நெல்லையில் தீக்குளிப்பு: கந்து வட்டி கொடுமைக்கு தாய், மகள்கள் பலி; கணவர் கவலைக்கிடம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (அக். 23, 2017) காலை கந்துவட்டி கொடுமையால் விரக்தி அடைந்த கூலித்தொழிலாளி குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருடைய மனைவி, இரு மகள்கள் பரிதாபமாக பலியாயினர்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி (24). இவர்களுக்கு மதிசரண்யா (4), அக்ஷய சரண்யா (2) என்ற இரு பெண் குழந்தைகள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் இன்று நடந்து வருகிறது. இந்த முகாமில் மனு கொடுப்பதற்காக இசக்கிமுத்து குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார்.
மனுக்கள் கொடுக்கும் அரங்கு முன்பு திடீரென்று அவர்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டனர்.
...