Monday, December 11மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கருப்பு வெள்ளை: பஞ்சாயத்து டிவி எனும் சமத்துவ போராளி!

-பனை ஓலை-

 

நாங்களும் ஒரு சாலிடேர்
(கருப்பு-வெள்ளை) டி.வி.
வைத்திருந்தோம்.
1992-ல் வாங்கினோம்.
சேலத்தில் இருந்த எனது
மூத்த அண்ணன்,
அந்தப் பழைய சாலிடேர்
டி.வி.,யை சொந்த ஊரில்
பெற்றோருடன் வசித்து
வரும் எங்களிடம்
கொடுத்துவிட்டு,
அவர் புதிதாக ஓனிடா
கலர் டி.வி. வாங்கினார்.

கொம்பும் வாலும் முளைத்த
மொட்டை மனிதனின்
விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு,
அந்த டி.வி.யை அண்ணன்
வாங்கினார். அப்போதே
அதன் விலை ரூ.12 ஆயிரத்துக்கு
மேல் என ‘நினைக்கிறேன்’.
‘போர்ட்டபிள்’ அளவுக்கும்
சற்று பெரிய திரை கொண்டது.

 

நாங்கள் டி.வி. வாங்குவதற்கு
முன்பு வரை, ஊர் மாரியம்மன்
கோயிலில் இருந்த பஞ்சாயத்து
டி.வி.தான் ஒட்டுமொத்த
கிராமத்துக்கும் ஒரே சின்னத்திரை.
சிறிய அறைக்குள் ஒரு கிராமமே,
ஒருவர் மூச்சுக் காற்றை
ஒருவர் சுவாசித்துக் கொண்டு
நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தோம்.
முதன்முதலில், டிவியில்
‘கரகாட்டக்காரன்’ ஒளிபரப்பிய போது,
கோயிலின் வெளிப்பிரகாரம் வரை
கூட்டம் கட்டுக்கடங்காமல்
முண்டியடிக்கும்.
‘இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே
முதன்முதலாக’ என்ற
எந்தவித அலட்டலும்
இல்லாமலேயே,
அந்தப்படம் வெளியான
குறுகிய காலத்திலேயே
தூர்தர்ஷனில்
ஒளிப்பரப்பியதெல்லாம்
கடந்த கால வரலாறு.

 

இத்தனைக்கும், டிவியில்
ஒளிபரப்புவதற்கு முன்பே
எங்கள் ஊரின் மொத்த
ஜனங்களும், அந்தப் படத்தை
கிருஷ்ணாலயா திரையரங்கில்
பலமுறை பார்த்தவர்கள்தான்.
வியப்பென்னவெனில்,
ஒவ்வொரு முறை பார்க்கும்போதும்,
கிளைமாக்ஸ் காட்சியில் வரும்,
‘மாரியம்மா… மாரியம்மா…’
பாடலின்போது பெண்கள்
சாமி வந்து ஆடுவார்கள்.

 

தினமும் இரவு 8.30
மணிக்கு தூர்தர்ஷன் செய்திகள்.
செய்தி போடும் முன்பாக
வரும் ‘சிதார்’ இசை இருக்கிறதே…
அட அட…அட…..அதற்கு
இணையான இசை,
இப்போது எந்த ஒரு
செய்தி சானல் செய்திகளுக்கும்
வருவதில்லை. இப்போதும்
தூர்தர்ஷன் செய்திகளுக்கு
அதே இசைதான்.

 

செய்திகள் கேட்பதில்
எனக்கு அப்போதும் ஈர்ப்பு உண்டு.
பிரதமர் நரசிம்மராவைப் பற்றி
அடிக்கடி செய்தி வாசிப்பார்கள்.
அதைவிட என் மனம் கவர்ந்த
செய்தி வாசிப்பாளர் ஷோபனா
ரவியின் முகத்தைக் காணவே
ஆர்வத்துடன் டி.வி. பெட்டி முன்
காத்திருப்பேன். இப்போது வரை
ஆகச்சிறந்த செய்தி வாசிப்பாளர்
அவர்தான் என்பது
என் அபிப்ராயம்.

 

அதன்பின், நிர்மலா ராமன்,
சந்தியா ராஜகோபால்,
ஃபாத்திமா பாபு, ஆண் செய்தி
வாசிப்பாளர்களில் வரதராஜன்,
ஈரோடு தமிழன்பன்,
கட்டைக்குரல் ஸ்ரீதர், நிஜந்தன்,
ஸ்ரீனிவாஸ் ஆகியோரும்
பிடித்தமானவர்களே.

