Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஊழலை அம்பலப்படுத்தினால் தண்டனை; அடக்கி வாசித்தால் புரமோஷன்! பெரியார் பல்கலை வகுத்த புதிய சிலபஸ்!! #PeriyarUniversity #Scam

ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தினால் தண்டனையும், தில்லுமுல்லுகளை கண்டும்காணாமல் அடக்கி வாசித்தால் பதவி உயர்வும் வழங்கும் விந்தையான நடைமுறைகளை பெரியார் பல்கலையில் பின்பற்றப்படுவது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

 

பெரியார் பல்கலை

 

சேலம் பெரியார் பல்கலை 28 துறைகளுடன், 101 கல்லூரிகள் இணைவுடன் இயங்கி வருகிறது. பல்கலையில், 150க்கும் மேற்பட்ட உதவி / இணை / பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

இப்பல்கலையில் 2014ம் ஆண்டு ஜூன் முதல் 2017 ஜூன் வரை மூன்று ஆண்டுகள் சுவாமிநாதன் என்பவர் துணைவேந்தராக பணியாற்றி வந்தார். அவர் பணியில் இருந்த காலக்கட்டத்தில் பெரியார் பல்கலை மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உதவி பெறும் கல்லூரிகளில் 136 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

 

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொருவரிடம் இருந்தும் 25 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கியதாக சுவாமிநாதன் மீது பரவலாக புகார்கள் எழுந்தன.

 

லஞ்ச ஒழிப்பு காவல்துறை
சுவாமிநாதன்

இது ஒருபுறம் இருக்க, 33 உதவி பேராசிரியர்களிடம் அவர்கள் முன்பு உதவிபெறும் / சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றிய காலத்தையும் பதவி உயர்வுக்கான காலமாக கணக்கில் எடுத்துக்கொள்வதற்காக, அவர்களிடம் இருந்து தலா 3 லட்சம் ரூபாய் கையூட்டு பெற்றதாகவும் சுவாமிநாதன் மீது புகார்கள் எழுந்தன.

 

இந்த ஊழல்கள் குறித்து விசாரிக்குமாறு சுவாமிநாதன் மீது சேலம் மண்டல லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு பெரியார் பல்கலையில் பொருளியல் துறையில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியர் வைத்தியநாதன் பகிரங்கமாக ஒரு புகார் மனுவை தட்டிவிட்டார்.

 

அந்தப் புகார் மனுவில், தனக்கும் உரிய கல்வித்தகுதி, முந்தைய பணி அனுபவங்கள் இருந்தும் தன்னிடமும் பணம் கேட்டதாகவும், தர மறுத்ததால் பதவி உயர்வுக்கு தனது பெயரை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மறுத்ததாகவும் கூறியிருந்தார்.

 

உயர்கல்வித்துறை செயலர்

 

புகாரில் சொல்லப்பட்ட சங்கதிகள், உயர்கல்வித்துறை தொடர்பானது என்பதால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இது தொடர்பாக விசாரிக்குமாறு அப்போதைய உயர்கல்வித்துறை செயலர் சுனில்பாலிவாலுக்கு கடிதம் அனுப்பி வைத்தனர். அவரோ, இந்தப் புகார் குறித்து விசாரிக்கும்படி யார் மீது புகார் கூறப்பட்டதோ அவருக்கே, அதாவது சுவாமிநாதனுக்கே புகார் மனுவை திருப்பி விடுகிறார்.

 

உதவி பேராசிரியர் வைத்தியநாதன்
வைத்தியநாதன்

இதனால் பதவி உயர்வுக்காக பணம் கொடுத்த ஆசிரியர்கள் மட்டுமின்றி, அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதனும் வைத்தியநாதன் மீது உச்சக்கட்ட கடுப்பில் இருந்தனர். இந்த நிலையில்தான், 29.3.2017ம் தேதியன்று, பெரியார் பல்கலை ஊழல் குறித்து, திருச்சியில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில், உதவி பேராசிரியர் வைத்தியநாதன் கூறியதாக ஒரு செய்தி வெளியானது.

 

இதையடுத்து பல்கலை விதிகளுக்கு மாறாக பத்திரிகைக்கு பேட்டி அளித்ததாகவும், அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தது குறித்தும் உதவி பேராசிரியர் வைத்தியநாதனிடம் பல்கலை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன், 4.4.2017ம் தேதி வைத்தியநாதனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

 

இதன்பிறகு, லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு மீண்டும் ஒரு புகார் மனுவை வைத்தியநாதன் அனுப்பினார். அதில், புகார் குறித்து லஞ்ச -ஒழிப்புத்துறை ரகசியம் காக்க தவறியதாகவும், பல்கலையில் குறுக்கு வழியில் பதவி உயர்வு பெற முயன்ற 15 உதவி பேராசிரியர்கள் தன்னை தாக்க வந்ததாகவும் தெரிவித்து இருந்தார். வ-ழக்கம்போல் இந்த மனுவும் அங்கிருந்து உயர்கல்வித்துறைக்கும், அங்கிருந்து பின்னர் பெரியார் பல்கலைக்கழகத்திற்கும் வந்து சேர்ந்தது.

