Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘ஊழல்’ பதிவாளரை காப்பாற்றும் துணைவேந்தர்! ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு!!

சேலம் பெரியார் பல்கலை ‘நிரந்தர’ பொறுப்பு பதிவாளர் தங்கவேலை, பணியிடைநீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டப் பிறகும், துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவை மதிக்காமல் முரண்டு பிடித்து வருவது உயர்கல்வித்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தை அடுத்த கருப்பூரில்,
1997ம் ஆண்டு பெரியார்
பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
சாதிய அடுக்குகளை எதிர்த்து
காலம் முழுவதும் போராடி வந்த
பெரியாரின் பெயரில் அமைந்த
இந்தப் பல்கலையில் சாதிய
வன்மம் புரையோடிக் கிடக்கிறது.

வீரபாண்டியார் உயிரோடு இருந்தவரை
வன்னியர்கள் ஆதிக்கமும்,
2011 – 2021 காலக்கட்டத்தில்
அதிமுக ஆட்சியில் கொங்கு வெள்ளாள
கவுண்டர்கள் ஆதிக்கமும் பல்கலையில்
தலை விரித்தாடுகிறது.

துணைவேந்தர் சுவாமிநாதன்
பதவிக்காலத்தில், ஆசிரியர் மற்றும்
ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்
நியமனத்தில் 60 கோடி ரூபாய்க்கு மேல்
ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
பேராசிரியர் பணியிடங்கள் 30 லட்சம்…
40 லட்சம்… 50 லட்சம்… என கூவிக்கூவி
விற்பனை செய்யப்பட்டன.

அதையடுத்து துணைவேந்தராக வந்த குழந்தைவேல்,
தற்போதைய துணைவேந்தர் ஜெகநாதன்
ஆகியோர் இந்தப் பல்கலையை
இந்துத்துவா மயமாக்கத் தொடங்கினர்.
பல்கலை வளாகத்திலேயே ஏபிவிபி,
பாஜக ஆதரவாளர்களின் குரல்கள்
வெளிப்படையாகரே ஒலிக்கும்
வகையில் இவர்கள் வழிவகை செய்தனர்.

ஜெகநாதன், துணைவேந்தர்

இது ஒருபுறம் இருக்க, பதிவாளர் பொறுப்பில் உள்ள தங்கவேல் மீதான சில, பல ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்யும்படி தமிழக அரசு பிப். 7ம் தேதி உத்தரவிட்டது. அரசாணை வெளியிட்டு மூன்று நாள்கள் ஆகியும் தங்கவேலை பணியிடைநீக்கம் செய்யாமல் துணைவேந்தர் ஜெகநாதன் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறார். இது, உயர்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பல்கலை வட்டாரத்தில் விசாரித்தோம்.

”பதிவாளராக பணியாற்றி வந்த மணிவண்ணன் 3 ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்ததால், அவர் விடுவிக்கப்பட்டார். அதையடுத்து, கணினி அறிவியல் துறைத் தலைவரான தங்கவேலை, பொறுப்பு பதிவாளராக 2018ம் ஆண்டு நியமித்தார் அப்போதைய துணைவேந்தர் குழந்தைவேல்.

தங்கவேல் பேராசிரியராக நியமிக்கப்பட்ட விதமே தவறானது என்ற பேச்சு ஓடிக்கொண்டிருந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த பதிவாளர் பதவியில் அமர வைத்தது சலசலப்பைக் கிளப்பியது.

அடிப்படையில் தங்கவேல் ஒரு கணித பட்டதாரி. அதில்தான் அவர் பி.ஹெச்டி., வரை முடித்துள்ளார். ஆனால் விதிகளுக்குப் புறம்பாக அவரை 2006ம் ஆண்டு கணினி அறிவியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இத்தனைக்கும் அவருடைன் நேர்காணலுக்கு வந்தவர்களில் நாலைந்து பேர் கணினி அறிவியல் துறையில் உரிய கல்வித்தகுதியை பெற்றிருந்தனர்.

அப்போது அதிமுக ஆட்சியில்
நிதித்துறை அமைச்சராக இருந்த
பொன்னையனும், தங்கவேலும்
நெருங்கிய உறவினர்கள்.
இந்த செல்வாக்கு காரணமாகத்தான்
கணிதம் படித்த தங்கவேல்,
கணினித்துறை பேராசிரியராக
நியமிக்கப்பட்டாக அப்போது
வெளிப்படையாகவே பேச்சுகள் கிளம்பின.

‘ஊழல் புகழ்’ தங்கவேல்

பின்னர், 2015 – 16ம் ஆண்டுக்கான
பெரியார் பல்கலை உள்ளாட்சி
நிதித்தணிக்கை அறிக்கையில்,
தங்கவேல் நியமனமே தவறானது
என்று ஆட்சேபனை
தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக 2019ம் ஆண்டு
பதில் அளித்த தங்கவேல்,
2015ம் ஆண்டு யுஜிசி வெளியிட்ட
கல்வித்தகுதி சார்ந்த ஒரு விதியை
மேற்கோள் காட்டி, அதன் அடிப்படையில்
2006ல் தன்னுடைய பணி நியமனம்
சரிதான் என தெரிவித்து இருந்தார்.
அதன் அடிப்படையில் தணிக்கைத்
தடையில் இருந்து அவர் மீதான
ஆட்சேபம் நீக்கப்பட்டது.

