(பூவனம்)
சேலம் மோகன் நகரைச் சேர்ந்த தோழர் சுகபாலாவின் இரண்டாவது படைப்பு, ‘பச்சையப்பாத்திரம்’. அள்ள அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரம் பற்றியே முழுமையாக அறிந்திடாத நம்மவர்க்கு, பச்சையப்பாத்திரம் சொல்லை உருவாக்கி தமிழ்மொழிக்கு கொடையளித்திருக்கிறார். இந்தச் சொல்லை உருவாக்கியதற்காகவே அவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
இந்த நூலின் பாடுபொருள் மரம்தான். அதனூடாக காதல், மனிதர்களின் மனப்பிறழ்வு, உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டல், மானுட குலத்திற்கே உரிய முரண்கள் என பல கிளைகளாக கவிதைகள் விரிகின்றன. தோழரே மரமாகிறார். சிறு புல்லாகிறார். குழந்தையாகிறார். அவரே, புத்தனாகவும் மாற முயற்சிக்கிறார். வண்ணத்துப்பூச்சியை பிடித்து, பறக்கவிட்ட பிறகும் அதன் வண்ணங்கள் நம் விரல்களில் ஒட்டிக்கொண்டிருக்குமே அப்படித்தான், பச்சையப்பாத்திரம் நூலை வாசித்த பின்னரும் அதன் தாக்கம் மனதினுள் அப்பிக்கொண்டு விடுகிறது.
மரங்கள், அஃறிணை வகைமைக்குள் அடங்குபவை. மனிதர்கள், உயர்திணை பட்டியலில் உள்ளவர்கள். ஆனால் பச்சையப்பாத்திரமோ, பகுத்தறிவுப் பதர்களை துகிலுரித்திருக்கிறது. மரங்களை கண்மண் தெரியாமல் வெட்டி வீழ்த்துவோரை மனிதன் என்பதா மக்கட்பதடி என்பதா?
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருவிதமாய்
நிறம் மாற்றிக்கொள்வதில்லை
அறம் சார்ந்தே
வாழ்கிறது மரம்
என்கிறார் சுகபாலா. இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் நிறம் மாறும் மனிதர்களை நினைத்து மனம் வெதும்பித்தான் அவர் மரங்களுடன் உரையாடத் தொடங்கியிருக்கிறார்.
அந்த உயிர்மரத்தை
கூரிய பொருள்கொண்டு கீறிக்கொண்டிருந்தனர்
தன் பெயரைப் பதியும் பொருட்டு
மரம் எப்படிப் புரியவைக்கும் அவர்களுக்கு
அடுத்தவரின் உயிர்க்கீறலில் இல்லை
உன் புகழ் என்று
மரங்களை மட்டுமன்று; இங்கே மவுனமாய் இருப்போரை, யாரும் எத்தகைய ஆயுதம் கொண்டும் கீறிப்பார்க்கத் தயங்குவதில்லை. மரங்களுக்காக கவிஞர் அழுதிருக்கிறார். இந்தக் கவிதையை வாசிக்கும்போது எனக்கேற்பட்ட அனுபவமும் நினைவில் வந்து போனது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ‘புதிய அகராதி’ அச்சு இதழாக வந்து கொண்டிருந்தது.
அந்த இதழில், ‘அறைதல் தகுமோ?’ என்ற தலைப்பில் ஒரு பக்கத்திற்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தேன். அந்தப்படம், நானே எடுத்ததுதான். சாலையோர புளியமரம் ஒன்றில் பலாப்பழத்தின் மீது ஈக்கள் மொத்ததுபோல், பல தனியார் நிறுவனத்தினர் தங்கள் விளம்பர பதாகைகளை ஆணி அடித்து மாட்டியிருந்தனர். அவற்றில் பெரும்பாலானவை கல்வி நிறுவனங்கள் என்பதுதான் ஆகப்பெரிய நகைமுரண்.
இயேசுநாதர் கூட சிலுவையில் அறையப்படும்போது அத்தனை ஆணிகளால் அறையப்பட்டிருக்க மாட்டார். ஆனால் மரங்களோ, கோடரிகளால் மட்டுமின்றி ஆணிகளாலும் வீழ்த்தப்படுகின்றன. அதன்பிறகு காவல்நிலையத்தில் புகார் அளித்து, அவற்றை அகற்ற வைத்தேன். நடிகர் வடிவேலு பாணியில் சொல்வதெனில், அந்த மரத்தில் அடித்த ஆணிகள் அனைத்துமே தேவையில்லாத ஆணிகள்தான்.
மரங்களையும் மனித உயிர்களுக்கு இணையாக கருத வேண்டியது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது இப்போது. சொல்லப்போனால் எந்த ஓர் உயிரையும் கீறி நாம் சுகம் கண்டுவிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை, கவிதை வாயிலாக நெஞ்சில் கீறல் போட்டிருக்கிறார் சுகபாலா.
