Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு!

‘மிஸ்டு கால்’ மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்த திட்டமிட்ட பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், அக்கட்சியின் உறுப்பினர் படிவங்கள் காகித தட்டுகளாக உருமாற்றம் பெற்றுள்ளது, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் வலுவாக காலூன்றி விடலாம் என்ற எதிர்பார்ப்பில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கைக்கு இலக்கு நிர்ணயித்து, ‘மிஸ்டு கால்’ திட்டத்தை அறிவித்தது.

அதாவது, மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அவர்கள் பாஜகவின் உறுப்பினராக வீடு தேடி வந்து சேர்த்துக் கொள்ளப்ப டுவர். இதற்காக அச்சிடப்பட்ட புதிய உறுப்பினர் படிவங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்சி நிர்வாகிளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திமுகவில் இருந்த நடிகர் நெப்போலியன் கூட, ‘மிஸ்டு கால்’ கொடுத்த பின்னர்தான் அக்கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டதாகக் கூறினார். அந்தளவுக்கு காமெடிகளும் அக்கட்சியில் அரங்கேறின.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை புதிய உறுப்பினர் சேர்க்கையில் பாஜகவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், கோவை காந்திபுரத்தில் உள்ள டீக்கடைகள், பலகாரக் கடைகளில் பாஜக உறுப்பினர் படிவத்தில் தயாரிக்கப்பட்ட காகித தட்டுகள் விற்பனைக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஒருவர் பலகாரம் வாங்க சென்றபோது, அவருக்கு ஒரு காகித தட்டில் பலகாரங்களை வைத்துக் கொடுத்துள்ளனர். அந்த காகித தட்டில் பாஜக உறுப்பினர் படிவம் 2015-2020 என்று அச்சிடப்பட்டு இருந்தது. அதில் உறுப்பினர் பெயர், வயது, முகவரி, ஊர், வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண் போன்ற விவரங்கள் அச்சிடப்பட்டு இருந்தது.

பாஜகவுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் எடுத்துக் காட்டுவதாக சமூகவலைத்தளவாசிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பாஜக உறுப்பினர் படிவம், காகித தட்டு தயாரிக்காவாவது பயன்படுகிறதே என்றும் கேலி செய்துள்ளனர்.