Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பேனாக்காரன் பேச்சு: பெரியார் பல்கலையில் அடுத்த பதிவாளர், தேர்வாணையர் யார்?

பகல்ல பக்கம் பாத்து பேசணும்… ராத்திரியில அதுவும் பேசக்கூடாதுனு சொல்லுவாங்க என்றபடியே ஞானவெட்டியானையும், ஊர்சுற்றியையும் தோள்களில் தட்டியவாறே திண்ணையில் வந்து அமர்ந்தார் நம்ம பேனாக்காரர்.

”நீ விஷயம் இல்லாம இந்த நேரத்துல வர்ற ஆளு இல்லையே… என்ன விஷயம் என கேட்டேவிட்டார்” ஊர்சுற்றி. வேறென்ன…வழக்கம்போல பெரியார் பல்கலைய பத்தின சேதிதான்.

 

”பெரியார் பல்கலையில தேர்வாணையர்
பதவி 2018ம் வருஷம் பிப்ரவரி
மாசத்துலருந்து காலியா கிடக்கு.
ஆகஸ்ட் மாசத்துல இருந்து
பதிவாளர் பதவியும் காலியாயிருச்சு.
ஒரு பல்கலைக்கு துணைவேந்தர்
பதவி எப்படி முக்கியமோ
அதுபோல இந்த ரெண்டு போஸ்டுமே
ரொம்ப ரொம்ப முக்கியமானது,”
என்று பேனாக்காரர் சொல்லி முடிப்பதற்குள்,
”அதெல்லாம் தெரிஞ்ச கதையாச்சே
புதுசா என்ன இருக்கு?,” என
அவசரப்படுத்தினார்
ஞானவெட்டியான்.

 

”எதுக்கு இத்தன அவசரம்….அவசரப்பட்டா அம்புட்டும் பாழாயிடும் புரிஞ்சுக்கோ…” என்றபடியே பேனாக்காரர் பேச்சைத் தொடர்ந்தார்.

 

”தேர்வாணையர், பதிவாளர் ஆகிய ரெண்டு
பதவிகளுக்குமே இன்னிக்கு (ஜனவரி 31, 2019)
இண்டர்வியூ நடக்குது. இந்த இண்டர்வியூவே
கண்துடைப்பாதான் நடக்குதுனு
பல்கலைக்கழக வட்டாரத்துல
கதைச்சிக்கிறாங்கபா.
பதிவாளர் பதவிக்கு இப்போ பொறுப்புல
இருக்கற கோல்டன்வேலையே
கொண்டு வந்துடணும்னு ரொம்ப
காலமாகவே ஒரு லாபி
போய்ட்டு இருக்குதுங்க.

 

தமிழ்த்துறையில உள்ள பேராசிரியர்
ஒருத்தர்தான் இதுக்கான புரோக்கர்
வேலையெல்லாம் பார்த்தாராம்.
அந்த புரபஸசரும், கோல்டன்வேலும்
தமிழ்நாட்டுல உச்ச பதவியில
இருக்கறவரோட சாதிக்காரங்கதானாம்.
இதுல உயர்கல்விய பார்க்கற
அமைச்சருக்கு உடன்பாடு இல்லைனாலும்,
உச்சத்துல இருக்கறவரோட எதுக்கு
மல்லுக்கட்டணும்.
அப்புறம் கல்லா கட்டறதுல
பங்கம் வந்துடுமேனு அவரும்
கிரீன் சிக்னல் கொடுத்துட்டாராம்”
என்றார் பேனாக்காரர்.

 

”அப்புறம் அந்த தேர்வாணையர் பதவியையாவது நேர்மையா நிரப்புவாங்களா” எனக் கேட்டார் நக்கல் நல்லசாமிபோல கேட்டார் ஊர்சுற்றி.

 

”நேர்மைக்கும் பெரியார் பல்கலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?” என எதிர் கேள்வி கேட்டபடியே தொடர்ந்தார் பேனாக்காரர்.

 

”இதுக்கு முன்னாடி தேர்வாணையர் பதவிய இருந்த லீலையான பெண் பேராசிரியர், அந்தப் பதவிக்காலம் முடிவதற்கு நாலு மாசத்துக்கு முன்னாடியே அப்ளிகேசன்லாம் வாங்கினாங்க. அப்ப ஒன்பது பேர் அந்த போஸ்டுக்கு அப்ளிகேஷன் போட்டுருந்தாங்க. ஆரம்பத்துலேயே அந்த பதவிக்கு நிறைய கோல்மால் நடந்ததால அந்தப் பதவிக்கான இண்டர்வியூவையே நிறுத்திட்டார் அன்பான அமைச்சர்.

 

அப்புறம் போன வருஷம் ஆகஸ்ட் மாசம்தான் தேர்வாணையர் பதவிக்கும் அப்ளிகேஷன்கள வாங்கினாங்க. இந்தப் பதவியிலயும் ஒரு சுயநிதி கல்லூரியில் முதல்வராக இருக்கிற திருப்பதி ஏழுமலை வெங்கடேசா… என்ற பாடலில் மூன்றாமவரை பல்கலையின் முக்கியப்புள்ளிகள் ஒருமனதாக தேர்வு செஞ்சி வெச்சிருக்காங்கலாம். அதுக்கும் காரணம் இருக்காம். சிண்டிகேட், செனட் குழு கூட்டங்களில் பல்கலைக்கு ஆதரவான முடிவுகளை எடுக்க வெங்கடேசமானவர்தான் ஒத்துப்போவார்னும் பேசிக்கிறாங்கபா…,”

 

”இதுல இன்னொரு சங்கதி என்னனா…. பதிவாளர் பதவிக்கு அடிபோடுகிற கோல்டன்வேல் படிச்சது என்னவோ கணக்குப்பாடம்தானாம். ஆனா அவரு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைக்கு தலைவராக இருக்காராம். தணிக்கை அறிக்கையில அதெல்லாம் செல்லாதுனு சொன்ன பிறகும் அவர் மேல எந்த நடவடிக்கையும் எடுக்காம பாத்துக்கிட்டாராம் பல்கலைல முக்கிய பதவியில இருக்கற அந்த நேர்மையான சைல்டுவேல் அதிகாரி. சாதியே கூடாதுனு சொன்ன தலைவரு பேருல பல்கலைய வெச்சிக்கிட்டு சர்வம் சாதி மயம்னு போய்ட்டு இருக்காங்கபா…,” என சொல்லியபடியே திண்ணையை காலி செய்தார் நம்ம பேனாக்காரர்.

 

– பேனாக்காரன்