Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கிடப்பில் போடப்பட்ட ‘காக்கி கருப்பு ஆடுகள்’ வழக்கு? கள்ள மவுனம் சாதிக்கும் சேலம் காவல்துறை!

ஆத்தூரில், காவல் ஆய்வாளரின்
மிரட்டலால் நிதி நிறுவன அதிபர்
விஷம் குடித்து தற்கொலை செய்து
கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த
காக்கி துறைக்கும் அவப்பெயரை
உண்டாக்கி இருக்கிறது. தேர்தல் வாக்கு
எண்ணிக்கை பரபரப்பில் இந்த வழக்கை
கிடப்பில் போட்டதால், நிதி நிறுவன
அதிபரை பறிகொடுத்த குடும்பம்
கடும் அதிருப்தியில் உள்ளது.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் வினாயகபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரேம்குமார் (49), தன் தம்பி செந்தில்குமாருடன் சேர்ந்து சொந்த ஊரில் தனலட்சுமி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மே 14ம் தேதி, திடீரென்று அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து கிடந்தார். என்னமோ ஏதோ என்று பதற்றம் அடைந்த மனைவியும், இரு மகன்களும் பிரேம்குமாரை தூக்கிச்சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் காலையில் (மே 15) சிகிச்சை பலனின்றி பிரேம்குமார் உயிரிழந்தார்.

டிஎஸ்பி ராஜு – ஆய்வாளர் கேசவன்

இதற்கிடையே, பிரேம்குமார் தானே பேசி பதிவு செய்த ஒரு வீடியோ வாட்ஸ்அப்களில் பரவியது. அதில், ஆத்தூர் காவல் ஆய்வாளர் கேசவன், டிஎஸ்பி ராஜூ ஆகியோர் தன் மீது சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக பொய் வழக்குப் பதிவு செய்ததால் மனம் உடைந்து, தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருப்பதுதான் அந்த வீடியோ பதிவின் சாராம்சம். இதன் பின்னணி குறித்து நாமும் தீவிர கள விசாரணையில் இறங்கினோம்.

 

பிரேம்குமாரிடம் ஆத்தூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குட்டி என்கிற ராஜ்குமார் (30), இரண்டு தவணையாக 1.25 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். குறித்த நேரத்தில் அவர் பணத்தைச் செலுத்தாததால், அவருடைய ஆட்டோவை பிரேம்குமாரும் அவருடைய தம்பி செந்தில்குமாரும் பறிமுதல் செய்து விடுகின்றனர்.

 

ஆட்டோ இருந்தால்தான் ஜீவனம் பண்ண முடியும் என்ற நிலையில் இருந்த ராஜ்குமார், கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி, மக்கள்தேசம் கட்சியில் இருக்கும் தனது உறவினர் சரவணன் மூலம் ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் கேசவனிடம் புகார் அளிக்கிறார். இருதரப்பையும் அழைத்துப்பேசும் கேசவன், ஆட்டோவை விடுவிக்கும்படி கூறி அனுப்பி வைத்து விடுகிறார். அந்த பேச்சுவார்த்தையின்போது பிரேம்குமார் சார்பில் அவருடைய தம்பி செந்தில்குமார் காவல்நிலையத்தில் ஆஜராகிறார். மேலும், 15 நாள்களுக்குள் கடன் நிலுவையை வட்டியுடன் செலுத்திவிட வேண்டும் என்றும் முடிவாகிறது. ஆட்டோவும் விடுவிக்கப்படுகிறது.

பிரேம்குமார்

அதன்பிறகும் ராஜ்குமார் சொன்னபடி கடன் தொகையை கொடுக்காமல் போக்குக் காட்டி வந்ததால், அவரை வழியில் மறித்து பலமுறை பிரேம்குமாரும், செந்தில்குமாரும் கேட்டுள்ளனர். இதனால் மீண்டும் ஆட்டோவை பறிமுதல் செய்கின்றனர். கடந்த ஏப்ரல் 5ம் தேதியன்று, செந்தில்குமார் வீட்டுக்குச் சென்ற ராஜ்குமார், பணத்தை திருப்பிச் செலுத்த அவகாசம் கேட்டதோடு, ஆட்டோவையும் திருப்பிக் கேட்கிறார். அப்போது, வீட்டில் இல்லாத செந்தில்குமார் அவரை செல்போனில் திட்டுகிறார்.

