Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

ஆத்தூர் ‘அம்மன்’ கொடூர கொலை; வாலிபருக்கு தூக்கு தண்டனை!

ஆத்தூர் அருகே, பட்டியலின சிறுமியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப். 26) தீர்ப்பு அளித்துள்ளது.

சிறுமி ராஜலட்சுமி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி சின்னப்பொண்ணு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இரண்டாவது மகள் ராஜலட்சுமி (13). அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

 

இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில் கார்த்தி என்கிற தினேஷ்குமார் (25) என்பவரின் வீடு உள்ளது. இவருடைய மனைவி சாரதா. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

 

கொடூர கொலை:

 

தினேஷ்குமார், கதிர் அறுக்கும் வண்டியில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு அக். 22ம் தேதி திங்கள்கிழமை இரவு, 7.30 மணியளவில், தன் வீட்டில் இருந்து கொடுவாளுடன் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு விறுவிறுவென வேகமாகச் சென்றுள்ளார். அங்கு சிறுமியும், அவளுடைய தாயாரும் பூக்கட்டிக் கொண்டிருந்தனர்.

 

கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியை கழுத்தில் வெட்டினார். தடுக்கப் பாய்ந்த தாயாரை தள்ளிவிட்டதில், அவர் நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்தார். சிறுமியை அவளுடைய வீட்டு வாசல் வரை தரதரவென இழுத்து வந்த வாலிபர், கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார்.

தினேஷ்குமார்

தலையை தனியாக துண்டித்து கையில் எடுத்துச்சென்ற அவர், நிகழ்விடத்தில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் தளவாய்ப்பட்டி & ஈச்சம்பட்டி மண் சாலையில் வீசிவிட்டு, தன் வீட்டுக்குள் சென்று பதுங்கிக் கொண்டார்.

 

ஆக்ரோஷமாக இருந்த தினேஷ், செல்லும் வழியில் வீடு அருகே இருந்த ஒரு சிறு நுணா மரத்தையும் அடியோடு வெட்டி வீழ்த்தி இருக்கிறார். பின்னர், அருகில் இருந்த முள்புதருக்குள் கொலைக்குப் பயன்படுத்திய கொடுவாளை வீசியெறிந்துள்ளார்.

 

சம்பவத்தின்போது அவர் காக்கி நிற டிரவுசர் மட்டுமே அணிந்திருந்தார். சட்டை உள்ளிட்ட மேலாடை எதுவும் அணியவில்லை. உடல் எங்கும் ரத்தம் தெறித்து இருந்ததையும், சிறுமியின் தாயாரின் அலறல் சத்தத்தையும் கேட்டு பதறிய சாரதாவும், தினேஷ்குமாரின் தம்பி சசிகுமாரும் நிகழ்விடத்திற்கு ஓடிச்சென்று பார்த்தனர். வீட்டு வாசலில் சிறுமியின் முண்டம் மட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

போலீசில் ஒப்படைத்த மனைவி:

 

கொலைக்குப் பின்னர் வீட்டுக்குள் பதுங்கிய தினேஷ்குமார், ஏதோ பித்து பிடித்தவர் போல வீட்டின் விட்டத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். மனைவியும் தம்பியும் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.

 

இதையடுத்து சாராதாவும், சசிகுமாரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தினேஷ்குமாரை உட்கார வைத்து நிகழ்வு நாளன்று இரவு 8.30 மணியளவில் ஆத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

மனநலம் பாதிப்பு?:

 

இரண்டு நாள்கள் காவல்நிலையத்தில் வைத்து, ‘எல்லா வகையிலும்’ விசாரித்துப் பார்த்தும், கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. விசாரணையின்போது தினேஷ்குமார், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தனக்குத்தானே ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தார் என்றது காவல்துறை தரப்பு. இதற்கிடையே, கொலைக்குப் பயன்படுத்திய கொடுவாளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

கொலையை நேரில் பார்த்ததற்கான சாட்சிகள் இருந்ததாலும், முதல் தகவலின் பேரிலும், கொலையுண்ட சிறுமி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலும், காவல்துறையினர் கொலை (இதச பிரிவு 302), ஆபாசமாக பேசுதல் (இதச பிரிவு 294 பி) மற்றும் சாதி வன்கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 25.10.2018ம் தேதி, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் தினேஷ்குமாரை அடைத்தனர்.

 

‘அம்மன்’ ராஜலட்சுமி:

 

தொடர் விசாரணையில், மேலும் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. சம்பவம் நடந்ததற்கு மறுநாள் சிறுமியின் பள்ளியில் ஆண்டு விழா நடக்க இருந்தது. அதில், மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் கொடுத்திருந்த ராஜலட்சுமி, மாரியம்மன் சாமி வேடம் போட இருப்பதாக கூறி வந்திருக்கிறாள். அதற்கு முந்தைய ஆண்டும் அவள் மாரியம்மன் சாமி வேடம் போட்டிருந்ததாலும், அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததாலும் மீண்டும் அதே வேடம் போட முடிவு செய்திருந்தாளாம்.