 

அப்போதும் மின்வெட்டு
இருக்கும். செவ்வாய்க்கிழமை
நாடகமோ, ஞாயிற்றுக்கிழமை
சினிமாவோ ஓடும்போது
மின் தடை ஏற்பட்டால்,
அவ்வளவுதான் ஒட்டுமொத்த
டி.வி. ரசிகர்கள் முகமும்
இழவு வீட்டில் இருப்பதுபோல்
சோகம் கவ்விக்கொள்ளும்.

 

எல்லோருமே, சீக்கிரம்
‘கரண்ட்’ வந்துவிட வேண்டும்
என்று கடவுளை
வேண்டிக்கொள்வோம்.
அதுவும்கூட ஒருவகையில்
சர்வமத பிரார்த்தனைதான்.
இப்போதுபோல் நான் அப்போது
நாத்திகம் பேச மாட்டேன்
என்பதால் நானும் மனதுக்குள்
கடவுளிடம், ”சாமியே!
சீக்கிரம் கரண்ட் வந்துடணும்”
என்று வேண்டிக்கொள்வேன்.

 

எல்லா சாதிக்காரர்களையும்
தோளுடன் தோள் உரசி,
ஒரே அறைக்குள் ஒன்றாக
அமர்த்தியதில் எங்கள் ஊர்
மாரியம்மனைக் காட்டிலும்,
ஊர் பஞ்சாயத்து டி.வி.க்கே
அதிக சக்தி இருந்தது,
அந்த நாட்களில்.

 

கோயிலின் கருவறைக்கு
முன்பு ஒரு நீளமான அறை
இருக்கும். அந்த அறையில்தான்
பஞ்சாயத்து டிவியை வைப்பார்கள்.
50 பேர் வரை அமரலாம்.
ஆனாலும் படம் பார்க்கும்
மும்முரத்தில் நூறு பேர் வரை
அடைந்து கிடப்போம்.
குளித்தும் குளிக்காமலும்,
பல் தேய்த்தும் தேய்க்காமலும்
என பலவித முகங்கள்.
அதையெல்லாம்கூட
சகித்துக் கொள்ளலாம்.
ஆனால், மனிதனின்
‘கார்பன் டை ஆக்ஸைடு’
இருக்கிறதே… அது ஒரு
பேரழிவு ஆயுதம்!.

 

அதுவும், சிவ ராத்திரிக்கு மறுநாள், பள்ளிக்கூடத்தில்கூட எவன் அருகிலும் உட்கார முடியாது. அருகில் என்ன… வகுப்பிலேயே கூட. ஒவ்வொருத்தனிடம் இருந்தும் வெளியேறும் அந்த அபான வாயு இருக்கிறதே அது, ‘ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்’ என சிங்கம் சூர்யா சொல்வதைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது. ஆளையே தூக்கும். தீயினால் சுட்டப்புண் உள்ளாறும். ஆனால் அபான வாயுவால் சுட்ட வடு இன்னும் என் மனதில் ஆறவுமில்லை; அகலவுமில்லை.

 

முந்தின நாள் தின்ற வேக வைத்த மொச்சைக்காய், பயத்தங்காய்களின் விளைவு அது. வாயு கசிவுக்குக் காரணமானவர்கள் மீது பொருளாதார தடையே விதிக்கலாம். இதில் விநோதம் என்னவென்றால் ‘கசிவுக்கு’க் காரணமானவர்களே, ஒன்றும் தெரியாதவர்கள்போல் மற்றவர்கள் மீது குற்றம் சொல்லி தீராப்பழியை ஏற்படுத்தி விடுவார்கள். ‘ம்… கொலப்பழியக் கூட ஏத்துக்கலாம்… ஆனா குசுப்பழிய ஏத்துக்க முடியாது’ என அப்போது வீம்பாகச் சொல்வோரும் உண்டு.

 

எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போதுகூட குதிரை வாகனம், குறிப்பிட்ட சில பகுதிக்குள் ஊர்வலம் செல்வதில் அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்பும். ஆனால் ஊர் பஞ்சாயத்து டி.வி. மட்டுமே எங்கள் கிராமத்திற்குள் சமத்துவத்தை ஏற்படுத்தியது. சட்டை போடாதவர்கள் கூட மற்றவர்களுடன் சரி சமமாக அமர்ந்து டி.வி. பார்ப்பார்கள்.

