, முரளி விஜய், ரஹானே, லோகேஷ் ராகுல் ஆகிய இந்திய வீரர்களும் தலா ஒருமுறை இதுபோல் ‘கோல்டன் டக் அவுட்’ ஆகியுள்ளனர்.

 

மனீஷ் – தோனி சாதனை:

 

இந்திய அணியின் மனீஷ் பாண்டே மற்றும் தோனி ஆகியோர் 5வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் குவித்தனர். சர்வதேச டி-20 போட்டியில் இந்திய இணை எடுத்த இரண்டாவது அதிகபட்ச ரன்கள் இதுவாகும். யுவராஜ் சிங்கும், தோனியும் இணைந்து 2013ல் ராஜ்கோட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 102 ரன்கள் குவித்ததே முதலிடத்தில் உள்ளது.

 

விக்கெட் கீப்பர்கள் அபாரம்:

 

இரண்டாவது டி-20 போட்டியில் மற்றுமொரு ஒற்றுமை உள்ளது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார். அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் கிளாஸன் 69 ரன்கள் குவித்தார். இரு அணிகளின் விக்கெட் கீப்பர்களும் ஒரே போட்டியில் அரை சதம் அடித்திருப்பது உலகளவில் இது 5வது நிகழ்வாகும்.