-திண்ணை-
”பெரியார் பல்கலைக்கழகத்துல
முக்கிய பதவிகளுக்கு
ஜனவரி 31, 2019ம் தேதி நடக்க
இருந்த இண்டர்வியூவை திடீர்னு
ஒத்திவைச்சுட்டாங்களாம்.
இதுக்கெல்லாம் பேனாக்காரர் பேச்சுதான்
காரணம்னு பல்கலைக்கழக
வட்டாரத்துல உங்கள பத்திதான்
பரபரப்பா பேசிக்கிறாங்கனு,”
சொல்லியபடியே திண்ணையில்
வந்து அமர்ந்தார்
நம்ம நக்கல் நல்லசாமி.
”யோவ் நக்கலு…. அந்த சேதிய நானும் கேள்விப்பட்டேன். அதுக்காக நம்ம பேச்சாலதான் இண்டர்வியூ நின்னுப்போச்சுனு சொல்லி நமக்கு நாமலே பெருமை பேசிக்கிடலாமா?னு,” கேட்டுக்கொண்டே உப்பு தூக்கலாக போட்ட வறுகடலையை கொறிக்க ஆரம்பித்தார் பேனாக்காரர்.
அப்படியே நமக்கும் ரெண்டு உப்புக்கடலை கொடுங்கனு வந்து அமர்ந்தனர் பொய்யாமொழியாரும், ஞானவெட்டியாரும்.
”சரி….இண்டர்வியூ எதுனால நின்னுப்போச்சாம்?” ஆரம்பித்தார் ஞானவெட்டியார்.
”இப்போ பதிவாளர் பொறுப்புல
இருக்கற கோல்டன்வேலைத்தான்
முழுநேர பதிவாளரா நியமிக்கணும்னு
தமிழ்த்துறையில இருக்கற பெரியஆசாமி
மூலமாக மேலிடம் வரைக்கும்
தரகு வேலைகள்லாம் நடந்துச்சு.
கிட்டத்தட்ட கோல்டன்வேலுக்குத்தான்
அந்தப்பதவிங்கற மாதிரி உறுதியும்
படுத்திட்டாங்க. அதுக்கு ‘ப’ வைட்டமின்
மட்டுமில்லாமல், மாநிலத்தின் உச்ச
பதவியில இருக்கறவரோட சாதியைச்
சேர்ந்தவர்ங்கறதும் ஒரு காரணம்,”
என்ற பேனாக்காரரை
இடைமறித்த நக்கல் நல்லசாமி,
”அதான் நேத்தே சொல்லியாச்சே
இப்போ என்னாதுக்கு அதையே
நீட்டி முழக்கிறீங்க.
இண்டர்வியூ எதனால
நிறுத்தப்பட்டுச்சுனு
சொல்லுங்கய்யானு”
சவுண்டு விட்டார்.
”சொல்கிறேன் கேள்”
”சிண்டிகேட் குழுவுல இருக்கற,
பஞ்சாமிர்தத்துக்கு பேர்போன
ஊரின் பெயரைக் கொண்டவரும்,
ஞானசேகரமான உறுப்பினரும்தான்
கோல்டன்வேலுவுக்கு பதிவாளர் பதவி
கிடைக்கக்கூடாதுங்கறதுல
முட்டுக்கட்டை போட்டாங்களாம்.
கோல்டன்வேலை பேராசிரியராக
பணி நியமனம் செய்ததே தப்புனு
தணிக்கை அறிக்கைல சொல்லப்பட்டுருக்கு.
அப்படி இருக்கும்போது அவரை
பதிவாளராக்கினா யாராவது
கோர்ட்டு கேஸூனு போனாங்கனா
அவர்தான் பதவிய ராஜினாமா
செய்ய வேண்டியது வரும்னு,”
பல்கலைல உச்ச பதவியில
இருக்கற சைல்டுவேலை
எச்சரிச்சாங்களாம்.
”பஞ்சாமிர்த ஊர்க்காரரும்
சைல்டுவேலுவின் சாதிக்காரர்தானாம்.
அதனால அவர் சொன்னதையும்
கவனமாக கேட்டுக்கிட்டாராம் சைல்டுவேலு.
அதுவுமில்லாம… சைல்டுவேலுதான்
கைசுத்தமானவராச்சே….
இதையும் மீறி பதிவாளர் பதவில
கோல்டன்வேலை நியமித்தால்,
அதை எதிர்த்து ஒரு குரூப் கோர்ட்டுக்குப்
போகவும் தயாராக இருப்பதாகவும்
சொல்லி இருக்காங்களாம்”.
இதைக்கேட்ட பொய்யாமொழியாரும், நக்கல் நல்லசாமியும், ஞானவெட்டியாரும் ”ஓஹோ” என கோரஸ் பாடினர்.
”இதனால பயந்துபோன பெரியார் பல்கலை நிர்வாகம், ஜனவரி 31ம் தேதி காலை 9.30 மணிபோல, பதிவாளர், தேர்வாணையர் பதவிக்கு விண்ணப்பிச்சவங்களோட செல்போன் நம்பருக்கு அவசர அவசரமா எசமெஸ் அனுப்பி இருக்காங்க. அதுல, எதிர்பாராத சூழ்நிலைகளால் முன்தேதி குறிப்பிடப்படாமல் பதிவாளர், தேர்வாணையர் பதவிக்கான இண்டர்வியூ ஒத்திவைக்கப்படுகிறதுனு சொல்லியிருந்தாங்க. அசவுகரியத்துக்கு வருந்துகிறோம்கிறத கூட, கவனக்குறைவாக Sorry for Convenienceனு எசமெஸ்ல போட்டுருந்துச்சாம்”
”சாதாரண எசமெஸ்ல கூடவா இப்படி மொக்கைப்படுவாங்க?” என்றார் ஞானவெட்டியார்.
”ஆமா…அப்படித்தான் இருந்துச்சு. அத யாரோ சுட்டிக்காட்டியிருப்பாங்க போலருக்கு. காலை 11.30 மணியளவுல அதே எசமெஸை திருத்தி மறுபடியும் அனுப்பி வெச்சாங்க. அந்த மெசேஜூல sorry for inconvenienceனு திருத்தப்பட்டு இருந்துச்சு.”
”அதுசரி… யாரோட கன்வீனியன்சுக்கோதான்
நடக்க இருந்த இண்டர்வியூவையே
ஒத்திவெச்சிருங்காங்க. உள்மனசுல இருக்கறதுதானே
எசமெஸ்லயும் சொல்லியிருக்காங்கபா,”
என தனக்கே உரிய எள்ளளுடன்
கிண்டலடித்தார் நக்கல் நல்லசாமி.
இந்த நேரத்துல நானும் ஒண்ணு சொல்லிக்கிறேன் என்றபடியே பேசலானார் பொய்யாமொழியார். இப்போ நடக்கற பஞ்சாயத்தெல்லாம் பதிவாளர் பதவிக்கு மட்டும்தானாம். தேர்வாணையர் பதவியை, சேலத்தில் செட்டியார் சமூகத்தின்பேரில் இயங்கி வரும் கல்லூரி முதல்வருக்கே கொடுப்பதில் எந்த சிக்கலும் இல்லையாம்,” என்றபடியே உப்பு கடலையை கொறித்த பின்னர் எஞ்சிய காகிதங்களை குப்பைக் கூடையில் போட்டபடியே நகர்ந்தனர் நால்வரும்.
– பேனாக்காரன்