 

இதற்காக, சம்பவத்தன்று மாலை தினேஷ்குமாரின் தோட்டத்தில் இருந்து மல்லிகைப் பூக்களை பறித்து வந்திருக்கிறாள். தனது தாயாருடன் சேர்ந்து பூக்கட்டும் வேலையில் ஈடுபட்டு இருந்திருக்கிறாள். அப்போது பூக்கட்டுவதற்கான நூல் கண்டு இல்லாததால், அதை வாங்கி வருவதற்காக தினேஷ்குமாரின் மனைவி சாரதாவிடம் கேட்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருக்கிறாள். அப்போது தினேஷ்குமார், சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், இதுகுறித்து தன் தந்தையிடம் சொல்லி விடுவேன் என்று சிறுமி சொன்னதாகவும் தெரிகிறது.

 

இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் மானம் போய் விடும் என்பதால், ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், சிறுமியை வீடு புகுந்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

 

இதையடுத்து கொலையாளி மீதான எப்.ஐ.ஆர். திருத்தம் செய்யப்பட்டு, அவன் மீது போக்சோ வழக்கும் பாய்ந்தது. கொடூரமான கொலை குற்றத்தில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

 

இந்த வழக்கின் விசாரணை, தொடக்கத்தில் சேலம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், சேலம் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வந்தது.

 

பரபரப்பு தீர்ப்பு:

 

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தினேஷ்குமார் குற்றவாளி என்று திங்கள்கிழமை (ஏப். 25) நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார். அவருக்கு செவ்வாய்க்கிழமை (ஏப். 26) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி, தினேஷ்குமாருக்கு கொலை குற்றத்திற்கு தூக்கு தண்டனையும், சாதி வன்கொடுமை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

 

சிறுமி தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ஆசைத்தம்பி கூறுகையில், ”இந்த தீர்ப்பை முழுமனதாக ஏற்கிறோம். பட்டியலினத்தவர்கள் மீது நடக்கும் வன்கொடுமை சம்பவங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது,” என்றார்.

 

இந்த தீர்ப்பைக் கேட்டு தினேஷ்குமாரும், அவருடைய குடும்பத்தினரும் நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

 

பொட்ட புள்ளைங்க சுதந்திரமா நடக்கணும்…:

சிறுமியின் பெற்றோர்

இந்நிலையில் சிறுமி ராஜலட்சுமியை பறிகொடுத்த அவளுடைய பெற்றோர், ”இனிமேலும் எங்களுக்கு எங்கள் மகள் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கின்றோம். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது,” என்றனர்.

 

ராஜலட்சுமி கொலையுண்ட சில நாள்கள் கழித்து, சிறுமியின் பெற்றோரை அவர்களுடைய வீட்டில் சந்தித்துப் பேசினோம். சிறுமியின் முண்டம் கிடந்த வீட்டு வாசல் பகுதியில், செங்கற்களை வரிசையாக அடுக்கி வைத்து, மலர்களை தூவி தெய்வமாக வழிபட்டனர்.

 

அப்போது அவர்கள் கூறுகையில், ”பொட்ட புள்ளைங்க நடு தடத்துல சுதந்திரமாக நடக்கணும். அதுக்கு தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டன கிடைக்கணும்,” என்றனர். தற்போது அவர்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தண்டனையின் முழு விவரம்:

 

இந்த வழக்கில் நீதிபதி முருகானந்தம் வழங்கிய தண்டனையின் முழு விவரம் வருமாறு:

 

கொலை செய்த குற்றத்திற்காக (இதச பிரிவு 302) மரண தண்டனை விதித்தும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அத்தொகையை செலுத்தத் தவறும்பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சாதாரண சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு அளித்தார்.

 

குற்றவாளி தினேஷ்குமாருக்கு எதிரான மரண தண்டனையை நிறைவேற்றும் வகையில், அவருடைய கழுத்தில் குரல்வளையில் தூக்கு மாட்டி தொங்க விட்டு இறக்கும் வரை தூக்கிலிட வேண்டுமென்று இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

 

மேலும், இதச 450வது பிரிவின்படி, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாதம் சாதாரண சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

 

இதச 294 (பி)வது பிரிவின் கீழான குற்றத்திற்கு 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறும்பட்சத்தில் ஒரு மாதம் சாதாரண சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.

 

போக்சோ சட்டத்தின் கீழான குற்றத்திற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறும்பட்சத்தில் மேலும் 3 மாதம் சாதாரண சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.

 

கொலை மற்றும் சாதி வன்கொடுமை குற்றத்திற்கு தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதம் சாதாரண சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்த சிறை தண்டனையும் தினேஷ்குமார் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி முருகானந்தம் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

 

முதல் தூக்கு:

 

சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கு ஆரம்பத்தில் சேலம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2019ல் போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்கென சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டது. அதையடுத்து, இந்த வழக்கும் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நீதிமன்றம் முதன்முதலாக ராஜலட்சுமி வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

– பேனாக்காரன்

Leave a Reply