சேலத்தில், படுகொலை செய்யப்பட்ட மசாஜ் அழகியுடனும், அவருடைய ரகசிய காதலனுடனும் தொடர்பில் இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு போலீசாரில் இருவரை மட்டும் பணிக்கு திரும்ப அழைத்துள்ள மாநகர காவல்துறை, எஸ்ஐ உள்ளிட்ட இருவருக்கு மட்டும் விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அளித்துள்ளது விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது.
சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள
ஓர் அபார்மெண்ட்டில் தேஜ் மண்டல் (26)
என்ற இளம்பெண் வசித்து வந்தார்.
அவர் வசித்து வந்த குடியிருப்பு,
அதிமுக பிரமுகரும், சேலம் மாநகராட்சி
முன்னாள் கவுன்சிலருமான
நடேசனுக்குச் சொந்தமானது.
தேஜ் மண்டல், சேலத்தில் சங்கர் நகர்,
அங்கம்மாள் காலனி ஆகிய இடங்களில்
‘தேஜாஸ் ஸ்பா’ என்ற பெயரில்
மசாஜ் மையங்களை நடத்தி வந்தார்.
தான் வசித்து வந்த வீட்டிற்குக் கீழ் தளத்தில்
இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து,
அதில் தன்னிடம் வேலை செய்து வந்த
ரிஷி, நிஷி, ஷீலா ஆகிய மூன்று பெண்களையும்,
லப்லு என்ற ஆண் ஊழியரையும்
தங்க வைத்திருந்தார். தேஜ் மண்டல் உள்பட
இவர்கள் ஐந்து பேருமே வங்காளதேச
நாட்டைச் சேர்ந்தவர்கள்.
கடந்த அக். 15ம் தேதியன்று,
ரிஷி, நிஷி உள்ளிட்டோர் தங்கியிருந்த
அறையில், ஒரு சூட்கேஸ் பெட்டிக்குள்
கை, கால்கள் மடக்கிக் கட்டப்பட்ட
நிலையில் தேஜ் மண்டல் சடலம்
கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், ரிஷி, நிஷி, ஷீலா, லப்லு
ஆகிய நான்கு பேரும் சேர்ந்து
தேஜ் மண்டலை கழுத்தை நெரித்துக்
கொலை செய்து, சடலத்தை சூட்கேஸூக்குள்
வைத்து பூட்டிவிட்டு, தலைமறைவாகி விட்டது
தெரிய வந்தது. அவரை அக்.7ம் தேதியே
தீர்த்துக் கட்டியிருப்பதையும்
போலீசார் உறுதிப்படுத்தினர்.
கொலையாளிகள் சொந்த நாடான
வங்கதேசத்திற்குச் தப்பி ஓடியிருக்கலாம்
எனக்கூறப்படுகிறது. இதற்கிடையே,
பெங்களூருவில் பதுங்கி இருக்கலாம் என்ற
தகவலால் தனிப்படை போலீசார்
பெங்களூருவிலும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஆனால் போலீசாருக்கு ஏமாற்றமே
மிஞ்சியது.
இது ஒருபுறம் இருக்க,
கொலையுண்ட தேஜ் மண்டல், அவருடைய
ரகசிய காதலனான ஆத்தூரைச் சேர்ந்த
திமுக பிரமுகர் பிரதாப் ஆகியோருடன்
போலீசார் சிலர் அடிக்கடி செல்போனில்
பேசியிருப்பதும், சிலர் அவர்களுடைய
பாலியல் தொழிலுக்கு உடந்தையாக
இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சேலத்தில் குட்கா, சூதாட்டம்,
பாலியல் தொழில்களை அடியோடு
ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதில் கங்கணம்
கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கும்
போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடாவுக்கு,
தேஜ் மண்டலின் பாலியல் தொழிலுக்கு
போலீசாரே உடந்தையாக இருந்ததாக
கிடைத்த தகவலால் கடும்
அதிருப்தி அடைந்தார்.
இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு
மாநகர போலீஸ் துணை கமிஷனர்
மாடசாமிக்கு, கமிஷனர் உத்தரவிட்டார்.
