Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம்! ‘கஷ்டத்தை கொடுத்துதான் கடவுளை நினைக்க வைக்க வேண்டுமா?’

‘ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம்
விமர்சகர்களின் கவனத்தை பெரிதும்
ஈர்த்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின்
இயக்கத்தில், மார்ச் 29, 2019ம் தேதி
வெளியாகி இருக்கிறது ‘சூப்பர் டீலக்ஸ்’.

மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ‘நான் லீனியர்’ படங்கள் அடுத்தடுத்து பரிச்சயமாயின. அதன்பின், வானம், நேரம், மாநகரம் ஆகிய படங்கள் வெவ்வேறு மூன்று அல்லது நான்கு கதைகள் தனித்தனியாக பயணித்து, இறுதியில் ஒரே புள்ளியில் இணைவது போன்ற படங்கள் அறிமுகமாகின. இரண்டாவது வகைமையிலானதுதான், சூப்பர் டீலக்ஸ். ஐந்து கதைகள் என்பதைக் காட்டிலும் ஐந்து நிகழ்வுகள் தனித்தனியாக நிகழ்கின்றன. ஆனால், அந்த நிகழ்வுகள் ஏதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருக்கின்றன. அவை தற்செயலானவை.

 

நடிகர்கள்:

 

விஜய் சேதுபதி
சமந்தா
பகத் பாசில்
காயத்ரி
மிஷ்கின்
ரம்யா கிருஷ்ணன்
பக்ஸ் என்கிற பகவதி பெருமாள்
சிறுவன் அஷ்வந்த்
மற்றும் பலர்.

 

தொழில்நுட்ப கலைஞர்கள்:

 

ஒளிப்பதிவு – நிரவ் ஷா, பி.எஸ்.வினோத்
இசை – யுவன்சங்கர் ராஜா
கலை – விஜய் ஆதிநாத்
இயக்கம் – தியாகராஜன் குமாரராஜா.

நிகழ்வு 1:

கல்லூரிக்கால காதலன், மனத்துயரத்தில் இருக்கிறான். அவனை கணவன் இல்லாத நேரம் பார்த்து தன் வீட்டுக்கு வரவழைக்கிறாள் வேம்பு (சமந்தா). வந்த இடத்தில் இருவரும் உடல் ரீதியாக கலந்துவிடுகின்றனர். அடுத்த சுற்றுக்கு தயாராகும்போது திடீரென்று அந்த காதலன் மாரடைப்பில் இறந்து விடுகிறான். இந்த நிலையில், வெளியே சென்றிருந்த கணவன் முகிலன் (பகத் பாசில்) வீட்டுக்கு திரும்பி வந்துவிட, மனக்கலக்கத்தில் இருக்கும் வேம்பு உண்மைகளைச் சொல்லி விடுகிறாள். சடலத்தை யார் கண்களிலும் படாமல் துண்டு துண்டாக வெட்டி ஆளரவமற்ற இடத்தில் வீசிவிட திட்டமிடுகின்றனர். இதைத் தெரிந்து கொண்ட உள்ளூர் உதவி காவல் ஆய்வாளர் பெர்லின் (பக்ஸ்), பிளாக்மெயில் செய்து, வேம்புவை அடையத் துடிக்கிறான்.

 

நிகழ்வு 2:

பெற்றோர் வீட்டில் இல்லாத சூழலில், ஐந்து விடலை சிறுவர்கள், நீலப்படம் பார்க்கத் திட்டமிடுகின்றனர். அப்படி நீலப்படத்தை பார்க்கும்போது அதில் சிறுவர்களில் ஒருவனின் தாயே நடித்திருப்பது தெரிய வருகிறது. சக நண்பர்கள் அதைப்பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்திலும், தாயின் மீதான கோபத்திலும் அந்த டி.வி.யை சிறுவன் உடைத்து விடுகிறான். இதனால் கலக்கம் அடையும் சிறுவர்கள், பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வருவதற்குள் புதிதாக ஒரு டி.வி.யை வாங்கி வைத்துவிட வேண்டும் என்று கிளம்புகின்றனர். இதற்காக அவர்கள் ஒருவரை கொலை செய்யவும், ஒரு மார்வாரி வீட்டில் திருடவும் திட்டமிடுகின்றனர்.

