Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மிரட்டும் ஹீமோபிலியா…! “பெண்களையும் தாக்கும்” #Hemophilia

‘ஏப்ரல்-17 உலக ஹீமோஃபிலியா தினம்’

 

உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தால், ரத்தம் வெளிக்காற்றுடன் தொடர்பு கொண்ட சில நொடிகளிலேயே உறைய ஆரம்பித்து விடும். இது, நாம் உயிர் வாழ்வதற்காக இயற்கை நமக்களித்த கொடை.

 

ரத்தம் உறையாமை

ஆனால், ஹீமோபிலியா (HEMOPHILIA) (ரத்தம் உறையாமை) குறைபாடு உள்ளவர்களுக்கு இங்குதான் சிக்கலே. இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தம் உறையாது. நீண்ட நேரம் ரத்தப்போக்கு நீடிக்கும். அதனால் உயிரிழப்புகூட நிகழக்கூடும்.

 

ரத்தம் உறைவதற்கு ஒரு வகையான புரதச்சத்து தேவை. இந்த புரதம், ரத்தத்தில் உள்ள 13 வகையான காரணிகளில் உள்ளன. அதை மருத்துவர்கள், பேக்டர் (Factor) 1 முதல் பேக்டர் 13 வரை வகைப்படுத்துகின்றனர்.

 

எக்ஸ் (X) குரோமோசோம்

இந்த பேக்டர்கள் ‘எக்ஸ்’ (X) குரோமோசோம்களில் உள்ளன. அதனால்தான், ‘எக்ஸ்’ குரோமோசோம் பாதிக்கப்படும்போது, ரத்தம் உறையாமை குறைபாடும் ஏற்படுகிறது.

 

“ஆண்களின் மரபணுக்களில் ஒரு ‘எக்ஸ்’, ஒரு ‘ஒய்’ குரோமோசோம் மட்டுமே உள்ளது. பெண்களுக்கு இரண்டு ‘எக்ஸ்’, இரண்டு ‘ஒய்’ குரோமோசோம்கள் உள்ளன. ஆண்களுக்கு ஒரே ஒரு ‘எக்ஸ்’ குரோமோசோம் மட்டுமே உள்ளதால், அது சேதம் அடையும்போது ரத்தம் உறையாமை பிரச்னை ஏற்படுகிறது.

 

ஹீமோபிலியா கடத்திகள்

அதனால்தான் ஹீமோபிலியா என்பது ஆண்களை மட்டுமே தாக்கக்கூடிய அரிதான நோய் என்ற கருத்து இருக்கிறது. ஆனால், சமீபகால ஆய்வு முடிவுகளில் பெண்களும் இந்த நோயால் பரவலாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பெண்கள், ஹீமோபிலியா ‘கடத்திகளாக’ உள்ளனர்,” என்கிறார் நடராஜ்.

இவர், ஹீமோபிலியா சொஸைட்டி – சேலம் கிளையின் தலைவர். ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதும், அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதும் இந்த அமைப்பின் நோக்கம்.

 

நீண்ட நேரம் ரத்தப்போக்கு

 

“எனக்கு ஆறு வயதாக இருக்கும்போதுதான் ஹீமோபிலியா குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட நேரம் ரத்தப்போக்கு இருக்கும். பத்து, பதினைந்து நிமிடங்கள் ஆனாலும் ரத்தம் உறையாது. உடலில் அங்கங்கு வீக்கமும், கன்றிப்போயும் காணப்படும்.

 

காயம் ஏற்பட்டு உடலுக்கு வெளியே ரத்தப்போக்கு ஏற்படுவதைக் காட்டிலும், உடலுக்குள்ளேயே ரத்தப்போக்கு ஏற்படுவது இன்னும் ஆபத்தானது.

 

லேசாக அழுத்தம் கொடுத்து நடந்தாலே என் கணுக்காலின் உள்புறத்தில் ரத்தப்போக்கு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு இதற்கான ஊசி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியது வரும்.

 

இந்தக் குறைபாடு உள்ளவர்களில் 70% பேர் பரம்பரை ரீதியிலான பாதிப்புக்கு ஆளானவர்கள். செல் பிரிதலில் ஏற்படும் மாற்றத்தால் 30% பேருக்கு ஹீமோபிலியா வரலாம். ஹீமோபிலியா நோயாளிகளில் அதிகமானோர், பேக்டர் 8 மற்றும் பேக்டர் 9 குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.

 

ரத்தத்தில் 1% அல்லது அதற்கும் குறைவாக பேக்டர் அளவு இருந்தால், அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அர்த்தம்.

இரண்டு லட்சம் நோயாளிகள்

பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. இந்தியாவில் சுமார் இரண்டு லட்சம் பேருக்கு ஹீமோபிலியா குறைபாடு இருக்கலாம். ஆனால், இதுவரை 19608 ஹீமோபிலியா நோயாளிகள் மட்டுமே கண்டறியப்பட்டு உள்ளனர்.

 

இந்த நோய்க்கான ஊசி மருந்தின் விலையும் அதிகம். உதாரணமாக பேக்டர் 8 மற்றும் ஃபேக்டர் 9 குறைபாடு உள்ளவர்களுக்கு ஊசி மருந்து ஒரு ‘வயல்’ ரூ.5000 ஆகும்.

 

எட்டு மணி நேரத்துக்கு ஒருமுறை இந்த மருந்துகளை ஊசி மூலம் செலுத்தப்பட வேண்டும். பேக்டர் 7 குறைபாடு உள்ளவர்களுக்கான மருந்து ஒரு ‘வயல்’, ரூ.47 ஆயிரம். இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட வேண்டும்.

 

ஹீமோபிலியாவால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் மாதக்கணக்கில்கூட ரத்தப்போக்கு நீடிக்கும்,” என்றார் நடராஜ்.

 

R-I-C-E வழிமுறை அவசியம்

ஹீமோபிலியா உள்ளவர்களுக்கு பரிபூரண ஓய்வு (Rest) தேவை. ரத்தம் உள்புறமாக கசிவு ஏற்படும்போது அந்தப்பகுதி கன்றிப்போய் காணப்படும்.

 

அதனால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க பனிக்கட்டியால் (Ice) ஒத்தடம் கொடுக்கலாம்.

 

ரத்தக்கசிவு ஏற்படும் இடங்களில் லேசாக அழுத்தம் (Compression) கொடுக்கலாம். எலாஸ்டிக் பேண்டேஜும் சுற்றலாம். இதனால் ரத்தக்கசிவின் வேகம்குறையும்.

 

பாதிக்கப்பட்ட நபர்களை படுக்கைவசமாக இருக்க வைக்காமல், எப்போதும் உயரமாக (Elevation) இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது.

 

மனதாலும், உடலாலும் தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் ஹீமோபிலியா நோயாளிகளை உறவுகளும், தோழமைகளும் சகிப்புத்தன்மை, கருணையுடன் நடத்துவதே அவர்களுக்குச் செய்யும் ஆகப்பெரிய உபகாரம்.

 

ஹீமோபிலியா சொஸைட்டியை தொடர்பு கொள்ள: 90035 04403

 

 

(ஏப்ரல்-2017, புதிய அகராதி திங்கள் இதழில் இருந்து…)