Monday, June 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திரை இசையில் வள்ளுவம்: மாசிலா உண்மைக் காதலே…

#தொடர்

 

எக்காலத்திற்கும் பொருந்தும் தத்துவங்களை முக்காலமும் உணர்ந்து கொடுத்ததால்தான் திருக்குறளை, உலகப்பொதுமறை என உயர்வு நவிற்சியோடு சொல்கிறோம். வள்ளுவம் என்பது வாழ்வியல்; குறட்பாக்களை ஏதோ போகிறபோக்கில் எழுதி வைத்துவிட்டுப் போயிருப்பார் என்று சொல்லிவிட முடியாது.

திருக்குறளில் ஒளிந்திருக்கும் உளவியல் ரகசியங்களை, அவற்றை ஆழமாக வாசித்தவர்கள் நன்கு அறிவர். குறிப்பாக, பெண்களின் உணர்வுகளை அதிநுட்பமாக பதிவு செய்திருப்பான் வள்ளுவன். பெண்களிடம் எப்போதும் ஒருவித பாசாங்குத்தனம் இருக்கும்.

நாடு, மொழி, இனம் கடந்து எந்த ஒரு பெண்ணிடமும் இருக்கும் குணாதிசயங்களில் இத்தகைய போலியான கோபமும் ஒன்று. இதை அவர், ‘புலவி நுணுக்கம்’ (Feigned anger) எனக்குறிப்பிடுகிறார். இந்த குணம்கூட பெண்கள், தன் தலைவனிடம் செல்லமாக கூடலுக்கு முன் சிறு ஊடல் கொள்வதற்காக மேற்கொள்ளும் கலைதான் என்பது பொய்யாமொழியனின் எண்ணம்.

நிலத்தோடு நீர் இரண்டறக் கலந்துவிடுவதுபோல அன்பு கொண்ட காதலரிடம் செல்லமாக சிணுங்கிக் கொள்வதைவிட அதாவது கொஞ்சம் லேசுபாசாக கோபம் கொள்வதில்தான் தனி ‘கிக்’ இருக்கிறது என்பார்களாம் பெண்கள். அந்த ‘கிக்’ எப்படிப்பட்டது தெரியுமா? தேவருலகத்தில் கூட அத்தகைய இன்பம் கிடைக்காதாம்.

இதை, ‘ஊடலுவகை’ அதிகாரத்தில்,

”புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து” (133:1323)

என்கிறான் வள்ளுவன்.

இதற்கு முந்தைய அதிகாரம்தான், ‘புலவி நுணுக்கம்’. காதலியை நெருங்கிச் செல்லும் காதலன், கொஞ்ச நேரம் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கக் கூடாதா? தான் கொண்ட அன்பினைச் உயர்த்திச் சொல்ல வேண்டும் என்பதற்காக, ‘யாரையும் விட நாம் மிக்கக் காதல் கொண்டிருக்கிறோம்’ என்று சொல்ல, காதலிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்து விடுகிறது. உடனே அவள், காதலனைப் பார்த்து, ‘யாரை விட? யாரை விட? நீ கொண்ட காதல் பெரிது?’ எனக்கேட்டு சிணுங்குவாளாம்.

இந்தக் கருத்தை உணர்த்தும் விதமாக,

”யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று” (132:1314)

என்ற பாடலை வடித்திருக்கிறான் வள்ளுவன்.

ஆண்களின் வார்த்தைகளை மேலெழுந்தவாரியாகக் கேட்டுவிட்டு பெண்கள், எதையும் நம்பி விடுவதில்லை. அவர்களுக்குள் எப்போதும் ஓர் உள்ளுணர்வு எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கும். அதனால்தான்,

”இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்” (132:1315)

என காதலன், ”இந்தப் பிறவியில் நாம் பிரிய மாட்டோம்” என்று சொன்னாலும், அதைக் கேட்டு காதலி மகிழ்ச்சி அடையாமல் அழவே செய்வாளாம். ஏன் தெரியுமா….? அடுத்தப் பிறப்பில் நாம் பிரிந்து விடுவோமா? எனக் கேட்பாளாம்.