மற்றோர் இடத்தில் வேடிக்கை மனிதர்களை கடுமையாகச் சாடுகிறார் கவிஞர்.
மனிதர்களைப் போல்
மரங்களை வெட்டிக்கொண்டிருந்தனர்
சிலர்
மரங்களைப் போல்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்
சிலர்
மனிதனை மரமாக ஒப்புமைப்படுத்தியிருப்பது சற்றே வன்மையாகத்தான் இருக்கிறது. கண்முன்னே நடக்கும் மாபாதகச் செயல்களை கண்டும், கண்ணில்லாதவர்போல் நின்று வேடிக்கை பார்க்கும், தற்படம் எடுக்கும் நிகழ்கால கூட்டத்தைப் பார்க்கையில், அவர்களோடு மரங்களை ஒப்புமைப்படுத்தி, மரங்களின் மாண்பை சிறுமைப்படுத்தி விடக்கூடாது என்றும் தோன்றுகிறது.
பட்ட மரத்தை
பச்சை மரம்
பரிகசிப்பதில்லை
நெட்டையோ குட்டையோ
யாதொன்றும்
சுயம் போதிப்பதில்லை
‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ நூலில் கவிஞர் வைரமுத்து, ‘எந்த விலங்கும் தன் வயிற்றுக்கு மேல் ஒரு வயிறு வளர்ப்பதில்லை’ என்று சொல்லியிருப்பார். ஒருவகையில், அஃறிணை பட்டியலில் உள்ளவைகள் எல்லாம் யாரையும் பாரபட்சம் பார்ப்பதில்லை. இந்த பாழும் மனிதர்கள்தான், பொருள், நிறம், சாதி என எல்லாவற்றிலும் பேதம் பார்க்கிறான். யாரையும் பரிகாசம் செய்கிறான். கவிஞர் பட்ட காயங்களுக்கு இந்த கவிதை வாயிலாக மருந்தைத் தேடுகிறார்.
மரத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை இன்னொரு வாழ்வியல் தத்துவத்துடன் சொல்கிறார் சுகபாலா. மண்ணா? மனிதனா? என்ற போட்டியில் இறுதியில் மண்ணே நம்மை வீழ்த்துகிறது. மனிதர்களை வீழ்த்துவதில் மண்ணுக்கு மட்டுமன்று; மரங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை,
மரங்களை
மனிதன் குடிக்கத் தொடங்கினான்
பூக்களின் போதை தலைக்கேறியது
உச்சவரம்பு வரையறுக்கப்படாததால்
மதுக்கோப்பைகள் உடைந்து போயின
பூமியளந்த கால்கள் மட்கும்போது
மரங்கள்
மனிதனை குடிக்கத் தொடங்கின
என, இறுதியில் எல்லோருமே இயற்கையிடம் சரணடைந்துதான் ஆக வேண்டும் என ஞானிபோல் பாடுகிறார் கவிஞர்.
குழந்தைகள் உள்ள வீடுகளில் நடைவண்டியும் நம்முடன் முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கும். அந்த நடைவண்டியையும் தோழர் சுகபாலா தன் குழந்தையாகவே பாவிக்கிறார்.
முறிந்து கிடந்த
மரத்தைச் செதுக்கி
நடைவண்டி பூட்டினேன்
இப்போது குழந்தையோடு
அது நடை பழகியது
என அழகியலுடன் படைத்திருக்கும் இந்தக் கவிதை, மனதை மயிலிறகால் வருடிய உணர்வைத் தந்தது. இந்தக் கவிதையின் நீட்சியாக,
மரத்தை வெட்டி
அறுத்து இழைத்து
செதுக்கிச் செய்த
காயம்பட்ட மரப்பாச்சி
ஒருபோதும்
கோபப்படுவதில்லை
குழந்தைகளிடம்
குழந்தைகளுக்கான பொம்மை செய்ய எத்தனை வலிகளையும் தாங்கிக்கொள்ள தன்னைத்தானே சமரசம் செய்து கொள்கின்றன மரங்கள். அதனால்தான் தன் குணத்திற்கேற்ப அவை எப்போதும் நெட்டுக்குத்தாக உயர்ந்து நின்று நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கின்றனவோ?
