Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…!” சிறுமியை கொன்ற தினேஷ்குமார் உளறல்!

– சிறப்பு செய்தி –

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த சிறுமி ராஜலட்சுமியை (14), வீடு அருகே வசிக்கும் தினேஷ்குமார் (25), கடந்த 22.10.2018ம் தேதி இரவு கழுத்து அறுத்து படுகொலை செய்தார். தலை வேறு, உடல் வேறாக வீசியெறிந்த சம்பவம் பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.

 

கொடுவாளால் வெட்டி கொலை

முதல் தகவல் அறிக்கையில் கொலையாளி தினேஷ்குமார், சம்பவத்தன்று சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும், அதை தன் தந்தையிடம் சொல்லி விடுவதாகக்கூறிவிட்டு சிறுமி ஓடியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொடுவாளால் வெட்டி கொலை செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

கொலையாளியின் மனைவி சாரதாவோ, கதிர் அறுக்கும் வாகன ஓட்டுநரான தன் கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அக். 20ம் தேதி முதல், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார் என்றும், தான் என்ன செய்கிறோம் என்று அவருக்கே தெரியவில்லை என்றும் கூறினார்.

 

போக்ஸோ சட்டப்பிரிவு

 

தினேஷ்குமாரை கைது செய்த ஆத்தூர் டவுன் போலீசார், தினேஷ்குமாரிடம் ‘எல்லா வகையிலும்’ விசாரித்துப் பார்த்தும் உருப்படியான தகவல்களை வாங்க முடியவில்லை என்றனர். அந்த நிலையிலேயே அவரை அக். 24ம் தேதியன்று, சேலம் மத்திய சிறையிலும் அடைத்துவிட்டனர்.

 

இந்த வழக்கை நேரடியாக விசாரித்த டிஎஸ்பி பொன்.கார்த்திக்குமார், தினேஷ்குமார் மனநலம் பாதித்தவர் இல்லை என்றும், கொலை குற்றத்திற்கான பிரிவுகள் மட்டுமின்றி வன்கொடுமை தடுப்பு மற்றும் போக்ஸோ சட்டப்பிரிவிலும்கூட அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகச் சொன்னார்.

 

மனச்சிதைவு

 

சேலம் மத்திய சிறையில், லேசாக மனச்சிதைவு அடைந்த 8 கைதிகள் இருக்கும் அறையில்தான், தினேஷ்குமாரையும் அடைத்திருப்பது நமது விசாரணையில் தெரிய வந்தது. சிறைக்குள்ளும் அவர் எதுவுமே பேசவில்லை என்கிறார்கள் காவலர்கள். அடிக்கடி மீசையை மட்டும் லேசாக முறுக்கிக் கொண்டே இருப்பாராம்.

 

இந்நிலையில், தினேஷ்குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அவரை வியாழக்கிழமை (நவ. 1) சேலம் அரசு மருத்துவமனைக்கு சிறைத்துறை போலீசார் அழைத்து வந்தனர்.

 

மருத்துவ பரிசோதனை
நவ. 1ம் தேதியன்று மருத்துவ பரிசோதனைக்கு…

இடதுகால் பாதத்தில் காயம் ஏற்பட்டு, அதற்கு கட்டுப்போடப்பட்டு இருந்தது. வலது கை மணிக்கட்டுக்கு சற்று மேல்ப குதியிலும் காயம் இருந்தது. கருநீல நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற அரைக்கால் டிரவுசரும் அணிந்திருந்தார். காது, மூக்கு, தொண்டை, நரம்பியல், மனநலப்பிரிவு ஆகிய துறைகளில் தினேஷ்குமாருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர், சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது.

 

காது, மூக்கு, தொண்டை பிரிவில் அவரை பரிசோதித்த மருத்துவர், பெயர் என்ன? என்று கேட்டபோது, ‘தினேஷ்குமார்’ என்றும் எந்த ஊர்? என்று கேட்டதற்கு, ‘ஆத்தூர்’ என்றும் பதில் அளித்தார். செவித்திறனும், பேச்சுத்திறனும் நன்றாக இருப்பதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர்.