 

நிகழ்வு 3: மனைவி ஜோதி (காயத்ரி), மகன் ராசுக்குட்டி (சிறுவன் அஷ்வந்த்) மற்றும் சுற்றத்தாரை விட்டு திடீரென்று இரவோடு இரவாக வீட்டைவிட்டு ஓடிப்போன மாணிக்கம், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஷில்பா (விஜய் சேதுபதி) என்ற பெயரில் ஒரு திருநங்கையாக உருப்பெற்று வீடு திரும்புகிறான்.

 

நிகழ்வு 4:

நீலப்படத்தில் நடித்த தாய் லீலாவை (ரம்யா கிருஷ்ணன்) குத்திக் கொலை செய்து விட வேண்டும் என்ற வெறியில், கையில் ஸ்க்ரூ டிரைவருடன் மாடிப்படி ஏறும்போது கால் இடறியதில் அந்த சிறுவனின் வயிற்றில் ஸ்க்ரூ டிரைவர் குத்தி, உயிருக்குப் போராடுகிறான்.

 

நிகழ்வு 5:

கருத்து வேறுபாடுகளால் மனைவியைப் பிரிந்த தனசேகரன் (மிஷ்கின்), கடலில் குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கிறான். சுனாமி ஏற்பட்டபோது கையில் தட்டுப்பட்ட ஒரு சிலையை கெட்டியாகப்பிடித்துக் கொண்டதில் அவன் மீண்டும் உயிர் பிழைத்துக்கொள்கிறான். அதிலிருந்து அந்த கல்தான் கடவுள் என்று நம்பும் அவன், தனது பெயரையும் அற்புதம் என்று மாற்றிக்கொண்டு, நோயாளிகளை ஜெபத்தின் மூலம் குணப்படுத்துவதாகச் சொல்லி வழிபாடு நடத்துகிறான். அவனுக்கு, உலகமே அந்த சிலைதான் என்று வாழ்கிறான்.

 

இந்த ஐந்து நிகழ்வுகளும், அவற்றில் தொடர்புடைய பாத்திரங்களும் சிக்கலில் உழன்று கொண்டிருக்கின்றன. ஆனால், தற்செயலாக நிகழும் ஏதோ ஒன்றின் மூலம் அனைத்துப் பிரச்னைகளிலும் இருந்தும் அந்த பாத்திரங்கள் மீண்டு வருகின்றன. அதுதான் இந்தப்படத்தின் அற்புதமான திரைக்கதை.

 

பட்டாம்பூச்சி விளைவு:

 

இந்தப்படம், ஒரு பட்டாம்பூச்சி விளைவின் அடிப்படையில்தான் எழுதப்பட்டிருக்கிறது. கயாஸ் தியரி என்பார்களே, அதுதான். ஒரு வினையில் ஏற்படும் ஒரு சிறு மாற்றம், அதன் எதிர்வினைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் பட்டாம்பூச்சி விளைவு என்பது. அந்த உத்தியைத்தான் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் கையாண்டிருக்கிறார் இயக்குநர், தியாகராஜன் குமாரராஜா.

 

திரைமொழி எப்படி?

தமிழ் சினிமாக்களில் இதுவரை ஆகிவந்த வழமையான மரபுகளை உடைத்துக்கொண்டு, உள்ளதை உள்ளபடியே சொல்லி இருக்கிறது சூப்பர் டீலக்ஸ். இந்த உலகமே காமத்தில்தான் பிறக்கிறது. எல்லோருக்குள்ளும் காமம் இருக்கிறது. அது ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல. அதை பேசாமல் ஒளித்து வைக்க வேண்டிய கட்டாயமும் இல்லை என்பதை படம் நெடுகவே பேசுகிறார்.