 

இதனால் ஏற்பட்ட விரக்தியில் அங்கேயே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்கிறார். இதில் ராஜ்குமாரின் முழங்கால்களுக்கு கீழ் பகுதியில் மட்டும் தீக்காயம் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் பிரேம்குமார் வீடியோ மூலம் மரண வாக்குமூலத்தைப் பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாகத்தான் டிஎஸ்பி ராஜூ, கடந்த மார்ச் மாதம் ஆத்தூருக்கு இடமாறுதலில் வந்தார். அவரைப்பற்றி உள்ளூர் மக்களுக்கு பெரிய அதிருப்தியும் இல்லை; கெட்டப்பெயரும் இல்லை. அதேநேரம், காவல் ஆய்வாளர் கேசவனைப் பற்றி கதைகதையாகச் சொல்கின்றனர். கேசவனைப் பற்றி புகார் புஸ்தகம் வாசிப்பதில் காவல்துறையினரும் அடக்கம்.

 

ஜெயலலிதா பேரவை செயலாளரும்,
எடப்பாடி பழனிசாமியின் வலது கரம்,
‘நிழல் முதல்வர்’ என்று சொல்லப்படும்
பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவனும்,
கேசவனும் ஒரே சமூகம் என்பதால்,
ஆத்தூர் ஜூரிஸ்டிக்ஷனில் கேசவன்
வைத்ததுதான் சட்டம் என்கிறார்கள் சக காக்கிகள்.
சில மாதங்களுக்கு முன், சிறுமியை
காணவில்லை என்று ஒரு பெற்றோர்
புகார் அளித்திருந்தனர். ஆத்தூர் நகர
காவல்துறையினர் அந்த சிறுமியை
மீட்டுக்கொண்டு வந்து விசாரணை நடத்தியதில்,
சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
சிறுமியை பலாத்காரம் செய்தவனையும்
பிடித்து விட்டனர்.

 

பாதிக்கப்பட்டவர்களும், சிறுமியை நாசமாக்கிய
இளைஞனும் பட்டியல் சமூகத்தினர் என்பதோடு,
கைது, நீதிமன்றம், விசாரணை என்று
அலைந்து திரிய முடியாது என்பதால்
மகளை கெடுத்த வாலிபர் மீது புகார்
கொடுக்காமல் சிறுமியின் பெற்றோர்
பின்வாங்கி விடுகின்றனர்.
இதைப்பயன்படுத்திக் கொண்ட ஆய்வாளர் கேசவன்,
சிறுமியை நாசமாக்கிய இளைஞர் மீது
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியே,
ஒரு லட்சம் ரூபாய் கறந்து விட்டார்
என்கிறார்கள் ஆத்தூர் காக்கிகள்.

ராஜ்குமார்

”ஒரு சான்றிதழோ, ஆவணமோ எது,
எங்கே தொலைந்தாலும் ஆய்வாளர் கேசவனைப்
பார்த்தால் போதும். அந்த ஆவணத்தை
‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று ‘என்டிசி’
சான்று அளித்து விடுவார். அதற்காக அவர் பெறும்
சேவைக்கட்டணம் (!) பத்தாயிரம் ரூபாய்.
அவ்வளவு ஏங்க… மூன்று மாதத்திற்கு முன்பு,
போக்சோ சட்டத்தின் கீழ் தொழில் அதிபர்
ஒருவரை கைது செய்தார். அவரிடம்,
போக்சோவில் வழக்குப்பதிவு செய்தால்
ஒரே நாளில் உங்களோட மானம் கப்பலேறிடும்.

 

பாதிக்கப்பட்ட பொண்ணோட குடும்பத்துக்கும்
எனக்கும் சேர்த்து 50 லட்சம் கொடுத்துடுங்க.
காதும் காதும் வச்ச மாதிரி இந்த வழக்கை
முடிச்சிடலாம்னு பேரம் பேசினார்.
அந்த தொழில் அதிபரோ, எல்லாத்தையும்
அனுபவிச்சிட்டேன். சிறையையும் பார்த்த
மாதிரி இருக்கட்டும். பணம்லாம் தர முடியாது.
வேணும்னா கைது பண்ணிக்குங்கனு
அலட்சியமா சொல்லிட்டாரு. அதன்பிறகு
வேறு வழியின்றி அந்த தொழில் அதிபர் மீது
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து
கைது செய்தார் ஆய்வாளர் கேசவன்.