தேஜ் மண்டல், அவருடைய அந்தரங்க
காதலன் பிரதாப் ஆகியோரின் செல்போன்
தரவுகளை ஆய்வு செய்தபோது,
குறிப்பிட்ட நான்கு போலீசாரின் எண்கள்
அவர்களுடன் அடிக்கடி தொடர்பில்
இருந்தது தெரிய வந்தது.
சைபர் கிரைம் பிரிவு எஸ்ஐ ஆனந்த்குமார்,
இரும்பாலை எஸ்எஸ்ஐ கலைசெல்வன்,
பள்ளப்பட்டி ஐஎஸ் பிரிவு எஸ்எஸ்ஐ சேகர்,
அஸ்தம்பட்டி போலீஸ்காரர் மணிகண்டன்
ஆகிய நான்கு பேரும் தேஜ் மண்டல், பிரதாப்
ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாக
சிடிஆர் அறிக்கை வாயிலாக தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்கள் நான்கு பேரையும்
கடந்த நவ. 8ம் தேதி இரவு கமிஷனர்
சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட் உத்தரவில்,
எஸ்ஐ ஆனந்த்குமார் 1.1.2021 முதல்
7.10.2021 வரை கொலையுண்ட
தேஜ்மண்டலிடம் செல்போனில் 42 முறை
தனிப்பட்ட ஆதாயத்திற்காக பேசியிருப்பதாகவும்,
எஸ்எஸ்ஐ கலைசெல்வன் தேஜ் மண்டலிடம்
3.8.2021 அன்று ஒரு முறையும்,
2.9.2021 முதல் 15.10.2021 வரை
தேஜ் மண்டலின் காதலன் பிரதாப்பிடம்
8 முறையும் பேசியதாக
சொல்லப்பட்டு இருந்தது.
போலீஸ் கமிஷனரின் இந்த உத்தரவு,
சேலம் மாநகர காவல்துறையில்
பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும்
ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நாம் சேலம் மாநகர
போலீசார் சிலரிடம் பேசினோம்.
”தேஜ் மண்டல் கொலை சம்பவம்
அஸ்தம்பட்டி போலீஸ் எல்லைக்குள்
நடந்துள்ளது. சஸ்பெண்ட்
செய்யப்பட்டவர்களுள் ஒருவரான
எஸ்ஐ ஆனந்த்குமார், கடந்த மார்ச் மாதமே
அஸ்தம்பட்டியில் இருந்து சூரமங்கலம்
ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு விட்டார்.
அங்கிருந்து செப். 3ம் தேதி
சைபர் கிரைம் பிரிவுக்கு
மாற்றப்பட்டார்.
இதற்கிடையே ஜூன் முதல் ஆகஸ்ட் வரை
துணை கமிஷனர் மோகன்ராஜின் நேரடி
பார்வையில் செயல்பட்டு வந்த
ஸ்பெஷல் டீமில் பணியாற்றினார்.
இந்த டீம், லாட்டரி, சாராயம், குட்கா
ரெய்டுகளில் தீவிரமாக இறங்கி
ரெய்டு அடித்தது.
எஸ்ஐ ஆனந்த்குமார் அஸ்தம்பட்டி
காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தபோது
தேஜ் மண்டலின் காதலன் பிரதாப்பிடம்
ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் 12 முறையும்,
மார்ச் மாதத்தில் 2 முறையும்,
மே மாதத்தில் ஒரு முறையும்,
கடைசியாக ஆகஸ்ட்டில்
8 முறையும் பேசியிருக்கிறார்.
இவற்றில் 7.2.2021 அன்று
பிரதாப்பிடம் அதிகபட்சமாக 305 வினாடிகள்
பேசியிருக்கிறார் எஸ்ஐ ஆனந்த்குமார்.
மற்ற அழைப்புகளின் கால அளவு
எல்லாமே 120 வினாடிகளுக்கும்
குறைவானவை. பேசப்பட்ட அழைப்புகள் தவிர,
வெறும் ‘Call you later’, ‘I will call you’
போன்ற டெம்ப்ளேட் குறுந்தகவல்கள் தான்.
இதில் பாதிக்கும் மேற்பட்ட அழைப்புகள்
பிரதாப்பிடம் இருந்து வந்தவை.
இந்த எண் கூட, தேஜ் ஸ்பாவில்
கஸ்டமர் கேர் எண்ணாக பொதுவெளியில்
வழங்கப்பட்டதுதான்.