கலப்பைகளை
கரையான்கள் தின்றுவிட்டதால்
ரேஷன் அரிசிக்கு
பழகிவிட்டன
உழுநிலப் பறவைகள்
என்ற கவிதையில், ‘கரையான்கள் தின்ற கலப்பை’ என்ற குறியீடு, என்னை உலுக்கி எடுத்துவிட்டது. உலகத்திற்கே படியளந்த உழவர்கள் இன்றைக்கு நியாயவிலை கடைகளில் விலையில்லா அரிசிக்கு கையேந்தி நிற்கும் அவலத்தை இக்கவிதை சுளீர் என்று சுட்டிக்காட்டுகிறது. ஹைட்ரோகார்பனுக்கும், மீத்தேனுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் இந்த பூமியில் இருந்து, ‘சோழவளநாடு சோறுடைத்து’ என்னும் பெருமையையும் இன்னும் சில ஆண்டுகளில் வழக்கொழிந்து போனாலும் ஆச்சர்யம் கொள்வதற்கில்லை.
‘வறண்ட மார்பில் பால் தேடும் குழந்தைபோல் வறண்ட நிலத்தில் நீர்தேடி நிற்கும் மரம்’, ‘மனிதர்களில் புத்தனை தேடிக்கொண்டிருக்கும் மரம்’, ‘மனிதமொழி முழுமையுறா நம்மில் மரத்தின் மொழி துளிர்க்காது’ என நறுக்குத் தெறிக்கும் சொற்களால், சரவெடிகளை கொளுத்திப் போடுகிறார் கவிஞர்.
தோழருக்கு ஏதோ ஓரிடத்தில் தன் மீதே குற்ற உணர்வு இருந்திருக்குமோ என்னவோ,
மரம்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்
மரம்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்
மரத்தை வரைந்து கொண்டிருக்கிறேன்
ஒரு மரத்தை வளர்க்க
எந்த முன்னெடுப்பும் செய்யாத நான்
என ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். அவர் மட்டுமன்று; இச்சமூகத்தில் பெரும்பான்மையினர் அந்த ரகத்தினர்தான். பிறர்க்கென வரும்போது நீதிபதியாகவும், தனக்கென வரும்போது வழக்குரைஞராகவும் மாறிவிடுவர். ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பதுதான் வள்ளுவனின் வாக்கும். பச்சையப்பாத்திரம் நூல் வெளியீட்டின்போது மரக்கன்றுகளை நட்டு வைத்திருப்பாரேயானால், அத்தகைய குற்ற உணர்வில் இருந்து கவிஞர் மீண்டிருப்பார். இல்லாவிட்டால் இனிமேலாவது மரக்கன்றுகள் நடுவார் என கருதுகிறேன்.
மரங்களைப் பற்றியது என்றதும் அய்யன் வள்ளுவன் கூட மனிதர்களை அவர்களின் செயல்களின் அடிப்படையில் பயன் மரம், நச்சு மரம், முள் மரம், மருந்து மரம், வற்றல் மரம் என ஐந்து வகைப்படுத்துகிறார். மாந்தர் நலம் சிறக்க நல்லதொரு படைப்பை அளித்ததன் பொருட்டு, கவிஞரையும் நான் பயன்மரமாகத்தான் கருதுகிறேன்.
இந்த நூலில் மொத்தம் 64 குறுங்கவிதைகள். வாசிப்பவர்களைத் திணறடிக்காத வகையில் எளிமையான சொற்கள் கொண்டிருப்பது இந்த படைப்பிற்குக் கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. நான்கு இடங்களில் எழுத்துப்பிழைகளும் இருந்தன. கருப்பொருள், உள்ளடக்கத்தை விளக்கும் வகையில் மிகப்பொருத்தமான முகப்பு அட்டைப்படம், உலகம் உய்வடைய வேண்டும் என்ற உயரிய நோக்கம் ஆகியவற்றுக்காக பிழைகளை மன்னிக்கலாம்.
மானுடம் செழிக்க, மரங்களைக் காக்க வேண்டியது அவசியமாகிறது. பசுமையை அழித்து பசுமைவழிச்சாலை போடும் நாட்டில், இருக்கின்ற மரங்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையைத் இந்த நூல் தூண்டும். மரங்களைக் காக்க பச்சையப்பாத்திரம் ஊடாக, கவிஞர் சுகபாலா பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்திருக்கிறார். புராண கால முனிவர்கள்போல் யாராவது யாரையாவது பார்த்து, ‘மரமாகக் கடவது!’ என்று சபித்தாலும்கூட அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளலாம். இனி மரங்களைக் காணும்போதெல்லாம் நிச்சயமாக பச்சையப்பாத்திரமும், கவிஞர் சுகபாலாவும் மனதில் வந்து போவார்கள்.
நூல்: பச்சையப்பாத்திரம் (கவிதை)
ஆக்கம்: சுகபாலா
வெளியீடு: நளம் பதிப்பகம்
விலை: ரூ. 80
கவிஞரை தொடர்பு கொள்ள: 95975 95919.
– செங்கழுநீர்
(‘புதிய அகராதி’ இணைய இதழுக்கு, புத்தக விமர்சனம் பகுதிக்கு நூல்கள் அனுப்ப விழைவோர் தொடர்பு கொள்ள: 98409 61947)