 

பேட்ஜை பறிக்க முயற்சி

 

இதையடுத்து அவரை சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக போலீசார் அழைத்துச்சென்றனர். சி.டி. ஸ்கேன் எடுக்க 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறினர். ஆனால், அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரிடம் அத்தொகை இல்லாததால், சிறை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, இதுகுறித்த விவரங்களைக் கூறினர்.

 

இதனால், சி.டி. ஸ்கேன் எடுக்கும் அறையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கைதியுடன் போலீசார் காத்திருந்தனர். அந்த அறையில் அமர வைக்கப்பட்டிருந்தபோது, பாதுகாப்புக்கு வந்த சிறைக்காவலர் சீருடையில் தோள்பட்டையில் மாட்டப்பட்டிருக்கும் ‘TNP’ எழுத்துகள் கொண்ட பேட்ஜை தினேஷ்குமார் அடிக்கடி பறிக்க முயற்சித்தார்.

 

தனக்குத்தானே…

 

பின்னர் திடீரென்று ஏதேதோ பேசத் தொடங்கினார். அப்போது அவர், ‘சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…. ராஜலட்சுமி… சாரதாவுக்கு வண்டி வாங்கணும்… நான், சாரதா, மச்சான் நாலு பேரு…. கேடிஎஸ்…. மெக்கானிக் மாரிமுத்து…’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார்.

 

மேலும் அவர், ‘எனக்கு இந்த போலீச தெரியும்…’ என்று கூறியபடி, பாதுகாப்புக்கு வந்திருந்த சிறைக்காவலர் ஒருவர் மீது பாய்ந்தார். போலீசார் அவரை தோள்பட்டையைப் பிடித்து அமுக்கி இருக்கையில் உட்கார வைத்தனர்.

 

திடீரென்று அவர், ‘சாரதாகிட்ட பேசணும்…’ என்று சொன்னதோடு, அவருடைய செல்போன் எண்ணையும் மிகத்தெளிவாக தமிழில் சொன்னார்.

 

மனநல மருத்துவரிடம் பரிசோதனை
நவ. 3ம் தேதியன்று மருத்துவ பரிசோதனைக்கு…

சி.டி. ஸ்கேன் எடுக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஆனதால், நோயாளிகள் அறையில் போலீசார் தினேஷ்குமாருடன் காத்திருந்தனர். அப்போது அவர் தொடர்ச்சியாக ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் அவர் பேசுவது யாருக்கும் புரியவில்லை. பல சொற்கள் தொடர்ச்சியற்று இருந்தன.

 

அதன்பிறகு, மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்துச்சென்றனர். மருத்துவ பரிசோதனைகள் முடிந்தபிறகு, போலீசார் மீண்டும் தினேஷ்குமாரை சேலம் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர். இந்நிலையில், அவர் மீது ஆத்தூர் டவுன் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்துள்ளனர்.

 

இதற்கிடையே, சனிக்கிழமை காலை தினேஷ்குமாரை (03.11.2018) மீண்டும் மருத்துவ பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்திருந்தனர். உடலில் பல இடங்கள் கன்றிப்போய் இருந்தன. பாதுகாப்புக்கு வந்த போலீசார் ‘அவன், பித்து பிடித்ததுபோல் நடித்து நம் எல்லோரையும் பைத்தியக்காரனாக்குகிறான்,’ என்றனர்.

 

இழப்பீடு

 

இது ஒருபுறம் இருக்க, கொலையுண்ட சிறுமியின் குடும்பத்திற்கு கடந்த 24ம் தேதியன்று அரசுத்தரப்பில் இருந்து ரூ.412500 இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

 

கொலையாளி தினேஷ்குமாரின் மனைவி சாரதாவையும், அவருடைய தம்பி சசிகுமாரையும் விசாரணைக்கு உட்படுத்தினால் கொலைக்கான உண்மை காரணம் தெரிய வரலாம் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

 

– செங்கழுநீர்