ஸ்மார்ட் ஃபோன் வரிசையில் இதுவரை இல்லாத வகையில் ‘எட்ஜ் டூ எட்ஜ்’ திரைவசதி மற்றும் முகப்பு (HOME) பட்டனே இல்லாத உயர்தொழில் நுட்ப அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய பிராண்டின் பெயர் ஐபோன் எக்ஸ்.
என்னென்ன வசதிகள்?:
செல்போன் உரிமையாளரை வழக்கமாக அவரின் விரல் ரேகை பதிவு மூலம் சரிபார்க்க முடியும். ஆனால் ஐபோன் எக்ஸ் (iPHONE X) அப்படி அல்ல. விரல் ரேகைக்கு பதிலாக, முக அடையாளத்தை பதிவு செய்யும் வகையில் இதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு, Face ID (ஃபேஸ் ஐடி) என்று பெயரிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். வெளிச்சமே இல்லாத இருட்டுப் பகுதிக்குள் எப்படி இந்த தொழில்நுட்பம் வேலை செய்யும் என்று கவலைப்பட வேண்டாம். கும்மிருட்டுப் பகுதியிலும், 30,000 இன்ஃப்ராரெட் புள்ளிகளை உருவாக்கி, அதன் மூலம் பயனரை சரிபார்க்கும் திறனும் இந்த செல்போனில் உள்ளது. இது பழைய டச் ஐடி தொழில்நுட்பத்தைவிட பாதுகாப்பானது என்கிறது அந்நிறுவனம். உயர்ரக தொழில்நுட்பம் எனில் அதற்குரிய விலையும் அதிகமாகத்தானே இருக்கும்? ஆமாம், ஆப்பிள் சீரீஸ்களிலேயே ஐபோன் எக்ஸ் மாடலுக்குதான் அதிக விலையாம். பத்தாண்டுகள் நிறைவின் நினைவாக இந்த மாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறது, ஆப்பிள்.
விலை என்ன?:
இந்தாண்டு நவம்பர் 3&ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது ஆப்பிள். சரி சரி…இதன் விலை என்ன என்றுதானே கேட்கிறீர்கள்?
64 ஜிபி நினைவகத்திறன் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் விலை 999 அமெரிக்க டாலர். 256 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் 1,149 அமெரிக்க டாலராகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 64 ஜிபி நினைவகம் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் நோட் 8 மாடலின் விலை 930 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்ஃபோனானது அடுத்த தலைமுறைக்கான ஐபோன்களின் ஹார்டுவேர் தொழில்நுட்பத்தின் மாதிரியை உருவாக்கும் ஒரு நீண்டகால முதலீடு” என்று சிசிஎஸ் இன்சைட் என்னும் திறன்பேசி ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஜியோப் பிளாபர் கூறுகிறார்.
ஓஎல்இடி திரை மற்றும் புதிய வடிவமைப்பானது வருங்கால ஐபோன்களின் மாதிரியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
புதிய ஓஎல்இடி திரையுடன் வெளியிடப்பட்டிருக்கும் ஐபோனுக்கு மாறுவதன் மூலம் மிக துல்லியமான கருப்பு மற்றும் சரியான நிறங்களை முன்பிருந்ததைவிட காணலாம் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
ஓஎல்இடி திரை என்பது இதற்குமுன்பே எல்ஜி, சாம்சங் நிறுவனங்களின் செல்போன் தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
“ஆப்பிள் ஐபோன்களின் விலையை எப்போதும் அதிகமாக நிர்ணயிக்கப்படுவதன் பின்னணியில், தேவையை கட்டுப்படுத்துவது மற்றும் தயாரிக்கப்படும் எண்ணிக்கையை சமன் செய்வதற்காகத்தான்,” என்கிறது, ஸ்டிராடஜி அனலிடிக்ஸ் நிறுவனம்.
ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை அடைய வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தும் பங்குதாரர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திறன்பேசிகளின் விலையை அந்நிறுவனம் கூட்டிகொண்டே வந்திருக்கிறது. குறிப்பாக, ஆரம்ப விலையே 1000 மதிப்புள்ள ஒரு திறன்பேசியை உருவாக்குவதற்கான எண்ணத்தில் ஆப்பிள் நிறுவனம் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது.