 

ஒரு கொலை முயற்சி வழக்கில்
குற்றவாளிகளிடம் 3 லட்சம் ரூபாய்
வாங்கிக் கொண்டு இதுவரை அவர்களை
கைது செய்யாமல் இருக்கிறார்.
பணம் இல்லாமல் எந்த வேலையும்
அவரிடம் நடக்காது. பிரேம்குமார் மீது
எப்ஐஆர் போடாமல் இருக்கவும் கூட
பணம் வாங்கியிருக்கிறார் கேசவன்.
ஆனால் வன்கொடுமை சம்பந்தமாக
மக்கள் தேசம் கட்சிக்காரர்களுடன் வந்து
ராஜ்குமார் புகார் கொடுத்ததால்தான்
அவர் பிரேம்குமார் அல்லது அவருடைய
தம்பி செந்தில்குமார் ஆகியோரில் யார் மீதாவது
வழக்குப்பதிவு செய்தே ஆக வேண்டும்
என்று நிர்ப்பந்தம் கொடுத்தார். அதனால்தான்
பிரேம்குமார் தற்கொலை செய்து
கொள்ள நேர்ந்தது,” என ஆய்வாளர் கேசவனின்
பராமக்கிரமங்களை அடுக்கினர்
ஆத்தூர் சப்டிவிஷன் காக்கிகள்.

 

சேலம் மாவட்ட தனிப்பிரிவில் பணியாற்றிய
முன்னாள் ஆய்வாளர் ஒருவரோ,
”கேசவன் நல்லா பழகுவாரு. ஆனால்
ரொம்பவே ‘மணி மைண்டடு’ ஆளு,”
என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
சில ஆண்டுக்கு முன், தீவட்டிப்பட்டி
காவல் நிலையத்தில் ஆய்வாளர் கேசவன்
பணியாற்றியபோது, திருட்டு குற்றவாளிகளிடம்
3 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு,
எப்ஐஆர் பதிவு செய்யாமல் தப்பிக்க
விட்டதாக வந்த புகாரின்பேரில்,
அவர் சிறைத்துறைக்கு தூக்கியடிக்கப்பட
சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

 

இது ஒருபுறம் இருக்க, பிரேம்குமாரிடம் கடன் வாங்கியதாகச் சொல்லப்படும் ராஜ்குமாரிடம் பேசினோம். நீங்களாவது விசாரித்து உண்மையை எழுதுங்க சார் என்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேசினார்.

ராஜ்குமாரின் காலில் ஏற்பட்ட தீக்காயம்

”ஆத்தூர்ல ஆட்டோ ஓட்டுற பல பேருக்கும் பிரேம்குமார்தான் கந்துவட்டிக்கு கடன் கொடுத்திருக்கிறார். அவரை ‘மீசைக்காரர்’னு சொன்னாலே இங்கே எல்லாருக்கும் தெரியும். 10000 ரூபாய் கடன் வாங்கினால் அதுல 1500 ரூபாயை வட்டியாக முன்கூட்டியே பிடித்தம் செய்துகிட்டுதான் மிச்சத்த கடனாக கொடுப்பார். 100 நாள்களில் அதை 10000 ரூபாயாக திருப்பித்தரணும்.

 

நான் அவர்கிட்ட 50 ஆயிரம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தேன். போன வருஷம் எங்க அப்பா திடீரென்று இறந்துட்டாரு. அதனால என்னால சரிவர கடனை திருப்பிக் கொடுக்க முடியல. அவருக்கிட்டதான் நான் எட்டு வருஷமாக கடன் வாங்கிட்டு இருக்கேன். ஆனாலும், ஆத்தூர் பஸ் நிலையத்துல மணிக்கூண் டுக்கிட்டயே நின்னுக்கிட்டு கறாராக பணம் வசூலிப்பார். என் நிலைமையை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் ஆட்டோவை பறித்துக் கொண்டனர். ஒரு நாள் பிரேம்குமாரின் தம்பி, என்னை சாதி பெயரைச் சொல்லி திட்டியதோடு, என் மனைவியைப் பற்றியும் தவறாகப் பேசினார்.

 

நீயெல்லாம் எதுக்குயா உசுரோட இருக்கிற…? மண்ணெண்ணெய் ஊத்திக்கிட்டு செத்துத் தொலைக்க வேண்டியதுதானேனு திட்டினாலதான் நான் செந்தில்குமார் வீட்டு முன்னாடியே போய் தீக்குளிச்சேன். நான் வாங்கிய கடனில் 30 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுத்துட்டேன். ஆனாலும், இன்னும் 2 லட்சம் ரூபாய் தரணும்னு சொன்னால் நான் என்ன செய்ய முடியும்? அதன்பிறகுதான் ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். பாதுகாப்பு கருதி என் வீட்டை விட்டு இப்போது வேறு ஒருவரின் வீட்டிற்கு குடும்பத்தோடு வந்துவிட்டேன்,” என்றார்.