 

சஸ்பெண்ட் உத்தரவு

 

மேலும் வைத்தியநாதன், சஸ்பெண்ட் உத்தரவு மீது ஆறு மாத காலத்திற்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு தமிழக ஆளுநர் பன்வாரியால் புரோகித்துக்கு ஒரு மனு அளித்தார். அவருடைய உத்தரவின்பேரில், வைத்தியநாதன் மீதான சஸ்பெண்ட் உத்தரவு 20.11.2017ம் தேதி ரத்து செய்யப்பட்டது.

 

ஒரு நபர் விசாரணைக்குழு

 

இதற்கிடையே, வைத்தியநாதன் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சாத்தப்பிள்ளை தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. சாத்தப்பிள்ளையின் மருமகள், பெரியார் பல்கலையில் பிஹெச்.டி படித்து வரும் நிலையில், அவருடைய தலைமையில் விசாரணைக்குழு அமைப்பதே சட்டத்திற்கு புறம்பானது என்று வைத்தியநாதன் எதிர்ப்பு தெரிவித்தார்.

 

இந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை, உயர்கல்வித்துறை செயலர் ஆகியோரும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவர்களிடமும் குறுக்கு விசாரணை செய்ய அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்றும் முறையிட்டார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன், பதிவாளர் மணிவண்ணன் ஆகியோர், முன்னாள் நீதிபதி சாத்தப்பிள்ளை தலைமையில் 13 அமர்வுகளில் விசாரணையை முடித்தனர். விசாரணை, கடந்த பிப்ரவரி மாதம் முடிந்தது.

 

பத்திரிகைக்கு வைத்தியநாதன் பேட்டி அளிக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட நாளிதழின் செய்தியாளரே நேரில் வந்து வாக்குமூலம் அளித்தார். அதை சாத்தப்பிள்ளையும் பதிவு செய்திருக்கிறார். ஒரு நபர்குழு விசாரணை அறிக்கை, கடந்த ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், வைத்தியநாதன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டது என்று ஓய்வுபெற்ற நீதிபதி சாத்தப்பிள்ளை பதிவு செய்திருந்தார்.

 

இன்கிரிமென்ட் நிறுத்தம்

இந்நிலையில், கடந்த 29.9.2018ம் தேதி பெரியார் பல்கலையில் 101வது சிண்டிகேட் குழு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட தீர்மானத்தின்படி, உதவி பேராசிரியர் வைத்தியநாதனுக்கு ஒரு இன்கிரிமென்ட்டை நிறுத்தி வைத்து பல்கலையின் இப்போதைய துணைவேந்தர் குழந்தைவேல் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, வைத்தியநாதனின் ஒட்டுமொத்த தர ஊதியம் (ஏஜிபி) ரூ.8000ல் இருந்து ரூ.7000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு குறைக்கப்பட்டதால், அவருடைய ஐந்து ஆண்டு பணி அனுபவமும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இதுகுறித்து உதவி பேராசிரியர் வைத்தியநாதனிடம் கேட்டபோது விரிவாகவே பேசினார்.

 

”நான் பத்திரிகைக்கு செய்தி கொடுத்ததாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இதை, விசாரணைக்குழு தலைவரான சாத்தப்பிள்ளையும் பதிவு செய்துள்ளார். அப்படி இருந்தும், சஸ்பெண்ட் செய்யப்பட்டதிலும், ஊதிய உயர்வு பிடித்தம் செய்யப்பட்டதிலும் அதையும் ஒரு குற்றச்சாட்டாக குறிப்பிட்டுள்ளனர். இதில் இருந்தே பெரியார் பல்கலை நிர்வாகம் என் மீது ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 

போலி சான்றிதழ்

 

முந்தைய பணி அனுபவத்தை கணக்கில் கொள்ள அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன் என்னிடமும் பணம் கேட்டார். முறையான தகுதிகள் இருக்கும்போது எதற்கு பணம் தர வேண்டும் எனக்கூறி, அதற்கு மறுத்துவிட்டேன். 33 உதவி பேராசிரியர்களிடம் சுவாமிநாதன் பணம் வாங்கியதும், அந்தத்தொகை உதவிபேராசிரியர் திருமூர்த்தியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதற்கும் ஆதாரம் இருக்கின்றன. மேலும், பணம் கொடுத்த 33 உதவி பேராசிரியர்களின் முந்தைய பணி அனுபவ சான்றிதழ்களும் போலியானவை என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

 

இதுகுறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு என் பெயரில் புகார் மனுவை அனுப்பினேன். அதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பியது, என் புகார் குறித்து விசாரிக்க உயர்கல்வித்துறை செயலர் அனுப்பிய கடிதம், நடத்தை விதிகளை மீறியது என நான்கு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி எனக்கு இப்போது ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு உள்ளது.

