Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

சேலம் மக்களவை தொகுதியில்
திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன்,
வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019)
வேட்புமனு தாக்கல் செய்தார். அவர்,
தன் பெயரிலும், மனைவி பெயரிலும்
ரூ.6 கோடி சொத்துகள் இருப்பதாக
கணக்கு விவரங்களை
தாக்கல் செய்துள்ளார்.

 

மக்களவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பரப்புரையை தொடங்கியுள்ளன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் பரவலாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) மதியம், சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் ஆகிய நான்கு பேரும் வேட்புமனு தாக்கலின்போது உடனிருந்தனர். எஸ்.ஆர்.பார்த்திபனின் மனைவி கிருஷ்ணவேணி, மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார்.

 

எஸ்.ஆர்.பார்த்திபன் 17 பக்கங்கள் கொண்ட சொத்துக்கணக்கு விவரங்கள் அடங்கிய படிவம்&26ம், இத்துடன் தாக்கல் செய்துள்ளார்.

 

அசையும் சொத்துகள் விவரம்:

 

தன் கையிருப்பாக 1.20 லட்சம் ரூபாய், மனைவியின் கையிருப்பு 38000 ரூபாய், மகன் தயாநிதியின் கையிருப்பு 2000 ரூபாய், மற்றொரு மகன் நிரஞ்சன் கையிருப்பு 500 ரூபாய் என்று கணக்கில் தெரிவித்துள்ளார். பரோடா வங்கியில் தன் பெயரில் 967317 ரூபாய், மனைவி பெயரில் 38 ஆயிரம் ரூபாய், இந்தியன் வங்கி கணக்கில் தன் பெயரில் 62255 ரூபாய் வைத்துள்ளார்.

 

அஸ்தம்பட்டி யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளையில், கிரீன்வேலி ஸ்போர்ட்ஸ் கிளப் கணக்கில் 230045 ரூபாயும், பெடரல் வங்கியில் 3217 ரூபாயும் இருப்பு வைத்துள்ளார். தன் பெயரில் ரூ.25 லட்சத்துக்கான எல்ஐசி பாலிசியில் இதுவரை 10.81 லட்சம் பிரீமியம் செலுத்தியுள்ளார். அவருடைய மனைவி கிருஷ்ணவேணி எல்ஐசி பாலிசியில் 216500 பிரீமியம் செலுத்தியுள்ளார்.

 

சொந்தமாக ரூ.28.29 லட்சம் மதிப்பிலான பார்ச்சூனர் கார், ரூ.17 லட்சம் மதிப்பிலான இன்னோவா காரும் வைத்திருக்கிறார். அவருடைய மனைவி ரூ.4 லட்சத்தில் ஸ்விப்ட் கார் வைத்திருக்கிறார். பார்த்திபன் பாதுகாப்புக்காக உரிமம் பெற்று, ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கைத்துப்பாக்கி வைத்திருக்கிறார். ஆகமொத்தம், எஸ்.ஆர்.பார்த்திபன் தன் பெயரில் 72 லட்சத்து 26 ஆயிரத்து 834 அசையும் சொத்துகளாகவும், அவருடைய மனைவி கிருஷ்ணவேணி 21 லட்சத்து 89 ஆயிரத்து 642 ரூபாய் அசையும் சொத்துகளும் வைத்துள்ளனர். அவர்களுடைய மூத்த மகனிடம் ரூ.126256ம், இரண்டாவது மகனிடம் ரூ.6550ம் அசையும் சொத்துகள் இருப்பதாகவும் அபிடவிட்டில் சொல்லப்பட்டு உள்ளது.

 

அசையா சொத்துகள் விவரம்:

 

சேலம் எருமாபாளையத்தில் ச.எண்.: 426/2, 424/2, 424/5, 402/2ஜி, 426/3, 402/2ஏ ஆகியவற்றில் மொத்தம் 5.85 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், மனைவி பெயரில் எருமபாளையத்தில் சர்வே எண்.: 402/1, 402/2ஜே, 4.2/2எம்40, 2/2கே, 402/2எல் ஆகியவற்றில் 3.18 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளதாகச் சொல்லப்பட்டு உள்ளது. எருமாபாளையத்தில் கிரீன் வேலி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் உணவுக்கூடம், ஆர்சிசி கட்டடம் கட்டுமானப் பணிகளில் ரூ.4523000 முதலீடு செய்துள்ளதாக பார்த்திபனும், அவருடைய மனைவி அதே ஸ்போர்ட்ஸ் கிளப் மேம்பாட்டுக்காக ரூ.4327000 லட்சம் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

அதாவது, பார்த்திபன் பெயரில் மேற்சொன்ன சர்வே எண்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவசாய நிலத்தின் இன்றைய தோராய சந்தை மதிப்பு ரூ. 7463000 லட்சம் என்றும், அவருடைய மனைவி பெயரில் உள்ள விவசாய நிலங்களின் இன்றைய தோராய சந்தை மதிப்பு ரூ.60 லட்சம் என்றும் காட்டப்பட்டுள்ளது.