 

ராஜ்குமார் தன்னிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராமல் காலம் தாழ்த்துவதாக பிரேம்குமார் கடந்த 3.4.2019ம் தேதி ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் முதலில் புகார் (சிஎஸ்ஆர் எண்.: 42/2019) அளித்துள்ளார். அதை நீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்வதாக முடித்து வைத்துள்ளனர். அதன்பிறகுதான் ராஜ்குமாரின் தீ க்குளித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதன்பேரில், 6.4.2019ல் ராஜ்குமாரும் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில்தான் மே 15ம் தேதியன்று, செ ந்தில்குமார் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது ஆத்தூர் நகர காவல்துறை.

 

அதாவது பிரேம்குமார் தற்கொலை செய்து கொண்ட பிறகு, அவசர அவசரமாக ஆய்வாளர் கேசவன், ஒரு மாதத்திற்கு முன்பு பெறப்பட்ட புகார் மனு மீது எப்ஐஆர் போட்டு கடமையை நிறைவேற்றியுள்ளார். இந்த நிலையில் ஆய்வாளர் கேசவன், ஆத்தூரில் இருந்தால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்பதால், அவரை பந்தோபஸ்து பணிக்காக ஊட்டிக்கு அனுப்பி வைத்திருக்கிறது சேலம் மாவட்ட காவல்துறை. மற்றொருபுறம், கேசவனின் லீலைகளை தோண்டித்துருவி எடுக்கும் வேலைகளையும் முடுக்கி விட்டிருக்கிறார் எஸ்பி தீபா கணிக்கர்.

 

இது ஒருபுறம் இருக்க, சம்பவம் நடந்து பத்து நாள்களுக்கு மேலாகியும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பில், இந்த வழக்கை காவல்துறை கிடப்பில் போட்டுவிட்டதோ என்ற ஐயமும் பிரேம்குமார் குடும்பத்தினர் தரப்பில் எழுந்துள்ளது. பிரேம்குமாரின் மகன் அரவிந்தன் தபால் மூலம் அளித்த புகாரின்பேரில், பிரேம்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக (வழக்கு எண்: 54/2019, சிஆர்பிசி பிரிவு 174) எப்ஐஆர் பதிவு செய்துள்ளது ஆத்தூர் காவல்துறை.

 

புகாரில், தனது சித்தப்பா மீது வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ஆய்வாளர் கேசவன், டிஎஸ்பி ராஜூ ஆகியோர் தலா 50 ஆயிரம் ரூபாயை தன் தந்தையிடம் பெற்றுக்கொண்டதாகவும், இப்பிரச்னையை சுமூகமாக பேசித்தீர்க்க மேலும் 5 லட்சம் ரூபாய் கேட்டு அவர்கள் குடைச்சல் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

அந்தப்புகார் மனு மே 15ம் தேதியே பெறப்பட்டுவிட்டாலும், ஆய்வாளர் கேசவனையும், டிஎஸ்பி ராஜூவையும் காப்பாற்றும் நோக்கில், பிரேம்குமார் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் பலவகையிலும் சரமரசம் செய்ய முயன்றுள்ளனர். இதில் கொஞ்சமும் பிரேம்குமார் குடும்பத்தினர் பிடி கொடுக்காததால்தான், எப்ஐஆர் முடிவுக்கே வ ந்துள்ளனர். அதனால் மே 19ம் தேதிதான், 15.5.2019ம் தேதியே எப்ஐஆர் போடப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளதும் நமது விசாரணையில் தெரிய வ ந்துள்ளது. பிரேம்குமார் எந்த இடத்தில் வைத்து விஷம் குடித்தார் என்பதை மிக கவனமாக குறிப்பிடாமல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எந்த கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கினார் என்பதையும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

இந்த வழக்கில் டிஎஸ்பியும் சம்பந்தப்பட்டிருப்பதால், சேலம் மாவட்ட ஏடிஎஸ்பி சுரேஷ்குமார் நேரடியாக விசாரித்து வருகிறார். டிஎஸ்பி ராஜூவிடம் கேட்டபோது, ‘என் மீது வேண்டுமென்றே பொய்யான புகாரை பிரேம்குமார் குடும்பத்தினர் கூறியுள்ளனர். விசாரணை முடிவில்தான் உண்மை தெரியவரும்,’ என்றார்.

 

இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக அப்போது, காவல் ஆய்வாளர் கேசவனின் கருத்து அறிவதற்காக அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்ச்சியாக பலமுறை முயற்சித்தோம். அவர் செல்போனை எடுக்கவில்லை. நிழல்முதல்வர் இளங்கோவனின் ஆசிகள் பெற்ற வசூல் சக்ரவர்த்தி கேசவன், எல்லாவற்றில் இருந்தும் எப்படியும் தப்பி விடுவார் என்கிறார்கள் காக்கித்துறையின் உள்விவரம் அறிந்தவர்கள்.

 

– பேனாக்காரன்