 

உண்மைக்கு நெருக்கமாகச் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தினாலோ என்னவோ சகட்டுமேனிக்கு படத்தில் கெட்ட வார்த்தைகளும் புழங்குகின்றன. அந்த வகையில் இந்தப்படம், வயது வந்தவர்களுக்கு மட்டும்தான். தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழும் பெற்றே வெளியிட்டிருக்கிறார்கள்.

 

கல்லூரிக்கால காதலனுக்கு மருந்தாகவும், கணவனுக்கு கசப்பாகவும் தெரிவதனாலோ என்னவோ சமந்தா பாத்திரத்திற்கு வேம்பு என பெயரிட்டிருக்கலாம் என கருதுகிறேன். முதல் காட்சியிலேயே, அநாயசமாக அசத்தி இருக்கிறார் சமந்தா. அவர் கணவரிடம் உண்மையைச் சொல்லும்போதும், அதைக்கேட்கும் பகத் பாசிலும்கூட பெரிய அளவில் அலட்டிக்கொள்ளவில்லை. அப்படி இருப்பது அவர்களின் மேட்டிமை சிந்தனையாக இருக்கலாம். அல்லது, காமத்தையும் கற்பையும் எதற்காக புனிமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்ற புரிதலினால்கூட அப்படி சகஜமாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

 

லீலாவாக வரும் ரம்யா கிருஷ்ணன், ஆழமான அல்லது மாற்றுப்படங்களில் தவிர்க்க முடியாத கலைஞராக இருப்பார் என்பதற்கு இந்தப்படமும் சான்று. நீலப்படத்தில் தான் நடித்திருப்பதைப் பார்த்துவிட்ட மகனிடம், ‘லட்சம் பேர் பார்க்கிற படத்துல, நாலு பேரு நடிக்கத்தான் செய்வாங்க. பார்க்கறவங்களுக்கே இல்லாத குற்ற உணர்வு நடிக்கிறவங்களுக்கு எதுக்கு? எல்லாரும் வேலைக்குப் போற மாதிரி, நீலப்படத்தில் நடிப்பதும் எனக்கு ஒரு தொழில்தான்,’ என்று புரிய வைக்கிறார்.

 

தனசேகரன் என்ற பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மிஷ்கின். மகன் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும்போதுகூட தான் நம்பும் கடவுளை ஜெபித்தால் போதும், அவர் காப்பாற்றி விடுவார் என்று, அந்தச்சிலை முன்பாக மகனின் உடலைக்கிடத்தி வைத்து கடவுளிடம் மன்றாடும்போது நமக்கே அவர் மீது ஒருவித வெறுப்பு வருகிறது. இந்த ஆளு என்ன கிறுக்கனா? என்று திரை ரசிகர்களை கேட்க வைத்திருக்கிறார்.

 

ஒரு திருநங்கை, சமூகத்தில் சந்திக்கும் சிக்கல்களில் ஒன்று பாலியல் தொல்லை. அதை, உதவி காவல் ஆய்வாளர் பக்ஸூவே செய்யத் துடிக்கிறார். மகனின் அழைப்பின்பேரில் பள்ளிக்குச் செல்லும் ஷில்பா, அங்கே மகனுடன் படிக்கும் சிறுவர்களாலும், பள்ளி நிர்வாகியாலும் ஒரு நாயைப்போல துரத்தப்படுவதை எண்ணி மனம் குமுறுகிறார். ஷில்பா வேடத்தில் வழக்கம்போல் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி.

 

திருநங்கையாக இருந்தாலும் தந்தையிடம் கொஞ்சும் சிறுவன் அஷ்வந்த், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டு விடுகிறான். பல ஆண்டுகள் பிரிந்த கணவன், திருநங்கையாக வந்ததைக் கண்டு மகிழ்வதா? அழுவதா எனத் தெரியாமல் கலங்கித் தவிக்கும் பாத்திரத்தில் வந்து செல்கிறார் காயத்ரி.