கவிஞர் மருதகாசி

இன்னும் மதிநுட்பமானவர்கள் பெண்கள். எப்படியெனில், காதலன் ‘இப்போதுதான் உன்னை நினைத்தேன்’ என்று சொல்கிறான். அதைக்கேட்டு காதலி, புளகாங்கிதம் அடைவதில்லை. அதேநேரம், நினைத்தேன் என்றால், அந்த நினைப்புக்கு முன் மறத்தல் என்றும் ஒன்று உண்டுதானே? ஏன் என்னை மறந்தீர்கள்? எனக்கேட்டு காதலனுடன் ஊடல் கொள்வாளாம்.

இதை வள்ளுவன்,

”உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்” (132:1316)

என்று மிக அழகாக பெண்களின் பாசாங்குத்தனத்தை பதிவு செய்கிறான்.

வள்ளுவனின் இக்கருத்துக்களை நேரடியாக பொருள் கொள்ளாவிட்டாலும், திடீரென்று செல்வந்தனாகி விடும் காதலன், அதன்பின் தன் மீது பழையபடி உண்மையான காதலுடன் இருப்பானா என்று இயல்பாகவே ஒரு பெண்ணுக்கு சந்தேகம் வருமல்லவா? அப்படி காதலிக்கு ஏற்படும் சந்தேகத்தை காதலன் தெளிவு படுத்தும் விதமாக, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் கவிஞர் மருதகாசி ஒரு பாடலை எழுதி இருப்பார்.

மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் பட்டியலில், நிச்சயமாக ‘மாசிலா உண்மைக் காதலே…‘ பாடலுக்கும் தனித்த இடம் உண்டு.

தமிழில் முதன்முதலில் ‘கேவா’ வண்ணத்தில் எடுக்கப்பட்ட படம் இது. எம்.ஜி.ஆர்., பி.பானுமதி, பி.எஸ்.வீரப்பா, ‘டணால்’ தங்கவேல் உள்ளிட்டோர் நடிப்பில் 1956-ம் ஆண்டு வெளியான இந்தப்படம், அப்போது சக்கைப்போடு போட்டது. தனது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி.ஆர்.சுந்தரம் இயக்கி இருந்தார்.

எஸ்.தட்சிணாமூர்த்தி இசையில், மெல்லிசைப் பாடலுக்கே உரிய மென்குரலுக்குச் சொந்தக்காரரான ஏ.எம்.ராஜாவும், பி.பானுமதியும் இணைந்து, ‘மாசிலா உண்மைக் காதலே’ பாடலைப் பாடியிருப்பார்கள்.

இந்தப் பாடல் காட்சியில், திடீர் செல்வந்தனாகி விடும் காதலன் அலிபாபாவிடம் செல்லமாக கோபித்துக் கொண்டிருப்பதுபோல் மார்ஜியானா பாத்திரத்தில் நடித்த பி.பானுமதி நடித்திருப்பார். அலட்டல் இல்லாத அவருடைய உடல் அசைவுகளும், புன்னகை ததும்பும் எம்.ஜி.ஆர்-ன்அசைவுகளும் பாடலுக்கு மேலும் அழகூட்டும்.

இதோ அந்தப் பாடல்….

ஆண்: மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
(மாசிலா)
பெண்: பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா…?
(பேசும்)
ஆண்: கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே

பெண்: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே?

ஆண்: நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே

பெண்: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா…?
(மாசிலா)

ஆண்: கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் என்தன் மீதிலே
உந்தன் ரூபமே உண்மை தன்னில் வாழுதே

பெண்: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

ஆண்: உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பெண்: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

இருவரும்: அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கும் நாம்
இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்… (2)
(மாசிலா)

 

– இளையராஜா சுப்ரமணியம்
தொடர்புக்கு: selaya80@gmail.com
…………………