Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கொடநாடு சம்பவத்தில் பின்னால் இருப்பது யார்? எடப்பாடி விளக்கம்!

 

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மர்ம மரணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான புகாரை அவர் இன்று (ஜனவரி 11, 2019) மறுத்துள்ளார். இதில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2017ம் ஆண்டு, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்களை கொள்ளை அடித்துச்சென்றதாக புகார்கள் எழுந்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை என்றும் தகவல்கள் வெளியாகின.

 

இந்த சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி, இன்னொரு ‘பெரிய புள்ளி’ ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக டெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் நேற்று (ஜன. 11) டெல்லியில் பேட்டி அளித்து இருந்தார். இதுகுறித்து தமிழகத்தின் எதிர்க்கட்சி காட்சி ஊடகங்கள் தவிர, பிற முன்னணி காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் செய்தி ஏதும் வெளியிடவில்லை.

 

நேற்று இரவு ஊடகங்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்ட நபர்கள், ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.

 

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

 

டெகல்கா பத்திரிகையின்

முன்னாள் ஆசிரியர்

மேத்யூஸ் சாமுவேல் என்பவர் டெல்லியில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு

ஏப்ரல் மாதம் 24ம் தேதி

கொடநாட்டில் நடந்த

ஒரு சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி

செய்தி வெளியிட்டுள்ளார்.

இது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

துளியும் உண்மை இல்லை.

 

தவறான செய்தி வெளியிட்ட

ஊடகத்தினர் மீது நேற்றே

காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு,

வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

காவல்துறையினர் சட்டப்படி

நடவடிக்கை எடுப்பார்கள்.

 

கொடநாடு எஸ்டேட்டில்

நடந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது

செய்யப்பட்டு உள்ளனர்.

தற்போது

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

கைதானவர்கள்

இதுவரை 22 முறை நீதிமன்றத்திற்கு

சென்று வந்துள்ளனர்.

அப்போதெல்லாம் நீதிமன்றத்தில் சொல்லாதவர்கள்,

இப்போது டெகல்கா வழியாக

சம்பவத்தை திசை திருப்பப் பார்க்கின்றனர்.

 

இந்த வழக்கு,

மீண்டும் பிப்ரவரி 2ம் தேதி

நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.

இந்த சம்பவத்தின் பின்னால் யார் யார் உள்ளனர்

என்பது விரைவில் கண்டறியப்படும்.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள

குற்றவாளிகள் மீது ஏற்கனவே

ஆள்மாறாட்டம், மோசடி, திருட்டு

உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்

பதிவு செய்யப்பட்டு உள்ளன.

போக்சோ சட்டத்திலும்

வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் கூலிப்படை கும்பல்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்சி நிர்வாகிகளிடம் எழுதிய வாங்கிய முக்கிய ஆவணங்களை கொடநாடு எஸ்டேட்டில் வைத்திருந்தார். அதை எடுப்பதற்காகத்தான் கூலிப்படை கும்பல் சென்றதாக டெகல்கா வீடியோவில் சொல்லப்பட்டு உள்ளது.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை, கட்சி நிர்வாகிகளிடம் எந்த ஆவணத்தையும் பெற்றது கிடையாது. களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா, எங்களுடன் குடும்ப உறுப்பினர்போல அன்பாக பழகக்கூடியவர். சாதாரண தொண்டர்களுக்கும் பதவி வழங்கி அழகு பார்க்கக்கூடியவர்.

 

திமுகவினர், எங்கள் மீது ஏதாவது ஒரு வழக்கு போட்டுக்கிட்டே இருக்கின்றனர். ஆரம்பத்தில் ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. பிறகு, தைப்பொங்கல் பரிசுத்தொகுப்பு திட்டத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதை எதிர்த்து திமுக கட்சியைச் சேர்ந்த ஒருவரை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டனர்.

 

ஒருபுறம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லை என்று புகார் கூறுகின்றனர். இன்னொருபுறம், வரும் 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ள உலகத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தடை கேட்டு திமுகவினர் வழக்கு தொடுக்கின்றனர். தொழிற்சாலைகள் வரவில்லை என்பவர்கள், அதை கொண்டு வந்தால் தடுக்கவும் முயற்சி செய்கின்றனர். அதிமுக அரசு எந்த ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை வழக்கு தொடர்ந்து தடுப்பதுதான் திமுகவின் வேலை.

 

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் கூறியது:

 

டெகல்கா சம்பவத்திற்குப் பின்னால் யார் யார் இருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிந்து உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசுதான் ரத்து செய்ததாக ஒரு தவறான குற்றச்சாட்டை திமுகவினர் பரப்பி வருகின்றனர். திமுகவினர் நடத்தும் கிராமசபைக் கூட்டங்களில் அப்படித்தான் சொல்லி வருகின்றனர். அம்மா முதல்வராக இருந்தபோது, உள்ளாட்சித் தேர்தல் பணிகள் நடந்தன. அப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை தடுத்து நிறுத்தியது திமுகவினர்தான்.

 

மு.க.ஸ்டாலின், முன்பு உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தார். அந்த துறையின் வேலையே, கிராமங்களின் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதுதான். அப்போது எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு, இப்போது கிராமங்களுக்குச் செல்லாமல், இப்போது கிராம சபைக்கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

 

கிராமங்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி செய்து தராததை எல்லாம் இப்போது அம்மாவின் அரசு சிறப்பாக செய்து வருகிறது. மக்களின் அடிப்படை தேவை என்ன என்பதை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம்.

 

எடப்பாடி ஊராட்சியில் எல்லா பகுதிகளிலும் நேரடியாக போய், உடனுக்குடன் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தந்திரு க்கிறேன். அங்கே 99 சதவீத மின்விளக்குகள் எரியூட்டப்பட்டு உள்ளன. நான் மட்டுமின்றி, துணை முதல்வரும், அனைத்து அமைச்சர்களும் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று இதுபோன்ற பணிகளை செய்து வருகின்றனர். திமுகவினர் செய்வதெல்லாம் அரசியல் நாடகம். அவர்கள் ஆட்சியில் இல்லாதபோது இப்போது என்ன திடீர் ஞானோதயம்?

 

டெகல்கா செய்தி தொடர்பாக இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்பது வழக்கு விசாரணையில் தெரியவரும். அப்போதுதான் நடவடிக்கை எடுக்க முடியும். நேரடியாக அரசியலில் எங்களை எதிர்கொள்ள முடியாத திராணியற்ற, முதுகெலும்பு இல்லாதவர்கள் இப்படி அவதூறு பரப்புகின்றனர். இதில் உள்ள அரசியல் பின்புலமும், உண்மையும் வெளிச்சத்துக்கு வரும்.

 

குறுக்கு வழிகளைக் கையாண்டு இந்த அரசை எந்தக் காலத்திலும் யாரும் கவிழ்த்து விடமுடியாது.

 

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.