 

பணி நேரம், காவல் நிலையம் என்றெல்லாம் வகைதொகை தெரியாமல் காமப்பித்தில் அலைகிறார் உதவி காவல் ஆய்வாளரான பெர்லின் (பக்ஸ்). வித்தியாசமாக சிரித்துக்கொண்டே வில்லத்தனம் செய்யும் அவர், பெரிதும் கவனிக்க வைக்கிறார். புது டிவி வாங்குவதற்காக தாதாவிடம் சிக்கிக்கொள்ளும்போதும், திருடுவதற்காக அவர்கள் செய்யும் சேட்டைகளும் ரசிக்க வைக்கின்றன. அந்த குண்டு பையனாக வரும் சிறுவன், ரொம்பவே அசத்தி இருக்கிறான்.

 

வசனங்கள் பளீச்!

 

படத்தில் பல இடங்களில் வசனங்கள்
கூர்மையாக இருக்கின்றன. படத்திற்கு
பெரிய பலமும்கூட. சில இடங்களில்
புதிய விவாதங்களையும் எழுப்புகின்றன.
உதாரணமாக, வேம்புவிடம்
முகிலன் பேசும்போது, ‘இங்கே தேசம்,
மொழி என்று வரும்போது பற்று
என்கிறார்கள். ஆனால் ஜாதி
என்று வரும்போது மட்டும் வெறி
என்கிறார்கள். அது பற்று என்றால்
இதுவும் பற்றுதானே?’ என புலம்புவார்.
இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை
என்பதையும் சொல்வார்.

இன்னொரு காட்சியில், லீலா
தனது மகனின் அறுவை சிகிச்சைக்கு
பணம் இல்லாமல் திண்டாடுவார்.
பலரிடம் உதவி கேட்டும் கிடைக்காது.
பிறகு, மருத்துவர்களின் கருணையால்
நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து,
மகனும் பிழைத்துக்கொள்கிறான்.
ஒரு லட்சம் பேரைக் கொன்ற சுனாமியில்
அந்தக்கல் தன்னை மட்டும் பிழைக்க
வைத்ததால், அதுதான் கடவுள் என
நம்பும் தனசேகரன், கடவுளிடம் மன்றாடியும்
மகனைக் காப்பாற்றுவதற்கான
நம்பிக்கை பிறக்கவில்லை.

 

கிளைமாக்ஸ் காட்சியில் லீலா,
‘நான் நம்பின டாக்டர், காசு வாங்காம
பையனுக்கு ஆபரேஷன் செய்து
பிழைக்க வெச்சுட்டாரு. நீ நம்பின
கடவுள் கடைசி வரைக்கும்
காசு கொடுக்கல,’ என்பார்.
இந்த வசனம் கடவுள்
நம்பிக்கை மீதான கேள்வியை
எழுப்புகிறது. அதேநேரம்,
கோபத்தில் தனசேகரன் அந்த
சிலையை கீழே தள்ளி உடைக்கும்போது,
அதிலிருந்து விலை உயர்ந்த வைரங்கள்
கொட்டுகின்றன. அந்தக் காட்சியின் மூலம்,
கடவுள் கைவிடமாட்டார் என
இயக்குநர் சொல்ல வருகிறாரா?
என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

 

மற்றொரு சூழலில், திருநங்கை ஷில்பாவும்
தனசேகரனும் சந்தித்துக்கொள்கின்றனர்.
தற்கொலை செய்து கொள்ள கடலில்
குதித்தபோது, சுனாமி வந்ததாகவும்,
அப்போது தானும் ஒரு கல்லைப் பிடித்து
உயிர் தப்பியதாகவும் கூறுகின்றாள் ஷில்பா.
அதே கல்லைத்தான் தனசேகரன் கடவுளாக
வழிபடுகிறார். ஆனால் ஷில்பாவோ,
அது வெறும் கல்தான். அது எங்கேயாவது
கிடக்கும் என்று சொன்னவாறே,
காணாமல் போன தனது குழந்தையை
தேடிச்சென்று விடுகிறாள். இங்கே,
ஒரே கல்தான் ஒருவருக்கு கடவுளாகவும்
மற்றொருவருக்கு வெறும் கல்லாகவும்
காட்சி அளிக்கிறது என்பதையும்
பதிவு செய்கிறார் இயக்குநார்.