 

இவை தவிர வணிகப்பிரிவின் கீழ் ஏற்காட்டில், தி ஏற்காடு ரெயின் ட்ரீஸ் ரிசார்ட் மற்றும் சேலம் எம்டிஎஸ் நகரில் இரண்டு வீடுகள் என மொத்தம் 1.55 கோடிக்கு சொத்துகள் உள்ளன.

 

ரூ.6 கோடிக்கு சொத்து!

 

அதாவது பார்த்திபன் பெயரில்
அசையும் சொத்துகள் ரூ.7226834
மற்றும் அசையா சொத்துகள் ரூ.42718000
என மொத்தம் 4 கோடியே 99 லட்சத்து
44 ஆயிரத்து 834 ரூபாயும்,
அவருடைய மனைவியின் பெயரில்
அசையும் சொத்துகள் ரூ.2189642,
அசையா சொத்துகள் ரூ.7778300
என மொத்தம் ரூ.9967942 உள்ளது.
மூத்த மகன் பெயரில் ரூ.12256,
இரண்டாவது மகன் பெயரில் ரூ.6550ம்
அசையும் சொத்துகளாக உள்ளன.

ஆக மொத்தத்தில், எஸ்.ஆர்.பார்த்திபன்
தன் பெயரிலும், மனைவி, மகன்கள்
பெயர்களிலும் அசையும் மற்றும்
அசையா சொத்துகளாக ரூ.6 கோடியே
45 ஆயிரத்து 582 உள்ளதாக
அபிடவிட்டில் கணக்கு காட்டியுள்ளார்.

 

எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு எருமாபாளையத்தில் உள்ள விவசாய நிலங்களை தனியாருக்கு கிரஷர் நடத்த வாடகைக்கு விட்டதன் மூலம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாயும், ஏற்காட்டில் உள்ள ரிசார்ட் மூலம் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வாடகை வருமானம் வருவதாகவும் சொல்லப்பட்டு உள்ளது. வாடகை வருமானம் மட்டுமின்றி, விவசாயம் மற்றும் வழக்கறிஞர் தொழில் மூலமும் வருமானம் கிடைப்பதாக அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய மனைவிக்கு, சொந்தமாக கேபிள் டிவி நெட்வொர்க் நிறுவனம் நடத்தி வருவதன் மூலம் வருமானம் வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

கடன் பொறுப்புகள்:

 

பரோடா வங்கியில் பார்ச்சூனர் கார் வாங்குவதற்காக பெற்ற கடன் நிலுவை ரூ.2462091ம், தனி நபர் கடன் நிலுவை ரூ.10 லட்சமும், எல்ஐசி பாலிசி மூலம் பெற்ற கடன் ரூ.75500ம் செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல அவருடைய மனைவி ஹெச்டிஎப்சி வங்கியில் தனி நபர் கடனாக ரூ.4 லட்சம், எல்ஐசியில் ரூ.36500, மகன் தயாநிதி எல்ஐசியில் ரூ.65750ம் கடன் பெற்று செலுத்த வேண்டியுள்ளது. அதாவது பார்த்திபனுக்கு ரூ.3537591ம், அவருடைய மனைவிக்கு ரூ.436500ம், மகனுக்கு ரூ.67750ம் கடன் பொறுப்புகள் உள்ளன.

 

கடந்த 2018-2019 ஆண்டில் எஸ்.ஆர்.பார்த்திபன் ரூ.419978ம், தன் மனைவி ரூ.1142630 என வருமானம் ஈட்டியதாக வருமான வரிக்கணக்கு விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

 

வழக்கு இல்லை:

 

இவர் மீது குற்ற வழக்குகள் எதும் நிலுவையில் இல்லை. இரண்டு வழக்குகள் குற்றச்சாட்டு சொல்லப்பட்டு நிலையில், எப்ஐஆர் போடப்படாமல் உள்ளது குறிப்பிடத்த க்கது.

 

-பேனாக்காரன்