 

பஞ்சாயத்து டி.வி. வருவதற்குமுன், சேப்பாங்கு தாத்தா எனும் பெரிய நிலக்கிழார் ஒருவர் வீட்டிலும், புட்டம்மா கடையிலும், என் பள்ளித் தோழிகள் இருவர் வீட்டிலும் மட்டுமே டி.வி. இருந்தது. தோழிகளில் ஒருவள் வீட்டில் மட்டும் அந்தத்தெரு ஜனங்களும் பார்க்க வசதியாக டி.வி.யை வாசல் வரை இழுத்து வைத்திருப்பார்கள்.

 

ஆனால் அவள், ‘தண்டிக்கப்பட்ட’ சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதால், அவள் இருக்கும் தெருவுக்குள் செல்ல அப்போது எனக்கும் கட்டுப்பாடுகள் இருந்தன. எங்கள் ஊரில் சில குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் தெருக்களைக்கூட அந்த சமூகத்தினரின் பெயரிலேயே அப்போது அழைப்பார்கள். இப்போது எப்படி எனத் தெரியவில்லை.

 

உறை கிணறு பக்கமுள்ள இன்னொரு தோழியின் வீட்டிலோ கதவை திறந்தும் திறக்காமலும் வைத்திருப்பார்கள். டிவி காட்சிகளை பார்த்து அவர்களே சிரித்துக் கொள்வார்கள்; அழுது கொள்வார்கள். மூன்றாம் நபர்கள் வீட்டிற்குள் நுழைவதை அவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை.

 

அதனால் நான் டி.வி. பார்க்க இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று, புட்டம்மா டிபன் கடை. ஆரம்ப காலத்தில் குழாய் புட்டு வியாபாரம் செய்ததால் காலப்போக்கில் அதுவே அவருக்கு காரணப்பெயராக அமைந்து விட்டது. புட்டம்மாவின் பெயர் ரகசியம் அதுதான். எங்கள் ஊரில் சிறிய அளவில் டிபன் கடையும் வைத்திருந்தார். வீடும் கடையும் ஒன்றுதான். டி.வி. இருந்தால் வியாபாரம் பெருகும் என கணக்குப் போட்டே புட்டம்மா, கடையில் டி.வி. பெட்டியை வாங்கி வைத்திருந்தார்.

 

டி.வி. பார்க்க புட்டம்மா கடைக்குச் சென்றால் நாலணாவுக்காவது ஏதாவது போணி பண்ணியாக வேண்டும் என்பது ‘இன்பில்ட்’ செய்தி. டி.வி.க்காக புட்டம்மா கடைக்குப் ‘போகும்படி’ மனசு சொல்லும். ஆனால் ‘வரும்படி?’. பிறகென்ன, அந்த நிலக்கிழார் வீடுதான் ஒரே வாய்ப்பு.

 

அவருடைய வீட்டில் இருந்த டிவியும் கருப்பு-வெள்ளைதான். அப்போது வெள்ளிக் கிழமைகளில் இரவு ஒளியும்-ஒலியும் பார்க்க அவருடைய வீட்டிற்குதான் செல்வேன். அந்த அய்யாவின் வயதான மனைவி என்னை உற்றுப் பார்த்துவிட்டு, ‘யாரூ…… இந்த டி.வி. பாக்கறதுக்கோசரம் தெக்கால இருந்து வடக்கால வரைக்கும் வந்துட்டியா…? பாரு….பாரு….’ என ராகம் பாடுவார்.

 

கூட்டம் முண்டியடிக்கும் நாள்களில் தலைக்கு நாலணா, எட்டணா வசூல் பார்த்து விடுவார்கள். கேட்டால், ‘ம்ம்……கரண்டு பில்லு ஙொப்பனா கட்டுவான்…. குடுத்தா குடு… இல்லேனா எந்திரிச்சி ஓடுங்கடா…..’ என்பார் அந்த நிலக்கிழாரின் மனைவி.

 

கேப்பிடலிஸம் என்றால் என்னவென்று தெரியாமலேயே புட்டம்மாவும், சேப்பாங்கு தாத்தாவின் மனைவியும் அதை நடைமுறைப்படுத்தினார்கள். நிலக்கிழாரின் வீட்டில் டிவி திரையைப் பாதுகாக்க, ‘பிரவுன்’ நிற மைக்கா பலகையால் சிறிய கதவு செய்து மூடி இருப்பார்கள்.

 

அப்போது எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் கர்ப்பக்கிரகம் கூட திறந்துதான் இருந்தது.

 

– எஸ்ரா, சேலம்.
தொடர்புக்கு: selaya80@gmail.com

(ஜூன் 2017, ‘புதிய அகராதி’ திங்கள் இதழில் இருந்து)