ஆனந்த்குமார் எஸ்ஐ, போலீசாருக்கு
வழங்கப்பட்ட சியுஜி எண் மட்டுமின்றி,
அவருடைய பர்சனல் எண்ணில் இருந்தும்
பிரதாப்பிடம் பேசியிருக்கிறார்.
அந்த எண்ணில் பேசிய விவரம் கூட
அவரே சொல்லித்தான் மாநகர
காவல்துறைக்கு தெரியும்.
தனிப்பட்ட ஆதாயத்திற்காக பேசியதாக
சொல்லப்படும் ஒருவர் எப்படி
தன்னுடைய பர்சனல் செல்போன் எண்ணை
தானே முன்வந்து கொடுப்பார்?
தனிப்பட்ட பலன் பெற விரும்பும் ஒருவர்,
கஸ்டமர் கேர் எண்ணில் எதற்காக
தொடர்பு கொண்டு பேச வேண்டும்?
ஆனந்த்குமார் ஸ்பெஷல் டீமில் இருந்தபோது
சிறப்பாக செயல்பட்டதற்காக இரண்டு முறை
இதே கமிஷனரிடம் ரிவார்டு வாங்கியுள்ளார்.
துணை கமிஷனர்களிடமும்
ஓப்பன் மீட்டிங்கில் பாராட்டுகளைப்
பெற்றிருக்கிறார் என்பதையும்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட
எஸ்எஸ்ஐ கலைசெல்வன் அஸ்தம்பட்டி
காவல்நிலையத்தில் பணியாற்றிய காலத்தில்
கரண்ட் பேப்பர் பிரிவில் இருந்தார்.
தேஜ் ஸ்பாவில் பாலியல் தொழில் நடப்பதாக
வந்த கரண்ட் பேப்பரின் அடிப்படையில்,
தேஜ் மண்டல் மற்றும் பிரதாப்பை
தொடர்பு கொண்டு எச்சரித்து இருக்கிறார்.
சொந்த ஆதாயம் என்பதையே
நோக்கமாக கொண்டிருக்கும் ஒருவர்,
கரண்ட் பேப்பர் பிரிவில் வேலை பார்க்க
விரும்ப மாட்டார் என்பது காவல்துறையில்
எல்லொருக்கும் தெரிந்த ரகசியம்தான்.
கலைசெல்வன் தன்னுடைய பணிக்காலத்தில்
பெரும்பகுதியை ரைட்டர் மற்றும்
கரண்ட் பேப்பர் பிரிவில்தான்
கழித்திருக்கிறார்.
இவர்கள் நிலை இப்படி எனில்,
பள்ளப்பட்டி நுண்ணறிவுப்பிரிவு
எஸ்எஸ்ஐ சேகர், லாக்டவுன் காலத்தில்
ஸ்பா மையங்களை திறக்கக்கூடாது என்று
தேஜ் ஸ்பா பிரதாப்புடன் ஓரிரு முறை
தொடர்பு கொண்டு எச்சரித்து உள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மற்றொரு
போலீஸ்காரர் மணிகண்டன்,
அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில்
ரோந்து காவலராக இருந்தார்.
கடந்த ஜூன் மாதம் தேஜ் மண்டல்
ஏதோ காரணங்களால் தூக்க மாத்திரைகளை
தின்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
அவர் சிகிச்சைக்காக சேலம் எஸ்கேஎஸ்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவரை விசாரணைக்கு அழைப்பது,
சிகிச்சை ஆவணங்களை பெறுவது
தொடர்பாக தேஜ் மண்டலை
2 முறை தொடர்பு கொண்டு
பேசியிருக்கிறார். இப்படி இரண்டு முறை
மட்டுமே பேசியதற்காக அவரை
சஸ்பெண்ட் செய்திருக்கிறார் கமிஷனர்.
போலீசார் பொதுவாக ஒரு குற்றவாளி மூலம்
மற்ற குற்றவாளிகளை பிடிப்பதற்காக
அவர்களுடன் தொடர்பில் இருப்பதும்,
நேரடி சாட்சிகள் இல்லாதபோது
குற்றவாளிகளுள் ஒருவரையே
அப்ரூவராக மாற்றுவதும்
நடைமுறையில் இருப்பதுதான்.