ஆட்டோமேட்டிக் ஃபேஸ் ஐடி:
ஃபேஸ் ஐடி என்னும் தானியங்கி முக அடையாள முறையை பயன்படுத்தி, ‘ஆப்பிள் பே’-யில் பணம் செலுத்தவோ அல்லது ஸ்மார்ட் ஃபோனை இயக்குவதிலோ இதுவரை பயன்பாட்டாளர்களுக்கு இருந்து வந்த சில சந்தேகங்களுக்கும் ஆப்பிள் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
ஆனால், முந்தைய தொழில்நுட்பமான டச் ஐடியில் 50,000த்தில் ஒரு தடவை உரிமையாளர் அல்லாத எவரோ ஒருவர் திறன்பேசியை திறக்கவியலும் என்றிருந்த நிலையில், இப்புதிய ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தில் அவ்வாய்ப்பு 10 இலட்சத்தில் ஒன்று என்ற பாதுகாப்பான நிலையை எட்டியுள்ளது.
ஆனாலும், ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட் ஃபோனில் ஃபேஸ் ஐடிக்கு மாற்றாக டச் ஐடி இல்லாததும் ஒரு குறைதான் என்றும் சில வல்லுநர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். “இது பயன்பாட்டாளர்களுக்கு மிகக் கடுமையான தடை” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
“ஆப்பிள் நிறுவனம் தானியங்கி முக அங்கீகார அமைப்பு முறையை பாதுகாப்பானது மற்றும் எல்லா நேரங்களிலும் உபயோகிக்க இயலும் என்று உறுதிப்படுத்தும் வரை பயனாளர்கள் ஒருவித தயக்கத்துடனே இருப்பார்கள்” என்றும் கூறுகின்றனர்.
டச் ஐடி (Touch ID) என்பதே இந்த நூற்றாண்டின் உச்சக்கட்ட தொழில்நுட்பம்தான் என்றிருக்கும்போது, அது முடிந்துபோன தொழில்நுட்பகமாக ஆப்பிள் நிறுவனம் கருதுவது ஏன் என்றும் வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த தொழில்நுட்பத்தை இன்னும் செம்மைப்படுத்தலாம் என்பதும் அவர்களின் கருத்தாகும்.
ஐபோன் எக்ஸ்-ன் மேலும் சில சிறப்பு அம்சங்கள்:
5.8 (14.7) அங்குல திரை வசதி. ஒரு அங்குலத்திற்கு 458 பிக்சல்களை கொண்டுள்ளது. இதன்மூலம் ஆப்பிளின் மிகவும் தெளிவான அதிக பிக்சல்களை கொண்ட திறன்பேசியாக இது உருவெடுத்துள்ளது. மேலும், இதற்கு “சூப்பர் ரெட்டினா” என்னும் புதிய பெயரும் அளிக்கப்பட்டுள்ளது.
ஹோம் பட்டன் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் திரையின் அடுத்த நிலைக்கு எப்படி செல்வது என கேட்பீர்கள்தானே? அதற்கு வழக்கம்போல் திரையின் கீழ் பகுதியில் விரலால் தேய்த்தால் போதும். செயலிகளை இயக்கும் அமைப்பும், மற்றும் பக்கவாட்டு பட்டன் ஒன்றை அழுத்துவதன் மூலம் மெய்நிகர் ஆப்ஷன்களுக்கும் செல்ல முடியும்.
போர்ட்ரைட் நிலையை பயன்படுத்தும்போது எடுக்கும் புகைப்படத்தின் பின்புறத்தை மங்க வைக்கும் மற்றும் முன்புற / பின்புற கேமராக்களை பயன்படுத்தும்போது ஒளியளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மிக முக்கியமானது. முந்தைய ஐபோன் 7 திறன்பேசியுடன் ஒப்பிடுகையில், இரண்டு மணிநேரம் கூடுதல் பேட்டரி திறன் கொண்டது இந்த ஐபோன் எக்ஸ்.
எட்ஜ் டு எட்ஜ் மற்றும் ஹோம் பட்டன் கூட இல்லாத ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மாடலை, இணையவாசிகள் நடிகர் வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு கிண்டலும் செய்துள்ளனர். VIDEO இணைப்பு.