Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: கட்சித்தாவல் தடை சட்டப்படி சரியானதா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 அதிமுக எம்எல்ஏக்கள், இன்று (செப். 18) அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபாலின் இந்த நடவடிக்கை, கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி சரிதானா? என்பது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல்களைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளடக்கிய 12 எம்எல்ஏக்கள் ஓரணியாகவும், மற்ற எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னி¦ர்செல்வம் அணியினர் எதிர்த்து வாக்களித்தனர்.

பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரின் தலையீட்டால் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி, ஓரணியாக இணைந்தன. இந்த இணைப்பில் உடன்படாத டிடிவி தினகரன், உடனடியாக ஆளுங்கட்சியில் இருந்து 19 எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்துக்கொண்டு, அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். முதல்வர் இபிஎஸ் மீது நம்பிக்கை இல்லை என்றும், வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தரப்பினர் ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த பரபரப்புக்கிடையே டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த ஜக்கையன் எம்எல்ஏ, திடீரென்று எடப்பாடி பழனிசாமி முகாமிற்கு இடம் மாறினார். இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் பலம் 18 ஆகக் குறைந்தது. அவர்கள் தற்போது கர்நாடகா மாநிலம் குடகில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

திமுக உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகளும் ஆளும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப். 20ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டது.

இந்த பரபரப்பான நிலையில்தான் இன்று சபாநாயகர் தனபால் திடீரென்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான 18 பேரையும் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் படி, தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சபாநாயகரின் இந்த நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சித்தாவல் தடை சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

1985ம் ஆண்டு, ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணையில் 52வது திருத்தத்தின்படி, கட்சித்தாவல் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு எல்எல்ஏ அல்லது எம்பி, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியில் இருந்து விலகினால் அவர்கள் தங்கள் பதவியை இழக்க நேரிடும். அல்லது கட்சியின் கொறடா உத்தரவை மீறி, மக்களவை அல்லது சட்டப்பேரவையில் நடக்கும் வாக்கெடுப்பில் வாக்களித்தாலோ அல்லது புறக்கணித்தாலோ அவர்களின் பதவி பறிபோகும்.

மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தனியாக பிரிந்து சென்றால் அவர்கள் தனி அணியாக தொடரலாம். இந்த சட்டம், 91வது திருத்தத்தின்போது மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி மொத்த உறுப்பினர்களில் இரண்டு பங்கினர் தனியாக பிரிந்து சென்றால், அவர்களின் பதவி பறிபோகாது.

சுயேட்சை உறுப்பினர்கள் வேறு கட்சியில் சேர்ந்தாலும் பதவியை இழக்க நேரிடும். சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரை இந்த சட்டத்தின்கீழ் பதவி இழக்கச் செய்ய முடியாது. அதேபோல் நியமன உறுப்பினர்கள், நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் வேறு கட்சியில் சேரலாம். ஒருவேளை அப்படி எந்தக் கட்சியிலும் சேரவில்லையெனில் அவர் சுயேட்சை உறுப்பினராக கருதப்படுவார்.

மேற்கண்ட விதிகளுக்கு உட்பட்டுதான் எந்த ஒரு எம்எல்ஏ, எம்பியையும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்ய முடியும். ஆனால், தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள கட்சித்தாவல் தடைச்சட்டத்திற்கு பொருந்துமா என்பதே அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர், கட்சித்தாவல் தடை சட்ட விதிகளை மீறி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக படுகொலை: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ”கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவருடைய ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்படி அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேர் புகார் மனு அளித்திருந்தனர். அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசு, இப்போது ஜனநாயக படுகொலை செய்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், அதிலிருந்து அரசை காப்பாற்றிக்கொள்ள குறுக்கு வழியில் இவ்வாறு 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். பேடித்தனமான செயல் இது,” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஏன் செய்தார் சபாநாயகர்?: எதிர்க்கட்சிகள் ஜனநாயக படுகொலை, விதி மீறல் என்று என்னதான் கூப்பாடு போட்டாலும், அரசியலில் பழுத்த அனுபவம் உள்ள சபாநாயகர் தனபால் ஒன்றும் தெரியாமலா செய்திருப்பார்? ஒருவேளை, அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதில் அரசை காப்பாற்றிக்கொள்ளவே இத்தகைய செயலில் இறங்கியிருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு.

இப்போதுள்ள சூழலில், தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தவிர்த்து மொத்தம் 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் அதிமுக மற்றும் கூட்டணியின் பலம் 135 ஆக உள்ளது. இதில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அதிமுகவின் பலம் 117 ஆக உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 108 பேரின் ஆதரவு இருந்தாலே போதும் என்கிறது அரசியல் சாசனம். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வதற்கு ஏதுவாகவே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்களை தகுதியிழப்பு செய்திருக்கிறது எடப்பாடி அரசு.

அடுத்தது என்ன?: சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். விரைவில் அந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை இன்று சந்தித்து பேசி வருகிறார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.