அதனால் வெறுமனே சிடிஆர் ரிப்போர்ட்டை
மட்டும் வைத்துக்கொண்டு,
எந்த விதமான விளக்கமும் கோராமல்
நான்கு போலீசாரை சஸ்பெண்ட் செய்திருப்பது
வியப்பு அளிக்கிறது. இவர்களைப் பற்றி
கமிஷனரிடம் யாரேனும் உள்நோக்கத்துடன்
இல்லாததையும் பொல்லாததையும்
சொல்லி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
குற்றவாளிகளுக்கு சாதகமாக
நடந்து கொண்ட வேறு அதிகாரிகளை
காப்பாற்றுவதற்காகக்கூட இவர்கள்
நான்கு பேரும் பலிகடா ஆக்கப்பட்டு
இருக்கலாம் என்றும் கருதுகிறோம்.
கடந்த 2020ம் ஆண்டு ஊரடங்கின்போது,
உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர்,
தேஜ் ஸ்பா மையத்திலேயே
படுத்துக் கிடந்தார் என்ற தகவலும் கசிகிறது.
அவரைப் போன்றவர்களை விட்டுவிட்டு
சிடிஆர் ரிப்போர்ட்டில் செல்போன்
எண்கள் பதிவாகி இருந்தது என்ற
ஒரே காரணத்தால் அப்பாவிகள்
நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு
உள்ளனர்,” என மாநகர
போலீசார் கூறுகின்றனர்.
இதற்கிடையே, சஸ்பெண்ட்
செய்யப்பட்டிருந்த நான்கு பேரில்
எஸ்எஸ்ஐ சேகர், போலீஸ்காரர்
மணிகண்டன் ஆகிய இருவரும்
சேலம் மாநகர கமிஷனர் நஜ்மல் ஹோடாவை
நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம்
எழுதிக் கொடுத்தனர்.
இதையடுத்து, அவர்கள் மீதான
சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு,
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு
பணிக்கு திரும்பவும் அழைக்கப்பட்டனர்.
மேலும், சஸ்பெண்டில் இருந்த காலத்தையும்
பணிக்காலமாக கணக்கில் கொள்ளவும்
ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட
எஸ்ஐ ஆனந்த்குமார், எஸ்எஸ்ஐ கலைசெல்வன்
ஆகிய இருவருக்கும் விளக்கம் கேட்டு
சில நாள்களுக்கு முன்பு ஷோகாஸ் நோட்டீஸ்
அளிக்கப்பட்டு உள்ளது,
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சார்நிலை போலீசார்
நன்னடத்தை விதிகள்-1964, விதி எண் 24ஐ
சொந்த ஆதாயத்திற்காக மீறினர் என்ற
ஒரே குற்றச்சாட்டின் அடிப்படையில்தான்
ஒரு எஸ்ஐ, இரண்டு எஸ்எஸ்ஐ உள்ளிட்ட
நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தற்போது அவர்களில் சேகர், மணிகண்டன்
ஆகிய இருவரை மட்டும் எந்தவித
விளக்கமும் கோராமல் பணிக்கு
அழைக்கப்பட்டுள்ள நிலையில்,
மற்ற இருவருக்கும் விளக்கம் கேட்டு
நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது முரணாக
இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில், சஸ்பெண்ட்
செய்யப்பட்ட நான்கு பேருமே
அப்பாவிகள்தான் என்றாலும் கூட,
ஒரு கண்ணில் வெண்ணெய்யும்,
மறு கண்ணில் சுண்ணாம்பையும்
வைத்தது போல் இருக்கிறது
கமிஷனரின் நடவடிக்கை.
சேலம் மாநகர காவல்துறை அமைச்சுப் பணியாளர்களிடம் கேட்டபோது, ”பொதுவாக அரசு ஊழியர் ஒருவர் மீது புகார் வந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விளக்கம் கேட்டு குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்கப்பட வேண்டும். அதற்கு அந்த ஊழியர் அளிக்கும் விளக்கத்தை உயரதிகாரிகள் ஏற்கலாம் அல்லது திருப்தி இல்லை என்று நிராகரிக்கவும் செய்யலாம்.
