Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திரை இசையில் வள்ளுவம்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்…

#தொடர்

 

இளங்கம்பன் கண்ணதாசன் பாடல்களில் கற்பனைத்திறம் மிகுந்திருப்பது காதல் பாடல்களிலா? தத்துவப் பாடல்களிலா? என ஆராய்ச்சியே மேற்கொள்ளலாம். அந்தளவுக்கு ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. காதல் இன்பத்தை மட்டுமல்ல; அதன் தோல்வியால் உண்டாகும் வலியையும் பார்வையாளனுக்கு மிக எளிதாகக் கடத்திவிடும் திறம், கண்ணதாசனின் வரிகளுக்கு உண்டு. காதலின் உச்சநிலையை, வேதனைகளை, செவிகளாலும் உணர முடியும். அதுதான் கவியரசரின் வெற்றி.

 

காதல் உணர்வு இருபாலருக்கும் பொதுவானதுதான். எனினும், பெண்களே காதலால் பெரும் அல்லல் படுகின்றனர் என்பது வள்ளுவப் பெருந்தகையின் கூற்று. நிகழ்கால சாட்சிகளும் அதுதானே. காதலுற்ற ஒரு பெண், காதலனுக்கு ஓயாமல் அலைபேசியில் அழைத்துப் பேசிக்கொண்டிருப்பதை இப்போதும் நாம் காண்கிறோமே. (அந்த அலைபேசிக்கு ‘ரீசார்ஜ்’ செய்வது என்னவோ காதலன்தானே!).

பகல் நேரங்களில் காதலனை பூங்கா, கடற்கரை, திரைக்கூடம், வணிக வளாகம் என எங்கோ ஓரிடத்தில் தனிமையில் சந்தித்து விட முடியும். இரவானால் முடியாதல்லவா?. இரவு நேரத்தில் தலைவனைக் காண இயலாமல் காதலுற்ற தலைவி நோயுற்றவளாகிறாள்.

அதனால்தான் வள்ளுவன்,

”மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்” (123:1226)

என்கிறான். தலைவன் அருகில் இருந்தபோது மதிமயங்கிய நிலையில் கிறங்கிப் போகிறாள். ஆனால் மாலை நேரத்தில் காதலன் அவளை விட்டு நீங்கிச் சென்றவுடன் மனதளவில் துன்பமடைகிறாள். பிரிவின் துன்பத்தை அவள், காதலன் அருகில் இருக்கும்போது அறிந்து கொள்ளவில்லையாம். காதலனை சந்திக்க இடையூறாக இருக்கும் இரவுப் பொழுதை காதலி சபிக்கவும் செய்கிறாள்.

”மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது” (123:1221)

என்ற குறள் மூலமாக, ”காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும் பெண்ணின் உயிரை உண்ணும் முடிவுக்காலமாக இந்த மாலை நேரம் இருக்கிறது,” என்கிறான் வள்ளுவ ஆசான்.

காதலுற்ற பெண் வயிற்றில் கருவை சுமக்கும் தாய் போலதான். அவள் சதாசர்வ காலமும் காதலனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாள். அசோகவனத்தில் ராமனை நினைத்துக்கொண்டு சீதை தூங்கவே இல்லையாம். இமைகளை இமைக்கவே மறந்து விட்டாள் என்கிறான் கம்பன்.

தலைவியின் இந்த உணர்வை வள்ளுவப் பெருந்தகை நுட்பமாக தன் குறட்பாவில் எப்படி பதிவு செய்கிறான் பாருங்கள்…..

”இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ்வூர்” (113:1129)

என்கிறான்.

அதாவது, காதலனை தன் கண்களுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாக்கிறாள் காதலி. அவனோடு உறவாட எண்ணுகிறாள். தலைவன் எப்போதும் தன் கண் எதிரிலேயே இருப்பதாக கருதிக்கொள்வாளாம். கண்களை இமைக்கும் ஒரு கணப்பொழுதில் தலைவன் மறைந்து விடுவான். அந்தப் பிரிவைக்கூட அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால்தான் காதலுற்ற பெண், கண் இமைக்காமல் இருப்பாளாம்.

இப்படி வள்ளுவனும், கம்பனும் சொன்னதை வெகுசன மக்களுக்குப் புரியும் வகையில் எளிய தமிழில் கற்பனை நயத்துடன் திரைப்பாடல்களில் கொடுப்பதில் கண்ணதாசனுக்கு நிகரேது?

‘மீண்ட சொர்க்கம்’ படத்தில் இடம் பெற்ற ‘துயிலாத பெண் ஒன்று கண்டேன்…’ என்ற பாடலில், காதலுற்ற பெண்ணின் நிலையை நயமாகச் சொல்லியிருப்பார் கவியரசர் கண்ணதாசன். ஜெமினி கணேசன்- பத்மினி  நடிப்பில், டி.ஆர்.துரைராஜ் இயக்கத்தில் 1960ம் ஆண்டு வெளியானது, ‘மீண்ட சொர்க்கம்’.

டி.சலபதி ராவ்

 

எக்காலத்திலும் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் பாடல் என்றும் சொல்லலாம். இந்தப்பாடலின் வெற்றிக்கு கண்ணதாசனின் அழகான வரிகள் மட்டும் காரணம் அல்ல; தாயின் தாலாட்டு போல பாடும் ஏ.எம்.ராஜா – பி.சுசீலா ஆகியோரின் தேன் குரல்களும், டி.சலபதி ராவின் இசையும் மிகப்பெரிய பலம்.

இந்தப் பாடலே ஒரு கேள்வி பதில் போன்றதுதான். ஜெமினி கணேசன், ‘துயிலாத பெண் ஒன்று கண்டேன்’ என பாடுவார். அதற்கு பத்மினி, ‘எங்கே?’ என்பார். ஜெமினி கணேசன் அதற்கு, ‘இங்கே…’ என பதில் அளித்துவிட்டு, தொடர்ந்து பாடுவார். இதுவரை கேட்காதவர்கள் இனிமேல் இந்தப் பாடலைக் கேட்டால், இனி ஒருபோதும் தவற விட மாட்டார்கள் என்பேன்.

இதோ அந்தப்பாடல் வரிகள்…

ஆண்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்
பெண்: எங்கே…?
ஆண்: இங்கே…
எந்நாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
பெண்: அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்
ஆண்: பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்
ஆண்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்
பெண்: நானா…?
ஆண்: ஆமாம்…
எந்நாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
பெண்: மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக ஆனேன்
ஆண்: உறவோடு விளையாட எண்ணும்
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
ஆண்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்
பெண்: யாரோ…?
ஆண்: நீதான்…
எந்நாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
பெண்: மணமேடை தனில் மாலை சூடும்
உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும்
ஆண்: நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை
ஆண்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்
பெண்: ஓஹோ…
ஆண்: எந்நாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்…

 

– இளையராஜா சுப்ரமணியம்
E-mail: selaya80@gmail.com