அவர் பணியில் நியமிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கணிதம் படித்தவரும், கணினித்துறையில் ஆசிரியராக சேரலாம் என்ற விதி இல்லை. ஆனால் தங்கவேல், டைம் மெஷினில் ஏறி டிராவல் செய்தவர் போல பேசுகிறார்.

இது மட்டுமின்றி, பல்கலைக்கு கணினிகள் வாங்கியது, வன்பொருள், மென்பொருள் கொள்முதல் செய்தது என எல்லாவற்றிலும் போலி ரசீதுகள் மூலம் பல்கலை நிதியைப் பெற்று முறைகேடு செய்துள்ளார்.

தீன்தயாள் உபாத்யாய் திட்டத்தின் கீழ் பட்டியலின மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்ததில், அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைத் திட்டத்திலும் முறைகேடு செய்துள்ளார்.

இதுகுறித்த புகார்களின் பேரில், உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக இருந்த பழனிசாமி, துணை செயலாளர் இளங்கோ ஹென்றிதாஸ் ஆகியோர் தலைமையில் தமிழக அரசு, ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் விசாரணையில், தங்கவேல் மீதான மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 8 புகார்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, அவர் நடப்பு பிப். 29ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார். அதனால் நிர்வாகக் காரணங்களுக்காக, அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்யும்படி துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழக அரசு பிப். 7ம் தேதி உத்தரவிட்டு இருந்தது,” என்கிறது பல்கலை வட்டாரம்.

தமிழக அரசின் உத்தரவு, மூடி முத்திரையிடப்பட்டு மெசேஞ்சர் ஒருவர் மூலம் பிப். 8ம் தேதி காலையில், துணைவேந்தர் கையில் நேரிலேயே ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகச் சொல்கிறார்கள்.

துணைவேந்தர் ஜெகநாதனுக்கு, பல்கலையின் வேந்தர் என்ற ரீதியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பாஜக மேலிடத்துடன் நெருக்கம் உள்ளது. ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் ஏற்பட்டுள்ள முட்டல் மோதலால் ஏற்பட்டுள்ள இடைவெளியை துணைவேந்தர் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதனாலேயே அரசின் உத்தரவை மதிக்காமல் நிரந்தர பொறுப்பு பதிவாளர் தங்கவேலை உடனடியாக பணியிடைநீக்கம் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார் என்கிறார்கள்.

மேலும், பிப். 8ம் தேதி இரவு 8.45 மணி வரை பல்கலையில் இருந்து தங்கவேல் மற்றும் துணைவேந்தர் ஆகிய இருவரும் முக்கிய ஆவணங்களை 2000 பக்கங்களுக்கு மேல் நகலெடுத்துச் சென்றதாகவும், மறுநாளும் அவர்கள் அலுவலகத்திற்குள் அமர்ந்து ரகசியமான வேலைகளைச் செய்து வந்ததாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

”அவர்கள் நகல் எடுத்தார்களா அல்லது தங்களுக்கு எதிரான ஆவணங்களை அழித்தார்களா என்ற சந்தேகம் உள்ளது,” என்கிறார் பெரியார் பல்கலை தொழிலாளர் முன்னேற்றச் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல்.

இதற்கிடையே அரசு உத்தரவை மதிக்காத துணைவேந்தரை கண்டித்தும், குற்றங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் நிரந்தர பொறுப்பு பதிவாளர் தங்கவேலை கண்டித்தும் ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் பிப். 12ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

”பொறுப்பு பணியிடம் என்பதே அதிகபட்சம் 6 மாதம்தான். அதற்குள் அந்தக் காலியிடத்திற்கு ஒருவரை புதிதாத நியமித்துவிட வேண்டும். அதேபோல், முழுநேர பதிவாளர் ஒருவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்தான்.

ஆனால், ஊழல் புகழ் தங்கவேலோ, பதிவாளர் பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார். பெயரளவுக்கு நடுவில் சில மாதங்கள் வேறு இருவர் பதிவாளர் பொறுப்பில் இருந்தனர். இதில் இருந்தே துணைவேந்தர் ஜெகநாதன், அவருக்காக எந்த அளவுக்கு சட்டத்தை வளைத்துள்ளார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

மேலும், வேதியியல் துறை பேராசிரியர் விஸ்வநாதமூர்த்தி என்பவரிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு, அவரை புதிய பதிவாளராக நியமிக்கவும் முயற்சி செய்தனர். தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டதால் பதிவாளர் நியமனத்தை நிறுத்தி விட்டனர்.

தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவில் ஊழல் முறைகேடுகளும், விதிமீறல்களும் நடந்த ஒரே பல்கலை எது என்றால் அது பெரியார் பல்கலைக்கழகம்தான்,” என்கிறார்கள் இப்பல்கலை பேராசிரியர்கள்.

இது ஒருபுறம் இருக்க, ஊழல் புகார்களின் பேரில் துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் போலி பணி அனுபவச் சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி ஆகியோர் மீதும் விரைவில் நடவடிக்கைகள் பாயும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

– பேனாக்காரன்

%d bloggers like this: