Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் திடீர் ஏற்றம்; சேலத்தில் 753க்கு கிடைக்கும்!

வீடுகளில் பயன்படுத்தப்படும்
மானியமற்ற எல்பிஜி காஸ்
சிலிண்டர் விலை நடப்பு
பிப்ரவரி மாதத்தில் திடீரென்று
25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதனால் சேலத்தில் காஸ்
சிலிண்டர் விலை நடப்பு மாதம்
728ல் இருந்து 753 ரூபாயாக
அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய்
விலை உயர்வு, நுகர்வுத்திறன்,
உற்பத்தித்திறன், டாலருக்கு நிகரான
இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட
பல்வேறு அம்சங்களின்
அடிப்படையில் வீட்டு உபயோக
மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்
விலைகள் மாதந்தோறும் நிர்ணயம்
செய்யப்படுகிறது. எண்ணெய்
நிறுவனங்களின் கூட்டமைப்பு
விலை நிர்ணயம் செய்கிறது.

மாதந்தோறும் 1ம் தேதி முதல்
புதிய விலை நடைமுறைக்கு வரும்.
கடந்த டிசம்பர் மாதம் வீட்டு
உபயோக எல்பிஜி காஸ்
சிலிண்டர் விலை இரண்டு முறை
தலா 50 ரூபாய் வீதம் 100 ரூபாய்
உயர்த்தப்பட்டது.

ஒரே மாதத்தில் இரண்டு முறை
விலையேற்றம் என்பதால்
அரசியல் அரங்கிலும் சலசலப்பை
ஏற்படுத்தியது. அதனாலோ
என்னவோ, 14.20 கிலோ எடை
கொண்ட வீட்டு உபயோக
எல்பிஜி சிலிண்டர் விலை
கடந்த ஜன. மாதம் மாற்றி
அமைக்கப்படவில்லை.

நடப்பு பிப்ரவரி 1ம் தேதியன்றும்
புதிய விலை அறிவிக்கப்படவில்லை.
அதேநேரம், வர்த்தக காஸ்
சிலிண்டர் விலை மட்டும் 191 ரூபாய்
உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
வீட்டு உபயோக சிலிண்டர்
விலை உயராததால் நுகர்வோர்
சற்று ஆறுதல் அடைந்தனர்.

இந்நிலையில், வழக்கத்திற்கு
மாறாக நாடு முழுவதும்
திடீரென்று கடந்த வியாழக்கிழமை
(பிப். 4) வீட்டு உபயோக
காஸ் சிலிண்டர் விலையை
25 ரூபாய் உயர்த்தி இருக்கிறது,
எண்ணெய் நிறுவனங்களின்
கூட்டமைப்பு.

இதனால் சென்னையில்
மானியமில்லா வீட்டு உபயோக
காஸ் சிலிண்டர் விலை 735 ரூபாயாகவும்,
சேலத்தில் 753 (முந்தைய விலை 728)
ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
டெல்லி மற்றும் மும்பையில் 719
ரூபாயாகவும், கொல்கத்தாவில்
745.50 ஆகவும் புதிய விலை
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக இந்தியன்
ஆயில் கார்ப்பரேஷன் தரப்பில்
கேட்டபோது, ”கச்சா எண்ணெய்
விலை ஏறுமுகத்தில் இருப்பதால்
விலை உயர்த்தப்பட்டு இருக்கலாம்.
வரும் மாதங்களிலும் தொடர்ந்து
காஸ் சிலிண்டர் விலை உயர
வாய்ப்பு உள்ளது,” என்றனர்.