விளக்கம் திருப்தி இல்லாதபட்சத்தில் குற்றத்தின் தன்மையைப் பொருத்து சஸ்பெண்ட் உள்ளிட்ட ஏதேனும் ஒரு தண்டனை அளிக்கப்படலாம். ஆனால், நான்கு போலீசார் சஸ்பெண்ட் விவகாரத்தில் இந்த மரபு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. முதலில் சஸ்பெண்ட் செய்துவிட்டு, 45 நாள்கள் கழித்து சாவகாசமாக குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்கப்பட்டு உள்ளது,” என்றனர்.
இதுமட்டுமின்றி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு பேரிடமும் விசாரிக்க சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவரும் இதுவரை யாரிடமும் விசாரணை நடத்தவில்லை எனக்கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கொலையுண்ட தேஜ் மண்டலுக்கும், அவருடைய காதலன் பிரதாப்புக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த ஜூன் மாதம் தேஜ் மண்டல் தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார்.
அப்போதே அவருடைய முழு பின்னணி விவகாரத்தையும் தோண்டி எடுத்து இருந்தால் அவர் நடத்தி பாலியல் தொழிலுக்கு அப்போதே மூடுவிழா போட்டிருக்க முடியும்.
மேலும், கடந்த செப். 6ம் தேதி, சங்கர் நகர், அங்கம்மாள் காலனி ஆகிய இடங்களில் தேஜ் ஸ்பாக்களில் இன்ஸ்பெக்டர் கற்பகம், எஸ்ஐக்கள் கருணாநிதி, ராமகிருஷணன் ஆகியோர் கொண்ட ஸ்பெஷல் டீம் போலீசார் ரெய்டு நடத்தினர்.
அப்போது பிரதாப், தேஜ் மண்டலின்
உதவியாளர் முத்தம்மாள் ஆகியோர் மீதுதான்
வழக்குப்பதிவு செய்தனர். அஸ்தம்பட்டி
இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி அப்போது
தேஜ் மண்டல் மீது வழக்குப்பதிவு
செய்யாமல் விட்டுவிட்டார்.
அவர் தங்கியிருந்த அறையில்
வைத்தும் பாலியல் தொழில் செய்து
வந்ததாகவும் சொல்லப்பட்டது.
அதையும் அஸ்தம்பட்டி போலீசார்
கண்டுகொள்ளவில்லை.
தேஜ் மண்டல் கொலைக்குப் பிறகுதான்
பிரதாப்பை கைது செய்தனர். இல்லாவிட்டால்
அவரை தொடர்ந்து தப்பிக்க விட்டிருப்பார்கள்.
செப். 6ம் தேதி நடந்த ரெய்டின்போதே
தேஜ் மீது எப்ஐஆர் போட்டு கைது
செய்திருந்தால் அவர் கொலை
செய்யப்பட்டிருக்க மாட்டார். அவரை
கைது செய்யாமல் இருக்க பணம்
வாங்கியதாக இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மீது
அழுத்தமான குற்றச்சாட்டுகள் கிளம்பியும்
அவர் மீது போலீஸ் கமிஷனர் ரொம்பவே
மென்மையாக நடந்து கொண்டார்.
எங்களைப் பொருத்தவரை,
தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும்
தண்டிக்கப்பட வேண்டும் என்பதில்
உறுதியாக இருக்கிறோம். கடந்த 2020ம்
ஆண்டில் இருந்து தேஜ்மண்டல், பிரதாப்
ஆகியோரின் செல்போனில் பதிவாகியுள்ள
அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.
அவர்களுடன் பல போலீஸ் அதிகாரிகள்
பெண் மற்றும் பணத்திற்காக தொடர்பில்
இருந்ததாக சந்தேகிக்கிறோம். இந்த விவகாரம்
குறித்தும் கமிஷனர் தீர்க்கமாக விசாரணை
நடத்த வேண்டும்,” என்கிறார்கள்.
மசாஜ் அழகி கொலையில் தோண்டத் தோண்ட பல போலீஸ் அதிகாரிகளின் இருண்ட பக்கங்களும் வெளிச்சத்திற்கு வரும் என்கிறார்கள் சேலம் மாநகர போலீசார்.
இது தொடர்பான முந்தைய செய்தி:
மசாஜ் அழகி கொலை; பலிகடாவான நான்கு போலீசார்! யாரை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது சேலம் காவல்துறை?
– பேனாக்காரன்