Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடிகளில் ஆளுங்கட்சியினர் அத்துமீறல்கள்!

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே,
ஆட்சியில் இருக்கும்
கட்சியினரின் அதிகார
வரம்பு மீறல்களுக்கு
பஞ்சமிருக்காது. அது,
இப்போது நடந்து முடிந்த
இரண்டு கட்ட தேர்தல்களிலும்
பட்டவர்த்தனமாக
எதிரொலித்தன.

 

வாக்குச்சாவடிக்குள் பரப்புரை:

 

பொதுவாக, வாக்குச்சாவடி மையங்களில் வேட்பாளர்கள் தங்கள் சின்னத்திற்கு பேச்சு, சைகைகள் உள்ளிட்ட எந்த விதத்திலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிகளில் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், சொல்லி வைத்தாற்போல் எல்லா வாக்குச்சாவடிகளிலுமே அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பு வேட்பாளர்கள், சுயேச்சைகள் என எல்லோருமே வாக்களிக்க வரிசையில் நின்றவர்களிடம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிமுக சார்பில் சந்தானராஜ் என்பவர் கட்சி கரை வேட்டியுடன் குண்டர்களுடன் நின்று கொண்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அம்மாபேட்டை காவலர் ரபிதீன் என்பவர் அவரை, வாக்குச்சாவடியை விட்டு வெளியேறும்படி கூறியதற்கு, அவரிடம் ஒருமையில் பேசி தகராறில் ஈடுபட்டார். என்னை மட்டும் எதற்குப் போகச் சொல்கிறீர்கள்? மற்ற வேட்பாளர்களையும் வெளியே போகச் சொன்னால்தான் போவேன் என்று அடம் பிடித்தார். சந்தானராஜ்க்கு ஆதரவாக ஆளுங்கட்சியினர் சிலரும் அந்த காவலரை மிரட்டிவிட்டுச் சென்றனர்.

 

கையெழுத்திடாத வாக்குச்சீட்டுகள் செல்லுமா?:

 

சேலம் மாவட்டம்
அயோத்தியாப்பட்டணம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட
வாக்காளர்களுக்கு வெள்ளியம்பட்டி
அரசுப்பள்ளியில் உள்ள
ஒரு வாக்குச்சாவடியில்,
தலைமை தேர்தல் அலுவலர்
கையெழுத்திடப்படாமலேயே
130க்கும் மேற்பட்ட வாக்குகள்
பதிவு செய்யப்பட்டதாக,
திமுகவைச் சேர்ந்த
அயோத்தியாப்பட்டண ஒன்றியக்குழு
முன்னாள் தலைவர் விஜயகுமார்
குற்றம்சாட்டினார். அந்த
வாக்குச்சாவடி அலுவலர்
எட்வின் என்பவரும்,
45 வாக்குச்சீட்டுகளில்
தான் கவனக்குறைவாக
கையெழுத்திடவில்லை என்றும்
ஒப்புக்கொண்டுள்ளார்.

நாளை (ஜன. 2, 2020)
வாக்கு எண்ணிக்கை நடைபெற
உள்ள நிலையில், தேர்தல்
அலுவலரின் கையெழுத்திடப்படாத
வாக்குச்சீட்டுகள் செல்லுபடியாகுமா?
என்ற அய்யமும் ஏற்பட்டுள்ளது.
வெள்ளியம்பட்டி பகுதியில்
திமுகவுக்கு செல்வாக்கு
இருப்பதால், அக்கட்சி
வேட்பாளரின் வெற்றியைத்
தட்டிப்பறிக்கும் நோக்கில்
ஆளுங்கட்சியினர் தேர்தல்
அலுவலர்களுடன் சேர்ந்து
கொண்டு சதி வேலையில்
ஈடுபடுவதாகவும் விஜயகுமார்
புகார் அளித்திருக்கிறார்.

 

வேட்பாளர் பெயரை மாற்றிய அதிகாரிகள்:

 

சேலம் மாவட்டம் தளவாய்பட்டி கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சோமசுந்தரம் மகன் சிவராமன் (40) என்பவர் ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். தளவாய்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு வாக்குச்சாவடியில் வேட்பாளர்கள் பட்டியலில், சிவராமன்.சோ என்பதற்குப் பதிலாக, சிவகுமார்.சோ என்று பிழையாக எழுதி வாக்குச்சாவடி முகப்பில் ஒட்டப்பட்டு இருந்தது. சின்னத்தை அறியாமல் பெயரை மட்டும் அறிந்து வைத்துக்கொண்டு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு இதனால் குழப்பம் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 300 வாக்குகள் பதிவான நிலையில், அதன்பிறகே வேட்பாளர் பெயர் திருத்தி சரியானதாக எழுதி ஒட்டப்பட்டது. இந்த பகுதியிலும் சுயேச்சை வேட்பாளரான சிவராமனுக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதால், அவருடைய வெற்றி வாய்ப்பை தடுக்கும் வகையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே கூட்டு சேர்ந்து கொண்டு இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

 

சக்கர நாற்காலி:

மாநிலத் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்காளர் நலன் சார்ந்த சில சின்னச்சின்ன விஷயங்களிலும் அக்கறை செலுத்தி வருவதைக் காண முடிகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த சில தேர்களின்போதிலிருந்து, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்கும் இடத்திற்கு வந்து செல்ல வசதியாக சாய்வுதளம் கொண்ட நடைபாதை அவசியம் என்றதோடு, அவர்களை அழைத்து வர சக்கர நாற்காலியையும் அறிமுகப்படுத்தியது. மாநிலத் தேர்தல் ஆணையமும் அதே நடைமுறைகளைப் பின்பற்றியது.

