Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலத்தில் கோயிலில் ரகசிய அறை அமைத்து லஞ்சம் வசூல்: இந்துசமய அறநிலைய அதிகாரி சிக்கினார்!

 

சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் ரகசிய அறை அமைத்து ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரை கையும்களவுமாக காவல்துறையினர் பிடித்தனர்.

 

சேலத்தில் மிகவும் பழமையான சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது.
இந்தக் கோயில் குடமுழுக்குப் பணிக்காக தற்போது மராமத்துப்பணிகள்,
திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற பணிகளை
இந்துசமய அறநிலையத்துறை ஒப்பந்ததாரர்கள்
மூலம் செய்து வருகிறது.

 

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி
ஒப்பந்ததாரர்களிடம் இனாம் வழங்குமாறு
இந்துசமய அறநிலைய உதவி ஆணையர்
தமிழரசு கேட்டுள்ளார்.
அவ்வாறு இனாம் கொடுத்தால்தான்,
இனி வரும் காலத்திலும்
கோயில் மராமத்துப்பணிகள்
ஒப்பந்தம் வழங்கப்படும்
என்றும் மிரட்டி வந்துள்ளார்.

தமிழரசு

லஞ்சப்பணத்தை, சேலம் தேர்வீதியில் உள்ள
ராஜகணபதி கோயிலை ஒட்டியுள்ள ரகசிய
அறையில் வந்து கொடுக்கும்படியும் கூறியுள்ளார்.

 

இதற்கு சில ஒப்பந்ததாரர்கள் உடன்பட்டாலும்,
இதை விரும்பாத சிலர் உதவி ஆணையரின்
லஞ்ச வேட்டை குறித்து சேலம் மண்டல
லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு
புகார் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து, உதவி ஆணையரை
கையும் களவுமாகப் பிடிக்க திட்டமிட்ட
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்,
செவ்வாய்க்கிழமை (15.1.2019) காலை
ராஜகணபதி கோயில் வாசல் அருகே சாதாரண
பக்தர்களைப்போல் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒப்பந்ததாரர்கள் சிலர், ராஜகணபதி கோயிலை
ஒட்டியுள்ள அலங்கார பொருள் வைக்கும அறைக்குச் சென்றனர்.
அவர்கள் காகித உறைகளில் பணத்தை வைத்துவிட்டு,
அதுகுறித்து உதவி ஆணையரின்
உதவியாளருக்கு தகவல் கொடுத்தனர்.

 

உதவியாளரிடம் இருந்து சமிக்ஞை கிடைத்தது,
அந்த அலுவலக அறைக்குள் நுழைந்த உதவி ஆணையர் தமிழரசு,
லஞ்சப்பணத்தை எடுக்க முயன்றார்.
அப்போது ஏற்கனவே அங்கு கண்காணித்துக் கொண்டிருந்த
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர்
அவரை கையும்களவுமாக மடக்கிப்பிடித்தனர்.

 

விசாரணையில், ஒப்பந்ததாரர்கள்
உதவி ஆணையர் மற்றும் கோயில் கணக்காளர்
ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு காகித உறைகளில்
லஞ்சப்பணத்தை கொடுத்திருப்பது தெரிய வந்தது.
அவரிடம் இருந்து மொத்தம் 70 ஆயிரம் ரூபாய்
லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

ராஜகணபதி கோயில் வளாகத்தில்
உதவி ஆணையருக்கென தனி அலுவலகம் உள்ளது.
ஆனாலும், உதவி ஆணையர் தமிழரசு
லஞ்சம் பெறுவது யாருக்குத் தெரியக்கூடாது
என்பதற்காக கோயிலை ஒட்டியுள்ள சிறிய அறையை
இதற்காக ரகசியமாக பயன்படுத்தி வந்திருப்பதும்,
அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும்
திட்டமிட்டே அகற்றியிருப்பதும் தெரிய வந்தது.

 

இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் தமிழரசு,
ராஜகணபதி கோயில் கணக்காளர் வன்னிய திலகம்
ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு
காவல்துறையினர் வழக்குப்பதிவு
செய்து விசாரித்து வருகின்றனர்.