Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு – 2018 எழுத உள்ள தனித்தேர்வர்கள், வரும் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு 2018ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20ம் தேதி வரை நடக்கிறது. முதன்முதலாக எஸ்எஸ்எல்சி தேர்வு எழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள் வரும் 22.12.2017ம் தேதி முதல் 29.12.2017ம் தேதி வரை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுத்தேர்வு சேவை மையத்திற்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கலாக மற்ற அனைத்து வேலை நாள்களிலும் இந்த மையம் செயல்படும்.

முதன்முறையாக தேர்வு எழுதினாலும் அனைத்து பாடத்தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட நாள்களில் பதிவு செய்யாமல் தவறவிட்டவர்கள், 2.1.2018ம் தேதி முதல் 4.1.2108ம் தேதி வரை தட்கல் முறையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநரக அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக்கட்டணம் ரூ.125 மற்றும் பதிவுக்கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175 செலுத்த வேண்டும்.

அதேபோல், ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத்தேர்வில் கலந்து கொள்ளாத தனித்தேர்வர்களும் வரும் 22ம் தேதி முதல் 29ம் தேதிக்குள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நேரில் சென்று தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டும்.

செய்முறைத் தேர்வுக்கான விண்ணப்ப மாதிரி, அரசுத்தேர்வுத்துறை இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து வரும் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்முறைத் தேர்வு தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் விவரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சேலம் மாவட்ட தனித்தேர்வர்கள் 0427 2411610 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.