 

இன்னொரு காட்சியில், நோயாளியான
தனது மகனை கிடத்திக்கொண்டு
உயிரைக்காப்பாற்றுமாறு தனசேகரனிடம்
வரும் ஒரு தாய், லட்சம் பேரைக் கொன்ற
சுனாமியில் அற்புதத்தை மட்டும் காப்பாற்றிய
கடவுள், ஏன் என் மகனை மட்டும் காப்பாற்ற
மாட்டேன்கிறார் என்று கேள்வி எழுப்புவார்.
அற்புதத்தின் உதவியாளராக வருபவர்,
வாழ்வில் கஷ்டங்கள் வருவதே
கடவுளை நினைக்கத்தான் என்பார்.
அதற்கு உடனடி எதிர்வினையாக,
‘கஷ்டத்தைக் கொடுத்துதான் கடவுள்
தன்னை நினைக்க வைக்க வேண்டுமா?’
என்பார் ஒருவர்.

 

ஒரு கட்டத்தில் மகனைக் காப்பாற்ற வக்கற்றுப் போகும் தனசேகரனிடம் அவருடைய உதவியாளர் ஒருவர் ஓடிவந்து, ‘அற்புதம்… யாருமே காசு கொடுக்க மாட்டேங்கிறாங்க அற்புதம். எங்களை எல்லாம் கடவுள் காப்பாற்றுவார்னு ஜெபம் பன்ற அற்புதம், இப்போ அவரோட மகனை காப்பாற்ற மட்டும் டாக்டர்கிட்ட போறாரேனு கேக்கறாங்க அற்புதம்…’ என்பார். அப்போது அவர், சில ரூபாய் தாள்களை நீட்டுவார். அதை புரிந்து கொள்ளும் அற்புதம், உன் பைக்கை வித்துட்டியா…? என்பார். இப்படி தொடர்ச்சியாக கடவுள் இருக்கிறாரா இல்லையா? ஆபத்தில் உதவும் மனிதன்தான் கடவுளா? என பல கேள்விகளை காட்சிகளின் வழியே எழுப்புகிறார், இயக்குநர். அதுகுறித்த புதிய உரையாடலுக்கும் கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

 

வள்ளுவம் பேசுகிறாரா?

 

ஒரு காட்சியில் முகிலனும், வேம்புவும் மின்தூக்கியில் சென்று கொண்டிருக்கின்றனர். திடீரென்று மின்தடை ஏற்பட்டு, மின்தூக்கி நின்று விடுகிறது. அப்போது பதற்றம் அடையும் முகிலனிடம், ‘எதுக்காக புலம்புறீங்க. கரண்டுதானே… சீக்கிரம் வந்துடும்,’ என்பார். அதற்கு முகிலன், ‘ஆமா இவ பெரிய பத்தினி… சொன்ன உடனே வந்துடும்…’ என்பார். அவர் சொல்லி முடிப்பதற்குள் மின்சாரம் வந்துவிடும்.

 

அதேபோல், வேம்புவை அடையத்துடிக்கும் பெர்லின், என் பொண்டாட்டி பத்தினி. அவ சாபமே பலிச்சதில்ல. உன் சாபமா பலிக்கப்போகுது? என வேம்புவிடம் கூறுவான். அவளை நெருங்கிச் செல்லும்போது, திடீரென்று மேற்கூரையை பெயர்த்துக்கொண்டு எல்இடி டிவி ஒன்று அவருடைய தலையில் விழுந்து அந்த இடத்திலேயே இறந்து போகிறார் பெர்லின். அதற்கு முன்னதாக, திருநங்கையிடம் தவறாக நடக்க முயற்சிக்கும்போது ஷில்பாவும் உதவி ஆய்வாளர் பெர்லினின் தலையில் அடித்து சாபம் விட்டுச் செல்வாள்.

