Sunday, September 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அம்மா ஆனார் அசின்! ; பெண் குழந்தை பிறந்தது

தமிழில், ‘உள்ளம் கேட்குதே’ படத்தின் மூலம் அறிமுகமான அசின், சூர்யாவுடன் நடித்த ‘கஜினி’ படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். நடிகர் விஜய்யுடன் ‘போக்கிரி’, ‘சிவகாசி’, கமல்ஹாசனுடன் ‘தசாவதாரம்’, விக்ரமுடன் ‘மஜா’, அஜீத்துடன் ‘ஆழ்வார்’ என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து, நம்பர்-1 இடத்தில் இருந்தார்.

கோலிவுட்டில் பெரும் வெற்றி பெற்ற ‘கஜினி’ படம், ஹிந்தியில் ஆமீர்கான் நடிப்பில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. கஜினியில் அசின் நடிப்பு பாராட்டும்படி இருந்ததால், ஹிந்தி மறுபதிப்பிலும் ஹீரோயின் வேடத்தில் அவரே நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆமீர்கான், இயக்குநர் முருகதாஸ் உள்பட அனைவருமே எதிர்பார்த்ததால், ஹிந்தியிலும் அவரே நடித்தார்.

பாலிவுட்டிலும் கஜினி படம் அமோகமாக வெற்றி பெற்றதை அடுத்து, ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்ப தன் உடல் எடையை மேலும் குறைத்தார். தொடர்ந்து சல்மான்கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில், மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவன அதிபர் ராகுப்ஷர்மாவுடன் காதல் வயப்பட்டார்.

கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அசினுக்கும், ராகுல்ஷர்மாவுக்கும் மும்பையில் திருமணம் நடந்தது. அதன்பின் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்தார். முழுநேர குடும்பத் தலைவியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று (அக். 24, 2017) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்த பாலிவுட் நட்சத்திரங்கள் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் அசின் பெயரில் தனி ஹேஷ்டேக் செய்தும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நேற்று இரவே நேரில் சென்று குழந்தையை தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”குட்டி தேவதையை பெற்றெடுத்த நண்பர்கள் அசினுக்கும், ராகுல் ஷர்மாவுக்கும் வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்

ராகுல் ஷர்மா டுவிட்டரில், ”கடந்த ஒன்பது மாதங்களாக நானும், மனைவி அசினும் இந்த தருணத்திற்காக ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்புடனும், குழந்தையைக் காணும் உற்சாகத்துடனும் கழித்தோம். இப்போது அழகான குட்டி தேவதை பிறந்திருக்கிறாள். வாழ்த்துச் சொல்லிய, எங்கள் பயணத்தில் உறுதுணையாக இருந்து வரும் அனைவருக்கும் நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.

அசின் ரசிகர்கள் சிலர், பெண் குழந்தைக்கு பெயர் சூட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். ராகுல் ஷர்மா, அசின் ஆகியோரின் பெயரை சுருக்கி, பெண் குழந்தைக்கு ‘ரசின்’ (RAhul+aSIN = RASIN) என்று பெயர் சூட்டலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர்.