 

சம்பளமும் ரத்து

மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த காலத்தை ஊதியமல்லாத விடுப்பு காலமாக கருதி, 230 நாள்களுக்கு உரிய சம்பளமும் ரத்து செய்யப்படுவதாக இன்று (அக்டோபர் 12, 2018) உத்தரவிட்டுள்ளனர். என் மீதான எந்த குற்றச்சாட்டும் முறையாக விசாரிக்கப்படவில்லை. அவை நிரூபிக்கப்படவும் இல்லை, மேலும், ஒரே குற்றச்சாட்டுக்கு இரண்டு தண்டனைகளை அளித்துள்ளனர்.

 

இந்தப் பல்கலையில், பணி நியமனங்களில் 200 புள்ளி இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. அதன்படி பார்த்தால் 50 சதவீத பேராசிரியர்கள் பதவியை இழக்க நேரிடும். போலி அனுபவ சான்றிதழ்கள் கொடுத்தவர்கள், முறையான கல்வித்தகுதி இல்லாதவர்கள் மீது நித்தம் நித்தம் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

 

அதைப்பற்றி எல்லாம் விசாரிக்காத பெரியார் பல்கலை துணைவேந்தர், தவறுகளை சுட்டிக்காட்டியதால் என்மீது காழ்ப்புணர்வுடன் முடிவெடுத்துள்ளார். பல்கலையின் ஒருதலைப்பட்சமான முடிவு, கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கு தூண்டும் வகையில் இருக்கிறது. என் மீதான நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்,” என்றார் வைத்தியநாதன்.

 

என்ன சொல்கிறார் துணைவேந்தர்?
துணைவேந்தர் குழந்தைவேல்

இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேலிடம் கேட்டோம்.

 

”வைத்தியநாதன் முன்பு சஸ்பெண்ட் ஆகியிருந்தார். நான் இந்தப் பல்கலையில் துணைவேந்தர் ஆவதற்கு முன்பே ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்தக்குழுவின் அறிக்கையின்படி சிண்டிகேட் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

அவருக்கு சட்டப்படியான எல்லா வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டு விட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் இல்லை என்றுதான் பதில் சொன்னார். பலர் அவருக்கு இரண்டு ஊதிய உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர். நான்தான் அவர் நலன் கருதி, ஒரு ஊதிய உயர்வை மட்டும் நிறுத்தம் செய்ய பரிந்துரைத்தேன்.

 

பெண் பேராசிரியர்கள் பலரும் தங்களைப் பற்றி பத்திரிகைகளில் செய்தி வருவதாக அவர் மீது புகார் தெரிவித்தனர். இதில் நான் என்ன பண்ண முடியும்?. கவர்ன்மெண்ட் வேலையில் இருக்கும்போது நாமளும் அந்த ரூல் படிதான் போகணும்ல… கவர்மெண்டு தூங்கிட்டு இருக்கற வரைக்கும் தூங்கிட்டு இருக்கும். எழுந்திருச்சினா நம்மாள தாக்குப்பிடிக்க முடியுமா? இந்த அசோசியேஷன் ஆளுங்களும் pressurise பண்றாங்க.

 

வைத்தியநாதன் மனைவியை நேரில் அழைத்து அவரிடமும் இரண்டு மணி நேரம் பேசினேன். I told her everything clearly. Continues harassment-னா நம்மாளயும் தாங்க முடியாதுல… அந்த ஆளையும் அழைத்து சமாதானம் பேசினேன். ஒரு ஆள் whole university-யையும் டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருந்தா என்ன செய்யறது?,” என்கிறார் துணைவேந்தர் குழந்தைவேல்.

 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, 2015-2016 தணிக்கை அறிக்கையில் பல உதவி / இணை / பேராசிரியர்கள் மீது போலி சான்றிதழ், போதிய கல்வித்தகுதி இல்லாதது போன்ற குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும், தணிக்கை அறிக்கையில் சுட்டப்பட்டவர்கள் மீது இதுவரை பல்கலை நிர்வாகம் யாதொரு நடவடிக்கையும் எடுக்காததும் அய்யங்களை எழுப்பியுள்ளது.

 

தவறுகளை தட்டிக்கேட்போரை தண்டிப்பதில் காட்டும் வேகத்தை, சொல்லப்படும் புகார் குறித்து விசாரித்து மெய்ப்பொருளை காண்பதில்தான் பெரியார் பெயரில் அமைந்த பல்கலைக்கு நியாயம் சேர்ப்பதாக அமையும் என்பதையும் பல்கலை நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

– பேனாக்காரன்.