 

பேராண்மை என்பது பிறன்மனை நோக்காமை என்பார் வள்ளுவர். பிறன் மனைவியை நெருங்குபவன், பகை, பாவம், அச்சம், பழி ஆகிய நான்கு குற்றங்களில் இருந்தும் ஒருபோதும் மீள முடியாது என்றும் சொல்கிறான் வள்ளுவன். அதனால்தானோ என்னவோ, கணவர் இல்லாதபோது வேம்புவிடம் நெறி தவறி நடந்து கொண்ட அவளின் பழைய காதலனும், தவறான வழியில் வேம்புவை அடையத்துடித்த உதவி ஆய்வாளர் பெர்லினும் கொல்லப்படுகின்றனர். வள்ளுவனின் அறத்தை, சூப்பர் டீலக்ஸ் இயக்குநரும் பேசுகிறாரோ என்பது என் கோணத்தில் பார்க்கிறேன்.

 

தொழில்நுட்பம் எப்படி?

 

படம் மூன்று மணி நேரம் ஓடினாலும் சலிப்பு ஏற்படாத வகையில் நேர்த்தியாக எடிட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. வேம்புவும், அவளுடைய முன்னாள் காதலனும் கலவியில் ஈடுபடும் காட்சியிலேயே, இரட்டை ஒளிப்பதிவாளர்கள் அந்த கட்டடத்தை ஒரு முழு சுற்று சுற்றி வருவதிலேயே கவனம் பெற்று விடுகின்றனர். மகனை தொலைத்துவிடும் அந்த குறுகலான சந்துகள் நிறைந்த இடத்தை படமாக்கிய விதத்தில், அந்தக் காட்சியின் தீவிரத்தை ரசிகர்களுக்கு ஒளிப்பதிவாளர்கள் இயல்பாக கடத்தி விடுகின்றனர். படத்துக்கு மற்றொரு பெரிய பலம், இசை. சொல்லப்போனால் இந்தப்படத்துக்கு பின்னணி இசை என்ற பெயரில் மெனக்கெடாமல் இருந்ததால்தான் இசை பேசப்படுகிறது. காட்சிகளுக்கேற்ப, பின்னணியில் இளையராஜாவின் பழைய பாடல்களை ஒலிக்க விட்டிருப்பது ஆகப்பொருத்தமாக இருந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் யுவன்சங்கர் ராஜா.

 

குழப்பும் காலவெளி:

 

கதை, எந்தக்கால வெளியில், எந்த ஊரில் நிகழ்கிறது என்பதில் எல்லா ரசிகர்களுக்குள்ளும் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒரே நாளில் நிகழும் கதைபோல்தான் காட்சிகள் நகர்கின்றன. அப்படி எனில், உதவி ஆய்வாளர் பக்ஸ், ஒரே நேரத்தில் காவல் நிலையத்திலும், வேம்பு தம்பதியை பின்தொடரும் காட்சிகளிலும் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மார்வாரி வீட்டில் திருடப்போகும் சிறுவர்கள் திடீரென்று ஏலியனை சந்திக்கும் காட்சி, படத்திற்கு சற்றும் பொருத்தமில்லாதது. என்றாலும் ‘டப்ஸ்மாஷ்’ மிருனாளினியை ஏலியனாக்கி அழகூட்டியிருக்கிறார் இயக்குநர்.

 

படுக்கை அறையில் தொடங்கி நீலப்படம் ஓடும் சூப்பர் டீலக்ஸ் திரையரங்கத்தில் முடிகிறது படம். இந்த உலகில் தவறு என்றோ, சரி என்றோ எதுவுமே இல்லை. இன்று சரி என கருதப்படுவது, நாளை தவறு என கருதப்படும். அந்தந்த சூழ்நிலையில் நிகழ்வதை ஏற்று, அதற்கேற்ப வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என்பதை புதிய கோணங்களில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

 

– வெண்திரையான்.
பேச: 9840961947