Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

கோகுல்ராஜ் வழக்கை நாமக்கல் நீதிமன்றம் விசாரிக்க கூடாது! – ஹைகோர்ட்

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கை,
நாமக்கல் மாவட்ட முதன்மை
நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத்
தடை விதித்து, உயர்நீதிமன்றம்
மார்ச் 6, 2019ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதியன்று திடீரென்று காணாமல் போனார். மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ், தலை வேறு முண்டம் வேறாக கொல்லப்பட்டுக் கிடந்தார்.

திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. படித்து வந்தபோது, தன்னுடன் ஒரே வகுப்பில் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் கோகுல்ராஜ் நெருக்கமாகப் பழகி வந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதியை காதலிப்பதாக கருதிய கும்பல், அவரை சாதிய வன்மத்துடன் ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று அப்போது பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் புகார்களைக் கிளப்பின.

 

கோகுல்ராஜை கொலை செய்ததாக, சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை திருச்செங்கோடு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், கடந்த 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

அரசுத்தரப்பில் சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி ஆஜராகி வந்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், அரசுத்தரப்பில் பவானியைச் சேர்ந்த வழக்கறிஞர் பா.மோகனை நியமிக்கக்கோரி கோகுல்ராஜின் தாயார் சித்ரா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், பா.மோகனையே அரசுத்தரப்பு வழக்கறிஞராக நியமித்து உத்தரவிட்டது.

சித்ரா

வழக்கறிஞர் பா.மோகனுக்கும்,
இந்த வழக்கை விசாரித்து வரும்
நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி
இளவழகனுக்கும் அடிக்கடி கருத்து
மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
பா.மோகன், பிறழ் சாட்சியம் அளித்த
சுவாதி உள்ளிட்ட சிலரை மறு விசாரணைக்கு
அழைக்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் நீதிபதி இளவழகன் அந்த
மனுவை ஏற்க மறுத்து, உள்துறையால்
ஏற்கனவே நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்
கருணாநிதி மனு தாக்கல் செய்தால்தான்
ஏற்கப்படும் என்று கூறினர். மேலும்,
தமிழக உள்துறை மூலம் அரசுத்தரப்பு
வழக்கறிஞராக நியமன ஆணை
வந்தால்தான் நீங்கள் இந்த
வழக்கில் வாதாட முடியும்
என்றும் பா.மோகனிடம் நீதிபதி
இளவழகன் கூறினார்.

 

இந்த நிலையில்தான் கோகுல்ராஜின் தாயார் சித்ரா, இனியும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் இந்த வழக்கை விசாரித்தால் முறையான நீதி கிடைக்காது என்றும், அதனால் வழக்கு விசாரணையை சேலம் மாவட்ட நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு நீதிமன்றத்திற்கோ மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், அரசுத்தரப்பு சாட்சிகள், யுவராஜ் தரப்பினரால் மிரட்டப்படுவதாகவும், அதனால் பலர் பிறழ் சாட்சியம் ஆகிவிட்டார்கள் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு மார்ச் 5ம் தேதி வரிசை எண் வழங்கப்பட்டு, மார்ச் 6, 2019ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கோகுல்ராஜ் கொலை வழக்கை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரணை செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் உரிய விளக்கம் அளிக்கும்படி சிபிசிஐடிக்கும், குற்றம்சாட்டப்பட்டு உள்ள யுவராஜ் தரப்பினருக்கும் நோட்டீஸ் அளிக்கவும் உத்தரவிட்டார்.

 

ஆணவக்கொலை வழக்குகளில் 18 மாத காலத்திற்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்கும்படி வேறு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. அதைத்தொடர்ந்துதான் கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை தொடங்கப்பட்டது. இந்நிலையில் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கோகுல்ராஜ் வழக்கை விசாரித்து முடிப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் எனத்தெரிகிறது.

 

– பேனாக்காரன்

Leave a Reply