 

இந்த தேர்தலிலும் முதியோர், மாற்றுத்திறனாளிகளை அழைத்து வர சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டு இருந்தன. என்றாலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த வசதி இல்லை.

 

ஓஆர்எஸ் கரைசல்:

அதேபோல், வாக்குச்சாவடிக்குள்
தாய்மார்கள், குழந்தைகளுடன்
வாக்களிக்க வரும்போது
திடீரென்று குழந்தைகளுக்கு
வயிற்றுப்போக்கால் நீர்ச்சத்து
குறைபாடு ஏற்படலாம்.
பெரியவர்களுக்கும் இதுபோன்ற
பிரச்னைகள் நிகழக்கூடும்
என்பதால், அவர்களுக்காக
உடனடி முதலுதவி சிகிச்சை
மையமும் அமைக்கப்பட்டு
இருந்தது. உடையாபட்டி
அரசு மேல்நிலைப்பள்ளி
வாக்குச்சாவடிக்குள்
மாசிநாயக்கன்பட்டி அரசு
ஆரம்ப சுகாதார நிலையத்தைச்
சேர்ந்த கிராம சுகாதார
செவிலியர் தனலதா,
குழந்தைகளுக்கு ஓஆர்எஸ்
கரைசல் வழங்கினார். துத்தநாக
மாத்திரையும் வழங்கப்பட்டது.
சுகாதாரத்துறையின் இந்த வசதி,
பரவலாக கவனத்தைப் பெற்றது.

 

பாலூட்டும் தாய்மார்கள் அவதி:

பாலூட்டும் தாய்மார்கள் பலர்
வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு
வந்திருந்தனர். சராசரியாக
ஆயிரம் வாக்காளர்களுக்கு
ஒரு வாக்குச்சாவடி மையம்
என்று அமைக்கப்பட்டு
இருந்தபோதும், ஒவ்வொரு
வாக்காளரும் கிராம ஊராட்சி
மன்றத் தலைவர்,
வார்டு உறுப்பினர்,
மாவட்ட ஊராட்சிக்குழு
உறுப்பினர், ஒன்றியக்குழு
உறுப்பினர் என நான்கு
பதவிகளுக்கு வாக்களிக்க
வேண்டும் என்பதால்,
காலதாமதம் ஆனது.
அதனால் அரை மணி நேரம்
முதல் ஒரு மணி நேரம் வரை
வரிசையில் காத்திருக்க
வேண்டிய நெருக்கடியும்
இருந்தது.

 

இதுபோன்ற சூழலில்,
கைக்குழந்தைகளுடன்
வந்திருந்த பாலூட்டும் தாய்மார்கள்,
குழந்தைகளுக்கு பால் ஊட்ட
வசதியான மறைவிடங்கள்
இல்லாதது பெரும் குறையாக
இருந்தது. பாலூட்டும் தாய்மார்களின்
அவஸ்தையை உணர்ந்ததால்தான்,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா,
பேருந்து நிலையம், ரயில்
நிலையங்களிலும்கூட பாலூட்டும்
அறைகளைத் தொடங்கினார்.
ஆனால், அவர் வழியில்
செயல்படுவதாகச் சொல்லிக்கொள்ளும்
எடப்பாடி பழனிசாமியின் அரசு,
வாக்குச்சாவடிகளுக்கு வரும்
பாலூட்டும் தாய்மார்களை
ஏனோ கவனத்திலேயே
கொள்ளவில்லை.

 

தேர்தல் ஊழியர்கள் பட்டினி:

ஒவ்வொரு வாக்குச்சாவடியில்
ஒரு ஆண் மற்றும் ஆறு பெண்
ஊழியர்கள் என மொத்தம்
7 பேர் பணியமர்த்தப்பட்டனர்.
பல வாக்குச்சாவடிகளில்,
தேர்தல் ஊழியர்களுக்கு
உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை.
பல இடங்களில் குறிப்பிட்ட
உணவுப் பொட்டலங்கள்
வழங்கப்பட்டாலும்கூட,
சாப்பிடுவதற்கு நேரமின்றி
அவஸ்தைப்பட்டனர்.

மாற்று ஊழியர்கள்
நியமிக்கப்படுவதிலும்
குளறுபடிகள் நிலவியதால்
பல இடங்களில் வாக்குச்சாவடி
அலுவலர்கள் பட்டினியாகவே
வேலை பார்த்த நெருக்கடியும்
நிலவியது. இதையெல்லாம்
மாநில தேர்தல் ஆணையம்,
மனித உரிமை மீறல்
கணக்கிலேயே கொள்ளாது போல்
இருக்கிறது. எனினும்,
தேர்தல் ஊழியர்களின்
இன்னல்கள் குறித்து
இன்னொரு கட்டுரையில்
விரிவாக பேசுவோம்.

 

– பேனாக்காரன்